Published:Updated:

''மண் பானையில் பிறந்தது மக்கள் இசை!"

என் ஊர்!

''மண் பானையில் பிறந்தது மக்கள் இசை!"

என் ஊர்!

Published:Updated:
''மண் பானையில் பிறந்தது மக்கள் இசை!"

'தவமாய்த் தவமிருந்து படத்தில் இவர் பாடிய 'ஆக்காட்டி... ஆக்காட்டி’- தாய்ப் பறவையைப் பிரிந்து குஞ்சுப் பறவை பாடும் பாடல், இன்றும் நம் மனசின் முடுக்குகளில் சிறகுகளால் மோதும். திரைப்படப் பாடல், நாட்டுப்புறப் பாடல் என, மண்ணின் பாடகராக அறியப்பட்டவர் புதுவை ஜெயமூர்த்தி. இவர், ''தமிழகப் பகுதியான வீராணம் மற்றும் சொரப்பூர் போன்ற பகுதிகள் ஒருசேர அமைந்து உள்ள ஊர்தான் பனையடிக்குப்பம். ஒரே ஒரு சாலைதான் தமிழகத்தையும் புதுச்சேரியையும் பிரிக் கும். சாலைக்கு இடப்புறம் தமிழகம்... வலப்புறம் புதுச்சேரி என அமைந்து இருக்கும், மூன்று போகமும் விளையக்கூடிய அசல் விவசாய பூமி இது!''  -என்று தன் ஊரான பனையடிக்குப்பத்தின் பெருமைப் பேசத் தொடங்குகிறார்...

''மண் பானையில் பிறந்தது மக்கள் இசை!"
##~##
''புதுச்சேரியின் விடுதலைக்காக பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் தலைவர் வ.சுப்பையா தலைமறைவாக இருந்து தங்கிய சில இடங்களில் எங்கள் ஊரும் ஒன்று. சுடப்பட்டு, குண்டடிபட்டு நடக்கமுடியாதச் சூழலிலும் இரவு நேரங்களில் மட்டும் ஊர் ஊராகச் சென்று கூட்டம்போட்டு மக்கள் சக்தியைத் திரட்டினார். 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ எனும் போராட்டத்தை நடத்திய போராளியும் அவரே.

பள்ளி விடுமுறை நாட்களில் என் வீட்டுக்கு அருகே இருக்கும் சித்தன்தாங்கல் ஏரியில் சம்புக் கோரை நிறைய வளர்ந்து இருக்கும். அதில் சிட்டுக் குருவிகள் கட்டியிருக்கும் கூட்டினுள் இருக்கும் நூற்றுக்கணக்கான முட்டைகளை நானும் எனது நண்பர்களும் எடுத்து மிளகாய், உப்பு போட்டு அந்த ஓடைக்கு அருகிலேயே சமைத்துச் சாப்பிடுவோம்.

நீரில் மூழ்கி விளையாடி, அதில் இருக்கும் அல்லிப்பூவைப் பறித்து மாலையாகப் போட்டுக் கொண்டு அல்லிக்காயினுள் கேழ்வரகுபோல இருக்கும் மகரந்தங்களைச் சாப்பிடுவோம். கார்த்திகை மாதத்தில் பொழியும் அடை மழையில் கூட, ஏரியின் முகப்பில் உள்ள தொட்டிப் பாலத்தின் மேல் ஏறி தலைகுப்புறக் குதித்து குளித்து விளையாடுவோம். அதன் அருகில் இருக்கும் குளத்தில் செந்தாமரைப் பூக்களும், வெண்தாமரைப் பூக்களும் நிறைந்து இருக்கும். வாழை மரத்தையே எங்கள் படகாக மாற்றி, குளத்தின் ஆழம் மிகுந்த நடுப்பகுதிக்குச் சென்று அந்தப் பூக்களைப் பறிப்போம். அந்தக் குளத்தில் இருக்கும் தாமரை இலைகளைத்தான் அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் பயன்படுத்துவார்கள். இப்போது அந்த ஏரியிலும் குளத்திலும் எதற்கும் பயன் அளிக்காத ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்து இருப்பதைப் பார்க்கும்போது, மனதுக்குள் இருக்கும் பசுமையான நினைவுகள் சிதைக்கப்பட்டதைப் போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

முழு ஆண்டுத் தேர்வின் விடுமுறை நாட்களில் மாரியம்மன் கோயில் எதிரில்  நாடகம், கட்டுரை, பாட்டு, கலைப் போட்டிகள் நடத்தி எங்களைப் போன்ற சிறுவர்களை உற்சாகப்படுத்தி இயங்கிவந்த இளைஞர் மன்றத்தின் கட்டடத்தில் இப்போது எஞ்சியிருப்பதோ ஒரே ஒரு இடிந்துபோன சுவர் மட்டுமே. மன்றத்து அண்ணன்கள் தினமும் இரவில் கீற்றுக்கொட்டகையால் ஆன பாலர் பள்ளியில் எங்களுக்குப் பாடம் சொல்லித் தருவார்கள். இன்று அந்தப் பாலர் பள்ளி எங்கள் ஊர் மக்களின் மாட்டுத் தொழுவமாக மாறி இருக்கிறது. அதன் அருகே இருக்கும் தண்ணீர்க் குழாயில் காலையில் தண்ணீர் பிடிப்பதற்காக, இரவே அங்கே மண் குடங்களை வைத்துவிட்டு போவது எங்கள் மக்களின் வழக்கம். இரவில் நாங்கள் அந்தக் குடங்களை எடுத்துவைத்து தாளமிட்டுப் பாட்டுப் பாடி கச்சேரி நடத்துவோம். இப்படித்தான் தொடங்கியது என் இசை.

இந்த இனிமையான நினைவுகளைப் போன்றே கசப்பான சில வடுக்களும் மனதைவிட்டு மறையவில்லை. எங்கள் மக்கள் ஆண்டைகளின் எதிரில் வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு செல்லக் கூடாது. கோவணம்தான் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். மீறினால், ஆண்டையின் வீட்டு வாசலில் உள்ள கருங்கல் தூணில் கட்டிவைத்து அடிப்பார்கள். காலம் சில விஷயங்களை நேர்மாறாகப் புரட்டிப் போட்டுவிடும். எந்த இடத்தில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் வேற்றுச் சாதியினரின் கால் படக்கூடாது என்று வெறிகொண்டு ஆடினார்களோ, அதே இடத்தில் இன்று சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசினர் நடுநிலைப் பள்ளியும், ஆரம்ப சுகாதார நிலையமும் உருவாகி நிற்கின்றன. விவசாய பூமியான எங்கள் ஊரில் இன்றும் விவசாய நிலம் இருக்கின்றது. ஆனால் விவசாயம் செய்வதற்குத்தான் ஆட்கள் இல்லை!''

  • 'மக்கள் இசை’ என்ற தன்னுடைய தமிழர் பாடல் குழுவின் மூலம் இதுவரை 6,000 மேடைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்!
     
  • தவமாய்த் தவமிருந்து’ (ஆக்காட்டி), 'மாயாண்டி குடும்பத்தார்’ (வந்தனம் ஐயா வந்தனம்), 'அறை எண் 305-ல் கடவுள்’ (அடடடா இது ஆயா சுட்ட வடை ), 'வாகை சூடவா’ (தஞ்சாவூரு மாடத்தி) உட்பட 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடி இருக்கிறார், ஜெயமூர்த்தி!
     
  • சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட இசை குறுந்தகட்டில் இசை அமைத்த 10 இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர்!

- ஜெ.முருகன்