Published:Updated:

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?
பிரீமியம் ஸ்டோரி
ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

Published:Updated:
ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?
பிரீமியம் ஸ்டோரி
ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

வெங்காயம்தான் ஆப்பிள் விலைக்குப் போய்விட்டது என்றால், முட்டை விலையோ கோழிக்கறி அளவுக்கு உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு, ஒரு முட்டையின் அதிகபட்ச விலை ஏழு ரூபாய் என எகிறிக்கிடக்கிறது.

சேலத்தில் முட்டைப்பணியாரம் உணவுக்கடை நடத்திவரும் அமராவதி, ‘‘10 வருஷமா இந்த இடத்துல கடை நடத்துறேன். சாதா பணியாரம் ஒரு ரூபாய்க்கும், முட்டைப்பணியாரம் ஐந்து ரூபாய்க்கும் விற்பேன். ஒரு நாளைக்கு 90 முட்டைகள் வாங்குவேன். இப்போ, ஒரு முட்டையின் விலை ஆறரை ரூபாய். ஒரு முட்டை பணியாரத்தோட விலை ஏழரை ரூபா வெச்சாதான் கட்டுபடியாகும். ஆனா, அவ்வளவு விலை வெச்சா சாதா பணியாரத்தைக்கூட மக்கள் வாங்காமப் போயிடுவாங்க. அந்தப் பயத்தில ஒரு நாளைக்கு 30 முட்டைகள் மட்டும் வாங்கி, பழைய விலைக்கே முட்டைப்பணியாரம் விற்கிறேன்’’ என்றார்.

குடும்பத் தலைவர் ராமசாமி, ‘‘பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய உணவாக  முட்டை மாறிவிட்டது. அவசரத்துக்கு சமைக்க முடிகிற சத்துள்ள உணவாக முட்டை இருக்கிறது. வெஜிடேரியன் பழக்கம் உள்ள பலரும், டாக்டர்களின் அட்வைஸால் முட்டை சாப்பிடுகிறார்கள். இறைச்சிக்காக ஒவ்வொரு வாரமும் 400 ரூபாய், 500 ரூபாய் என எல்லோராலும் செலவழிக்க முடியாது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவராலும் சாதாரணமாக வாங்கிப் பயன்படுத்தக்கூடிய ஒரே அசைவ உணவாக முட்டை இருக்கிறது. முட்டை விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?

‘விற்பனையாளர்கள் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்’ என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி நாமக்கல் முட்டை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்தனிடம் பேசினோம். ‘‘அக்டோபர் இறுதியில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15-க்குள் இருந்தது. ஆனால், இந்த மாதத் தொடக்கத்திலிருந்து உயர்ந்து, இப்போது விலை 5.16 பைசா என உள்ளது. நாங்கள் மொத்த வியாபாரமாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையில் வாங்கி - அதாவது ஒரு முட்டை 5.16 ரூபாய் என வாங்கி ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, போக்குவரத்துச்செலவு ஆகியவற்றைச் சேர்த்து மதுரைக்கு 15 பைசா, திருச்சிக்கு 10 பைசா, சென்னைக்கு 20 பைசா எனக் கூடுதலாக வைத்து விற்போம். வழியில் உடைவதை ஈடுசெய்ய 1,000 முட்டைக்கு 10 முட்டை இலவசமாகவும் கொடுப்போம்.

எங்களிடமிருந்து இரண்டு, மூன்று வியாபாரிகளிடம் கைமாறி கடைசியாக மக்களிடம் செல்லும்போது, ஒரு முட்டை ஏழு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு கோழிப்பண்ணைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, குளிர்கால சீதோஷ்ணம் எனப் பல காரணங்கள் உள்ளன. சப்ளையை நாங்கள் நிறுத்திவைத்ததால் விலை உயர்ந்துள்ளது என்று சொல்வது தவறானது. அப்படி முட்டையை எவ்வளவு நாள்களுக்கு நிறுத்திவைக்க முடியும்?’’ என்றார் அவர்.
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், ‘‘நாமக்கல்லில் மொத்தம் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. ஒரு நாளைக்கு மூன்றரைக் கோடி முட்டைகளை உற்பத்தி செய்கிறோம். ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம்வரை புதிய கோழிப்பண்ணைகள் தொடங்கப்படும். கடந்த நான்கு வருடங்களாக, புதிய கோழிப்பண்ணைகள் தொடங்கப்படவில்லை. மாறாக, பல கோழிப்பண்ணைகளை மூடியுள்ளார்கள். அதனால், உற்பத்தி குறைந்தது.

மழை பொழிந்து விவசாயம் நன்றாக இருந்தால், அனைத்துத் தொழில்களும் நன்றாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால் கோழித்தீவனங்களின் விலை உயர்ந்தது. ராஜஸ்தானிலிருந்து கம்பு, பீஹாரிலிருந்து மக்காச்சோளம், உத்தரப்பிரதேசத்திலிருந்து தவிடு போன்றவற்றை வாங்க நேர்ந்தது. அதனால், தீவனத்துக்கான செலவு அதிகமானது. ஆந்திராவில், அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குச் சத்துணவுத் திட்டத்தில் முட்டை போடத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால், 2017 ஜூலை மாதத்திலிருந்து ஆந்திரா அரசு இங்கிருந்து முட்டைகளைக் கொள்முதல் செய்கிறது. இதனால் ஏற்பட்ட டிமாண்டும் விலை உயர்வுக்குக் காரணம். நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகள், வியாபாரிகளிடம் மாட்டிக்கொண்டுள்ளன. இப்போது விலை ஏறுமுகமாக இருப்பதால், அவர்கள் ஓரிரு நாள்கள் முட்டைகளை நிறுத்திவைத்து, விலையை இன்னும் உயர்த்தக் காரணமாக இருக்கிறார்கள். 

எங்களைப் பொறுத்தவரை, இப்போதைய முட்டை விலை நியாயமானது. 1977-லிருந்து கோழிப்பண்ணை நடத்திவருகிறேன். ஒருகாலத்தில், ஒரு டீயின் விலை 25 பைசாவாகவும் ஒரு முட்டையின் விலை 37 பைசாவாகவும் இருந்தது. இப்போது ஒரு டீயின் விலை 10 ரூபாய். கலப்படம் இல்லாத புரோட்டீன் நிறைந்த ஒரு முட்டையின் விலை 5.16 பைசா. இதை எப்படி விலை உயர்வு என்று சொல்ல முடியும்?’’ என்றார்.

முட்டை மதிப்பெண் என்பது மதிப்பில்லாததாக இருக்கலாம். ஆனால், முட்டையின் மதிப்பு எக்கச்சக்கமாக எகிறுகிறது!

- வீ.கே.ரமேஷ்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்துணவில் முட்டை இல்லையா?

மு
ட்டையின் முரட்டு விலையேற்றத்தால், ‘தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கப்படமாட்டாது’ என்ற பரபரப்பு கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கும் நிலையில், தமிழக அரசு அதிகாரபூர்வமாக இதை மறுக்கவில்லை. 

சேலம் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத் தலைவர் ரஹமத், ‘‘ஒரு வாரமாகவே, கழித்துக்கட்டப்பட்ட தரம் குறைந்த முட்டைகளே அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை, மிகச்சிறிய அளவில் புறா முட்டைகளைப்போல உள்ளன. இந்த முட்டைகளை, குழந்தைகளுக்கு வழங்கும்போது, மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுபற்றி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சரோஜாவும், நானும் ஒருங்கிணைந்த திட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்துவரும் சொர்ணபூமி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் சங்கர், ‘‘பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் ஒரு வாரத்துக்குப் பிறகு முட்டை கிடையாது என்று சொல்லப்படுவது வெறும் வதந்தி. நாங்கள் சத்துணவுத் திட்டத்துக்காக, ஒரு நாளைக்கு 45 லட்சம் முட்டைகளைக் கொடுக்கிறோம். எங்களுக்கு வழக்கமாக முட்டை சப்ளை செய்யும் பண்ணையாளர்கள், தொடர்ந்து சப்ளை செய்கிறார்கள். குறித்த நேரத்துக்குள் பள்ளிகளுக்கு நாங்கள் அனுப்பிவைத்துவிடுகிறோம். அரசு எங்களுக்கு ஒரு முட்டைக்கு 4.34 ரூபாய் கொடுக்கிறது. இப்போது பண்ணையில் முட்டை கொள்முதல் விலையே 5.16 ரூபாய் ஆகிறது. இழப்புதான் என்றாலும், இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. வருடம் முழுக்க சப்ளை செய்ய டெண்டர் எடுத்துள்ளதால், விலை குறையும்போது இது சமமாகி விடும். சின்ன முட்டைகள் கொடுக்கிறோம் என்று சொல்வது தவறான தகவல். நாமக்கல்லில் சின்ன முட்டைகளே கிடையாது. கோழி, முதன்முதலாகப் போடும் முட்டையே 41 முதல் 45 கிராம் எடை இருக்கும். அப்படிப்பட்ட ரக கோழிகளைத்தான் பண்ணையாளர்கள் வைத்திருக்கிறார்கள்’’ என்றார் அவர்.

ஆந்திராவுக்குப் போனதால் எகிறியதா முட்டை விலை?