Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

‘சுண்டைக்காய்ப்பயல் எலகாபாலஸைப் பற்றியெல்லாம் எழுதும்போது, அவனுக்கு முப்பாட்டன்களான எங்களை ஏன் கிறுக்கு ராஜாக்களின் பட்டியலில் சேர்க்கவில்லை? நாங்கள் அரங்கேற்றிய கொடூரங்களுக்கு முன்பெல்லாம் எவனும் மண்டிபோட்டுக்கூட நிற்க முடியாது என்பது தெரியாதா?’

ரோமாபுரிப் பேரரசர்களான கலிகுலாவும் நீரோவும் காட்டேரிகள்போலக் கனவில் வந்து கழுத்தைக் கவ்வி மிரட்டியதால்... இதோ அவர்களது ரத்தச் சரித்திரம். சரி, ரோம் நகரம் பற்றியெரியும்போது, நீரோ உண்மையாகவே பிடில் வாசித்தாரா? அட... அதைவிடப் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. தொடருங்கள்...

நிகரற்ற நீரோவின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்குமுன், அவர் எப்படிப்பட்ட வம்சத்திலிருந்து உதித்திருக்கிறார் என்று அறிந்து கொள்வது அவசியம். அவரின் முன்னோர்கள் ஒன்றும் டம்மிபீஸ்கள் இல்லை. அவருடைய ஜூலியோ-கிளாடியான் பரம்பரையின் குருதி கொப்பளிக்கும் அத்தியாயங்களைப் புரிந்து கொள்வதும் மிக மிக அவசியம். ஆகவே...

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஜூலியோ-கிளாடியான் வம்சத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ். ஜூலியஸ் சீஸர் தத்து எடுத்துக்கொண்ட வாரிசு. அகஸ்டஸின் ஆட்சிக் காலம் கி.மு 27 முதல் கி.பி 14-ம் ஆண்டுவரை. அவர் 75 வயதில் இயற்கையான மரணம் அடைந்தார். ‘இல்லை, அகஸ்டஸை விஷம் வைத்துக் கொன்றது அவரின் மனைவி லிவியா’ என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் உண்டு. அடுத்து, பேரரசர் ஆனவர் டைபெரியஸ். இவர், அகஸ்டஸின் மகன் இல்லை. வளர்ப்பு மகன். இன்னொரு முறையில் மருமகன்.

கேப்ரி. இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்த சிறிய தீவு. டைபெரியஸ் அங்கே ஜோவிஸ் என்ற சொகுசு மாளிகையைக் கட்டினார். இஷ்டமித்ர பந்துக்களுடன் அங்கேயே தம் வாழ்நாளின் பெரும்பகுதியை இன்பமாகக் கழித்தார். வேறென்ன, வரைமுறையற்ற, வக்கிரமான விருந்துகள். அவருக்குச் சிறுவர்கள் மீதுதான் பாசம் பொங்கிவழிந்தது என்பது உபரித் தகவல். டைபெரியஸுக்கு யார் மீதாவது துளி சந்தேகம் தோன்றினாலும், உரியவருக்கு ‘தோற்றம் – மறைவு’ எழுதிவிட வேண்டியதுதான். அப்படி அவர் அரங்கேற்றிய அரசியல் கொலைகள் எண்ணிக்கையில் அடங்காதவை. 22 ஆண்டுகள் சொகுசாக ஆண்டு அனுபவித்து, தன் எழுபத்தேழாவது வயதில் அடங்கிப்போனார். அவராக அடங்கவில்லை, பதவி வெறியிலிருந்த கலிகுலாதான் தலையணையால் அழுத்தி மூச்சை அடக்கினார் என்றும் ஒரு சர்ச்சை உண்டு.

டைபெரியஸுக்குப் பிறகு, கலிகுலா பேரரசர் ஆனார் (கி.பி.37). அவர், டைபெரியஸின் மகன் இல்லை. அவரால் தத்தெடுக்கப்பட்ட பேரன். அரசியல் சதுரங்க ஆட்டத்தில் பிற போட்டியாளர்களை வீழ்த்தி, அவர்களின் சடலங்களின் மீதேறி அரியணைக்கு வந்தவர். ரோமாபுரி சரித்திரத்திலேயே கற்பனைகளையும் தாண்டிய மகா கொடூரன் கலிகுலாதான் என்பதை நீட்டி முழக்கிச் சொல்லத் தேவையில்லை. ஆகவே, அவர் குறித்து அதிகமறியப்படாத கிறுக்குப் பக்கங்கள் மட்டும் இங்கே...

செஸ்டெர்செஸ் என்பது பண்டைய ரோமானிய நாணயம். டைபெரியஸ் இறக்கும்போது, 2,700,000,000 செஸ்டெர்செஸ் மதிப்புள்ள பணம் கஜானாவில் இருந்தது. குஜாலாகக் கூத்தடித்து, ஓரிரு ஆண்டுகளிலேயே அனைத்தையும் அழித்த பெருமை கலிகுலாவுக்கு உண்டு. அவருக்குத் தங்கம் என்றால் பித்து. தன் உடலில் மட்டுமல்ல, உடையிலும் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தங்க ஆபரணங்களைப் பூட்டிக்கொண்டார். தங்கத்தால் செய்யப்பட்ட உணவைப் பரிமாறி விருந்தினர்களை விக்கித்துப் போகச்செய்தார். தங்கத்தைத் தரையில் பரப்பி அதன்மீது நடப்பதும் ஓடுவதும் குதிப்பதும், பெருமை பீறிட அதன் மீது விழுந்து எருமைபோலப் புரள்வதும் கலிகுலா வாழ்வின் தங்கத் தருணங்கள்.
‘நான் கடவுள்! நான்தான் கடவுள்! நான் மட்டுமே கடவுள்!’ சர்வாதிகாரிகளின் மனம் ஒரு கட்டத்தில் இந்த மையத்தில்தான் குவியும். கலிகுலாவும் அப்படித்தான் தன்னை அறிவித்துக் கொண்டார். தன் அரண்மனைக்கும் ஜூபிடர் கோயிலுக்கும் இடையே பாலம் ஒன்றைக் கட்டினார். எதற்கு? மக்கள் கோயிலில் வழிபடக் கூடும்போதெல்லாம், தான் கடவுள்போல எளிதாகச் சென்று அருளாசி புரிய! அடுத்ததாக, ஜூபிடர் உள்ளிட்ட அனைத்துக் கடவுள்களின் சிலைகளிலும் தலைகளை நீக்கி, தன் முகத்தைப் பொருத்தினார். பின், தனது பிரமாண்டமான தங்கச்சிலை ஒன்றை நிறுவினார். அவர் சிலைக்குப் பூசைகள் செய்ய, ரோமின் உயர்குடியினர் பூசாரிகளாக நியமிக்கப்பட்டனர். கலிகுலா அணிந்து கழற்றிப்போட்ட உடைகளைக் கடவுள் கலிகுலாவுக்குச் சாத்தினர். அங்கே தினமும் மயில்கள் பலிகொடுக்கப்பட்டன.

கடவுள் ஜூபிடருடன் கலிகுலா அடிக்கடி பேசுவார். அவர் அழைத்தால் நிலவுக்கடவுள் அந்தப்புரத்துக்கு வந்து அவரைத் திருப்திப்படுத்தி விட்டுச் செல்வாள். கடவுள் விக்டோரியாவும் கலிகுலாவுக்கு அடிமைதான். இவை அன்றைய ரோம் மக்கள் மனமார நம்பிய வதந்திகள்.

230 அடி நீளம், 66 அடி அகலம் கொண்ட இரண்டு மாபெரும் படகுகளைக் கட்டினார் கலிகுலா. சுடுநீர் வசதி கொண்ட நீச்சல் குளம், கோயில், விருந்து அறைகள், தூண்களால்  நிரம்பிய மண்டபங்கள், சிலைகள், பளபளா தரை என்று மிதக்கும் அரண்மனைகளாக அந்த சொகுசுப் படகுகள், நெமி ஏரியில் மிதந்தன. படகுக்குள் கலிகுலா உச்சபட்ச உல்லாசத்தில் மிதந்தார். அன்றே நவீனத் தொழில்நுட்ப அறிவுடன் விளங்கிய கலிகுலாவை வியக்கலாம்தான். ஆனால், அந்த உல்லாசப்படகு மிதக்கும் ஏரி நீரோடு, மக்களின் கண்ணீரும் ரத்தமும் கலந்து கிடந்தன என்பதை மறக்கக்கூடாது. (இரண்டாம் உலகப்போர் சமயத்தில்தான், பிரிட்டன் வீசிய குண்டுகளால் இந்தப் படகுகள் சிதைந்து போயின என்பது உபரித் தகவல்.)

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

இன்ஸிட்டேடஸ். கலிகுலாவின் செல்லக் குதிரை. அவரது புனித வாகனம். அது தங்குவதற்கென மினி மாளிகை கட்டியிருந்தார். அதற்குப் பணிவிடைகள் செய்வதற்கென அடிமைகளும் படைவீரர்களும் நேர்ந்து விடப்பட்டிருந்தனர். அவ்வப்போது தன்னுடன் விருந்து உண்ண இன்ஸிட்டேடஸையும் அழைப்பார் கலிகுலா. தங்க ஆபரணங்கள் அணிந்து விருந்துக்கு வரும் அதற்குத் தங்கத் தட்டில் உணவும், தங்கக் கோப்பையில் ஒயினும் தருவார்கள். தங்கம் கலந்த ஓட்ஸை அதற்கு ஊட்டிவிடுவது கலிகுலாவின் வழக்கம். மறுநாள் இன்ஸிட்டேடஸ் பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிற தென்றால், இன்றைக்குச் சுற்றுவட்டாரத்தில் யாரும் எந்தவிதச் சத்தமும் எழுப்பக்கூடாது என்பது கலிகுலாவின் கட்டளை. அதன் கவனம் சிதறிவிடக்கூடாதல்லவா. அந்த வாயில்லா ஜீவனுக்கு ‘வெளிநாட்டுத் தூதுவர்’ என்ற பதவி கொடுத்து கௌரவித்தார் கலிகுலா.

படையெடுத்துச் சென்று ஜெர்மனியின் சில பகுதிகளைக் கைப்பற்றிய கலிகுலாவுக்கு பிரிட்டனைக் கைப்பற்றவும் ஆசை. ஆனால், கடல் தாண்டிச்சென்று போரிட இயலவில்லை. ஆகவே, தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். ‘கடலின் அலைகளோடு போரிட்டு அவற்றை வீழ்த்துங்கள். கடலின் கடவுள் நெப்டியூனைக் கொல்லுங்கள்!’ வேறுவழியின்றி ரோமானிய வீரர்கள் கடற்கரையில் நின்றபடி அலைகளைத் தம் வாளால் வெட்டிக்கொண்டே இருந்தனர்.

தன் உடலில் பல பாகங்களில் ஆடுபோல புசுபுசுவென முடி இருந்தது கலிகுலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், யாரும் எதிலும் ‘ஆடு’ என்ற வார்த்தையைப் புழங்கக்கூடாதென்று உத்தரவிட்டார். மரபுக்கோளாறு. 30 வயதைத் தொடும்முன்பே கலிகுலாவின் தலை வழுக்கை யானது. ஆகவே, ‘என்னைவிட உயரமான நபர்கள் என்முன் நிற்கக்கூடாது. உயரத்தில் இருப்பவர்கள் யாரும் என் மண்டையைப் பார்த்துப் பேசக்கூடாது’ என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார். இவையெல்லாம் கலிகுலாவின் சாதா கிறுக்குத்தனங்கள். அசாதாரண கோட்டிக்காரத்தனங்கள் எக்கச்சக்கம் உண்டு. சுய தணிக்கைச் செய்யப்பட்ட சில வார்த்தைகள் மட்டும் இங்கே.

சிறைக்கைதிகளைச் சிங்கம், காட்டெருமை போன்ற காட்டு விலங்குகளுடன் மோதவிட்டு, அவர்கள் ரத்தச் சகதியுடன் துடிதுடித்து மாள்வதைக் காண்பதில் கள்வெறி கொண்டார். கொல்வதற்குச் சிறையில் கைதிகளே இல்லாமல் போன சமயத்தில், பொதுமக்களையே களத்தில் தூக்கியெறியுமாறு உத்தரவிட்டு உள்ளம் மகிழ்ந்தார். கலிகுலாவுக்கு அடுத்தவர்களின் மனைவிமீது தீராத ஆசையுண்டு. ஆசை தீர்ந்த பின்பு அவர்களைத் தீர்ப்பதிலும் ஆர்வமுண்டு. தன் ரத்த சொந்தங்களுடனேயே ஜோதியில் கலப்பதில் அதீத ஆவலுண்டு. ‘ஆணென்ன, பெண்ணென்ன, நீயென்ன, நானென்ன எல்லாம் ஓரினம்தான்’ எனத் தன் அரண்மனையையே சிவப்பு விளக்குப் பகுதியாக மாற்றிய கெட்ட பய சார் இந்த கலிகுலா!
எல்லாம் வரம்பு மீறிப்போன ஒரு சமயத்தில், செனட் உறுப்பினர்கள், பேரரசருக்குரிய தனிப்படையினர், பிற வீரர்கள் அனைவருமே கலிகுலாவுக்கு எதிராக அணி திரண்டனர். அவரின் பாதுகாப்புப் படையினரது சதிவலையிலேயே சிக்கிய கலிகுலா குத்திக் கொல்லப்பட்டார் (இருபத்தெட்டு வயதில். கி.பி. 41, ஜனவரி 12). மொத்தம் 30 கத்திக் குத்துகள். கலிகுலாவின் காட்டாட்சி நீடித்தது நான்காண்டுகள் மட்டுமே.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா!

கலிகுலாவுக்கும் ஆண் வாரிசு கிடையாது. அடுத்து பேரரசராக அமர்ந்தவர் கிளாடியஸ். கலிகுலாவுக்குச் சித்தப்பா. கால் சற்றே ஊனம், காதும் கொஞ்சம் மந்தம் போன்ற குறைகளால், கிளாடியஸை முன்னாள் பேரரசர்கள் பாவப்பட்டு உயிருடன் விட்டு வைத்திருந்தனர். ஜூலியோ-கிளாடியான் பரம்பரையில் வந்த அவருக்கு அரியணை யோகம் கிட்டியது. அந்தப் பதவிக்கு ஓரளவு நியாயமும் செய்தார். போர்களால் ராஜ்ஜியத்தின் எல்லைகள் விரிவாகின. தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. செனட்டின் அதிகாரங்கள் சீரமைக்கப்பட்டன. தேங்கிக் கிடந்த வழக்குகளையெல்லாம், தானே நீதிபதியாக அமர்ந்து முடித்து வைத்தார். தடுப்பணை, கால்வாய், கலங்கரை விளக்கம், சாலைகள், கட்டடங்கள் என்று தேவையானவற்றைக் கட்டிக் கொடுத்தார். வரிகளையெல்லாம் குறைத்து மக்கள்நல அரசை முன்னெடுத்துச் சென்றார்.

இத்தனை நல்லவரான கிளாடியஸும் பெண்ணாசையால்தான் சறுக்கி விழுந்தார். கிளாடியஸுக்கு நிச்சயிக்கப்பட முதல் இரு திருமணங்கள் நடக்கவில்லை. அடுத்து அவர் செய்த இரு திருமணங்கள், கொஞ்ச காலத்திலேயே விவாகரத்தில் முடிந்தன. அவரது வாழ்க்கையில் மூன்றாவது மனைவியாக வந்தவள், வலேரியா மெஸ்ஸாலினா. Nymphomania-வால் பாதிக்கப்பட்டவள். அதாவது, அதீதமான காம உணர்வு ஆளைப் படுத்தும். படுக்கையிலும் படுக்கை சார்ந்த விஷயங்களிலுமே கவனம் குவியும். இதனால் ‘தான் ஒரு பேரரசி’ என்பதையே மறந்து, உடைகள் துறந்து, ஒரு பாலியல் தொழிலாளியாகவே வீதியில் அலைந்தாள். ஒருமுறை ஸ்கைல்லா என்ற பாலியல் தொழிலாளிக்கும் மெஸ்ஸாலினாவுக்கும் நடந்த போட்டி, ரோம் நகரத்தின் பேசு பொருளானது. யார் அதிக நேரம், அதிகமான நபர்களுடன் தொடர்ந்து... அந்தக் கலவி மாரத்தான் பந்தயத்தில் 25 என்ற ஸ்கோருடன் வென்றது மெஸ்ஸாலினாவே.

ஒரு கட்டத்தில் அவள் கிளாடியஸைக் கொன்று, தன் புதிய காதலன் ஒருவனை அரியணை ஏற்ற சதி செய்தாள். ஆகவே, கொல்லப்பட்டாள். இனி திருமணமே வேண்டாம் என்று கிளாடியஸ் முடிவெடுத்திருந்த தருணத்தில், அவரது வாழ்க்கையில் நான்காவது மனைவியாக வலுக்கட்டாயமாக வந்து நுழைந்தாள் அக்ரிப்பினா. ஏற்கெனவே அவளுக்கு ஒரு மகனும் இருந்தான். அவன் பெயர் நீரோ.

(நீரோ வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism