Published:Updated:

சுமித்ரா - சிறுகதை

ஜி.கார்ல் மார்க்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம்

பிரீமியம் ஸ்டோரி

மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத வயசாச்சு. இன்னும் மனசுக்குள்ளயே படிச்சி பாடத்தைப் புடிச்சி வச்சிக்கத் தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டே இரண்டாவது மகளின் - வாணிக்கு நேர் மூத்தவளின் -  கூந்தலில் ஈருளியைவிட்டு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசம். “வயசுக்கு வந்து ஆறேழு வருஷம் ஆச்சு... இன்னும் தானா தலை சீவிக்கத் தெரியாது. தலையைப் பேன் இல்லாம வச்சிக்கத் தெரியாது” என்று அலுத்துக்கொண்டாள். அவளது அங்கலாய்ப்பு,  புத்தகத்தை மடியில் வைத்துக் கண்களை அதில் ஓட்டிக்கொண்டு மெல்லிய கோட்டைப்போலப் பிரிந்திருக்கும் உதடுகளுக்குள்ளே பாடத்தை முணுமுணுத்தவாறு  அம்மாவுக்குத் தலையைக் கொடுத்திருப்பவளின் காதுக்கு எட்டிவிடாமல் பார்த்துக்கொண்டாள். இருப்பதிலேயே இது சமர்த்து. ஒன்று குறையாகச் சொல்லிவிட்டால் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வைத்துக்கொண்டு முகத்தைச் சிவக்க வைத்துக்கொள்ளும் குணம் வேறு.

சுமித்ரா - சிறுகதை

கோவிந்தன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். யாரோ அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசிப் பெண் அவரை ஒட்டி நின்றுகொண்டு பேசுபவர்களை வாய் பார்த்துக்கொண்டிருக்கிறது. வந்திருப்பது யாராக இருக்கப்போகிறது? தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லியோ,  மகனுக்குப் பெண் பார்க்கச் சொல்லியோ வந்திருப்பவராகத்தான் இருக்கும். வந்தவுடன் சட்டுபுட்டென்று வந்த செய்தியைச் சொல்லும் அளவுக்கு இந்த ஊரில் யாரும் பழக்கப்பட்டிருக்கவில்லை. காப்பி குடிக்கும் நேரத்துக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்தால் இவள்போய் காலை ஆகாரத்துக்கு அழைக்கும்போதுதான் அவர்கள் ஜாதகக் குறிப்பை எடுத்து கோவிந்தனிடம் நீட்டுவார்கள். திண்ணை மாடத்தில் உள்ள கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு அவர் கட்டங்களை ஆராய்வார். இத்தனை வருடத் தரகர் வாழ்க்கையில், கிட்டத்தட்ட முழு ஜாதகமும் கணிக்கும் அளவுக்கு அவருக்குத் திறமை வந்திருந்தது. சில நேரங்களில் இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டுவிடலாமா என்று ஆலோசிப்பதும் உண்டுதான். ஆனாலும் அப்படி யோசிக்கையில் மனதிற்குள் சுருக்கென்று முள் தைத்ததுபோல இருக்கும். எப்படியாப்பட்ட ஜாம்பவான் ஜோசியர்களிடமெல்லாம் போய் கல்யாண பார்ட்டிகளுடன் உட்கார்ந்திருக்கிறார்.

சுமித்ரா - சிறுகதை

ஒரு முறை ஜாதக நோட்டுடன் செவிட்டு ஜோசியரிடம் ஒரு பார்ட்டியை அழைத்துக்கொண்டு போனபோது, பக்கத்தைப் புரட்டிய இரண்டு விநாடிகளில் அவர்,  “நாளைக்கு வரமுடியுமா...” என்று கேட்டுவிட்டு, இவர்கள் பதில் சொல்வதற்குள் எழுந்து உள்ளே போய்விட்டார். மறுநாள் கோவிந்தனுக்கு ஒரு பெண் வீடு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அதற்கு மறுநாள் அந்த பார்ட்டியின் வருகைக்காகக் காத்திருந்தபோது, அவரின் மகன், அவன்தான் அந்த ஜாதக நோட்டில் தனது தலையெழுத்தைக் கட்டம் கட்டமாகப் பரப்பி வைத்திருந்தவன் ஏதோ ஒரு வாகனம் மோதி நடுரோட்டில் காலைப் பரப்பியிருந்தான். ஜாதக நோட்டைப் புரட்டிய இரண்டு விநாடிகளுக்குள்  ‘இது ஏற்கெனவே செத்துப் போனவனது ஜாதகம் அல்லவா, அவனுக்கு என்ன பெண் பார்க்க வேண்டியிருக்கிறது...’ என்று நினைத்துத்தான் பெருசு சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து உள்ளே போயிருக்கிறது. இதைப்போல அவருக்கு எத்தனை சம்பவங்கள், எத்தனை அனுபவங்கள். அப்படியான பெரியவர்கள் பார்க்கும் வேலையை, ஏதோ இரண்டு கட்டங்களைப் பார்த்து நாலு பொருத்தங்கள் இருக்கிறது என்று சொல்லும் திறமை தமக்கு வந்துவிட்டதற்காக நானும் ஜோசியன்தான் என்று மார்தட்டிக்கொள்ள முடியுமா என்ன என்கிற சங்கடம்தான் அவரை ஜோசியராகவிடாமல் தடுத்துவிட்டது. ஆனால்,  ராசம் இதை வேறு மாதிரி பார்த்தாள்.

ஏன்... நீங்கள் போகும் எல்லா ஜோசியர்களும் ஞானிகளா என்ன? இதோ இத்தனை பொருத்தம் இருக்கிறது... தாராளமாக இந்தச் சம்பந்தத்தை உறுதி செய்யலாம்... என்று அவர்களால் சொல்லப்பட்ட எத்தனை திருமணங்கள் நடந்த ஆறுமாதத்திற்குள் அறுத்துக்கொண்டு நின்றிருக்கின்றன. அதற்குப் பிறகும்கூட, அடுத்து என்ன செய்யலாம் என்று அதே ஜோசியரிடம் போய் நிற்கும் யாருக்கும், ஏன் இப்படிப் பொய் சொல்லி இந்தக் கல்யாணத்தை நடத்திவைத்தாய், சரிதான்... பொய்யென்றுகூட வேண்டாம்... இந்த அபத்தத்தை ஏன் கண்டுபிடிக்காமல் விட்டாய்... அப்புறம் என்ன நீ ஜாதகப் புலி... என்று அவர்களது துண்டைப் பிடித்து இழுக்கும் தைரியம் ஏன் வரவில்லை? “பத்தில் ரெண்டாவது பலிக்கிறதே...” என்கிற ஆறுதல்தானே. பிறகு ஜோசியர் ஒன்றும் கடவுள் இல்லையே. எதையும் சடாரென உடைத்துச் சொல்லாமல், கொஞ்சம் இலைமறை காய்மறையாக, ஜோசியம் பார்க்க வந்திருப்பவர்களும் நடக்கப் போவதைத் தாங்களே யூகித்துக்கொள்வதற்குக் கொஞ்சம் இடம் கொடுத்து, சொல்லவேண்டியதைப் பூடகமாகச் சொல்லத் தெரிந்துவிட்டால் முடிந்தது... இதில் என்ன பெரிய தயக்கம் வேண்டிக்கிடக்கிறது என்பது அவளது கட்சியாக இருந்தது. இந்த இடம்தான், மிகச் சரியாக இந்தக் குணம்தான் கோவிந்தனுக்குக் கைவராமல் போகிறது.

சுமித்ரா - சிறுகதை

அது என்னவோ யோசிப்பதற்கு எளிதாக இருந்தாலும், அத்தகைய மன வார்ப்பை அடைவதற்கு மிகப்பெரிய பிரயத்தனம் தேவைப்படுகிறது. வந்திருப்பவரின்  மகன் இன்னும் ரெண்டு நாளில் சாகப்போகிறான் என்று தெரியும்போது அவரிடம் ஒன்றும் சொல்லாமல் நாளைக்கு வரமுடியுமா என்று புட்டத்தைத் தட்டிக்கொண்டு எழுந்து போகமுடியும் என்பதெல்லாம் இந்த ஜென்மத்தில் தமக்குக் கைகூடாத பக்குவம் என்பதை கோவிந்தன் அறிந்துவைத்திருந்தார். அதனால்தான் நடந்தேபோய் பஸ் ஏறிக்கொண்டிருக்கிறார். வீட்டு வாசலில் காரில் வந்து காத்துக்கிடக்கும் கூட்டத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே முற்றத்தில் தனக்கு முன்னால் ஜாதகக் கட்டைப் பிரித்துவைத்துவிட்டு, முகத்தைப் பார்த்தபடி பவ்யமாக உட்கார்ந்திருப்பவனிடம் ஜம்பமாக அலுத்துக்கொள்ளும் சந்தோஷத்தை அவர் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. அவரிடம் இருப்பது வெறும் தன்னடக்கம் மட்டும் அல்ல. சித்திக்கும் ஞானத்தின் மீதான பிரமிப்பு. அப்படியானவர்கள்மீது இருக்கும் மரியாதை. அதைத் தானும் செய்து பார்ப்பதில் இருக்கும் லஜ்ஜை. பின்னிரவுகளில் அவரருகில் படுத்துக்கொண்டு, கால்களை அவர்மீது போட்டுக்கொண்டு அவரது நெஞ்சைத் தடவிக்கொடுத்துக்கொண்டு, மின்னும் அவருடைய  கண்களைப் பார்த்தபடியே அவருடன் பேசிக்கொண்டிருக்கும் ராசத்துக்கு அத்தகைய நேரங்களில் புருசனின் இந்தக் குணத்தின்மேல் உன்மத்தம் பெருகும். யாரிடமும் இல்லாத குணமது. ஆனால், உயர்ந்த விஷயங்கள்மீது அவர் கொள்ளும் மரியாதையும் பக்தியும் இந்தக் குடும்பத்துக்கு என்ன செய்திருக்கிறது?

வீட்டில், சமைந்த குமரிகள் ஏற்கெனவே மூன்றாகிவிட்டார்கள். நாலாவது, வெளியாட்களிடம் பேசிக்கொண்டிருக்கும் தகப்பனின் தோளில் சாய்ந்துகொண்டு வாய் பார்க்கிறது. இத்தனைக்கும் இன்னைக்கோ நாளைக்கோ சமைந்துவிடும் என்ற நிலையில்தான் அதுவும் இருக்கிறது. நெடுநெடுவெனத் தன்னைப்போல ஒல்லியான உருவமும் மருளும் விழிகளுமாக, சதா சிட்டுக்குருவியைப்போல அந்தச் சிறிய வீட்டில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கும் அவளது முகத்தில் தொனித்துக்கொண்டிருக்கும் அதீதக் குழந்தைத்தனம் மட்டுமே அவளைச் சிறுமியாகக் காட்டாமல் குழந்தையைப்போலத் தோற்றம் கொள்ள வைக்கிறது. அவளும் எத்தனை நாள் தான் அப்படியே இருக்கமுடியும். இப்போதிருக்கும் குழந்தைகள்தான் ஏழு வயதிலும் எட்டு வயதிலும் உட்கார்ந்துவிடுகிறார்களே. இதன் முகத்தில் வேறு சமீப காலங்களில் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. அப்பளமும் ரசமும் தான் முக்கால்வாசி நேரம் என்றாலும், ரத்தத்தில் நிலைத்திருக்கும் பழைய வாழ்வின் மிச்சம் முகத்தில் வழிந்த வண்ணம் இருக்கிறது என்று நினைத்தாள். அப்படி யோசிக்கையில் பகீரென்று இருந்தது ராசத்துக்கு.

சுமித்ரா - சிறுகதை

சுமித்ரா சமைந்தபோது, இப்போதா அப்போதா என்று தள்ளாடிக்கொண்டிருந்த, சரக்குகள் வாங்கிப்போட்டு நிறைக்க முடியாத பலசரக்குக் கடையை மூட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்கள் எல்லாரையும் தெரியச் செய்திருந்த பலசரக்குக் கடை, எந்த வீட்டில் கல்யாணத்துக்குத் தயாரான பெண் இருக்கிறாள், மாப்பிள்ளை இருக்கிறான் என்பதை வெறும் தகவலாக,  தேவைப் படுபவர்களிடம் ஸ்நேக பூர்வமாகப் பகிர்ந்து, அது அப்படியே வளர்ந்து, அவரிடம் போய்க்கேட்கலாமே என்று கொஞ்சம் கொஞ்சமாகக் கடைக்கு ஆட்களை வரவழைத்தது. வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட கடையில் இதற்காகவாவது ஆட்கள் வருவது ஆறுதலாக இருந்தது கோவிந்தனுக்கு. யாரோ ஒரு வெளியூர்க்காரனுக்கு இவர் சொன்ன அந்த வரன் திகையவும் பணம் என்று அதற்காகக் கொஞ்சம் அவன் கொடுத்ததை வாங்கத் தயங்கி மறுத்தபடியே இருந்தார். அவன் வலுக்கட்டாயமாக அதைச் சட்டைப்பையில் திணித்து விட்டுப்போன நாளில் ஒருவிதத்  தத்தளிப்புடன் அவர் வீட்டுக்கு வந்தது இப்போதும் அவர் நினைவில் இருக்கிறது.

அன்று அவர் வீட்டையடைந்தபோது இரண்டாவது மகள் நித்யா ருதுவாகியிருந்தாள். முதல் மகள் ஆனபோது பக்கத்து வீட்டு அத்தையை அழைத்துக் குழந்தையைப்   பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, எட்டி எட்டி நடந்து கடைக்குப் போய் அங்கு சில வாடிக்கையாளர்கள் நிற்பதைப் பார்த்துத் தயங்கி, தூரத்திலிருந்தே ‘இங்க வாங்களேன்...’ என்று கைகாட்டிப் புருஷனை வரவழைத்துக் கூச்சத்துடன் அவனிடம் அதைத் தெரிவித்த ராசம், தன் இரண்டாவது மகள் வயசுக்கு வந்தபோது அவருக்குத் தகவல் சொல்லாமல், அவளைக் குளிப்பாட்டி முற்றத்தை ஒட்டிய நடையில் ஜமுக்காளத்தை விரித்து அதில் உட்கார வைத்துவிட்டு அவருக்காகக் காத்திருந்தாள். அவர் வந்தபோது வீடு அமைதியாக இருந்தது. சுமித்ராதான், “தங்கச்சி உக்காந்துட்டாப்பா” என்று தந்தையிடம் வந்து சொன்னாள். அந்தத் தரகுக் காசுடன் மீதி கொஞ்சம் காசுபோட்டு, மயில் கண் நிறத்தில் ஒரு பட்டுப் பாவாடையும் மஞ்சள் நிறத்தில் மேல்சட்டையும் வாங்கி வந்தார். `எதாவது பொருத்தம் இருக்கா இந்தப் பாவாடைக்கும் சட்டைக்கும்...’ என்று ராசத்துக்குத் தோன்றினாலும்,  ‘அவளுக்கு நல்லாதான் இருக்கும்’ என்ற சமாதானத்தையும் அவளால் உடனே அடைந்துவிட முடிந்தது. எதற்கு அழுதுகொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் குழப்பத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தவளுக்கு அந்தப் புத்தாடை பெரும் ஆசுவாசத்தை அளித்தது.

கடையை நிரந்தரமாக மூடியதும் முழுநேர கல்யாண புரோக்கராக மாறியதும், குளிர்கால அந்தி,  ராத்திரியாவதைப்போல அவரது புலனுக்குத் தட்டுப்படாமல் நடந்தேறியது. “நம்ம கோவிந்தன் பய...” என்று சொல்லிக்கொண்டிருந்த கிழடுகள் ஒவ்வொன்றாக மரித்ததற்கும், “கோவிந்தன் மாமா” என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் “தரகர் மாமா” என்று சொல்லத் தொடங்கியதற்குமான கால மாற்றம்கூட இப்படித்தான் மயங்கி மயங்கிப் புகைமூட்டமாக அவரது மனதில் நிலைத்திருக்கிறது. பின்னந்தியில் தூரத்து மரச்செறிவின் கருமைமீது கவிழும் அத்துவானத்தின் பொன்சாந்தைப்போல அதில் மின்னுமொரு நிலையாமை கவிந்திருக்கிறது.

மூன்றாவது மகள் வாணி உட்கார்ந்தபோது வீடு கிட்டத்தட்ட மயான அமைதிக்குப் போனது. அவர் வீட்டை வந்தடைந்த அன்றைய இரவில் மின்சாரம் தடைப்பட்டுத் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கம் போல வீதிவரை கசிந்து வழியும் தொலைக்காட்சித் தொடர்களின் வசனங்கள்கூட இல்லாமல் தெரு அமைதியாக இருந்தது. அன்று மட்டும் மூன்று வரன்களைப் பார்ப்பதற்காக அலைந்திருந்தார். மூன்றில் ஒன்றுகூட சம்பந்தப்பட்டவர்களது மனதுக்குப் பிடிக்காமல்போக, வெறும் பேருந்துச் செலவைத் தாண்டிப் பணமாக ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் பார்க்கும்போது குழந்தை தீபாவளிக்கு எடுத்திருந்த அந்தப் புதுச் சட்டையை உடுத்தியிருந்தாள். ஒன்றிரண்டு முறை போட்டதால் பழசாகிவிடுமா என்ன. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் கூடத்தில் படுத்திருந்தாள். ஒரே போர்வையில் எல்லாக் குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தன. இவர் சாப்பிட்டு முடித்தவுடன் திண்ணைக்கு வந்து வெற்றிலை சீவல் போடும்போதுதான் ராசம் இவரிடம் தகவலைச் சொன்னாள். ஓ அப்படியா... என்று அனிச்சையாக அவரது தலை வீட்டின் உள்பக்கம் திரும்பியது. எதுவும் தெரியவில்லை தான். நான்கு தப்படிதான் இருக்கும் என்றாலும் குறுக்கே மடங்கலாக ஒரு சுவர் இருக்கிறதே திண்ணைக்கும் கூடத்துக்கும். அதற்குமேல் மனைவியிடம் சொல்வதற்கு அவருக்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் அந்தக் குழந்தையைச் சமீபித்து அதன் தலையைத் தடவிக்கொடுக்க வேண்டும்போலத் தோன்றியது அவருக்கு. வழக்கத்தைவிடக் கூடுதலாக விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த சுண்ணாம்பை வெற்றிலையின் பின்பக்கம் தடவிக் கொண்டிருந்தார். ராசமும் அவரது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து வெறிச்சோடிக்கிடந்த தெருவைப் பார்த்தாள்.

சுமித்ரா - சிறுகதை

அவரிடம் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை அவளுக்கு. அவரிடம் குறைபட, கோபப்பட, வருத்தப்பட எதுவும் இல்லாமல் போனதை நினைத்து அவளுக்குத் துக்கம் பெருகியது. இத்தனை வருடத் தாம்பத்யத்தில் அவரிடம் அதிருப்தியே தோன்றியதில்லை அவளுக்கு. இத்தனைக்கும் அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த நகை நட்டு உட்பட, குடும்பத்தின் சொத்தாக அவருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட பலசரக்குக் கடை வரைக்கும் எல்லாவற்றையும் ஆவியாக்கிவிட்டிருக்கிறார்தான். ‘இருந்தாலும் என்ன’ என்றே அவளுக்குத் தோன்றும். இப்படி அலைந்து திரிந்து வருகையில், வளர்ந்த குழந்தைகள் வீட்டில் இருப்பது பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவருடைய கால்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அமுக்கி விடுபவள்தான் அவள். இன்று அவளுக்கு அப்படிச் செய்யத் தோன்றவில்லை. மனது வெறுமையில் அலைந்தது. சோர்வாகவும் இருந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தனக்குள்ளே சொல்லிக்கொள்பவரைப் போல  “நானும் போற இடத்துல சொல்லிக்கிட்டுதான் இருக்கேன்... பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... பொருத்தமா எதாவது வந்தா முடிச்சிடலாம்தான்... எனக்கு மட்டும் என்ன, பெரியவளைப் பற்றி நினைப்பு இல்லாமலா இருக்கு...” என்றார்.   அவர் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது உள்ளிருந்து போர்வை சரசரக்கும் ஒலி கேட்பதுபோல இருந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் அடுக்களைக்கு நடக்கும் ஒலியும் தண்ணீர் மொண்டு குடிக்கும் சத்தமும் கேட்டது. இருவரும் சம்பாஷணையை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார்கள்.

ராசம்தான் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.  “எனக்கென்னவோ அடுத்தடுத்து புள்ளைங்க உக்காரும்போது பெரியவளை நினைச்சி பதட்டமா இருக்கு. எரிச்சல்ல பல நேரங்கள்ல அவளையே சபிச்சிக் கொட்டிடுறேன் வேற. எனக்கு நான் செய்றது தப்புன்னு தெரியுதுதான். ஆனாலும் என்ன கட்டுப்படுத்திக்க முடியல. அவ திருப்பி ஒரு வார்த்தை,  ‘அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்...’ அப்படின்னு கேட்டா கூட பரவால்ல. பேசாம போயி கிணத்தடியில இருக்க துணி துவைக்கிற கல்லுல உக்காந்துகிட்டுத் தண்ணிய எட்டிப் பாத்திட்டிருக்கா.”  கோவிந்தனால் ராசத்தின் நிலையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. பெரியவளின் இருப்பு ராசத்தின், கோவிந்தனின் ஏதோ ஒரு தோல்வியை அறிவித்துக்கொண்டே இருப்பது போலவும், எந்தக் காலத்திலும் வெற்றிகொள்ளப்பட முடியாத நீண்ட போரொன்றின் மத்தியில் தம்பதிகள் சிக்கிக்கொண்டிருப்பதைப் போலவும்,  அந்த அலைக்கழிப்பைப் பெரியவள் ஒரு பார்வையாளரைப்போல தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதைப்போலவும் ராசம் உருவகித்துக்கொள்கிறாள் என்று நினைத்தார். இப்படிக் கோவையாக யோசித்து வார்த்தைகளால் அவள் தொகுத்துக்கொள்ளவில்லை என்றாலும்கூட, அவளுள் வளர்ந்து வளர்ந்து நிறையும் அதிருப்தியின் அடிப்படை இதுதான் என்று கலங்கலாக கோவிந்தனுக்குப் புரிந்தது.

சுமித்ரா - சிறுகதை

சுமித்ரா வேறு வயதாக ஆக தன்னையே நகலெடுத்ததைப் போல மாறிக்கொண்டிருப்பதைக் காண ராசத்துக்கு அச்சமாக இருந்தது. பதினெட்டு வயதில் கல்யாணம் முடித்து இந்த வீட்டுக்கு வந்து நிறைய இடைவெளி இருந்தாலும் சடசடவென நான்கு குழந்தைகளைப் பெற்றுப் போட்டவளுக்கு ,  மூத்தவள் தனக்கு இணையாக முதிர்ந்து வீட்டை வளைய வருவது, சகிக்கமுடியாத நெருக்குதலை அளித்தது. இதற்கு எந்த வகையிலும் சுமித்ரா பொறுப்பில்லைதான். பத்தாம் வகுப்போடு படிப்பை விட்டு நிறுத்தி அவளை வீட்டு வேலைக்கு ஒத்தாசையாக நிறுத்தியது ராசம்தான். அவள் கல்லூரியோ ஏதோ ஒன்று முடித்து ஒரு வேலைக்குப் போயிருந்தால்கூட கோவிந்தனுக்கு உதவியாக இருந்திருக்கும். அவளுக்கும் தனது முகத்தைக் கிணற்று நீரில் பார்த்துப் பார்த்து மாய வேண்டிய அவசியம் வந்திருக்காது. இப்போது இதை யோசிப்பதற்கு ஒன்றும் இல்லைதான்.

ஆனாலும், அடுத்தடுத்து குழந்தைகள் வயதுக்கு வரும் போது பெரியவளது முகத்தை மிகுந்த கழிவிரக்கத்துடன் ராசம் பார்க்கத் தொடங்கியிருந்தாள். அது தாங்கமுடியாத அழுத்தத்தைச் சுமித்ராவுக்கு அளித்தது. “என்னை ஏம்மா அப்படிப்பாக்குற...” என்று, மூன்றாவது மகள் வயதுக்கு வந்த அன்று அம்மாவைப் பார்த்துச் சுமித்ரா கேட்டேவிட்டாள். இத்தனைக்கும் அவள்தான் தங்கையின், உடைகளைக் களையவைத்துத் துவைத்து, குளிப்பாட்டி, அவளது கூந்தலை உலர்த்தி, ஒரு பருத்தித் துண்டால் அவளது சிகையைக் கொண்டையாகக் கட்டி, ‘உடனே படுக்காத... கொஞ்ச நேரம் உக்காரு...’ என்று சொல்லி அவளது கையில் ஒரு வார இதழைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி, சமைத்திருந்ததை அவளுக்கும் ஒரு தட்டில் போட்டுச் சாப்பிட வைத்திருந்தாள். இப்போது கடைக்குட்டியைப் பார்க்கும்போதெல்லாம் அவள் எப்போது உட்கார்ந்துவிடுவாளோ என்கிற பதற்றம் ராசத்தை அலைக்கழித்தது. அவள் ஓடினால், நடந்தால்கூட அவளைக் கடிந்துகொண்டாள். அத்தகைய நேரங்களில் ராசத்தின் பார்வை அனிச்சையாகச் சுமித்ராவை நோக்கித் திரும்புவது தவிர்க்க முடியாததாக இருந்தது. சுமித்ரா அந்த எரிச்சலின் அடர்த்தியை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று அடுக்களையில் தன்னை மறைத்துக்கொண்டாள் அல்லது கிணற்றடியில் புதைத்துக் கொண்டாள். இப்போதெல்லாம் ராசத்தின் முகத்தை மட்டுமல்ல,  கடைக்குட்டியின் முகத்தைப் பார்த்தால்கூட சுமித்ராவுக்கு இனம்புரியாத நடுக்கம் வந்துவிட்டிருந்தது.

குழந்தைகள் கல்லூரிக்கும் பள்ளிக்கும் சென்றுவிட,  ராசமும் சுமித்ராவும் தனித்து விடப்படும் பொழுதுகளில் இருவருக்கும் பேசிக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இரண்டு தனித்த உருவங்கள், நிழல்களைப்போல அந்த வெக்கையில் எப்போதும் அலைந்து கொண்டிருந்தன. திட்டுவதற்காக மட்டுமே உசந்த குரலில் கிணற்றடியில் உட்கார்ந்திருப்பவளை நோக்கி அழைப்பவளாக மாறிப்போயிருந்தாள் ராசம். அப்படி எதைத்தான் அந்தக் கிணற்று நீரில் பார்க்கிறாளோ பகலெல்லாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் போதும், உடனே பிரமை பிடித்தாற்போல் கிணற்றடியில் போய் சமைந்துவிடுவதுதான் நடக்கிறது என்று புலம்பித் தீர்த்தாள்.

ஆனால், சுமித்ராவுக்கு அதுவொரு தனித்த உலகமாக இருந்தது. ஆழ்ந்த அமைதியில் இருக்கும் கிணற்று நீர் எங்கோ அவளது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுபோல அவளை உணரச்செய்திருந்தது. நீர் மேலேறிக் கிடக்கும் மழைக்காலங்களின் மதிய வெளிச்சத்தில், நிழலின் மீதான இன்னொரு குட்டி நிழலைப் போன்று பதிந்திருக்கும் அவளது முகத்தைக் கிணற்று நீரில் உற்றுப்பார்க்க முயன்றபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. தங்கைகள் வீட்டில் இல்லாத பகல் பொழுதுகளில் அவள் உணர முடிந்த நீண்ட தனிமை அந்தக் கிணற்றின் பாசி படர்ந்த இரு படிக்கட்டுகளை ஒத்ததாக இருந்தது. அதன் வசீகரம் பல நேரங்களில் ரகசியமான அழைப்பைப் போல அவளது அந்தரங்கத்தில் ஊடுருவியது. அவள் மிகத் தீவிரமாகக் கிணற்றுடன் உரையாடத் தொடங்கியிருந்தாள். தூரத்தில் கொஞ்சமாக அசைவுற்றபடியே கிடக்கும் நீர்ப்பரப்பிலிருந்து அரூபமான இசைக்கோவை உருவாகி வந்து அவளை முழுதும் நனைத்தது. உச்சிப்போதில் அதன்மீது பட்டுத் தெறிக்கும் கிரணங்கள் அதிலிருந்து ஒருவித சௌந்தர்ய லகரியை உண்டு பண்ணிக் கிணற்றின் புறம் நோக்கிப் பரவச்செய்தன. அந்த ஒலியும் ஒளியும் கலந்த பிரவாகம் தனது மேனியை ஊடுருவுவதை, நனைப்பதை, மூழ்கடிப்பதைச் சுமித்ரா உணரத்தொடங்கினாள். உடலும் மனசும் இறகாகும் தருணங்களில் வாளியைப் பிணைத்திருக்கும் கயிற்றில் அவள் உணர்ந்த சொரசொரப்பும் குளிர்ச்சியும் அந்த ஏகாந்தத்துக்கு வலுக் கூட்டின. அவள் கட்டமைத்திருந்தது அவளுக்கே அவளுக்கான தனித்த உலகமாக மாறியிருந்தது. பட்டைகள் உரிந்திருக்கும் கிணற்றை ஒட்டிய வாழையின் வழவழப்பை ஒரு கையில் அணைத்துக்கொண்டு ஒரு காலைத் துணி துவைக்கும் கல்லில் ஊன்றிக்கொண்டு கிணற்றை எட்டிப் பார்க்கும்போது, அங்கு நிகழ்வது பிரபஞ்ச நிலைமாற்றமாக இருந்தது அவளுக்கு. விவரிக்க முடியாத வலையொன்றில் விரும்பியே தன்னைச் சிக்கக் கொடுத்தவள் போல அவள் மாறிப்போயிருந்தாள்.

அப்படி அவள் ஒவ்வொரு முறை பரவசத்தின் உச்சியை அடையும்போதும் அதைச் சுக்குநூறாக்கும் குரல் ராசத்தினுடையதாக இருந்தது. கிணற்றின் பிரவாகத்தில் மிதந்துகொண்டே இருக்கும் ஒருத்தியை அப்படியே மயிரைப் பற்றித் தூக்கிப் புழுக்கள் நெளியும் எருக்குழியில் தள்ளிவிடுவது போல இருந்தது சுமித்ராவுக்கு. சமீப காலங்களில் மிக ரகசியமான ஒரு வேட்கையால் உந்தப்படுபவளாக அவள் இருந்தாள். அந்தியில் கிணற்றில் கவியும்  இருட்டின் மீது, அதை ஊடுருவி ஊடுருவி எல்லைகளற்ற அதன் வண்ணத்தில் தடைகளற்ற அதன் பிரவாகத்தில் கலந்துவிட வேண்டும் எனும் தீவிரம் மேலிட்டது. சமநிலையான நேரங்களில் அந்தத் தீவிரத்தின் அடர்த்தி நினைவுக்கு வந்து அவளது உடலைச் சிலிர்க்கச் செய்தது. கிணற்றுக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கும் வாளியாகத் தன்னை உருவகித்துச் சிரித்துக் கொள்ள முயன்றாள். ஆனால், அது அருவருப்பாக இருந்தது. அதன் கட்டுப்பாடும் எல்லையும் அவளுக்கு ஆபாசமாகத் தோன்றின.

உள்ளே வந்து குளித்துச் சாப்பிட்டுவிட்டு கோவிந்தன் வெளியே கிளம்பத் தயாரானார். வார இறுதி நாள் என்பதால் எல்லாக் குழந்தைகளும் வீட்டில் இருந்தன. “நீங்கள் நேராக அந்த ஜோசியக்காரரின் வீட்டுக்கு வந்துவிடுங்கள்” என்று சொல்லி, வந்திருந்தவர்களை அனுப்பி யிருந்தார். என்னதான் கருநாக்குக்காரராக இருந்தாலும் செவிட்டு ஜோசியரிடம்தான் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பதில் வந்திருந்தவரும் பிடிவாதமாக இருந்ததால், “சரி அப்படியே செய்யலாம்” என்று சொல்லியிருந்தார். அவரிடம் போவதில் இவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், ஆறு கிலோமீட்டருக்குமேல் இருக்கும். பஸ்ஸில் போக வேண்டும். ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தான் பேருந்து. மேலும், அந்த ஜோசியருக்குச் சில வார்த்தைகள் வேகமாகப் பேசினால் புரியாது, சில வார்த்தைகளை மெதுவாகப் பேசினால் புரியாது என்று அவரது செவித்திறன் விநோதமாக இருந்தது. கோவிந்தன் கூட இருப்பது  பார்ட்டிகளுக்கு உபயோகமாக இருந்தது. மேலும், வரன் பொருத்தமாக இருந்தால், அப்படியே அடுத்த வண்டியைப் பிடித்து அவர்கள் வீட்டுக்குப் போய் மற்ற ஏற்பாடுகளைப் பார்க்கலாம்... அலைச்சல் மிச்சம் என்று கோவிந்தனும் நினைத்தார்.

சுமித்ரா - சிறுகதை

கிளம்பித் திண்ணைக்கு வந்து செருப்பை மாட்டும்போது, ராசம் நிலைப்படிக்கு அருகில் வந்து “ஏங்க, போறதுதான் போறீங்க... அப்படியே நம்ம பொண்ணோட ஜாதகத்தையும் பாத்துட்டு வாங்களேன்...” என்று சொன்னாள். அவருக்கு வேண்டாம் என்று தோன்றியது. ஆனால், அதைச் சொன்னால் ராசம் சங்கடப்படுவாள் அல்லது ஏற்கெனவே தான் அதைப் பார்த்திருப்பேன் என நினைப்பாள் என்று யோசித்தார். “சரி எடுத்துட்டு வா...” என்று சொல்லிவிட்டுத் திண்ணையில் சற்று உட்கார்ந்தார். ஜாதக நோட்டு கசங்காமல் மடங்காமல் புத்தம் புதிதாக இருந்தது. இதுவரை ஒருமுறைகூட அதைப் புரட்டிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் எனும் நினைவு ஆச்சர்யத்தில் அவரது புருவத்தை நெளியச் செய்தது.  ஏற்கெனவே இருந்த ஜாதகப் பையில் அதையும் வைத்துக்கொண்டு, அவள் கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தார்.

ஜோசியரின் வீட்டை அடைந்தபோது நல்ல உச்சியாகியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூட்டம். திண்ணையிலும்,  வீட்டுக்கு வெளியே இருந்த புங்க மரத்தினடியில் கிடந்த நாற்காலிகளிலும் ஆட்கள் காத்திருந்தார்கள். காலையில் வீட்டுக்கு வந்திருந்தவர் தன்  மனைவியுடன் இவருக்கு முன்பாகவே வந்து திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, படிகளைக் கடந்து உள்ளே தலையை நீட்டி,  தாம் வந்திருப்பதை ஜோசியருக்கு கோவிந்தன் தெரியப்படுத்தினார். கர்ப்பகிரகத்தின் முன்னால் உட்கார்ந்திருப்பதைப் போல ஒரு குடும்பம் ஜோசியரின் முன்னால் உட்கார்ந்திருந்தது. வெற்றுடம்பாக நெஞ்சு வரை ஏற்றிக்கட்டிய வேட்டியுடன் அவர் கட்டங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார். கோவிந்தனும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டார். பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும். அந்தக் குடும்பம் ஒருவரது முகத்தை ஒருவர் ஆறுதலாகப் பார்த்துக்கொண்டு வெளியேறியது. உள்ளிருந்து ஓர் ஆள் வந்து கோவிந்தனை வரச்சொல்லிச் சைகை செய்தான்.

 “வா கோவிந்தா... வா.. வா... ரொம்ப நாளாச்சு பாத்து... இப்பல்லாம் வேற எங்கயோ போறாப்ல தெரியுது...” என்று சொல்லிவிட்டுக் கோவிந்தனைப் பார்த்து ஸ்நேகமாகச் சிரித்தார். “இல்ல... இல்ல... அப்படில்லாம் இல்ல. பார்ட்டிங்க விருப்பப்படுற இடத்துக்குப் போறோம்... எனக்கு உங்க கணிப்பு மேல துளி சந்தேகம் கிடையாது... என்று சொல்லிவிட்டு ஜாதகத்தை எடுத்துப் பவ்யமாக அவரிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்தவரின்  புருவங்கள் சட்டென்று நெறிந்தன.

“இந்தப் பொண்ணு... இந்தப் பொண்ணு இன்னேரம்...” என்று தொடங்கிவிட்டு பார்ட்டிகளின் முகத்தைப் பார்க்காமல் கோவிந்தனைப் பார்த்தார். அன்று எழுந்து போனதைப் போன்ற அதே உணர்ச்சிகளற்ற மையமான முகம்.
 “இல்லியே... நாங்க குடுத்தது பையன் ஜாதகமாச்சே...” என்று, கூட வந்திருந்தவர்கள் குழப்பத்துடன் ஜோசியரையும் கோவிந்தனையும் பார்த்தபோதுதான் அவருக்கு உறைத்தது...

“அடடா.. இல்ல.. இல்ல.. தப்பு நடந்துபோச்சு...” என்று சொல்லிவிட்டு அந்த ஜாதக நோட்டை அவரது கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு அந்தப் பையனின் ஜாதகத்தைப் பையிலிருந்து எடுத்து ஜோசியரின் முன்னால் வைத்தார். ஜோசியர் பக்கத்தில் இருந்த பித்தளைச் சொம்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு அந்த ஜாதகத்தைப் பார்க்கத் தொடங்கினார். கோவிந்தனுக்கு  அங்கு உட்கார இருப்பு கொள்ளவில்லை. உடனே வீட்டுக்குப் போகவேண்டும் என்று இருந்தது.

சுமித்ரா - சிறுகதை

“என்ன கோவிந்தா எதாவது கேக்கணுமா... கேளு...” என்றார் ஜோசியர். வாய் வரை வந்த கேள்வியை அப்படியே அடக்கிக்கொண்டு,  “ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல...” என்று கோவிந்தன் அவசரமாக மறுத்தார். அவரை அரைக்கண்ணால் பார்த்துவிட்டு ஜோசியர் மீண்டும் ஜாதகத்தில் ஆழ்ந்தார். கோவிந்தனால் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “மன்னிக்கணும்...” என்று சொல்லிவிட்டு அவர்களது பதிலை எதிர்பாராமல் எழுந்து நின்றார். பிறகு விடுவிடுவென நடந்து வீட்டை விட்டு வெளியில் வந்தார். “அந்தப் பொண்ணு ஜாதகம் யாருது...” எனும் ஜோசியரின் குரல் அவரைத் துரத்தித் தேய்ந்தது.

அவர் வீட்டையடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருக்கவில்லை. அவர் தன் செருப்புகளை உதறும்போது வீட்டின் திண்ணையை ஒட்டிய மாடத்தில் சிறிய அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். இருட்டு இன்னும் முழுமையடையாததால்  தீபம் அதன் தீவிரத்தை எட்டாமல் அலைந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே யாருமே இல்லை. அவர் அதே வேகத்துடன் கிணற்றடிக்குப் போனார். அங்கே சுமித்ராவும் கடைக்குட்டியும் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும் அது ஓடிவந்து கைகளைப் பிணைத்துக் கொண்டது. “எல்லோரும் கோயிலுக்குப் போயிருக்காங்கப்பா.... அப்புறம், இந்தக் கிணத்துல இருந்து மியூசிக் வருதுப்பா” என்று சொல்லிக்கொண்டே அது அவரைக் கடந்து உள்ளே ஓடியது. ததும்பும் விழிகளுடன் அவர் சுமித்ராவைப் பார்த்தபோது, “ஏம்ப்பா செத்துடுவேன்னு பயந்துட்டியா...” என்று மின்னும் கண்களுடன் கேட்டாள். “ச்சே...ச்சே... இல்லம்மா” என்று சொல்லிக்கொண்டே அவரும் கிணற்றினுள்ளே எட்டிப்பார்த்தார். முழு இருட்டாக இருந்தது. அகல் விளக்கின் ஒளியைப் போன்ற மெல்லிய இசையொலியை அவரால் உணர முடிந்தது. அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு