Published:Updated:

திருக்கார்த்தியல் - சிறுகதை

திருக்கார்த்தியல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
திருக்கார்த்தியல் - சிறுகதை

சிறுகதை: த.ராம், ஓவியங்கள்: ஸ்யாம்

திருக்கார்த்தியல் - சிறுகதை

சிறுகதை: த.ராம், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
திருக்கார்த்தியல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
திருக்கார்த்தியல் - சிறுகதை
திருக்கார்த்தியல் - சிறுகதை

ன்னும்  இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்கக் கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில் இருக்கும் மன்னத்தேவன் கோயிலின் பின்புறம் இருந்தது.

செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, சாலையூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க வந்தான். மெலிந்த தேகம், மொட்டையாக வெட்டிய முடி. குளிக்காமல் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வருவதால், எண்ணெய் வடிந்து முகம்  கறுத்துப்போயிருக்கும். கையில் கிடைக்கும் பேப்பரை வைத்து முகத்தைத் துடைத்துக்கொண்டிருப்பான். நான்கு நாள்களாகப் போட்ட அவனது வெள்ளை நிறச் சட்டையில் வியர்வை துர்நாற்றமடிக்கும். வகுப்பில் நாங்கள் எல்லோரும் பேன்ட் போட்டுக்கொண்டு வருவோம். அவன் மட்டும் நிக்கர் போட்டிருப்பான். தேய்ந்துபோன செருப்பில் முள்கள் குத்தி முறிந்துபோயிருக்கும்.

வகுப்பில் எனக்கு அடுத்து அவன் இருப்பதால், முதலில் அவனை ஜீரணிக்க முடியவில்லை. ஒருநாள் அவனுடைய கண்களை உற்றுப்பார்த்தேன். அதன் பின்னால் பெருத்த சோகமும் ஏக்கமும் தெரிந்தன.ஹாஸ்டல்  சாப்பாட்டைப் போலப் பள்ளிச்சாப்பாடும் இருப்பதால், முகம் சுளித்துக்கொண்டு சாப்பிடுவான். நான், வீட்டில் என் அப்பா குடித்துவிட்டுப் போட்ட குவாட்டர் குப்பியைக் கழுவி அதில் மீன் குழம்பு எடுத்து வருவேன். சில நேரம் அம்மா தரும் ஒரு ரூபாய்க்கு ஊறுகாய் பாக்கெட் வாங்கிவந்து சாப்பிடுவேன். மதியம் சாப்பிடும்போது குவாட்டர் பாட்டிலைத் திறந்து மீன் குழம்பைச் சோற்றில் ஊற்றுவேன். அவன் கமந்து இருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான். அவனுக்கும் கொஞ்சம் ஊற்றிக் கொடுப்பேன். முகம் முழுக்க புன்னகையோடு இரண்டு நாள்கள் சாப்பிடாதவன்போல அள்ளி அள்ளி வாயை நிறைப்பான். அவன் தங்கியிருந்த ஹாஸ்டல் வெளிநாட்டு கிறிஸ்தவர்களின் உதவியோடு இயங்கியதால், கொஞ்சம் கொஞ்சமாக அவன் கிறிஸ்தவ மதச் சாயலுக்குள் கடந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது.

பள்ளிக்கு வெளியில் இருக்கும் பிள்ளையார் கோயில் முன்  திருமணத் தம்பதியை ஏற்றி வந்த அம்பாசிடர் கார் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர், மாப்பிள்ளை - பெண்ணைத் தேங்காயால் மூன்று சுற்றுச் சுற்றி கோயில் வாசலில் உடைத்தார். நான் ஓடிப்போய் எடுத்தேன். செந்தமிழ், ``லே மக்கா... அது பேய்க்கு உடைத்தது. நீ திங்கக் கூடாது’’ என்று தட்டிவிட்டான்.

இன்னொரு நாள் இதேபோல வேறொருவர், பிள்ளையார் கோயில் வாசலில் தேங்காய் உடைக்கும்போது ஓடிப்போய் செந்தமிழ் எடுத்தான். ``தமிழு, அன்னிக்கி நா தேங்காய கோயில் வாசல்ல கிடந்து எடுத்ததுக்கு, பேய்க்கு உடைச்சதுனு என்னைத் தட்டிவிட்டியே. இப்போ நீ கோயில் வாசல்ல இருந்து தேங்காய எடுத்துத் திங்கிறியே!’’ என்று கேட்டேன்.

``அன்னிக்கு எங்க ஹாஸ்டல்ல உள்ள ராஜன் பார்த்துட்டு நின்னான். நானும் தேங்காய் திங்கிறதைப் பார்த்தா, ஹாஸ்டல் வார்டன்கிட்ட சொல்லிடுவான். வார்டன் கண்ணை மூடிக்கிட்டு அடிக்கிற அடியைத் தாங்க முடியாது. அதனாலதான் அப்படிச் செஞ்சேன். அதுபோக, உங்களுக்கும் பைபிளைப் பற்றி, இயேசுவைப் பற்றிச் சொல்லச் சொல்லிருக்காங்க. நான் சொல்லலை’’ என்றான் செந்தமிழ்.

கோயில் வாசலில் கிடந்த தேங்காய்த் துண்டுகளைக் கடித்துக் குதறித் தின்றோம். நானும் செந்தமிழும் ஒரு தடவை ரத்தினராஜ் சார் சயின்ஸ் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது எங்கள் குடும்பச் சுடலைமாடன் கோயிலில் கிடா வெட்டிப் படையல் போட்டு, பிறகு நாங்கள் சாப்பிட்ட கதையைப் பொதுவாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது அவன் ``நா இதுவர ஆட்டிறைச்சி தின்னதில்ல. வெல கூடுதலா இருக்கும்லா. எங்க ஹாஸ்டல்ல கோழிக்கறிதான் வைப்பாவ. ஆட்டிறைச்சி சாப்பிடணும்னு ஆசையா இருக்கு’’ என்றான்.

``நீ வேதக்காரன்லா. எங்க சொள்ள மாடன் கோயில்ல கிடா வெட்டினதைத் திம்பியா? அப்படின்னா சொல்லு, தேவக்குன்று பக்கத்துல இருக்கிற சொள்ள மாடன் கோயிலுக்கு எங்க சித்தப்பா ஒரு கிடா நேர்ச்சைக் கொடுக்கப் போறாரு. அந்த எறச்சியக் கொண்டு தாரேன். நீ தின்னு’’ என்று சொன்னேன்.

``சரி மக்கா. நா வர மாட்டேன். எவனாது பார்த்துட்டு ஹாஸ்டல்ல போட்டுக்குடுத்துட்டா, எம்பாடு சிக்கல். அதனால  நீ கொண்டுவருவியா?’’ என்று கேட்டான்.

``சரி’’ என்று சொல்லிவிட்டு, சுடலைமாடன் கோயிலில் கிடா வெட்டியதும், மதியம்  படையல் முடித்து  வாழை இலையிலும் தேக்கு இலையிலும் சுற்றி ஆட்டிறைச்சிக் கறியை ஒரு துண்டில் எடுத்துக்கொண்டு பள்ளிக்குப் பின்புறம் உள்ள டேனியேல் தென்னம்தோப்பில் நின்றுகொண்டிருந்தேன். பின்னங்கால் பிடரியில் அடிப்பதுபோல் தலைதெறிக்க செந்தமிழ் ஓடிவந்தான். தென்னைகளுக்குத் தண்ணீர் போக வெட்டப்பட்டிருந்த பாத்தின் மீது உட்கார்ந்தான். பிறந்த குழந்தையைத் தகப்பன் வாங்கும்போது வரும் கவனமும் பேரன்பும் செந்தமிழ் ஆட்டிறைச்சியை வாங்கும்போது இருந்தது. கைநிறைய அள்ளி மோந்து பார்த்தான். தலைவியின் கூந்தலை மோந்து பார்த்துக் கிறங்கிப்போகும் தலைவனைப்போல அவனது கண்கள் சொக்கின. தலை இடதுபுறம் ஒரு வெட்டு வெட்டியது.

``எலும்பிருக்கும்... பாத்துத் தின்னு’’ என்று சொன்னேன். அவன் ``நீயும்  எடுத்துக்கோ’’ என்று இலையை நீட்டினான். எரிப்பு, உதட்டையும் நாக்கையும் வாட்டியெடுத்தது. பாத்தில் தென்னைக்குப் போன போர் தண்ணியைக் கோரிக் குடித்துவிட்டு மீண்டும் தின்னத் தொடங்கினான். அதற்குள் ஒரு க்ளாஸ் முடிந்தேவிட்டது. மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் கையைக் கழுவிவிட்டுப் பள்ளி நோக்கி நடக்கத் தொடங்கினோம். செந்தமிழ், கையை மணத்திப் பார்த்துக்கொண்டே வந்தான்.

``கையில மண்ணு போட்டு தேச்சிக் கழுவுனாலும் ஆட்டுக்கறி மணம் போக மாட்டுக்கு. ஆமா, ஆட்டுக்கறியில ஆட்டு முடி மணமும் அடிக்குது, ஏன்..?’’ எனக் கேட்டான்.

``இல்லல, ஆட்டுக்கறில இப்படித்தான் மணம் அடிக்கும்’’ என்று சொல்லிக்கொண்டு கீழே கிடந்த கல்லை எடுத்து, தாணுமாலய நாடாரின் மாந்தோப்பில் நின்ற ஒட்டு மாமரத்தில் எறிந்தேன். நடுவில் பாதி சிதைந்தபடி ஒரு மாங்காய் கீழே விழுந்தது. அதை எடுத்துச் செந்தமிழிடம் நீட்டினேன். பல நாள்கள் அவனது தின்பண்டமாக இருந்த மாங்காய், அவனுக்கு முகச்சுளிப்பைக் கொடுத்தது.

மாங்காய் ருசியை, அவனைவிட வேறு யாரும் அறிந்துவிட முடியாது. மும்மூர்த்திபுரம் தெற்கிலிருந்து சாலையூர் வரை உள்ள காட்டுப்பகுதியில் நிற்கும் மாமரங்களின் ருசி அவனுக்குத் தெரியும். சிலநேரம் மாங்காய், நெல்லிக்காய்களைச் சாலையோரத்திலும் காட்டுப்பகுதியிலும் நிற்கும் மரத்திலிருந்தும்   பறித்து ஹாஸ்டலுக்குக் கொண்டுபோவான். அங்கு உள்ள சக மாணவர்களுக்கு வெட்டி உப்புப் போட்டுக் கொடுப்பான். ஹாஸ்டலில் உள்ள மாணவர்களின் அம்மாவோ அல்லது அப்பாவோ வரும்போது மிக்ஸர், காராசேவு, முறுக்கு போன்ற தின்பண்டங்களை வாங்கி வருவார்கள். ஆனால், செந்தமிழின் அம்மா  ஆண்டுக்கு ஒருமுறை பார்க்க வருவாள். எதுவும் வாங்கி வர மாட்டாள். அதுவும் பள்ளிக்கே வந்துவிட்டுப் போய்விடுவாள். அப்போது மட்டும் செந்தமிழின் கையில் ஒரு துண்டு மைசூர்பாக் இருக்கும்.

ஹாஸ்டல் மாணவர்களின் பெற்றோர் வாங்கி வந்த தின்பண்டங்களை, வார்டன் ஜார்ஜ் பங்கு வைத்து அனைவருக்கும் கொடுப்பார். அப்போது செந்தமிழிடம் மட்டும் ``உன் அம்மா மட்டும் இங்கே வந்து பார்க்க மாட்டா. திங்க எதுவும் வாங்கிட்டும் வர மாட்டா. ஆனா, மத்த பிள்ளைங்க வீட்டுலருந்து பண்டம் வந்தா, கை நீட்டி வாங்கித் தின்றியே’’ எனத் திட்டிக்கொண்டு கொடுப்பார். நீர் நிறைந்த கண்களோடு அதை வாங்கிக்கொண்டு, வார்டன் திரும்பியதும் பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது கொடுத்துவிட்டு, வெளியே நிற்கும் சிறிய புளியமரத்தின் பெரிய கோப்பைப் பிடித்து ஊஞ்சல்போல வடக்கு பார்த்துத் தொங்கிக்கொண்டு அழுவான்.  அவன் கண்ணீர் யாருக்கும் தெரியாது. அதற்காகத்தான் வழியில் திருடும் மாங்காய், நெல்லிக்காய், கொய்யாக் காய்களை ஹாஸ்டல் மாணவர்களுக்குக் கொடுப்பான்.

வெளிக்கு இருக்க, ஹாஸ்டலிலிருந்து வெளியே வந்தான் செந்தமிழ். சுற்றிலும் ஒடைமரமும் புளியமரமும். கார்த்திகை மாதம் என்பதால், அதிகாலை பனிப்பொழிவு. அங்கு முளைத்திருந்த இரண்டு அடி உயர இளம்பச்சை நிறத் தண்டுச்செடியில் படர்ந்து பவளம்போல நீர்த்துளிகளால் உருண்டு நின்றது.

சோழக்காற்று திடீரென வீசுவதுபோல் எங்கிருந்து வந்தது பட்டாம்பூச்சிகளின் கூட்டம்? பெரிய சிறகுகொண்டு அதில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களோடு கூட்டமாக  எந்தவித மோதலும் இல்லாமல் சுற்றிலும் காற்றில் மிதந்தன. இனி எவ்வளவு முக்கினாலும் எதுவும் வராது எனத் தெரிந்ததும், பக்கத்தில் கிடந்த ஒட்டுத்துண்டை எடுத்துக் குண்டியை வழித்துவிட்டு, நிக்கரை இடுப்பில் இருந்த கறுப்புக் கயிற்றுக்குள் இழுத்துவிட்டான். காலில் போட்டிருந்த செருப்பை அழுத்தி, கால் விரல்களால் பிடித்தான். சமன் செய்யப்படாத வனாந்திரப் பகுதியில் மழைக்காலத்தில் முளைக்கும் தண்டுச்செடியின் தேனை உறிஞ்ச வந்த பட்டாம்பூச்சிகளின் கூட்டம் செந்தமிழை ஈர்த்தது. அவன் பார்த்ததில் இந்தப்  பட்டாம்பூச்சிகள்தான் அளவில் பெரியவை. ஓரமாக நின்றிருந்த அவன் தண்டுச்செடியினூடே பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க ஓடினான். செந்தமிழின் வருகையால் இன்னும் ஓர் அடி மேலே பறந்து ஒரு படலமாக வட்டமடித்தன  பட்டாம்பூச்சிகள்.

இவனது உயரம் மூன்று அடி. தேய்ந்துபோன செருப்பில் குத்தி முறிந்த முள்கள் ஓடும் வேகத்தின் அழுத்தத்தில் மேலேறி கால் பாதத்தை மெதுவாகக் குத்தியது. சட்டையின்மேல் இரு பட்டன்கள் இல்லாததால் மார்புப் பகுதி வெளியே தெரிந்தது. ஒரு கையைத் தூக்கி, பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க முயன்றான். தூங்கி எழுந்த சோம்பலில் இருந்த அவன் முகத்தில், ஓடும்போது தண்டுச்செடியின் மேல் படர்ந்த  பனித்துளிகள் பட்டுத் தெறித்தன. இடுப்பளவில் இருந்த செடிகளின் உரசலில் அவற்றின் ஈரம் அவனது இரு விலாப் பகுதிகளிலும் உரசிக்கொண்டு வந்தது. அதன் நீட்சி அடிவயிற்றில் குளிரைக் கொடுத்தது. ஒருமுறை துள்ளி, கையை மெதுவாக இறுகப் பொத்தினான். கால்கள் நின்றன. கையைத் திறந்தான், சிறகடித்து ஒரு பட்டம்பூச்சி மேலே பறந்து சென்றது. அதன் வண்ணங்கள் உள்ளங்கையில் படிந்திருந்தன. அந்த மகிழ்ச்சியில் முகத்தில் வழிந்திருந்த  தண்டுச்செடியின் பனி நீரை கையால் துடைத்தான். கையிலிருந்த பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் செந்தமிழின் முகத்தில் ஒட்டி, பட்டாம்பூச்சியின் மனித முகமாக அவனது முகம் காட்சியளித்தது.

சாலையூர் பள்ளிக்குச் செல்ல, ஹாஸ்டலிலிருந்து செந்தமிழ் கிளம்பினான். ஹாஸ்டலின் சக மாணவர்களான ராஜா, சுரேஷ்குமார், முருகன் போன்றோர் வேகமாக நடக்கத் தொடங்கினர். செந்தமிழ் மட்டும் மெதுவாக நடந்தான். மும்மூர்த்திபுரத்துக்கு ஒற்றையடிப் பாதையில் குறுக்காகச் செல்ல ரோட்டிலிருந்து மழைநீர் ஓடும் பள்ளத்தைக் கடந்து ஒடைமரம் இடையே சென்றான். அப்போது  செந்தமிழின் சட்டையை, ஒடை மரத்தின் ஒரு கிளையின் முள் குத்தி இழுத்தது. கொஞ்சம் குனிந்து உடலை வளைத்து முள் கிளையை எடுத்துவிடும்போது ஒடைமரத்தின் மேலே யதார்த்தமாகப் பார்த்தான். ஒடை மரங்கள், குடைபோல  காட்சி தந்தன. ஆஷ் கலர் பாலித்தீன் பொட்டலம் அதன்மேல் கிடந்தது. உள்ளே ஏதோ பொருள் இருப்பது மட்டும் உறுதி. ஆனால், அது என்ன எனத்  தெரிந்துகொள்ள கீழே கிடந்த கற்களில் மூன்று கல்லை எடுத்தான். முதல் கல், ஒடைமரத்தின் மேல் கொப்பில் பட்டு செந்தமிழை நோக்கித் திரும்பியது. காலை பின்னால் நகர்த்தி நின்றுகொண்டு, அடுத்த கல்லை வீசினான். பாலித்தீன் கவரை ஊடுருவி மேலே சென்று விழுந்தது. கல், கவரை ஊடுருவும்போது சிவப்பு நிறமும் மஞ்சள் நிறமும் சேர்ந்ததுபோல் ஒரு சிறு துண்டு கீழ்நோக்கி வந்தது. அதை இடதுகையால் லாகவமாகப் பிடித்தான். கையைத் திறந்து பார்த்தான். அல்வா துண்டு. மீண்டும் மேலே பார்த்தான். `அல்வா எப்படி மரத்துக்கு மேலே போனது?’  என யோசித்தான்.

பள்ளிக்கு நேரமாகிறது என்ற கவலை சிறிதும் இல்லாமல், அந்த நேரம் அவனது கற்பகத் தருவான ஒடைமரத்தின் கீழ் நின்று அல்வாத்துண்டைக் கடித்தான். அது காம்பிப்போனது. ஆனால், அது அவனுக்குத் தெரியவில்லை. அவன் சாப்பிடும் முதல் அல்வாத்துண்டு. அதுதான் அல்வா என்று நாகா்கோவில் காலேஜ் ரோட்டிலிருந்த பெஸ்ட் பேக்கரியில் ஒருநாள் கையில் காசு எதுவும் இல்லாமல் கண்காட்சி போலப் பார்த்து வந்த அன்றுதான் தெரிந்தது. அப்போது பாத்திரத்தில் கட்டியாகக் கொட்டப்பட்டிருந்ததன்மேல் `அல்வா ரூபாய் 75’ என எழுதியிருந்தது. பேக்கரியில் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏழு, எட்டு பேர் சாதனம் வாங்க உள்ளே வந்தனர். அப்போது கண்ணாடி ஷோகேஸின் அருகில் நின்று உள்ளே இருந்த கேக்குகளைப் பார்த்துக்கொண்டிருக்க, ஷோகேஸின் அந்தப்புறம் நின்ற பல்லு நீண்ட ஒரு பையன், செந்தமிழின் சட்டை கைப்பகுதியை யாருக்கும் தெரியாதபடி மெதுவாக இழுத்துக்கொண்டுபோய் பேக்கரியின் வெளியே விட்டுவிட்டு `ஓடி போல!’ என்று விரட்டினான். அவனை ஒருமுறை ஏக்கத்தோடு மான்போலப் பார்த்துவிட்டு கீழே கிடந்த ரப்பர்பேண்டை எடுத்து விரலில் சுற்றியபடி திரும்பித் திரும்பிப் பார்த்து நடந்து சென்றான்.

திருக்கார்த்தியல் - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அல்வாவை ஒருமுறை நக்கிப் பார்த்தான். மிட்டாய்போலக் கரையவில்லை. மெதுவாக நக்கிக் தின்றுகொண்டு பள்ளிக்கு வந்து சேர்ந்தான். அசெம்ப்ளி தொடங்கிவிட்டது. செந்தமிழ் பிந்தி வந்ததால், அசெம்ப்ளி நடக்கும்போது கேட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்களோடு நின்றான். உதவி தலைமையாசிரியர் குமார் சார்,  இவர்களை முறைத்துக் கொண்டிருந்தார். அசெம்ப்ளி  முடிந்ததும், கையில் இருந்த கம்பால்  வெளியே நின்ற மாணவர்களை அழைத்தார் குமார் சார். ஆளுக்கு ரெண்டு ரெண்டு அடி. எல்லோரும் கையை நீட்டி வாங்கினார்கள். செந்தமிழ் தனது குண்டியைக் காட்டியபடி திரும்பி நின்றான். அவனது காக்கி நிக்கரை இழுத்து இரண்டு அடி குண்டியில் கொடுத்தார். அந்தக் கம்பு புளியம்கம்பு என்பதால் அடி சுளீரென வலித்தது. க்ளாஸுக்கு வந்ததும் என்னிடம், ``நான் அல்வா தின்னேன்’’ என்றான்.

நான் ஏளனமாகச் சிரித்துவிட்டு, ``பொய் சொல்லாதே!’’ என்றேன்.

கையை என் மூக்கில் வைத்தால் காம்பிப்போன எண்ணெய் வாடை அடித்தது. ``லே... இது காம்பிப்போன எண்ணெய்  நாத்தம் அடிக்கு. அது கெட்டுப்போன அல்வாவா இருக்கும்’’ என்று சொன்னேன்.

அவன் அதை காதில் வாங்காததுபோல் ``மீதி அந்த கவரில் இருக்கும் அல்வாவை நானே தின்பேன்’’ என்பதுபோல் சிரித்தான். ஆங்கிலப் பாடம் நடத்தும் கிறிஸ்டி டீச்சர் வரவில்லை. மெதுவாக ஒண்ணுக்கு இருக்கப்போவதுபோல் நானும் செந்தமிழும் பி.டி கிரவுண்டுக்குச் சென்றோம். கிரவுண்டுக்கு அடுத்து இருந்த தென்னந்தோப்புக்கு அருகில் நின்ற பனைமரங்களில் சிலர் ஓலைகளை வெட்டி கீழே போட்டுக் கொண்டிருந்தனர். இன்று திருக்கார்த்திகை என்பதால், பனையோலை கொழுக்கட்டை செய்ய குருத்து ஓலைகளை அவர்கள் வெட்டிக்கொண்டிருந்தனர்.

அருகில் நின்ற எங்களிடம் ``மக்களே, பனங்குருத்து திங்கீயளா?’’ என்றொரு தாத்தா கேட்டார்.
``சரி’’ என்று சொல்லி, கிடைத்த பனங்குருத்தைத் தின்று கொண்டிருந்தோம். மீண்டும் ``மக்களே கொழுக்கட்டை அவிக்க  பன ஓல வேணுமால?’’என்று அந்தத் தாத்தா கேட்டார்.

``வேண்டாம் தாத்தா. எங்க சித்தப்பா பன ஏறத்தான் போவாவ. அவிய கொண்டுவருவாவ’’ என்று சொன்னேன்.

``உனக்கு வேணுமா?’’ என்று செந்தமிழிடம் கேட்டார்.

``இவன் ஹாஸ்டல்ல நிக்கான். அவிய  வேதக்காரய. அதனால திருக்கார்த்தியலுக்குக் கொழுக்கட்ட அவிக்க மாட்டாவ’’ என்று சொன்னேன்.

``பன ஓலை கொழுக்கட்ட எப்படிச் செய்வாவ... அது நல்லா இருக்குமா?’’ என்று செந்தமிழ் கேட்டான்.

``எங்கம்மா வந்து ஏலக்கா, சுக்கு, பச்சரிசி, சர்க்கர, செறுபயறு, தேங்கா போட்டு செய்வாவ. அதுக்கு மொதல்ல பச்சரிசி பொடிச்சி வறுக்கணும். அதுபோல செறுபயற, உப்பு போட்டு மீடியமா ஊறவெச்சு மீடியமா வறுக்கணும். அப்போ தோடு உதிர்ந்து போவும். அத கொழிச்சி பயறு மட்டும் தனியா எடுக்கணும். ஏலக்காய், சுக்கு பொடிச்சி வைக்கணும். அதுக்கு அப்பொறவைக்கு பச்சரிசி மாவுல இதை எல்லாம் போட்டு சர்க்கரய சீவிப் போடணும். தேங்காயத் துருவி இளம் பக்குவமா வறுத்து எல்லாத்தையும் சேத்து சப்பாத்திக்கு மாவு பெசையறது போல பெசையணும்.  தண்ணி  ஊத்தக் கூடாது. அதுக்கப்பொறவு  குருத்துப் பனை ஓலையை எடுத்து நல்லா தொடச்சி சைஸுக்கு ஏத்தாப்போல மாவ வெச்சு, சின்ன பன ஓல நாறாலக் கட்டி, ஒரு பானையில நட்டமா நிக்கவெச்சு, அரப்பானை தண்ணி ஊத்தி நிறைய தீ போடணும். அப்பதான் சீக்கிரம் வேவும். இதெல்லாம் அந்தி ஆறு மணிபோல அடுப்புல வெச்சு அவிப்பாவ. அப்ப அடிக்கிற மணம் நம்ம பள்ளியோடத்துலருந்து முத்தாரம்மன் கோயில் வர அடிக்கும். அதுக்கப்பொறவு வீட்டுக்கு வெளிய வெச்சுத் தின்போம். வீட்டுக்கிட்டோடி தெரிஞ்ச யாராவது போனா அவியளுக்கும் கொழுக்கட்ட கொடுப்போம்’’ என்றான்.

எனக்கு ``இப்பவே கொதியா இருக்கு’’ என்று செந்தமிழ் சொன்னான். சாயங்காலம் பள்ளி முடிந்ததும் சாலையூர் ஆஸ்பத்திரி பக்கத்தில் இருக்கும் பிளஸ்சிங் சைக்கிள்  கடையில் நானும் செந்தமிழும் போனோம். அங்கு பழைய டயர் வாங்க மாணவர்கள் நின்றுகொண்டிருந்தனர். மூன்று ரூபாய் கொடுத்து பழைய டயரை வாங்கிவிட்டு, பக்கத்தில் கிடந்த சின்னக்குச்சியை எடுத்து டயரை ஓட்டத் தொடங்கினேன். என்கூட ஓடிவந்த செந்தமிழ், திடீரென நான் ஓட்டிய டயரை தனது கையால் தட்டி ஓட்டினான். மும்மூர்த்திபுரம் செல்லும் விலக்கு வந்ததும் டயரை என்னிடம் கொடுத்துவிட்டு அவனது உள்ளங்கையைப் பார்த்தான். டயரின் கரி அதில் இருந்தது. நான் சரவணந்தேரி நோக்கிச் சென்றேன். அவன் மும்மூர்த்திபுரம் பாதையில் நடந்தான். அவனுக்கு நடக்க நடக்க பனை ஓலை கொழுக்கட்டை பற்றிய நினைப்பாகவே இருந்தது.

ஹாஸ்டல் வந்து சேர்ந்ததும் யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு மூன்று நாள்களாகப் போட்டிருந்த சிவப்புக் கட்டம்போட்ட அழுக்குச் சட்டையையும் பட்டனும் ஊக்கு இல்லாத கறுப்பு நிற நிக்கரையும் எடுத்துப் போட்டுக் கொண்டான். மூத்திரம் பெய்ய ஹாஸ்டலுக்குப் பின்னால் நின்ற கொடுக்காப்புளி மரத்து மூட்டுக்குப் போனான். கிளி கொத்திப் போட்ட கொடுக்காப்புளி, ஏற்கெனவே யாரோ மூத்திரம் பெய்த இடத்தில் கிடந்தது. அந்த இடத்தின் ஈரமும் காய்ந்திருக்கவில்லை. கொடுக்காப்புளியை எடுத்து சட்டையில் துடைத்துவிட்டு பிச்சி வாயில் போட்டு, வலதுகால் நிக்கரைத் தூக்கிவிட்டு குஞ்சிமணியை வெளியே எடுத்து மூத்திரம் போகும்போது இன்னொரு கொடுக்காப்புளி கீழே விழுமா என அண்ணாந்து பார்த்தான். ஹாஸ்டல் சமையலறைக் கூடத்தில் இருந்த தண்ணீரை அவனது கப்பில் கோரிக் குடித்துவிட்டு, ஹாஸ்டலின் முன்னறைக்கு மெதுவாக நடந்தான்.

``என்னால... என்ன ஃபேஷன் ஷோவா நடக்கு... அன்னநடை நடந்து போற’’ என வார்டன் கேட்டார். அவரை மௌனமாக ஒருவித பயத்தோடு பார்த்துவிட்டு, தனது ஸ்கூல் பையைத் திறந்து தமிழ் புக்கையும் நோட்டையும் எடுத்தான். அப்போது மணி 5:30. சிந்தனையை பனை ஓலை கொழுக்கட்டையில் வைத்துவிட்டு, புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5:45. மெதுவாக எழுந்து முகத்தில் பயத்தோடு  வார்டன் முன் மௌனமாக நின்றான்.

``என்னால... என்ன வேணும்?’’ என்று வார்டன் கேட்டார்.

``பென்னை க்ளாஸ்லயே மறந்து வெச்சிட்டு வந்துட்டேன். கொஞ்சம் எழுத வேண்டியிருக்கு. பென் இல்ல. அதனால பாட்டி கடைக்குப் போயி, ஒரு பென் வாங்கிட்டு வரட்டா?’’ என்று கேட்டான்.

``சரி... சரி, போய்த்தொல. போயிட்டு சீக்கிரம் வந்துரணும்’’ என மிரட்டல் தொனியில் சொன்னார். அப்போது சூரியன் மறைந்துவிட்டது. இருட்டத் தொடங்கியிருந்தது. ஒடைமரக் காட்டு வழியாக அரை கிலோமீட்டர் நடந்து மும்மூர்த்திபுரம் ரோட்டுக்கு வந்து சேர்ந்தான். மருத்துவாழ் மலை உச்சியில் தீபம் எரிவது தெரிந்தது. நேராக நடந்து மும்மூர்த்திபுரம் சி.எஸ்.ஐ கோயிலிலிருந்து இடதுபக்கம் திரும்பியதும் பாட்டி கடை வந்தது. அந்தப் பாட்டி, செந்தமிழைவிட ஒல்லியான தேகம். முலைகள் வற்றிப்போய், தலை முதல் கால் வரை நேராக இருக்கும். கழுத்தில்  தாலியும் வலதுகையில் ஒரு தங்கக் காப்பும் கிடக்கும். அவளுக்கு கூடிப்போனால் 50 வயதுதான் இருக்கும். அவள் மாப்பிள்ளை, மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். அதனால் பள்ளி மாணவர்கள் வெளிக்குப் போனால் குண்டி கழுவ அவர் வீட்டு காம்பவுண்டில் இருக்கும் தொட்டியில் சிரட்டையையோ அல்லது டப்பாவையோ வைத்து தண்ணீர் எடுத்துக் கழுவுவார்கள்.

திருக்கார்த்தியல் - சிறுகதை

அந்த ஊரை `தனம்’ என்கிற ஒரு மனநோயாளி சுற்றிக் கொண்டிருப்பான். அவன்மீது அழுக்கு படிந்திருக்கும். பீ வாடை அடிக்கும். மாணவர்கள் அவனை ``தனம் சாப்பிட்டியா?’’ என்று கேட்டதும் ``சுருட்டு குடிச்சேன்’’ என்று சொல்வான். ``அவன் பெரிய பணக்காரன். திடீர்னு பைத்தியமாகிட்டான்’’ என்று சொல்வார்கள். தனத்துக்குக் கஞ்சியும் சோறும் கடைக்காரப் பாட்டிதான் கொடுப்பாள். யாராவது கொடுக்கும் காசை பாட்டியிடம் கொடுத்து, ஏத்தன் பழம் கேட்பான். சுருட்டு கேட்பான். பாட்டி, சுருட்டைக் கொடுத்ததும் வாயில் வைத்துவிட்டு மூஞ்செலி மாதிரி  உதட்டில் சுருட்டைப் பற்றவைக்க தலையை நீட்டுவான். பாட்டி தீப்பெட்டியை உரசி, சுருட்டைப் பற்ற வைப்பாள். குபுகுபுவென புகையை தனம் ஊதுவான். கால் வழியே பேன்டுவிட்டு கடை முன் வந்து நிற்பான். பாட்டி கையை நீட்டி சைகையால்  `அப்படி உள்ளே வா’ என காம்பவுண்டுக்குள் வரச் சொல்வாள். அழுக்குப் பிடித்த வேட்டியைத் தூக்கி குத்தவைத்துத் திரும்பி உட்காருவான். அப்போது தொட்டியிலிருந்து தண்ணீரைக் கோரி தனத்தின் குண்டியில் ஊற்றுவாள் பாட்டி. அவன் தேய்த்துக் கழுவுவான்.

செந்தமிழ், பாட்டியின் கடை முன் பலகைப் பெட்டியில் சாய்ந்தபடி நின்றான். பாட்டியைப் பார்த்தான், ``பாட்டி, எனக்கொரு பென்னு வேணும். இப்போ பைசா இல்ல. கிறிஸ்மஸுக்கு  வீட்டுக்குப் போவும்போது பைசா கொண்டாந்து தாரேன்’’ என்று சொன்னான்.

பாட்டி எதுவும் சொல்லாமல் மூன்றுவிதமான பென்களை எடுத்துக் காட்டினாள். மூணு ரூபாய் ஐம்பது பைசா விலையுள்ள பென்னை எடுத்துக்கொண்டு ``நான் போயிட்டு வாரேன் பாட்டி’’ எனச் சொன்னதும், ஆரஞ்சு மிட்டாய் டப்பாவில் உடைந்து கிடந்த இரண்டு துண்டு மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தாள். அவற்றை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மேற்கு நோக்கி மும்மூர்த்திபுரம் ரோட்டில் மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் புகை வெளியே வருவது தெரிந்தது. பனை ஓலை மணம் அடிக்கத் தொடங்கியது. அதுதான் பனை ஓலை கொழுக்கட்டை மணம் என செந்தமிழுக்குத் தெரியவில்லை. நடக்க நடக்க மணம் புரிந்துவிட்டது. இடதுபுறம் இருந்த வீடு அரைக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்து வந்த பையன், தன் கையில் சூடாக இருந்த பனை ஓலை கொழுக்கட்டையைப் பிரித்தான். அதை செந்தமிழ் பார்த்துவிட்டான். `இவன் கொதி போட்டுவிடுவானோ?’ என்று அந்தப் பையன் திரும்பி வீட்டுக்குள்ளே போய்விட்டான்.

திருக்கார்த்தியல் - சிறுகதை

அடுத்து நடக்க நடக்க கொழுக்கட்டை மணம் மூக்கையும் காதையும் அடைத்தது. இரண்டு வீடு தள்ளிப்போனதும் மீண்டும் கையில் இளம் மஞ்சள் நிறப் பனை ஓலை கொழுக்கட்டைகளை சிறுவர்கள் வைத்திருந்தனர். அவர்கள் செந்தமிழைக் கவனிக்கவில்லை. மும்மூர்த்திபுரம் ரோட்டில் ஆள்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு சில வீட்டுவாசல்களில் தீப விளக்கு கொளுத்திவைத்திருந்தார்கள். நடந்து செல்லும் ரோட்டில் இரண்டு பக்கங்களில் உள்ள வீட்டுவாசல்களைப் பார்த்துக்கொண்டு நடந்தான்.

``நாங்க கொழுக்கட்ட திங்கும்போது யாராவது வந்தால் அவியளுக்கும் கொழுக்கட்ட கொடுப்போம்’’ என நான் சொன்னதை நம்பி, ஒவ்வொரு வீட்டுவாசலையும் பார்த்தபடி நடந்தான். ஊர் கடைசி வரை வந்த செந்தமிழை, யாரும் கண்டுகொள்ளவில்லை. தெற்கு பக்கம் திரும்பி கிழக்கு ரோட்டில் நடந்தான். துக்கம் தொண்டையை அடைத்தது. நாக்கில் ஊறிய எச்சில் நின்றது. உடல் முழுவதும் இருந்த ஏக்கம் கண்களில் குவிந்து, கண்ணீரை அடைத்து நின்றது. வீட்டுக்கு வெளியே தட்டில் வைத்து பனை ஓலை கொழுக்கட்டை தின்று கொண்டிருந்தவர்கள், கொழுக்கட்டையை சிறிய துண்டாகப் பிய்த்து, மாறி மாறி எறிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு துண்டு தன்னை நோக்கி வராதா என செந்தமிழ் பார்த்தான். எதுவும் வரவில்லை. மீண்டும்  ஒவ்வொரு வீட்டுவாசலையும்   பிச்சைக்காரனைப்போல பார்த்துக்கொண்டு நடந்தான். ஊர், முடிவுக்கு வந்தது. அடுத்து  ஹாஸ்டல் செல்லும் காட்டுவழிப் பாதை. கண்களை அடைத்து  நின்ற ஏக்கம் கண்ணீராக மாறி சரசரவென கீழ்நோக்கி முகத்தில் வழிந்தது. அவன் கத்தி அழுதான். ஆனால், அவன் அழுதது யாருக்கும் கேட்கவில்லை. உடல் முழுக்க வியர்வை. தேம்பித் தேம்பி அழுதான். அப்போது அவனது  தமிழ் ஐயா ஜெகதீசன் சொல்லிக் கொடுத்த `தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதி பாடல் நினைவுக்கு வந்தது.

இரண்டு கைகளாலும் முகத்தைத் துடைத்துக்கொண்டு திரும்பி நின்று, ``எனக்கொரு கொழுக்கட்டை தராத இந்த ஊரு, அழிஞ்சிப்போகட்டும்’’ என மும்மூர்த்திபுரத்தைப் பார்த்துச் சபித்தான் . மீண்டும் ஹாஸ்டலை நோக்கி நடந்தான். அவன்  கண்ணீரும் அவனோடு நடந்தது. ஆண்டுதோறும் திருக்கார்த்திகை வருகிறது. ஆனால், செந்தமிழுக்கு இன்னும் பனை ஓலை கொழுக்கட்டை கிடைக்கவில்லை.