Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

மாபெரும் ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட பேரரசர்கள் பலரும், ஏதாவது ஒரு பெண் மீதான மயக்கத்தில், தங்களது வானாளவிய அதிகாரத்தை அவளிடம் அடகு வைத்திருந்தனர் என்றே வரலாறு இடித்துரைக்கிறது. நீரோவும் விதிவிலக்கு இல்லை. சபினா என்ற பெண்ணுக்காகத் தன் தாயையும் முதல் மனைவியையும் தீர்த்துக் கட்டிய நீரோ, அவளை ஜாம்ஜாமென்று திருமணம் செய்துகொண்டார். நீரோவைவிட சபினா ஏழு வயது மூத்தவள். அவள், அவருக்கு இரண்டாவது மனைவி; அவர், அவளுக்கு மூன்றாவது கணவர். இருவருக்கும் பிறந்த ஒரு பெண் குழந்தை தங்கவில்லை. சபினா, மீண்டும் கர்ப்பமுற்றாள்.

அந்தச் சமயத்தில் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு தகராறு. தன்னிலை இழந்த நீரோ, அவளது வயிற்றில் ஓங்கி மிதித்தார். நிலைகுலைந்து விழுந்த சபினா, பிறகு இறந்து போனாள். தன் மடத்தனத்தை எண்ணி நீரோ கதறிக் கண்ணீர் விட்டதாகச் செய்திகள் உண்டு. அந்தக் காலத்தில் ரோமானியர்களுக்கு மிளகு என்பது தங்கத்துக்கு ஒப்பானது. ஏழைகளுக்கெல்லாம் எட்டாத பொருள். அரேபியர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட மிளகையும், பிற வாசனைப் பொருள்களையும் கொட்டி, சபினாவுக்கு இறுதிச் சடங்குகளைக் கனத்த இதயத்துடன் செய்தார் நீரோ.

சபினாமீது நீரோ எவ்வளவு ‘dragoste’ (காதலின் ரோமானிய மொழி வார்த்தை) வைத்திருந்தார் என்பதற்கு, அடுத்து அவர் செய்த காரியமே சாட்சி. மக்கள் முன்னிலையில் கோலாகலக் கொண்டாட்டத்துடன் ஸ்போரஸ் என்ற சிறுவனைத் திருமணம் செய்துகொண்டார். ஏனென்றால், அவனுக்கு அச்சு அசல் சபினாவின் முகஜாடை. அடுத்ததாக பைதாகோரஸ் என்ற ஆண் அடிமையையும் திருமணம் செய்துகொண்ட நீரோ, அவனுக்கு மனைவியாகச் சேவகம் செய்தார். தவிர, பாரிஸ் என்ற நடிகனோடு காதல் வயப்பட்டார். தன்னைவிட அவன் நன்றாக நடிக்கிறான் என்ற பொறாமையில் அவனைப் போட்டுத் தள்ளினார். ஸ்டட்டிலியா என்ற பெண்மீது மோகம் கொண்டு, அவளின் கணவனைத் தற்கொலை செய்துகொள்ள வைத்து, அவளை விதவையாக்கி, தியாக உள்ளத்துடன் பேரரசியாக்கிக் கொண்டார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியாகக் கொலைவெறி கொண்டவராக நம் மனத்தில் பதிந்த நீரோ, கலைவெறி கொண்டவர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அவருக்கு மக்கள்நலப்பணிகளைவிட, எக்ஸ்ட்ரா-கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் அநியாயத்துக்கு ஆர்வம் இருந்தது. பாடல் எழுதுவார்; பாடுவார்; இசைப்பார்; ஆடுவார்; நடிப்பார்; வரைவார்; செதுக்குவார்.

அரங்கத்தில், ‘நீரோனியா’ என்று பெயரில் நிகழ்ச்சி ஆரம்பமாகும். அதாவது நீரோவே சிந்தித்து வடிவம் கொடுத்த பாடல்களோ, இசை நாடகமோ மேடையில் அரங்கேறும். சூப்பர் சிங்கர் நீரோவின் குரல் கர்ணகடூரமாக இருந்தாலும், அவர் மீட்டும் இசை நாராசமாக ஒலித்தாலும், அவரது நடிப்பு சகிக்கவே முடியாததாகத் தெரிந்தாலும் ஆர்ப்பரித்து ரசிக்க வேண்டியது ஆடியன்ஸின் கடமை. ஆம், அப்படிச் செய்தால் மட்டுமே பூட்டி வைக்கப்பட்ட அரங்கத்தின் கதவுகளை நிகழ்ச்சி முடிந்ததும் திறப்பார்கள். ஆம், கைதட்டுங்கள். திறக்கப்படும்!

இப்படித்தான் ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போதும் நீரோ கொடூரமாக பிடில் வாசித்தாரா? ‘இல்லை’ என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள். கி.பி. 64, ஜூலை 18 இரவில் ரோமின் மேக்ஸிமஸ் என்ற குதிரைப் பந்தய மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று மிக அதிகமாக இருந்ததால் தீ பரபரவெனப் பாய்ந்து பரவி, ஏகப்பட்ட வீடுகள், விடுதிகள், கடைகள், கோயில்கள், அரண்மனையின் ஒரு பகுதி என பலவற்றையும் நாசமாக்கியது. நெருப்பை முற்றிலும் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஆனது.

இந்த நெருப்புக்குப் பின் புகையும் சர்ச்சைகள் நிறையவே உண்டு. இவற்றில், டெசிடெஸ் என்ற நீரோவின் சமகால ரோமானிய வரலாற்றாளரின் பதிவுகள் முக்கியமானவை. ‘அந்தச் சமயத்தில் நீரோ ரோமிலேயே இல்லை. அண்ட்டியம் நகரில் இருந்தார். விஷயம் கேள்விப்பட்டு உடனே ரோமுக்கு விரைந்த பேரரசர், தீயை அணைக்கும் பணிகளை முடுக்கிவிட்டு, தானும் களப்பணி ஆற்றினார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அரண்மனையைத் திறந்துவிட்டார். மக்களுக்கு உணவும், நிவாரணப் பொருள்களும் (நீரோ முகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டாமல்) வழங்கப்பட்டன. நீரோ தன் சொந்தப் பணத்திலேயே இதெற்கெல்லாம் செலவு செய்தார்’ என்கிறார் டெசிடெஸ்.

சிதைந்த ரோமை, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிதாகக் கட்டுவதற்குத் திட்டமிட்டார் நீரோ. வலுவான கல் கட்டடங்கள், அகலமான தெருக்கள், அப்புறம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் Domus Aurea (தங்க மாளிகை) என்ற புதிய அரண்மனை வளாகம். இதற்கெல்லாம் பணம்? செல்வந்தர்களும், மாபெரும் வணிகர்களும் நீரோவின் காலடியில் வந்து பணத்தைக் கொட்ட வேண்டுமென்பது கட்டளை. அல்லது செல்வம் அடித்துப் பிடுங்கப்படும். அப்படியும் அதிகப் பணம் தேவைப்பட்டபோது, ரோமானிய சாம்ராஜ்ஜிய வரலாற்றிலேயே முதன்முறையாக நீரோ ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையை மேற்கொண்டார். வெள்ளி நாணயங்களில் எடையும், வெள்ளியின் தூய்மையும் குறைக்கப்பட்டன.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

புதிய அரண்மனை வளாகத்தின் மத்தியில் செயற்கை ஏரி, அருகிலேயே சுமார் 103 அடி உயரத்தில் நீரோவின் மாபெரும் வெண்கலச்சிலை போன்றவை உருவாக்கப்பட்டன. ‘பப்பி ஷேம்’ கோலத்தில் ரோமானிய சூரியக் கடவுள்போல நின்றுகொண்டிருந்த நீரோவின் சிலையை அனைவரும் வழிபட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.

அப்போது அங்கு கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரே. அவர்கள் பேரரசர்களின் சிலைகளை வணங்க மறுத்தார்கள். ‘இயேசுவின் ராஜ்ஜியமே உயர்ந்தது’ என்றார்கள். கிறிஸ்துவர்கள்மீதான வன்முறை கலிகுலா காலத்திலேயே தீவிரமாகியிருந்தது. நீரோவின் காலத்தில் மிகத் தீவிரமானது.

‘தீ மூட்டியதே கிறிஸ்தவர்கள்தாம். ரோமை அழிக்க அவர்கள் செய்த பெருஞ்சதி இது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’ என்று விபத்தைத் திசைதிருப்பினார் நீரோ. அதற்காக விதவிதமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. முதலைகள் நிரம்பிய தடாகத்தில் கிறிஸ்தவர்கள் தூக்கியெறியப்பட்டனர். மாபெரும் மரண விளையாட்டு அரங்கின் மத்தியில் தள்ளப்பட்டு, பசித்த புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் இரையாக்கப்பட்டனர். அரண்மனை வளாகத்திலும், நகரத்தின் வீதிகளிலும் இரவு நேரங்களில் விளக்கெரிக்க வேண்டுமல்லவா. ‘சிலுவைகளை நடுங்கள். அதில் கிறிஸ்தவர்ளை அறையுங்கள். கொளுத்துங்கள். ஒளிரட்டும் ரோம்!’ மனித விளக்குகளின் கதகதப்பில் நீரோவின் மனம் குளிர்ந்தது.

கலைவெறியும் கொலைவெறியும் நீரோவின் ஆட்சிக்கு உலை வைத்தன. புதிய அரண்மனை வளாகக் கட்டுமானத்தால் எக்கச்சக்க அநாவசியச் செலவு. ரோமானிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், அதற்கென அடிமையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தவிர, கிறிஸ்தவர்கள் படுகொலை, பிற அரசியல் கொலைகள் என்று நீரோவின் இமேஜ் பாதிக்கப்பட்டிருந்தது. மக்களை எப்போதும் வாட்டுவது புதிய புதிய வரிகள்தானே. நீரோவும் புதிய வரிக்கொள்கைகளினால் அழிச்சாட்டியம் செய்தார். அதை ஏற்று அமல்படுத்தாத மாகாண கவர்னர்கள் இன்னல்களுக்கு உள்ளாயினர். சிலர் துணிச்சலாக எதிர்க்க ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர், Hispania Tarraconensis என்ற மாகாணத்தின் கவர்னராக இருந்த கல்பா. பழுத்த அரசியல்வாதி. பல பேரரசர்களின் கீழ் பணியாற்றிய அனுபவஸ்தர்.

கல்பாவை ‘ராஜ்ஜியத்தின் துரோகி’ என்று அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் நீரோ. இதை செனட் ஏற்றுக்கொண்டால், கல்பாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றலாம். ஆனால், நீரோவின் பாதுகாப்புப் படைத்தளபதியாக இருந்த சபினெஸும், கல்பாவுடன் கைகோத்தார். நீரோவுக்கான ஆதரவு மிகவும் பலவீனமானது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 31 - சூப்பர் சிங்கர் நீரோ!

கி.பி. 68 ஜூன் 9. ரோமுக்கு வெளியே ஒரு மாளிகையில் சில விசுவாசிகளுடன் நீரோ பதுங்கியிருந்தார். அப்போது அஞ்சல் ஒன்று வந்து சேர்ந்தது. ‘செனட்டில் நீரோவை ராஜ்ஜியத்தின் துரோகியாக அறிவித்துவிட்டார்கள்’ என்று. எனில், அடுத்து நீரோவைக் கொல்ல படை வீரர்கள் கிளம்பி வந்துவிடுவார்கள். எதிரிகள் கையால் சாவதை நீரோ விரும்பவில்லை. விசுவாசிகளின் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்தச் சொன்னார். அவர்கள் தயங்கினார்கள். ‘குத்திக்கொண்டு சாவது எப்படி என்று நீங்கள் யாராவது செய்து காட்டுங்களேன்’ - கெஞ்சினார் நீரோ. அதற்குள் வெளியே குதிரையின் சத்தம் கேட்டது.

‘நீரோவைக் கொல்ல வேண்டாம். அவர் மூலம் பிறக்கும் வாரிசை ஆதரிக்க வேண்டும்’ என்று அவர்மீது நம்பிக்கை தெரிவித்து செனட்டில் முடிவெடுத்திருந்தார்கள். அந்தச் செய்தியோடு குதிரை வீரன் மாளிகைக்குள் நுழையும்போது, வயிற்றில் கத்தி பாய்ந்திருக்க ரத்த வெள்ளத்தில் கிடந்தார் நீரோ. ரோம் வரலாற்றிலேயே தற்கொலை செய்துகொண்ட முதல் பேரரசரான நீரோவின் இறுதி வார்த்தைகள் இவை... ‘‘எப்பேர்ப்பட்ட கலைஞன் என்னுடன் மரணிக்கிறான்!’’

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism