Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

வள் காதலின் முகவரி. ஆசையின் தேவதை. காமத்தின் திருவுருவம். வம்ச விருத்தியின் பேரருள். வெற்றியின் அடையாளம். செழிப்பின் சின்னம். பேரழகின் கடவுள். அவள் பெயர் வீனஸ். ரோமானியப் பெண் தெய்வம். ‘‘நான்தான் மண்ணில் வாழும் வீனஸ்’’ என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார் எலகாபாலஸ்.

ஒரு சமயம் பணியாள் ஒருவன் ஓடிவந்து மரபுப்படி வணங்கினான். ‘‘மதிப்புக்குரிய பேரரசரே! எம் கடவுளே! வணங்குகிறேன்.’’ எலகாபாலஸின் முகம் சுருங்கியது. சினத்துடன் வார்த்தைகளை வீசினார். ‘‘என்னை அப்படி அழைக்காதே. நான் ஒரு பெண்... புரிகிறதா?’’

தான் ஒரு பேரரசர் என்ற அகந்தையுடன், பேரழகுப் பெண் என்ற அசைக்க முடியாத நினைப்பும் எலகாபாலஸுக்கு இருந்தது. உடலை  அடிக்கடி மழித்துக்கொண்டார். அளவுக்கதிகமான ஒப்பனையைப் பூசிக் கொண்டு சபையோர்முன் வருவார். உடைகளைக் களைவார். வீனஸ் போலவே வலதுகையால் மார்பை மறைத்தபடியும், இடது கையால் அந்தரங்கத்தை மறைத்தபடியும் ஒயிலாக நிற்பார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14 வயதிலேயே ரோமானியப் பேரரசன் ஆன இளங்கன்று. பயமறியாதுதான். ஆனால், மூத்தோர்களை மதிக்கும் பண்பும் மரியாதையும் இன்றி, மமதையுடன் திரிந்தார். ரோமானியர்களின் மதநம்பிக்கைகளில் இஷ்டத்துக்கு விளையாடினார். ரோமானியக் கடவுள் சிலைகளை உடைத்தது, எலகாபாலஸ் என்ற தன் பெயரிலான சிரியக் கடவுளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது, சில தருணங்களில் தன்னையே கடவுள்போல காட்டிக்கொண்டதெல்லாம் அவர்மீது வெறுப்பை வரவழைத்தது.

யாருக்கு என்ன தகுதி, அனுபவம், வயது என்றெல்லாம் பார்க்காமல், யாரெல்லாம் தன் விருப்பத்துக்கேற்ப அடிமைச் சேவகம் செய்கிறார்களோ, தன் பேரின்பக் கொண்டாட்டங்களுக்குச் சாமரம் வீசுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நல்ல பதவிகளைக் கொடுத்தார். செனட் மற்றும் அரண்மனை சார்ந்த முக்கியப் பொறுப்புகளுக்கான பதவிகளை, விலைபேசி விற்றார். ஆம், அன்றே அது நடந்தது.

எலகாபாலஸ், குறிப்பிட்ட இடைவெளியில் ஐந்து பெண்களைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் பெண் மதகுருவும் ஒருத்தி. ‘நான் கடவுள் போன்றவன். அவள் கடவுள்தன்மை கொண்டவள். எங்களுக்குக் கடவுள்களே பிள்ளைகளாகப் பிறப்பர்’ என்று அவளை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துகொண்டார் எலகாபாலஸ். ஆனால், தெய்வ நிந்தனை செய்துவிட்டோமே என்ற பயத்தாலும், எலகாபாலஸின் அந்தப்புர வக்கிரங்களாலும் வேதனையுற்று அந்தப்பெண் தற்கொலை செய்து கொண்டாள். மற்ற பெண்களும் அவருடன் அதிக காலம் வாழவில்லை. பேரரசுடன் இணையாக, இன்பமாக, இச்சை தீர வாழ்ந்தது ஹைரோக்ளெஸ் மட்டுமே. யாரவள்?

அவள் அல்ல, அவன். பேரரசர் எலகாபாலஸின் நம்பிக்கைக்குரிய தேரோட்டி. ‘நான் ஹைரோக்ளெஸின் ஆசைநாயகி, மனைவி, அவனுக்கு மகாராணி என்று சொல்லிக்கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன்’ என்பது எலகாபாலஸின் காதல் புலம்பலே. ஒரு பெண்போல, ஹைரோக்ளெஸுக்குப் பணிவிடை செய்வதும், தன்னை அடிக்கச் சொல்லி, தன் கணவனின் துன்புறுத்தலில் மகிழ்வதும் அந்த மனைவிக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

ஸோடிகஸ் என்ற கம்பீரமான விளையாட்டு வீரனையும் ஊரறிய, உலகறிய, காண்போர் முகம்சுளிக்கத் திருமணம் செய்துகொண்டு, அவனுக்கு மனைவியானார் பேரரசர். மாலைப்பொழுதின் மயக்கத்திலே, கண்களில் மை, உதட்டினில் சாயம், ஒட்டப்பட்ட சிகையில் சிறப்பலங்காரம் போன்றவற்றுடன் வாசனைத் திரவியங்களையும் அள்ளிப் பூசிக்கொண்டு, ‘ப்ப்ப்பா’ என்று காண்போர் மிரளும் எழில் தோற்றத்துடன் ஒரு பெண்ணாக வெளியே வருவார். ச்சீ... ஆடைகளெல்லாம் அநாவசியம். அரண்மனை வாசலிலோ, அல்லது கேளிக்கை விடுதி முன்போ நின்று, தான் அணிந்த ஆபரணங்களால் ஒலியெழுப்பி, பெண் குரலில் சிணுங்குவார். அவரைக் கவர்ந்திழுக்கும் கட்டழகுடன் ஆண் ஒருவன் அங்கே தோன்றுவான். (எல்லாம் முன்னேற்பாடுதான்.) அவனை ஆசையுடன் அழைப்பார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

இப்படியாக, எலகாபாலஸின் அந்தப்புரம், அவரே தேர்ந்தெடுத்த ஆண் தேவதைகளால் நிரம்பியிருந்தது. அதற்காகவே தரகர்களை நியமித்திருந்தார். இன்னொரு வேட்கையும் அவருக்கு இருந்தது. ‘பாலின மாற்று அறுவைச்சிகிச்சை மூலம், முழுமையான பெண்ணாக மாறிவிட வேண்டும்!’ அதற்காக சகல திசைகளிலிருந்தும் மருத்துவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். ‘‘வேண்டாம் பேரரசரே! உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும்’’ என்று அவர்கள் கைவிரித்ததாகச் செய்திகள் உண்டு. (அது நடந்திருந்தால் உலகின் முதல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சையாகவும் இருந்திருக் கலாம்.) ‘எலகாபாலஸ் ஒரு திருநங்கைதான்’ என்று பிற்காலச் சரித்திர ஆசிரியர்கள் சிலர் அழுத்தமாகக் கூறுகின்றனர். இது குறித்த தீராத சர்ச்சைகள் உண்டு.

அந்தப்புரத்தில் ஆண்களை மட்டுமல்ல, செல்லப் பிராணிகளையும் வளர்த்தார். அதாவது, சிங்கங்களையும் சிறுத்தைகளையும். இரவு முழுக்கக் கொட்டமடித்துவிட்டு, அனைவரும் போதையில் கிறங்கிக்கிடப்பார்கள். அதிகாலையில் சிங்கங்களையும் சிறுத்தைகளையும் அவிழ்த்துவிடுவார். அவற்றின் உறுமலில் மற்றவர்கள் உயிர் பதறக் கதறுவதைக் காண்பதிலும், சிலர் நெஞ்சடைத்துச் சாவதை ரசிப்பதிலும் அவருக்கு ஆனந்தம்.

ஒருமுறை கொடூர விஷம் கொண்ட பாம்புகள் பலவற்றைச் சேகரித்தார். மக்கள் வீர விளையாட்டுகளைக் காண்பதற்காகக் கூடும் அரங்கில் பாம்புகளைத் திறந்துவிட்டார். பாம்பு கடித்துச் செத்தவர்களைவிட, பீதியில் மோதி, நசுங்கி, மிதிபட்டுச் செத்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.

ராஜ்ஜியத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்குச் சம்பளமாகக் கலைநயமிக்க ஜாடிகளை அனுப்பி மனம்குளிர்ந்தார் பேரரசர். அந்த ஜாடிகளுக்குள் மரணயோகம் கிட்டச்செய்யும் விஷத் தேனீக்களோ, தவளைகளோ, கருந்தேள்களோ, கொடிய பாம்புகளோ நிரப்பப்பட்டிருக்கும் என்பது கூடுதல் தகவல்.

இரவு விருந்துகளிலும், தன் கற்பனையைக் கமகமக்கச் செய்தார் எலகாபாலஸ். இன்று பச்சை தினம். உணவும் மற்றவையும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அடுத்த நாள் நீல தினம். இன்னொரு நாள் வேறொரு நிறம். பருகும் ஒயினிலும் புதுப்புதுச் சுவையும் மணமும் வேண்டும். தலையணைகளும் மெத்தைகளும் போர்வைகளும் மெத்மெத்தென முயலின் தோலால் இருக்க வேண்டும். இப்படிப் பல கட்டளைகள். ஒருநாள் நீச்சல்குளத்தைக் குங்குமப்பூவாலும், வாசனைத் திரவியங்களாலும் நிரப்பச் சொல்வார். இன்னொரு நாள் ரோஜாக்களால். சில நேரங்களில் குளத்தில் நீருக்குப் பதில் திராட்சை ரசமே நிரம்பியிருக்கும்.

மயிலின் நாக்கு, நைட்டிங்கேல் பறவையின் தலை, ஃப்ளமிங்கோ பறவையின் மூளை, கோழியின் கொண்டை, கௌதாரி முட்டை, ஒட்டகத்தின் குளம்பு, கிளி, வான்கோழி, மடவை மீனின் உள்ளுறுப்புகள். வீரியத்துக்காகவும், நோய் எதிர்ப்புச் சக்திக்காகவும் எலகாபாலஸ் உணவாகவும் மருந்தாகவும் உண்ட மெனு இது.

சில சமயங்களில் வயதானவர்களையும், சாதாரண மக்களையும் விருந்துண்ண அழைப்பார். எப்படி? பரிமாறப்பட்ட உணவை ஜன்னல் வழியே தூக்கியெறிவது அல்லது உணவு என்று வெறும் ஓவியங்களைக் காட்டி உண்ணச் சொல்லிப் படுத்துவது எனப் பிறரை இரவு முழுக்கப் பட்டினியில் வாட்டி, தான் மட்டும் பசியாறும் கொடுமைக்காரராகவும் இருந்தார்.

இப்படி அகந்தையாலும், அதீத ஆடம்பரத்தாலும் படோடோபச் செயல்களாலும், பணத்தையும் செல்வத்தையும், தன்மீதான மக்கள் நம்பிக்கையையும் வீணடித்தார். பல ஆண்டுகளுக்கான மக்களின் உணவு தானியச் சேமிப்பு, பேரரசரது தினசரி விருந்துகளால் ஒரே ஆண்டில் காலியாகிப்போனது. இப்படி ஒருவரைப் பேரரசராக்கிவிட்டோமே என்று செனட் உறுப்பினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

ரோமானியப் பேரரசர்கள், தனக்கு அடுத்து ஆளப்போகும் வாரிசுக்கு ‘சீஸர்’ என்ற சிறப்புப் பட்டம் அளிப்பது மரபு. எலகாபாலஸ், தன் சாரதி ஹைரோக்ளெஸுக்கு ‘சீஸர்’ பட்டம் கொடுத்து அனைவருக்கும் கடுப்பேற்றினார். தன் அரசியல் சாதுர்யத்தால் எலகாபாலஸைப் பேரரசராக்கிய தாய்வழிப் பாட்டியான ஜூலியா மேஸாவே, இந்தச் செயலால் கடுப்பானாள்.

ஜூலியாவின் இன்னொரு மகள் அவிட்டா. அவள் வழியே ஒரு பேரன் இருந்தான். 13 வயது செவெரஸ் அலெக்ஸாண்டர். ‘‘இனி ‘சீஸர்’ பட்டம் அலெக்ஸாண்டருக்கு உரியது. அவன் விரைவில் எலகாபாலஸுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து ஆட்சி செய்வான்’’ என்று அறிவித்தாள் ஜூலியா. கொந்தளித்தார் எலகாபாலஸ். ஆனால், செனட் உறுப்பினர்களும், பெரும் பாலான படைவீரர்களும் அந்த முடிவை ஆதரித்தனர். பேரரசரின் பிரத்யேகப் படைப் பிரிவினர்கூட அலெக்ஸாண் டரை ரகசியமாக ஆதரிக்கத் தொடங்கினர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

ஆகவே எலகாபாலஸ், அலெக்ஸாண்டரைக் கொல்வ தற்கான சதித் திட்டங்களைத் தீட்டினார். ‘‘அவனைத் தனிமைப்படுத்திக் கொல்லுங்கள். வாளா, விஷமா, அல்லது நீரில் மூழ்கிச் சாகப்போகிறானா? அதை அவனது விருப்பத்துக்கே விட்டு விடுங்கள்!’’ என்றார்.

அவர் ஏவி விட்டவர்களெல்லாம் அலெக்ஸாண்டர் பக்கம் தாவிச் சென்று, பாதுகாப்பு அரணாக நின்றார்கள். திகைத்தார் பேரரசர். ‘இனி எப்படியாவது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தார் எலகாபாலஸ். தன்னை மரணம் நெருங்கினாலோ, தற்கொலை செய்துகொள்ளும் சூழல் வந்தாலோ, அது கௌரவமான உயிர் பிரிதலாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். அலங்கரிக்கப்பட்ட தங்க வாள், கொடும் விஷத்தில் தோய்க்கப்பட்ட வைரம், மரகதக் கற்கள் தயாராக இருந்தன. தான் குதித்துச் சாவதெற்கென்றே உயரமான கோபுரம் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோபுரம் தங்கத்தாலும், பிற ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ‘எவனது மரணமும் என்னுடையதுபோல ஆடம்பரமானதாக, மதிப்புமிக்கதாக இருக்கக்கூடாது!’

பேரரசரது படையினரின் விசுவாசத்தைச் சோதிக்க, ‘மரணப் படுக்கையில் கிடக்கிறான் அலெக்ஸாண்டர்’ என்றொரு வதந்தியை எலகாபாலஸ் கிளப்பிவிட்டார். நிலைமை அமளி துமளியானது. ‘பேரரசரும் சீஸரும் ஒன்றிணைந்து எங்கள்முன் தோன்ற வேண்டும்’ என்று படையினர் அழுத்தம் கொடுத்தனர்.

கி.பி. 222, மார்ச் 11. அந்தப் படையினரது முகாமுக்கு எலகாபாலஸ் தன் தாய் ஜூலியாவுடனும், அலெக்ஸாண்டருடனும் வந்தார். ‘அலெக்ஸாண்டர்... அலெக்ஸாண்டர்...’ என்று படையினர் விண்ணதிர கோஷம் எழுப்பினர். அங்கே எலகாபாலஸ் நிராகரிக்கப்பட்டார். சினம் உச்சியிலேற, ‘‘எனக்குக் கீழ்ப்படியாதவர்களின் தலை தரையில் உருளும்’’ என்று கர்ஜித்தார். படையினர் எலகாபாலஸ்மீது வெறியுடன் பாய்ந்தனர். வேறு வழியின்றி தப்பித்து ஓடினார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 28 - மானங்கெட்ட மரணம்!

கழிவறையில் ஒளிந்து, நடுங்கிக் கொண்டிருந்த பேரரசரை வீரர்கள் இழுத்துவந்தனர். இஷ்டத்துக்குத் தாக்கினர். ஆடைகளே அவருக்குப் பிடிக்காதே. நிர்வாணமாக்கினர். அவரின் தலை சீவப்பட்டது. அவர் தாயின் தலையும். (ஹைரோக்ளெஸ் உள்ளிட்ட நெருக்கமான பிறரும் கொல்லப்பட்டனர்)

தனது மரணம்கூட ஆடம்பரமானதாக, கௌரவமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்த பேரரசர் எலகாபாலஸின் உடல், தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டது. சாக்கடைகளில் தோய்த்தெடுக்கப்பட்டு, இறுதியாக டிபெர் நதியில் வீசியெறியப்பட்டது. நான்காண்டு நாசக்காரனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது அவரது வயது 18.

ரோமானிய சாம்ராஜ்ஜிய வரலாற்றிலேயே மானங்கெட்ட முறையில் மரணத்தைச் சந்தித்த ஒரே பேரரசர் என்ற ‘கௌரவம்’ எலகாபாலஸுக்கு மட்டுமே உண்டு.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism