ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசி ஹீரோ ஆனவர் ஆயுதப்படைக் காவலர் மாயழகு. மெரினாவில் இவர் பேசிய பேச்சு போராட்டக்காரர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றதோடு, காவல்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 10 மாதங்களுக்குப்பின், மாயழகுமீது ஒழுங்கு நடவடிக்கைப் பாய்ந்துள்ளது.

அப்போதே இவர்மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் இருந்தது. ‘மாயழகுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். அப்போதைய மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மாயழகுமீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என ஊடகங்கள் முன்னிலையில் வாக்குறுதி கொடுத்தனர். அந்த வாக்குறுதியை இப்போது மீறியுள்ளனர்.
இந்த நடவடிக்கை சம்பந்தமாக காவலர் மாயழகுவிடம் பலமுறை பேச முயற்சி செய்தோம். அவர் பேச மறுத்துவிட்டார். பின்னர் காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘சென்னை மாநகர ஆயுதப்படைப் பிரிவில் மாயழகு டியூட்டியில் இருக்கார். ஜனவரியில பேசினதுக்கு ஜூன் மாதம் மெமோ கொடுத்தாங்க. விசாரணை வெச்சி அவரை ஒரு வழி பண்ணிட்டாங்க. பல முறை மாயழகு மன்னிப்புக் கேட்டுட்டார். ஆனாலும், நடவடிக்கை எடுத்தே ஆகணும்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க. அக்டோபர் மாதம் 21-ம் தேதி அவருக்குக் குழந்தை பிறந்தது. அஞ்சு நாள் விடுப்பில் மதுரைக்குப் போனார். விடுப்பில் இருக்கிற அவர்மீது ‘ஒழுங்கீன நடவடிக்கைக்காக’ நடவடிக்கை எடுத்திருக்காங்க. இதனால், ஒரு வருடத்துக்கான சம்பள உயர்வு கிடைக்காது. இது எதிர்காலத்துல அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறதையும் பாதிக்கும்’’ என்றனர்.
காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘காக்கிச் சட்டை அணிந்த போலீஸ்காரர், போராட்டத்தில் கலந்து கொள்வதோ, ஆதரிப்பதோ தவறு. போராட்டத்துக்குச் சென்றால் என்ன ஆவது?’’ என்றார்.
- ஜெ.அன்பரசன்
