
ஜூலியோ-கிளாடியான் பரம்பரையில் தோன்றியவள் அக்ரிப்பினா. ரோமாபுரியின் முதலாம் பேரரசர் அகஸ்டஸ், அக்ரிப்பினாவின் அம்மாவுக்குக் கொள்ளுத் தாத்தா. அவளின் தந்தை ஜெர்மானிகஸ், ஒரு காலத்தில் ராஜ வாரிசாக இருந்தவர். அவர், ரோமாபுரியின் நான்காவது பேரரசர் கிளாடியஸின் அண்ணனும்கூட. அக்ரிப்பினாவின் உடன்பிறந்த மூத்த சகோதரனே, முன்னாள் பேரரசர் கலிகுலா. தன் உருவத்தை ஒருபுறமும், தங்கை உருவத்தை மறுபுறமும் பதித்து புதிய நாணயமெல்லாம் விட்ட பாசக்காரர். பகுதிநேரக் காதலனும்தான். பின் பல்வேறு காரணங்களால் ஒத்துப்போகவில்லை. ஆகவே, அக்ரிப்பினாவை தீவொன்றில் விலக்கிவைத்தார்.
அக்ரிப்பினாவுக்கும், உயர்குடியைச் சேர்ந்த டொமிடியஸ் என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்திருந்தது. அவரும் முரட்டு ஆள்தான். ஏழெட்டு அசால்ட் கொலைகளுக்குச் சொந்தக்காரர். அவர்களுக்குப் பிறந்த மகனே நீரோ. சில காலத்திலேயே டொமிடியஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அந்தச் சமயத்தில் கலிகுலாவும் கொல்லப்பட்டார். அக்ரிப்பினாவின் சித்தப்பாவான கிளாடியஸ், புதிய பேரரசராகப் பதவிக்கு வந்தார். அக்ரிப்பினா, தன் குழந்தையுடன் கிளாடியஸின் ஆதரவை நாடிச்சென்றாள்.
அரசியல் தெரிந்தவள். ஆதிக்கக் குணம் நிறைந்தவள். சிறுவயது முதலே ராஜ்ஜியத்தில் நடக்கும் சதுரங்க வேட்டையின் நெளிவுசுளிவுகளை அறிந்தவள். அழகானவள். யாரையும் வசியப்படுத்தும் வித்தையில் தேர்ந்தவள். அப்போது அவளது ஒரே குறிக்கோள், தன் மகன் நீரோவை ரோமாபுரியின் வருங்காலப் பேரரசராக்குவது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தாள். ஆம், எதை வேண்டுமானாலும்! ஒரு செல்வந்தரை மறுமணம் செய்துகொண்டாள். அவரும் தன் சொத்துகளை நீரோவுக்கு எழுதிவைத்துவிட்டு, சீக்கிரமே செத்துப்போனார். ‘அன்புக்குரியவளே விஷமானாள்’ என்றொரு சர்ச்சையுண்டு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சமயத்தில்தான் பேரரசர் கிளாடியஸ், மெஸ்ஸாலினாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரிட்டானிகஸ். தன் மகனுக்குப் போட்டியாக நீரோ வந்துவிடக்கூடாதென, நீரோவைக் கொல்ல மெஸ்ஸாலினா நடத்திய சதி, தோல்வியில் முடிந்தது. மக்கள் மத்தியில் இளவரசர் பிரிட்டானிகஸுக்கு இருந்த மதிப்பும் புகழும், நீரோவுக்கும் இருந்ததைக் கண்டு புகைந்தபடியே இருந்தாள். இச்சையால் வழிதவறிய மெஸ்ஸாலினா, கிளாடியஸின் உத்தரவினாலேயே கொல்லப்பட்டதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அக்ரிப்பினா, அடுத்த கட்டத்தை நோக்கி சாதுர்யமாகக் காய் நகர்த்தினாள். ‘ஜூலியோ-கிளாடியான் பரம்பரை தொடர்ந்து ரோமாபுரியை ஆள வேண்டுமெனில் பேரரசர் கிளாடியஸ் என்னை மணந்துகொள்வது அவசியம்’ என்று செனட் உறுப்பினர்கள் மூலமாக அழுத்தம் கொடுத்தாள். இறுதியில், அந்த ‘சித்தப்பா – மகள்’ திருமணம் நடந்தது (கி.பி.49).
அதே நாளில், சிலானெஸ் என்பவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். காரணம், பேரரசியாகியிருந்த அக்ரிப்பினாதான். கிளாடியஸின் மகளான ஆக்டேவியாவுக்கு ஏற்கெனவே சிலானெஸுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. ‘‘என்னது... அவனுடனா? அவன் கேடுகேட்டவன். தன் சகோதரி உடனேயே... சீச்சீ...’’ – அக்ரிப்பினா பொய்யைக் கிளப்பிவிட்டு, நிச்சயதார்த்தத்தை முறித்தாள். சிலானெஸின் பதவிகள் பறிக்கப்பட்டன. விரக்தியில் அவர் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். சரி, அக்ரிப்பினா அந்தத் திருமணத்தை நிறுத்தியது ஏன்? தன் மகன் நீரோவுக்கும் ஆக்டேவியாவுக்கும் திருமணம் செய்துவைக்கத் திட்டமிட்டிருந்தாள். இப்போது நீரோவுக்கு ஆக்டேவியா சகோதரி முறையல்லவா? கேடுகெட்ட ரோமாபுரி அரசியலில் முறைதவறிய திருமணங்களெல்லாம் சாதாரணமப்பா! கி.பி. 53-ல் நீரோ – ஆக்டேவியா திருமணம் நடந்தது. அப்படியே, நீரோவை கிளாடியஸின் வாரிசு என்று அறிவிக்கவும் வைத்தாள் அசகாய அக்ரிப்பினா!
நாளடைவில் கிளாடியஸுக்கு அக்ரிப்பினாவையும் ஆகவில்லை; நீரோவையும் பிடிக்கவில்லை. ‘தவறு செய்துவிட்டோமோ’ என்று தாமதமாக வருந்த ஆரம்பித்தார். ‘‘பிரிட்டானிகஸே என் வாரிசு! நீரோ அல்ல’’ என்று அறிவிக்கும் திட்டத்தையும் வைத்திருந்தார். அதை மோப்பம் பிடித்த அக்ரிப்பினாவுக்குள் கவலை சூழ்ந்தது. கிழவனுக்கு வயது 63 ஆகிவிட்டது. இன்னமும் ஆள் கிளம்புவதுபோலத் தெரிய வில்லை. எப்போது என் மகன் நீரோவை பேரரசனாக்கி அழகு பார்ப்பது? கி.பி.54, அக்டோபர் 13 அன்று, கிளாடியஸ் உண்ட உணவில் விஷக்காளான் அல்லது காளானில் விஷம் இருந்தது. சாப்பிட்டு ஏப்பம் வருவதற்கு முன்பே அவரது உயிர் வெளியேறியிருந்தது. ‘எல்லாம் அக்ரிப்பினாவின் கைங்கர்யம்’ என்று ஊரே பேசிக்கொண்டது.

இப்படியாக நீரோ தன் பதினேழாவது வயதில் அன்றைய உலகின் மாபெரும் சாம்ராஜ்ஜியமான ரோமாபுரியின் ஐந்தாவது பேரரசரானார். ‘ஜூலியோ-கிளாடியான் பரம்பரையில் வந்த எந்தவொரு பேரரசருக்குப் பிறகும், அவரின் மகன் பேரரசரானதே இல்லை’ என்பது இறுதியாக ஒருமுறை நிரூபிக்கப்பட்டது. தான் பேரரசரான பின், ‘காளான் என்பது கடவுள்களின் உணவு’ என்று அதற்கு நீரோ மிகப்பெரிய கௌரவத்தைக் கொடுத்ததாகவும் சொல்லப்படுவது உண்டு.
‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ நீரோவின் ஆரம்ப கால ஆட்சி அமைந்தது. செனட் கூட்டங்கள் நடக்கும்போது, திரைக்குப் பின்னாலிருந்து அவையைக் கவனிக்கும் வாய்ப்பு அக்ரிப்பினாவுக்கு வழங்கப்பட்டது. தானும் தாயும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதாகச் சிறப்புச் செய்தார் நீரோ. ‘அகஸ்டா’ என்ற உயரிய கௌரவப் பட்டம் அவளுக்கு அளிக்கப்பட்டது. பர்ரெஸ், செனெகா என்ற இரு குருக்களின் வழிகாட்டலில் ‘அமைதியான நதியினிலே ஓடம்’ போலத்தான் முதல் சில ஆண்டுகள் கழிந்தன. குருக்கள் இருவருக்குமே அக்ரிப்பினாவின் வரம்பற்ற அதிகாரத்தில் விருப்பமில்லை.
நீரோவுக்கு தன் மனைவி ஆக்டேவியாவைப் பார்த்தால் கொஞ்சம்கூட ‘ஆக்ஸிடோஸின்’ சுரக்கவில்லை. ஆகவே, காதல் வெள்ளம் வேறு பள்ளம் தேடிப் பாய்ந்தது. அடிமைப்பெண்ணாக இருந்த அக்டே, நீரோவின் நெஞ்சைக் கொய்தாள்! அவளைத் திருமணம் செய்துகொள்ளும் நினைப்பும் நீரோவுக்கு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்தார். அடிமை ஒருத்தி மறைமுகமாக அதிகாரத்துக்கு வந்தால், அன்புடை மாமியார் அக்ரிப்பினாவால் பொறுத்துக்கொள்ள முடியுமா? மகனை எச்சரித்தாள். ‘என்னைப் பகைக்காதே! நான் உன்னைப் பேரரசன் ஆக்கியவள். நான் நினைத்தால் உன்னைத் தூக்கியெறிந்துவிட்டு அந்த இடத்தில் பிரிட்டானிகஸைக் கொண்டுவர முடியும்’ - அக்ரிப்பினா கொக்கரித்தாள். நீரோ அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு மதிய உணவில் விஷத்தைக் கலந்து பிரிட்டானிகஸை அமைதியாக வழியனுப்பி வைத்தார் (கி.பி. 55).
தாயின் பிடியிலிருந்து முழுமையாக விலக விரும்பிய நீரோ, அவளது அதிகாரங்களைக் குறைத்தார். அவளின் பட்டங்களும் கௌரவங்களும் பிடுங்கப்பட்டன. பிரதான அரண்மனையிலிருந்து அவளை வெளியேற்றினார். இருந்தாலும் அவளது புகழோ, செல்வாக்கோ கொஞ்சமும் குறையவில்லை. நீரோவுக்கு வேண்டாதவர்களெல்லாம் அக்ரிப்பினாவுக்கு வேண்டியவர் களானார்கள். ‘மகனை எப்படி, யார் மூலம் கவிழ்ப்பது’ என்பதிலேயே அந்தத் தெய்வத்தாயின் சிந்தனை நிலைகொண்டிருந்தது.

நீரோவின் வாழ்க்கையில் இன்னொருத்தி வந்தாள். பாப்பேயா சபினா. கொஞ்சம் தலைசுற்ற வைக்கும் பின்னணி கொண்டவள்தான். முதல் கணவனை விட்டுப் பிரிந்து, இரண்டாவதாக ஆதோ என்பவரைத் திருமணம் செய்திருந்தாள். இந்த ஆதோதான் பின்பு ரோமாபுரியின் ஏழாவது பேரரசரானவர். நீரோவின் ஆத்ம நண்பர். ஆதோ வழியாக நீரோவை நெருங்கி, அவரைக் கவிழ்த்து ஆசைநாயகியாகி, பின் பேரரசியாவதே சபினாவின் திட்டமாக இருந்தது. தினமும் தன் மேனி எழிலுக்காகப் பாலில் குளிக்கும் வழக்கம் கொண்டிருந்த சபினாவிடம், காமத்துப்பாலில் வழுக்கி விழுந்தார் நீரோ.
அந்த உறவு, திருமணத்தின் திசையில் நகர்ந்தது. அக்ரிப்பினா குறுக்கே வந்தாள். நீரோவின் கண்கள் சிவந்தன. இனியும் இவளை விட்டுவைத்தல் ஆகாது. அக்ரிப்பினா விருந்து ஒன்றில் கலந்துகொண்டு இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தாள். கடலில் ஒரு சிறிய கப்பலில் குறைந்ததூரப் பயணம். நீரோவுக்கு வேண்டிய கடற்படைத் தளபதியான அனிசெடெஸ், அந்தக் கப்பலை மூழ்கடித்தார். எவ்வளவோ எதிர்நீச்சல் போட்டு அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்த அக்ரிப்பினாவுக்கு, கடலில் நீச்சலடித்துத் தப்பிப்பது பெரிய விஷயமாக இல்லை. நீரோவின் மறைமுகச் சதி தோல்வியடைந்தது.
ஆகவே, நேரடியாகவே அனிசெடெஸை அனுப்பி வைத்தார். அவள் இருந்த மாளிகைக்குள், ஆயுதங்களுடன் சிலர் புகுந்தனர். அக்ரிப்பினா கதறினாள், ‘இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்த என்னை இந்த வயிற்றைக் கிழித்துக் கொல்லுங்கள்!’ அவளது இறுதி ஆசையை அனிசெடெஸ் நிறைவேற்றினார் (கி.பி. 59). அக்ரிப்பினா தற்கொலை செய்துகொண்டதாக வெளியே தகவல் பரப்பப்பட்டது. ஆயிரம்தான் இருந்தாலும் அன்னை ஓர் ஆலயமல்லவா. நீரோவின் ஈர நெஞ்சில் தாங்கமுடியாத பாரம் அழுத்த... இரவெல்லாம் அழுதார்.

அடுத்து? ஆருயிர் சபினாவை மணம் முடிக்க வேண்டுமெனில் ஆக்டேவியாவை முடிக்க வேண்டும். ஆகவே, அவளுக்கும் அனிசெடெஸுக்கும் கள்ள முடிச்சுப் போட்டுப் பழிசுமத்தினார். அவளால், தனக்கு வாரிசு பெற்றுத்தர இயலவில்லையெனக் குற்றஞ்சாட்டினார். இதற்கெல்லாம் தண்டனையாக ஆக்டேவியா, தீவுச் சிறையொன்றில் அடைக்கப்பட்டாள். அனிசெடெஸும் தண்டிக்கப்பட்டார். அதாவது, கண்காணாத ஊரொன்றில் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ பெருஞ்செல்வத்துடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
மக்கள் கொதித்தெழுந்தனர். பேரரசி ஆக்டேவியாவின் சிலையை மலர்களால் அலங்கரித்து ரோம் நகர வீதிகளில் ஆவேசமாக இழுத்து வந்தனர். நீரோவுக்கு எதிரான கோஷங்கள் அதிர்ந்தன. புரட்சி வெடித்துவிடும் போலிருந்தது. ஆனாலும், ஆக்டேவியாவுக்கான மரணதண்டனையை நிறைவேற்ற கையெழுத் திட்டார் நீரோ. ஆக்டேவியா கதறக் கதற அவளது நரம்புகள் சிலவற்றை அறுத்தார்கள். நீராவி சூழ்ந்த அறையில் அவள் தள்ளப்பட்டாள். கடும் வெப்பத்தில் அவளது கதறல் கருகிப்போனது. வெட்டப்பட்ட ஆக்டேவியாவின் தலை சபினாவை வந்தடைந்தது (கி.பி. 62). பேரரசியின் மரணச் செய்தியைக் கேட்ட ரோமே கண்ணீரில் மூழ்கியது. நீரோ மட்டும் அவ்வப்போது பீதியில் உறைந்தார். அவரின் தாயும் முதல் மனைவியும் ஜோடி போட்டுக் கொண்டுவந்து சொப்பனங்களை வெப்பமாக்கினர்.
இன்னொரு விஷயத்திலும் நீரோ அனலென தகித்தார். அப்போது அங்கே பரவ ஆரம்பித்திருந்த கிறிஸ்தவ மதம். கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருந்த ரோமானியர்களையும் சிலுவைகளையும் கண்டாலே நீரோவுக்குள் பெருங்கோபச் சீற்றம். அவரது வெறியாட்டத்தால், வாதை அவர்களது கூடாரத்தைப் புரட்டிப் போட்டது.
(நீரோ வருவார்...)