
முதலமைச்சர் கனவுடன் பலரும் கட்சி ஆரம்பித்துவரும் காலத்தில், காதலர்களுக்காக ஒரு கட்சியை நடத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த குமார்ஸ்ரீஸ்ரீ. கட்சியின் பெயர், அகில இந்திய காதலர் கட்சி. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குமார்ஸ்ரீஸ்ரீயின் வீடுதான், இந்தக் கட்சியின் தலைமை அலுவலகம். பார்ட் டைம் அரசியல்வாதியாகவும் (காதல் அரசியல்), ஃபுல் டைம் சினிமா மேக்கப்மேனாகவும் இவர் கடமையாற்றுகிறார்.
குமார் ஸ்ரீஸ்ரீக்கு போன் அடித்தோம். ‘‘காதலர்களின் சொர்க்கம்... மெரினா பீச்சுக்கு வாங்களேன்’’ என்றார்.
மெரினாவில் ஆஜரானோம். ஒரு மத்தியான வேளை... கொளுத்தும் வெயில். சூட்டையும் சூழலையும் சட்டை செய்யாமல், ஆங்காங்கே மணல்வெளியில் காதல் ஜோடிகள் லவ் பண்ணிக்கொண்டிருந்தனர். அந்த காதல்மயமான சூழலில், தன் காதல் கட்சியைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் குமார்ஸ்ரீஸ்ரீ.
‘‘உலகத்துல காதலிக்காதவங்களே கிடையாது. ஏழை, பணக்காரன், சாதி, மதம், நிறம், மொழி, நாடு என எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து, இதயங்களை இணைத்துவைக்கிற அற்புதமான உணர்வுதான் சார் காதல்...” என்று காதலில் உருக ஆரம்பித்தவர், ‘‘நானும் காதலிச்சேன். காதலிச்ச பொண்ணையே, பல தடைகளைத் தாண்டிக் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்’’ என்று பெருமிதப்படுகிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘உங்க கட்சியின் கொள்கை என்ன?’’
‘‘காதலர் கட்சி ஆரம்பிச்சு எட்டு வருஷத்துக்குப் பிறகு, இப்பதான் இதுக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இனி, எங்க ஆக்ஷன் எல்லாமே அதிரடியாகத்தான் இருக்கும். காதல்தான் மனுஷனுக்குள்ளே புனிதத்தைப் பூக்க வைக்குது. ஆனால், காதலர்களை வெட்டிப்போடுறதுதான் நம்ம ஊரு பழக்கம்னு ஆயிட்டுவருது. ஆணவக்கொலை, காதல் தற்கொலை ஆகியவற்றைத் தடுப்பதும்... சாதி, மத வேறுபாடுகளை ஒழிப்பதும்தான் எங்கள் கட்சியின் முதல் வேலை.
எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைச்சதும், ஏழைக் காதலர்களைச் சேர்த்து வைக்கிறதுக்காக, இலவச செல்போனும், அதில் இலவச சிம்கார்டு வசதியும் செய்து கொடுக்கப் போகிறோம். இந்த செல்போன் வழியாக காதலர்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி, தங்களோட உண்மையான காதலை வளர்த்துக்கலாம் இல்லையா! நல்ல ஐடியாதானே... நீங்களே சொல்லுங்க. கொதிக்கிற வெயில்லகூட இந்த லவ்வர்ஸ் எப்படி லயிச்சுப் பேசிக்கிட்டிருக்காங்க பாருங்க. இவங்களை அருவருப்பாகப் பார்க்கிறதும், அசிங்கமா பேசுறதுமா இந்தச் சமுதாயம் ரொம்பவே படுத்துது. காதலர்கள் மனம்விட்டுப்பேசிக் காதலிப்பதற்கு வசதியா, கடற்கரையில் தனிப் பகுதியை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். நாடாளுமன்றம் மாதிரி அதையும் உயர் பாதுகாப்பு பகுதியா கருதி, போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் வெயில் படாதவாறு கூரை அமைத்து, சுற்றிலும் வேலியும் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இப்படிக் காதலர்களுக்கு இடம் வேணும். இப்படிச் செய்தால், சமூகவிரோதிகள் தேவையில்லாமல் உள்ளே போய் காதலர்களைத் தொந்தரவு செய்யமாட்டாங்க.
வலிமையான அரசியல் சக்தியா நாங்க வரும்போது, இந்த வசதிகளையெல்லாம் செஞ்சுகொடுப்போம். அதுவரை காதலர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சி, அவர்களின் கல்யாணத்துக்காக தங்கத் தாலி, குழந்தைகளுக்கான படிப்பு உதவி எனச் சின்னச் சின்ன உதவிகளை முடிந்த அளவில் செய்துகொடுக்கிறோம். நீங்களும் காதலிச்சுப் பாருங்க சார்... லைஃப் நல்லாருக்கும்’’ என்று கண்சிமிட்டிச் சிரித்தார், காதலர்களின் ‘புரட்சித் தலைவர்’.
- த.கதிரவன்,
படம்: க.பாலாஜி

‘‘ஜனாதிபதியா வரணும்!’’
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அலுவலகம் வைத்து இயங்கி வருகிறார், கொங்கு புரட்சிப் பேரவை நிறுவனத் தலைவர் வேலு.சண்முகஆனந்தன். ‘‘இங்க, கொங்கு கட்சிகள் நிறைய இருக்கு. ஆனா, நம்ம பேரவை மட்டும்தான், ‘கொங்கு வேளாளர் ஒருவர் தமிழக முதலமைச்சராக வேண்டும்’னு ஓயாமல் குரல் கொடுத்துவந்துச்சு. அது எடப்பாடி பழனிசாமி மூலமாக நிறைவேறிடுச்சு. அடுத்து, ‘இந்தியாவின் ஜனாதிபதியா ஒரு கொங்கு வேளாளக் கவுண்டர் வரவேண்டும்’ என்கிற நோக்கில் என்னோட பேரவை செயல்படுது. அது விரைவில் நடக்கும். நம்ம ராசி அப்படி’’ என்கிறார் இவர். எழுத்தாளர் க.சீ.சிவகுமார் எழுதிய நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துவரும் சண்முக ஆனந்தனிடம், ‘‘மலையாளம் அறியுமோ?’’ என்றோம். ‘‘பத்து வருஷம் கேரளாவில் வட்டிக்கடை நடத்தியதால் அந்த மொழி பரிச்சயம்’’ என்றார்.
- ஜி.பழனிச்சாமி