Published:Updated:

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

நேர்காணல்சந்திப்பு : வெய்யில், சுகுணா திவாகர், சக்தி தமிழ்ச்செல்வன்படங்கள் : கே.ராஜசேகரன், க.பாலாஜி

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

நேர்காணல்சந்திப்பு : வெய்யில், சுகுணா திவாகர், சக்தி தமிழ்ச்செல்வன்படங்கள் : கே.ராஜசேகரன், க.பாலாஜி

Published:Updated:
“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

90-களுக்குப் பிறகு எழுத வந்த நவீனத் தமிழ்க் கவிஞர்களில் தனித்துவமானவர் யவனிகா ஸ்ரீராம். தாராளமய ஏகபோக வளர்ச்சி அரசியலுக்கு எதிரான மூன்றாம் உலகப் பிரஜையின் காத்திரமான எதிர்க்குரல் இவரது கவிதைகள். முன்மாலை நேரம், விடுதி அறையில் கொஞ்சம், தேநீர்க் கடையில் கொஞ்சம், சாலையில் நடந்தபடி கொஞ்சம் என யவனிகாவின் கவிதைகளைப்போலவே நிகழ்ந்தது உரையாடல்.

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

நெரிசல் மிகுந்த சென்னை ரங்கநாதன் தெருவில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தோம். பல மாடிகள்கொண்ட ஒரு வணிகக் கட்டடத்திலிருந்து ஜன்னல் கண்ணாடிகள் வெப்பத்தில் உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. ‘சரிதான், கவிதை வேலை செய்கிறது’ என்று சிரித்தபடி உரையாடலைத் தொடர்ந்தோம்... 

‘ஆசியப் பகுதியில் வசிப்பது
தலைக்கு மேல் தொப்பியை
சரியாக வைத்துக்கொள்ள
தாடைகளிலிருந்து பற்களைக் கழற்றுவது’


‘‘இந்த வரிகளை எந்த மனநிலையில் எப்போது எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?”

“2002-ம் ஆண்டு எழுதியது என்று நினைக்கிறேன். அப்போது நான் மலேசியாவிற்கு வணிக ரீதியாகச் சென்றிருந்தேன். ‘ஆசியப் பகுதியில் வசிப்பது’ என்ற வரியை எழுதியதன் காரணம், நான் இந்தியச் சூழலில் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதால் மட்டுமல்ல. நான் வியாபார ரீதியாக மலேசியா போன்ற பல நாடுகளுக்குப் பயணம் போகும்போது, அந்த மக்கள் இந்த தாராளமய வளர்ச்சிப் போக்குகளுக்காகக் கொடுத்திருக்கும் விலையைக் கவனிக்க முடிந்தது. குறிப்பாக அந்தப் பகுதிகளின் பூர்வகுடி மக்கள், அங்கு உருவான பெரிய பெரிய கட்டடங்களுக்காக, ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்காகத் தங்களுடைய ஆதார நிலங்களை, இயற்கை வளங்களை இழக்க வேண்டியிருந்தது. அந்தப் பொருளாதார மாற்றங்கள் எதுவும் அந்நாட்டு மக்களின் நலனுக்கானது அல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

மக்களின் அடிப்படை வளங்களைப் பறித்துக்கொண்டு, ‘வளர்ச்சிக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம்’ என்ற அரசின் ஏமாற்றுக் குரலை, பகடியாக விமர்சிக்கும் தொனியில்தான் அந்த வரிகளை எழுதினேன். அதாவது, ‘வளர்ச்சி எனும் ஒரு பகட்டுத் தொப்பியை, கட்டடங்களை நாட்டின் தலை மீது சரியாக  வைத்துக்கொள்ள அந்த நாட்டின் மக்களை, அடிப்படை வளங்களை அவர்களின் உரிய இடத்திலிருந்து அகற்றுவது’ என்று இந்தக் குறியீட்டு வரிகளை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.”

“தொடர்ந்து நிறைய பயணங்கள் செய்திருக்கிறீர்கள். அவை வியாபாரரீதியானது என்றாலும் கவிதைக்கான  மனநிலையையும் தருவதுண்டா? அந்த நாள்கள் எப்படியானவை?”

“அடிப்படையில் என்னுடைய குடும்பம் காபிக் கொட்டை வியாபாரம் செய்துவந்த சிறுவணிகக் குடும்பம். பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடனேயே நானும் வியாபாரத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டேன். 17 வயதில் என் கைகளில் 30 சாக்குப் பைகளைத் தந்து, இடுப்பில் பணத்தைவைத்துக் கட்டி வியாபாரத்திற்காக அனுப்பிவைத்தார்கள். தொடக்கத்தில் அப்பாவுடனும் அப்பாவின் உதவியாளர்களுடனும் சென்றுவந்த நான் பிறகு, தனியாகவே வியாபாரத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். காபி அப்போது அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. எங்களின் வியாபாரப் பயணம் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், எங்கள் ஊருக்கு அருகிலிருந்த சிறுமலைப் பாதைகளிலும் நடக்கும்.

வியாபாரத்திற்கான பயணம்தான் என்றாலும், எப்போதும் என் பையில் கவிதை எழுதுவதற்கு என ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்திருப்பேன். வியாபாரம் செய்யும் நேரம் போக மீதி நேரத்தில் மலைகளின், காட்டுப்பாதைகளின் இயற்கைக் காட்சிகளை, உயிரினங்களை, அதைவிட அதிகமாக அங்கு வாழும் மனிதர்களைக் கவனிப்பேன். மலைவாழ் மக்கள், காடுகளில் வேலை செய்யும் கூலிகள், காட்டின் சொந்தக்காரர்கள் என அனைத்துத் தரப்பு மனிதர்களோடும் பழகுவேன். ‘கேழ்வரகு, வாழை, சோளம் போன்ற மண்ணின் பயிர்களைப் பயிரிட்டு வந்த நிலத்தில், இன்று காபியும் தேயிலையும் மண்டிக்கிடக்கிறது. இனி நிலம் என்னவாகுமோ’ என்ற கவலை தோய்ந்த முதியவர்களின் குரலைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

அடிக்கடி சென்று வருவதால், கீழே திரும்ப இயலாத இரவுகளில், அங்குள்ள ஒரு கூலித் தொழிலாளியின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

வீட்டில் தங்குவேன். வியாபாரம் முடித்த களைப்பு,  மலையின் விநோத வாசனை தரும் கிளர்ச்சி என ஒரு கலவையான மனநிலையில் காடா விளக்கொளியில் அமர்ந்து கவிதைகள் எழுதுவேன். பனி நிறைந்த பின்னிரவு முதல் அதிகாலை வரையிலான இருள்தான் என் கவிதைகளுக்கான நேரம். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, இரவு என்பது எப்போதும் உறங்க அல்ல.”

“யவனிகா ஸ்ரீராம் என்ற ஆளுமை ஒருவர்தான் என்றபோதிலும், மனதளவில் சிறுவணிகன் - கவிஞன்  என்ற இருவர் சேர்ந்து செய்கின்ற பயணம் எவ்வளவு லாபகரமானது-சிக்கலானது?”

“கவிஞன் ஒருபோதும் சிறுவணிகனுக்கு உதவியதில்லை. ஆனால், சிறுவணிகன் கவிஞனுக்கான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறான். கவிஞன் உதவாததோடு மட்டுமல்லாமல் வியாபாரத்தைக் கெடுத்த கதைகளும் பல உண்டு. (சிரிக்கிறார்)”

“என்ன மாதிரியான கதைகள் அவை?”

“கவிஞன் வணிகனைக் காட்டிலும் உணர்ச்சிகரமான நுண்ணுணர்வு கொண்டவன் அல்லவா? வியாபாரத்திற்கே உரிய சில விஷயங்களைச் செய்ய அவன் தடையாக இருப்பான். வியாபாரக் கடன்களை வசூலிக்கச் செல்லும் வீடுகளின் வறுமையில், சுகதுக்கங்களில் கண்ணீர் சிந்தி வெளியேறுபவனாக இருப்பான். கவிதை மனநிலை வியாபாரத்துக்கு ஆகுமா? ஏராளமான கதைகள் உண்டு. சொன்னால் பக்கங்கள் போதாது.”
  
“இந்த நிலவெளிக் காட்சிகளும் அழகுணர்ச்சியும்தான் உங்களைக்  கவிதைக்குள் அழைத்து வந்தனவா?”

“இல்லை. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மனப்பாடப் பகுதியின்  செய்யுள் பாடல்களை விரும்பிப் படிக்கும் ஆர்வம் இருந்தது. தமிழ்ச் செய்யுள்களின் இசைமைமீது ஏதோ இனம்புரியாத ஆர்வமிருந்தது. அந்த வருடத்தின் மொத்த மனப்பாடப் பகுதிச் செய்யுள்களையும் ஒரு மாதத்திற்குள்ளாகவே மனப்பாடம் செய்துவிடுவேன். வார்த்தைகளைக் கொடுத்துச் சொற்றொடர் அமைத்து எழுதச் சொல்லும் பாடப் பகுதி, எனக்கும் கவிதைக்குமான நெருக்கத்தை உருவாக்கியது.  ‘ஆஹா, இந்த மொழியை வைத்து  பிரமாதமாக விளையாடலாம் போலிருக்கிறதே’ என்ற துள்ளல் எனக்குள் ஏற்பட்டது. பாடப் புத்தகங்களைத் தாண்டியும் பாரதி, பாரதிதாசன் என்னை ஈர்த்தனர். நிறைய வாசித்தேன். தவிர, என் அம்மா, வள்ளலாரின் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தெரிந்து வைத்திருந்தார். அவர் தினமும் பாடல்களைப் பாடி என்னைக் கேட்கச் சொல்வார். இந்தச் சூழல்தான் என்னைக் கவிதைக்குள் முதன்மையாக உந்தித் தள்ளியது.”

“பள்ளியின் பாடத்திட்டம்தான் என்னைக் கவிஞனாக மாற்றியது  என்று சொன்ன முதல் நவீனக் கவிஞர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்...”

“உண்மைதான். எனக்கு உதவியது. இன்று, தமிழ் மொழியின் மீதும் கல்விமுறையின் மீதும் நிறைய விமர்சனங்கள் உள்ளன. ஆனால், எனது பால்யத்தில் தமிழ் என்னை வசீகரித்து ஈர்த்தது.”

“ஆரம்பத்தில் ஓசை நயமாக, ஓங்கிய குரலாக எழுதப்பட்டு வந்த புதுக்கவிதைகளிலிருந்து நவீனக் கவிதைக்கான உங்களின் நகர்வு எப்படி நிகழ்ந்தது?”

“தொடக்கத்தில் ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களைப்போலத்தான் நானும் எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையை மக்களிடம் கொண்டுசென்றதில்  வானம்பாடிகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அவர்கள்தான் திராவிட, மார்க்ஸியக் கருத்தியல்களைத் தீவிரமாகக் கவிதைகளில் எடுத்துக் கையாண்டார்கள். மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ நா.காமராசனின்  ‘கறுப்பு மலர்கள்’ போன்ற நூல்களை வாசித்தபோதும், ‘தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்’, ‘சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்’ போன்ற தலைப்புகளைக் கண்டபோதும் அவை என்னை வெகுவாகப் பாதித்தன.

பிறகு, ஒரு கட்டத்தில் வானம்பாடிகளின் கவிதைகள், வெறும் ஒலிக்கவிதைகளாக, ‘வேலையில்லா திண்டாட்டம்’, ‘முதிர்க்கன்னி’ எனப் பொதுப் புறச்சத்தங்களால் நிறைந்த ஒன்றாகப்பட்டன. தனிநபருக்கு அவ்வகைக் கவிதைகளோடு உரையாட ஒன்றுமில்லாமலிருந்தது. மொழியைத் தவிர மற்ற தளங்களில் செயல்படாத, எழுத்துக்கும் எழுதுபவருக்கும் தொடர்பே இல்லாத தன்மை வானம்பாடிகளின் மீது சந்தேகத்தை உருவாக்கியது. அவர்களில் சிலர் சினிமாவுக்கு எழுதப் போனது, அவரவர் விருப்பங்களுக்குப் பட்டங்களைச் சூட்டிக்கொண்டது மீதான விமர்சனம் உண்டானது. நான் அதிலிருந்து மெள்ள விலகினேன்.

26 வயதிருக்கும், வியாபாரரீதியாக ஒருமுறை திருச்சி சென்றிருந்தபோது ஒரு பெட்டிக்கடையில் ‘கணையாழி’ இதழைப் பார்த்தேன். அப்போது கணையாழி ஐந்து ரூபாய் என்று நினைக்கிறேன். அதில் இடம்பெற்றிருந்த ‘சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்’ என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுஜாதாவின் பக்கங்களுக்காகவே அந்த இதழை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஏறக்குறைய அந்தக் காலகட்டத்தில் சுஜாதாவினுடைய அனைத்து நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ‘கணையாழி’யில்தான் கலாப்ரியா போன்றவர்களின் பெயர்களையெல்லாம் பார்த்தேன். அதில் கண்ட எழுத்தாளர்களின் பெயர்களை நூலகங்களில் தேட ஆரம்பித்தேன். ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’, சுந்தர ராமசாமியின் ‘நடுநிசி நாய்கள்’ போன்ற நூல்கள் கிடைத்தன. இவை புறச்சத்தம் அதிகமற்ற அகவயமான கவிதைகளாக, நவீன வாழ்வின் தனிநபர் சார்ந்த உளவியல் பிரச்னைகளின் மீது கவனம் செலுத்துபவையாக எனக்குப் பிடித்தன. புதிதாக இங்கிருந்து மீண்டும் வாசிக்கவும் எழுதவுமாகத் தொடர்ந்தேன்.”

“‘எழுத்துக்கும் எழுதுபவருக்கும் தொடர்பே இல்லாததன்மை’ என்று குறிப்பிட்டீர்கள். எழுதுகிறவர், அவரது எழுத்திற்கு நேர்மையாக இருந்தாக வேண்டும் என நினைக்கிறீர்களா?”

“ஒழுக்க விதிபோல, கட்டாயப்படுத்தும் தொனியில் நான் இதைச் சொல்லவில்லை. மொழிவழியாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில், மொழியை வைத்தே ஏமாற்றக் கூடாது என்கிறேன். கோடிக்கணக்கான  மக்கள் வாழக்கூடிய சமூகம் இது. அவர்களிடம் நடைமுறைக்குச் சாத்தியமானவற்றைத்தான் கொண்டுசெல்ல வேண்டும். மொழிவழியான மிகையுணர்ச்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு மக்கள் என்ன செய்வார்கள்?

மூடநம்பிக்கைக்கு எதிராக எழுதியதாகச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால், பெரியாரைவிடவா இவர்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளுடன் மக்களிடம் சென்றார்கள்?

சுதந்திரத்திற்குப் பிறகான நம் சமூகம், பழைமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்த, சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்றாகத்தான் இருந்தது. அதற்குப் புரட்சிகரமான கருத்துகளும் கலையும் தேவைதான். பெரியார் எளிய பேச்சுமொழியோடு மக்களிடம் நேரடியாகச் சென்றார். அவர்களை பாதித்தார். அதனால்தான், இன்றும் மக்களின் ஆயுதமாகப் பெரியார் உயிர்ப்போடு இருக்கிறார். ஆனால், வானம்பாடிகளின் கவிதைகள் கல்விப் புலங்களுக்கு வெளியே குறிப்பிடுமளவு புழக்கத்தில் இல்லையே. பெரியாரைவிடவும் வானம்பாடிகள் புரட்சிகரமானவர்கள் அல்ல என்பது என் பார்வை.”

“கவிஞனாக இலக்கியத்திற்குள் வரும்போது என்ன மாதிரியான நம்பிக்கையுடன் வந்தீர்கள், கவிதையால் உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் நிகழும் என நினைத்தீர்கள், கவிதையைப் பற்றிய உங்களின் அப்போதைய பார்வை என்னவாக இருந்தது?”

“பள்ளிக்காலத்திலிருந்தே, ‘ஒவ்வொருவரும் ஏதாவதொரு தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது தன்னம்பிக்கையைத் தரும்’ என்று சொல்லி வளர்த்திருந்தார்கள். எனக்குக் கவிதை எழுத வருகிறது என்பது அடிப்படையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதைத் தாண்டி கவிதை வழியான பொருளாதார, வாழ்வியல் பலன்கள் சார்ந்த நம்பிக்கைகள் எதுவும் மனதில் இருந்ததில்லை.

சிறுவயதில் நான் ஓவியம்  வரைய முயன்றேன். அழித்து அழித்து மீண்டும் வரைகிற பயிற்சிமுறை ஏனோ என் மனஓட்டத்திற்கு நெருக்கமானதாக இல்லை. பின்னாள்களில் கவிதைகளையும்கூட திருத்தி திருத்தி எழுதியிருக்கிறேன். ஆயினும், கோடுகளைவிட எழுத்துகளையே நெருக்கமாக உணர்ந்தேன். அப்படி ஒரு கவிதையை 86 முறைகூட திருத்தி எழுதியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை என் தன்னம்பிக்கைக்காகவும், என்னால் கவிதை எழுத முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவும், என் தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும்தான் எழுதினேன். கவிதையின் எதிர்காலம் குறித்து அப்போது எந்தத் திட்டமும் அனுமானமும் இல்லாமல்தான் இருந்தேன்.”

“பிரமிள், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி போன்றோர் உங்களை எந்த அளவுக்குப் பாதித்தார்கள். உங்களுக்கான கவிதை மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?”

“அரசு, கோட்பாடு, கல்விமுறை, சமூகம் என அனைத்தின் மீதான ஏமாற்ற உணர்வை பிரதிபலிக்கின்ற, இருத்தலியல் சிக்கல்களை உளவியல் ரீதியாகப் பேசுகிற அகவயப்பட்ட கவிதைகளையே அன்றைய நவீனக் கவிஞர்கள் எழுதிவந்தனர். அதுவரை எழுதப்பட்டுவந்த கவிதைகளும்கூட தனிமனிதனுக்கு ஆதரவாக இல்லை என்கிற மனநிலை அவர்களிடம் இருந்தது. ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே பாரதி தொடங்கிவைத்த பாதையின் நீட்சியில் பயணித்து வந்தார்கள். வானம்பாடிகளுக்கு முந்தைய சி.சு.செல்லப்பா காலத்திலேயே இந்தப் பயணம் தீவிரமடைந்தது. பெரும்பாலும் ஆரம்பகால நவீனக் கவிஞர்கள் அனைவருமே நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கக்கூடியவர்களாக இருந்தனர். ஆங்கிலக் கவிதைகளை இந்திய மனநிலையின் அகவய வடிவமாக எழுதிப்பார்த்தனர். இந்தக் காலகட்டத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரமணர் போன்றோர் சூழலைப் பெரிதும் பாதித்தனர். கவிதைகளையும்கூட.

பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி போன்றவர்களை வாசித்ததில், என்னிடம் ஞானக்கூத்தனின் சாயல் ஒட்டிக்கொண்டது. எனக்கு ஞானக்கூத்தனைப்போல நன்றாகவே எழுதவும் வந்தது. நண்பர்கள் பலரும் பாராட்டினர். நவீனக் கவிதையில் பலமாகிவிட்டாய் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், ஞானக்கூத்தனின் சாயல் என்னிடம் படிந்ததில் எனக்கு மகிழ்ச்சியில்லை. அதிலிருந்து விடுபடவே விரும்பினேன். அதேசமயம், வானம்பாடிகளின் ‘புதுக்கவிதை’யில் அகவயமான உளவியல் பார்வை எப்படி விடுபட்டதோ, அதுபோலவே ‘நவீனக் கவிதை’களில் அரசியல் பார்வை விடுபட்டிருந்தது.

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

இந்தக் காலகட்டத்தில் உலகமயமாக்கலின் காரணமாக என்னுடைய வணிகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. காபிச் சந்தை திறந்துவிடப்பட்டது. அகத்திலும் புறத்திலுமாகப் பிரச்னை பற்றி எரிந்தது. நான் எல்லா வகையிலும் தீவிரமானேன். அகவுணர்வு சார்ந்த கவிதைகளில் புறத்தையும் பிணைத்து என்னுடைய புதுமையான கவிதைமொழியைக் கண்டெடுத்தேன். மார்க்ஸியப் பின்புலமும், கைவிடப்பட்ட உதிரிகளின் வாழ்வு நிலைகளும், மனோவியல் ரீதியான பிரச்னைகளும் என என்னுடைய கவிதைகள் உருவாகின. சாதியால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த இளம்பருவக் காதல்கள் அப்போது பெருங்குற்றமாகக் கருதப்பட்ட நிலையில், என் கவிதைகளின் பேசுபொருள்களில் பாலியலையும் ஒரு தீவிரமான அங்கமாக்கிக்கொண்டேன்.”

“நீங்கள் கண்டறிந்த  கவிதைமொழி ,  உங்களுக்கு முன்பாக எழுதிக்கொண்டிருந்த வேறு யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை என்கிறீர்கள் அல்லவா?”

“ஆமாம். எனக்கு யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை.  ஓரளவிற்கு ஆத்மாநாமிடம் அந்த மொழி இருந்தாலும், அவரது மனம் சூழலிலிருந்து அந்நியப்பட்ட ஒன்றாக இருந்தது. தனது அறிவுக்கும் சூழலுக்கும் பொருத்தமில்லை என்கிற மேதாவித்தனமான மனநிலை அவரிடம் இருந்தது. அவரது வாசிப்பின் வழியே மேதாவி என்கிற வார்த்தைக்குத் தகுதியுடையவராகக்கூட அவர் இருந்திருக்கலாம்!

கலாப்ரியா பாலியலை வேறுவிதமாக எழுதிக்கொண்டிருந்தார். அவர் திராவிட இயக்க மொழியுடன்  உளவியல் மொழியைக் கலந்து தனக்கான ஒரு போக்கை உருவாக்கிக்கொண்டிருந்தார். சற்றுத் தாமதமாகத்தான் ரமேஷ்-பிரேமை வாசித்தேன். அவர்களும் தங்களது ஆங்கில, பிரெஞ்சு இலக்கிய, கோட்பாட்டு வாசிப்பின் வழியே தங்களுக்கான மொழியை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். இதுபோக பல மொழிபெயர்ப்புப் படைப்புகளையும் நான் வாசித்தேன். பிரெக்ட் என்னை ஆழமாகப் பாதித்தார். நிச்சயமாக இவற்றில் இருந்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், இவையல்ல நான் எழுத வேண்டியது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என் இருத்தலியல் பிரச்னைகள் வேறு வேறாக இருந்தன. என்னால் நிச்சயம் கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட மையத்தை உருவாக்க முடியாது என்பதையும், மையமற்ற ஒரு கொலாஜ் வடிவம்தான் என்னுடையது என்பதையும் கண்டுகொண்டேன். யதார்த்தத்தில் மையம் என்ற ஒன்று இல்லை என்பதையும் எனது பல்வேறு அலைச்சல்களின் வழியே அறிந்தேன். உலகெங்கும் மையமற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. எனவே, பார்ப்பதை ஆங்காங்கே பொருத்திவைப்பதின் வழியேதான் கவிதைகளில் மையமற்ற பலகுரல் தன்மையை உருவாக்க முடியும், அரசியல் பிரக்ஞைகொண்ட ஒரு ‘கொலாஜ்’ வடிவம்தான் என்னுடைய கவிதை வடிவமாக இருக்க முடியும் என்பதை முடிவுசெய்தேன்.”

“பொதுவாக ‘கொலாஜ்’ வடிவம் மிக எளிதானது என்பதாகவும், ‘ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்களை அடுக்கிக்கொண்டு போவதுதான் வேறென்ன’ என்றொரு பார்வையும் உள்ளது. உண்மையிலேயே ஒரு ‘கொலாஜ்’ வடிவக் கவிதையில் கவிஞன் எதிர்கொள்ளும் சவால் என்ன?”

“நான் கவிதை எழுதும் முறையிலிருந்தே அதைச் சொல்ல முயல்கிறேன். உதாரணமாக,  ‘நான் ஒரு

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன்’ என முதல் வரியைத் தொடங்கிவிட்டு, அதற்கு ஒரு நியாயமும் செய்யாமல் பல இடங்களில் சுற்றிவிட்டு வந்து, இரண்டாவது வரியை எழுதுவேன். ‘ஒரு குவிண்டால் நெல்லுக்காக மேற்குத் தொடர்ச்சி மலையில் 40 குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன’. அடுத்த வரியாக, ‘எலிகளை வேட்டையாடுவதற்காகக் குத்தீட்டிகளோடு போய்க்கொண்டிருக்கிறார்கள்’.  மீண்டும் கடல் பக்கமாகப் போய் ‘இந்தக் கடலின் கடைசி அலை அச்சமூட்டுகிறது, பகலைவிட இருளில் கடல் அசையும் மிருகம்போல நெளிகிறது’ என எழுதி முடிக்கிறேன் என வைத்துக்கொள்வோம், இது ஒரு கொலாஜ் வடிவக் கவிதை. இதை  யார் வேண்டுமானாலும் எழுதலாம்தான். ஆனால், அதில் வெளிப்படும் மொழியும் செய்தியும், அந்தக் கவிதையில் கொலாஜ் கவிதைக்கான மனம் எவ்வளவு செயல்பட்டிருக்கிறது என்பதை வாசகனுக்கு உணர்த்திவிடும்.

சாலையிலோ, ஏரிக்கரையிலோ நின்றுகொண்டு ஒரு நிலவெளியைப் பார்க்கிறபோது, நமது பார்வையில் ஒரு நோக்கம் இருக்கும்போது, அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு தொடர்பற்ற சலனங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாது. நீங்கள் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருந்தால், அவரோ, அவரது வாகனமோதான் உங்களின் பிரதான பார்வை இலக்கு. அதேசமயம், நீங்கள் நோக்கமற்று - மையமற்று அந்த  நிலவெளியைப்பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை சலனங்களும் ஒவ்வொன்றாக உங்களுக்குக் காட்சியாகும். கவனமல்ல, கவனமின்மையே இங்கு முக்கியம். ஏனெனில், இயற்கையே தன்னளவில்  ஒரு ‘கொலாஜ்’ வடிவம்தான்.

மன ஓர்மைதான் கவிதை என்கிறார்கள், எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. மன ஓர்மையை ஒருவித சிறைப்படுதலாகத்தான் நான் பார்க்கிறேன். அது கவிஞனுக்குத் தேவையில்லை. விரவிக்கிடக்கிற காட்சிகளைப்போல தம் மனதையும் ஒரு கவிஞன் வைத்துக்கொள்ள வேண்டும்.

‘கொலாஜ்’ வடிவம் மூலம்தான் துல்லியமான விஷயங்களைக் கவிதைக்குள் வைக்க முடியும். காட்சியை மொழிப்படுத்த வேண்டும்; மொழியைக் காட்சிப் படுத்தவேண்டும். இது வெறுமனே பார்ப்பவற்றை, நினைவுகளைக் காட்சிப் படுத்தும் வேலை மட்டும் அல்ல, காட்சிகளுக்குள் உள்ளீடு, மறைபொருள், தொனி போன்றவற்றைக் கவனமாக வைக்க வேண்டும். தன்னளவில் கவிதை பல்குரல்கொண்ட அரசியலை வெளிப்படுத்த வேண்டும். விரவிக்கிடக்கிற அந்தக் கவிதைக் காட்சியை வாசகன் ஒருங்கிணைத்துக் கொள்வான், அவனுக்கான வெளியில் நாம் தலை நுழைக்காமல் கவிதையின் முடிவில் சட்டென வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும். எதுவும் எளிமையும் அல்ல; கடினமும் அல்ல. எல்லாவற்றிற்கும் ஓர் உழைப்பும் தீவிரமான பார்வைக் கோணமும் வேண்டும். அவ்வளவுதான்.”

“தொடர்பில்லாத வாக்கியங்களை, காட்சிகளை  கொலாஜ் கவிதையில் அடுக்கும்போது, அவற்றில் பொருள் இயைபு ஏற்படுத்த முயல்வீர்களா அல்லது ஒட்டுமொத்தமாக இணையும்போது, தன்னளவில் ஏதாவது அர்த்தத்தைக்கொண்டிருக்கும் என நம்பி சுதந்திரமாக விட்டுவிடுவீர்களா?”

“இந்த இடத்தில் மொழிமீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இரண்டு வார்த்தைகளை அருகருகே வைத்துவிட்டால் போதும்; மனம் பதறிவிடும். வார்த்தைகளை அதன் இணைப்பை அர்த்தப்படுத்திக்
கொள்ளத் துடிக்கும். கொலாஜ் கவிதை வடிவத்தைக் கையாளும்போது, நிச்சயம் அது தன்னளவில் அர்த்தங்களைக் கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன். ஏனென்றால், மொழியின் நினைவுச் சேகரமும் நனவிலி மனம் உருவாக்கும் மொழிக் குறியீடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அதன் காரணமாக நான் என் கவிதைகளை வாசகர்களிடத்தில் விட்டுவிடுகிறேன். என்னைவிட என் கவிதைகளை அதிகமாக அனுமானித்து அனுபவம்கொள்ளும் தேர்ந்த வாசகர்கள் அதிகம்.”

“உங்களின் கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப்போல உள்ளன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தத் தன்மை தொடர்ந்து மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசித்து வந்ததன் தாக்கமா அல்லது   நீங்கள் திட்டமிட்டு உருவாக்கியதா?”

“சொல்வதற்குச் சங்கடமாக உள்ளது. இன்றைய தமிழ்க் கவிதைச் சூழலில் தொடர்ந்து ஊர்க் கதைகளை எழுதுவதன் வாயிலாக ஆவணப்படுத்தல்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. ஊர்க் கதைகளும், இழப்பின் நினைவுகளும் கடந்த 60 வருடங்களாகக் கவிதைகளில் ஊடாடி வருகின்றன. ஆனால், நவீனக் கவிதைகளாக இன்று அவை தத்துவார்த்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக எதை நோக்கி நகர்கின்றன, நகர்கின்றனவா என்பதே கேள்வியாகத்தான் மிஞ்சுகிறது. ‘கவிதை’ என்று சொல்லும்படியான கவிதையாக இன்று அது அழகாகவும் எளிமையாகவும் வடிவம் பெற்றுவிடுகிறது. ஆனால், அதன் அடுத்த கட்டம் என்ன என்பதில் யாருக்கும் தெளிவில்லை; தெரிவும் இல்லை. நவீனக் கவிஞர்களால் தனது கிராமத்தைத் துல்லியமாக வர்ணிக்க முடிகிறது. ஆனால், அதைத் தொடர்ந்து, அடுத்த தளத்திற்குக் கவிதையை எப்படி நகர்த்திச் செல்வது என்பது தெரியவில்லை.

நான் கவிதைகளுக்குள் என் தெருக்கதையை எழுதினாலும்கூட அதைத் திட்டமிட்டே வேறு இடத்தில் நிகழ்வதுபோல எழுதுகிறேன். அதனால்தான் அதன் மொழியும் நிலமும் புனைவுத்தன்மை மிகுந்ததாக, அந்நிய நிலம்போல இருக்கிறது.உண்மையில் அது அந்நிய நிலம் அல்ல.  திட்டமிட்டுக் கவிதை நிகழும் இடத்தை மறைப்பதை ஓர் அரசியலாகவும் தற்காப்பாகவுமே செய்கிறேன். தனது நிலத்துப் பயிர் விளைச்சலின் சிறப்பை, நீரின் வளத்தை, கவிஞன் கவிதையில் துல்லியமாக, யதார்த்தமாக அழகாக விவரிக்கும்போது, தண்ணீரையும் நிலத்தையும் தேடிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டிற்கு அது உதவியாக இருந்துவிடுமோ என்று  அச்சப்படுகிறேன். இந்த உலகமயமாக்கல் சூழலில், நமது கவிதைகள் கவி உணர்விற்காக மட்டும் படிக்கப்படுவதில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். எந்தச் சமயத்திலும் என் கவிதைகள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆள்காட்டி வேலை செய்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.”

“நம் கவிதை மரபே திணை சார்ந்த ஒன்றுதான். நீங்கள் அதைத் தவிர்த்துவிட்டு எழுதுவதென்பது சரியானதுதானா?”

“நான் ஐந்து திணைகள் குறித்தும் எனது  கவிதைகளில் எழுதியுள்ளேன். ஆனால், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிலம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. என் நிலத்தின் தடயங்களை நான் திட்டமிட்டுத்தான் மறைக்கிறேன். திணைகள், உலகம் முழுக்கவே இருக்கின்றன. எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூடலாம்; குறையலாம், மனித வாழ்க்கையும் கவிதையும் எங்கேயும் உண்டு. மேலும், உள்ளூர்த்தன்மை சொந்தவூர்த்தன்மை என்றெல்லாம் இப்போது எதுவும் இல்லை என்றே நம்புகிறேன். இனி மனிதனுக்குச் சொந்த ஊர் என்ற ஒன்று கிடையாது. உள்ளூரில் இருந்தாலுமே அவன் அகதிதான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல், ஒரு அபத்த அரசியல் வாழ்நிலையைக் குறிக்கும் வரிகளாகிவிட்டன.” (சிரிக்கிறார்)

“என்.டி.ராஜ்குமார் போன்றவர்கள் நாட்டார் மொழியில், நிலம் சார்ந்த வாழ்வை அவர்களின் பண்பாடு சார்ந்து எழுதும்போது அது முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகத்தானே பார்க்கப்படுகிறது?”

“நீங்கள் சொல்வது விளிம்புநிலை மனிதர்களின் கதை, கவிதை. அவர்களின் தொன்மம் அரசியல் சார்ந்தது. முக்கியத்துவமானது. தங்களது தொன்மம் சார்ந்த அந்த அடையாளங்களுக்கு வெளியே அவர்கள் எழுத முடியாது. இதுபோன்ற தொன்மம் சார்ந்து அரசியல் பேசும் படைப்புகளை நான் வரவேற்பேன். ஒற்றைமயப்படுத்தி முழுவதுமாகப் பூசி மெழுகப்பட்டுக்கொண்டிருக்கிற சமூகத்திலிருந்து வரும் தனித்தனியான எதிர்ப்புக் குரல்கள் அவசியமானவை. அவர்கள் தங்கள் கவிதைகளில் நிலத்தை அல்ல, இழப்பையும் மூர்க்கமான எதிர்ப்பையும் ஆக்ரோஷத்தையுமே பொதிந்துவைக்கிறார்கள்.”

“ஒரு பழங்குடிச் சமூகத்தின் அரசியலைப் பேசுகிறார் என என்.டி.ராஜ்குமாரை வரையறுக்க முடிவதைப்போல, உங்களை அரசியல்ரீதியாக என்னவாக வரையறுப்பது?

“மொழி, இடம், சூழல் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவனாக இருக்க மாட்டேன் என்பதுதான் என் அடையாளம்.  ‘தமிழில் எழுதுவதால் தமிழைப் பிரநிதித்துவப்படுத்துவது ஆகாதா’ என்று கேட்கலாம். இது ஒரு தற்செயல் நிகழ்வே. எனக்கு யோசிக்கத் தெரிந்த மொழி தமிழ் என்பதால், இதில் எழுதிக்கொண்டிருக் கிறேன்.”

“ ‘தன்னைச் சொல்லிக்கொள்ள முடியாத இடத்தில் வெகுநேரம் நிற்பது சுலபமில்லை’ என்று உங்களின் கவிதை வரி ஒன்று உள்ளது.  தமிழ்க் கவிதை உலகில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக உணர்கிறீர்களா?”

“தொடர்ந்து எனது கவிதைகளை வாசிக்கின்ற விக்ரமாதித்யன் போன்ற பத்துக் கவிஞர்கள், ‘பின்காலனித்துவக் கவிஞர்களில் முக்கியமானவர் யவனிகா’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், ஆவணப் பதிவுகளாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.”

“அதற்கு என்ன காரணம் என்று  நினைக்கிறீர்கள்?”

“நான் தமிழ்க் கவிதையின் மைய நீரோட்ட வெளியில் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம். வெகுசனக் கவிதைத் தளத்திலிருந்து விலகல் கொண்டவனாக இருக்கிறேன்.  ஒருவேளை, நான் ‘வானம்பாடி’ அமைப்புகளைச் சார்ந்தோ, அன்றைக்கு இருந்த நவீனக் கவிஞர்களின் குழுவிலோ கலந்திருந்தால், எனக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கலாம். நான் இந்தக் குழு அரசியல் சார்ந்து கவனம்கொள்ளாமலேயே இருந்துவிட்டேன். இதுதான் என் உண்மையான இயல்பும்கூட.”

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

“இன்றைய உலகளாவிய ஏகபோக வளர்ச்சிப்போக்கை, நுகர்வுவெறியை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உங்கள் நம்பிக்கையா?”

“எதிர்த்து ஏதேனும் செய்ய முடியுமா முடியாதா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நாம் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு என்ன வழி இருக்கிறது என யோசிக்க வேண்டும். இவ்வளவு பொருள்கள் இந்த வாழ்க்கைக்கு எதற்கு என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும். மனிதர்கள் பொருள்களால் மதிப்பிடப்படும் சூழல்தான் இன்றைய கொடூர யதார்த்தம். ‘அந்தப் பொருளைத் தொடாதீர்கள், அதன்மீது சாயாதீர்கள் - அது அழுக்காகிவிடும், உடைந்துவிடும்’ எனப் பொருள்களின் மீதான கவனத்தில் மனிதன் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறான். சந்தைக்கு முன் ஒரு நவீன மனிதனுக்கு அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது. ‘இந்த நுகர்வு உலகம் தனக்கான சவக்குழியைத் தானாகவே தோண்டிக் கொள்ளும்’ என கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். அப்படியே நிகழ வேண்டும் என நானும் விரும்புகிறேன்; வேண்டிக்கொள்கிறேன்.”

“வளர்ச்சிப்போக்கு, எல்லாவிதமான கலை வடிவங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு கவிஞனாகக் கலையின் வழியாக அதை எதிர்த்துப் பேச முடியுமென நீங்கள் நம்புகிறீர்களா?”

“இந்தப் பின்காலனியச் சூழலில்  ஒட்டமொத்தக் கலைகளுமே சுரண்டப்படுகின்றன. ஓர் அதிநவீனக் கட்டடம் கட்டப்பட்டு, அதன் வரவேற்பறையில் ஒரு முதுமக்கள் தாழி வைக்கப்படுகிறது. அல்லது இருவர் நெல் புடைப்பது போன்ற சிறிய சிலைகள் வைக்கப்படுகின்றன. அவ்வளவுதான் இங்கே கலை குறித்த பார்வைகள்.  தொன்மங்கள், நினைவுகள், கலைகள் யாவும் பண மதிப்பு சார்ந்த விஷயங்களாக மாறிவிட்டன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இன்று கலை, பொருள்சார் வணிகமாக மாறிவிட்டது.”

“இந்தச் சூழலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?”

“நான் இதை எதிர்க்கிறேன். நீங்களும் வாருங்கள்... எல்லோருமாகச் சேர்ந்து இதை எதிர்ப்போம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஏராளமாக உருவானதுபோல, இந்த நூற்றாண்டில் கலையற்ற மனிதர்கள் அதிகமாக உருவாகியிருக்கிறார்கள். இன்றைய வாழ்வில் கலைகளுக்கான நேரம் இல்லை. எல்லோருக்கும் அவசர அவசரமாக  ‘யூஸ் அண்டு த்ரோ’ கலைகள் விநியோகிக்கப்படுகின்றன. எல்லாம் கையடக்க அலைபேசிக்கே கொண்டுவந்து தரப்படுகின்றன. லட்சக்கணக்கில் பெருகிவிட்ட ஊடகங்கள் உருவாக்கித் தருபவையே கலைகள் என இனி கருதப்படும். விடியவிடியக் கூத்து பார்த்த மனிதர்கள் அல்ல இப்போது நாம். புத்தக வாசிப்பு குறைந்துள்ளதையும் இந்த இடத்தில் நாம் பொருட்படுத்திப் பார்க்க வேண்டும். வருத்தமான செய்தி; ஆனால், உண்மை. இந்த நூற்றாண்டு மனிதன், தனது கலையுணர்வை இழந்துவிட்டான்.”

“ஓர் ஆங்கிலக் கவிஞன், பரந்த விரிந்த மொத்த உலகுக்குமான கவிஞனாகவே தன்னை  மனதளவில் கருதுகிறான். ஆனால், ஒரு தமிழ்க் கவிஞன்  தன்னைச் சிறிய எல்லைக்குள்ளாக இயங்கும் ஒருவனாகச் சுருக்கிக்கொள்கிறான் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. உங்கள் மனநிலை எப்படியானது?”

“நான் தமிழ்க் கவிஞன் என்பதை, தமிழில் எழுதுவதால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். நான் இரண்டு காலனிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும் வாழ்ந்திருக்கிறேன்/வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஒன்று பிரிட்டிஷ் காலனியம், மற்றொன்று பின்காலனியம். சுயமான, சுதந்திரமான எனது தேசத்தை நான் இன்னும் பார்க்கவே இல்லை. நான் ஓர் உலக மனிதன்; உலகக் கவிஞன். இப்படித்தான் எப்போதும் நான் சிந்தித்து வந்திருக்கிறேன்”

“தமிழில் இன்று இயங்கிவரும் கவிஞர்களைக் குறித்த உங்களது அபிப்ராயம் என்ன?”

“நான் இதை ஒரு பதிவாகவே தெரிவிக்க விரும்புகிறேன். இன்றைய நவீனக் கவிஞர்களின் கவிதைகளில்

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

அரசியல் பிரக்ஞை என்பது துளியும் இல்லை. உலகமயச் சூழலில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது; எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளப்போகிற சவால்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்த முன்னுணர்வோ, சிந்தனையோ, பார்வையோ, இவர்களின் கவிதைகளில் இல்லை. எவ்வளவு அந்நிய முதலீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பெருகிக்கொண்டேயிருக்கும் ஊடகங்கள்... ஏன் - எதற்கு - எப்படி... எவ்வளவு கேள்விகள் எழ வேண்டும்?

பாலஸ்தீனத்தில் நிலத்தைப் பல மடங்கு விலைகொடுத்து வாங்கிய யூதர்கள், பின் அங்கிருந்து அந்த  மக்களைச் சட்டபூர்வமாகவே வெளியேற்றினார்கள். இதுதான் நாம் கடந்துகொண்டிருக்கும் வரலாறு. நமது நிலங்களும்கூட யாரோ சிலரால் வாங்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன. விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெருவாரியான மக்கள் நிலத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய பார்வை இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் குறைவாக இருக்கிறது. நானும்கூட தொடர்ந்து அதைத்தான் முயன்றுகொண்டிருக்கிறேன். நவீனத் தமிழ்க் கவிதைகள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.”
 
“கவிதைகளில் அரசியல் பிரக்ஞை இல்லை என்கிறீர்கள். நாவல், சிறுகதை போன்ற வடிவங்களின் நிலை என்னவாக இருக்கிறது?”

“அனைத்துக் கலை வடிவங்களிலுமே பரீட்சார்த்த முயற்சிகள்தான் நடக்கின்றன. பழைய புராணங்களை, இதிகாசங்களை மறுஆக்கம் செய்கிறேன் எனப் பழைய விஷயங்களைத்தான் பெரும்பாலானோர் மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கி றார்கள். நவீனத்தைத் தாண்டி இங்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது? லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் எவ்வளவு அரசியல் நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதுபோன்ற முயற்சிகள் இங்கே நடைபெறவே இல்லையே?

இந்த விஷயத்தில் ஒப்பீட்டளவில் கவிதைதான் முன்னணியில் இருக்கிறது.நாவல்கள், சிறுகதைகள் தந்திரம் நிறைந்தவையாக இருக்கின்றன. இதில் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள விஷயம் ஒன்று உண்டு. அது, காத்திரமான அரசியலை எழுதுகிற அளவு சமூகச் சூழலும் சுதந்திரமாக இல்லை. சாதி, மதவாதம் என எழுத்தாளனுக்கு ஏராளமான நெருக்கடிகள் இருக்கின்றன. இன்றைய சமூகம் ஒரு படைப்பாளியை, ‘உனக்குள்ளாகவே சிந்தனையை சுயதணிக்கை செய்துகொள்’ என்று நிர்பந்திக்கிறது. இது படைப்புச் சூழலுக்கு உகந்ததல்ல.”

“நீங்கள் ஏன் வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கவில்லை?”

“ஒரு தொகுப்பு போடுகிற அளவு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். விஷயங்கள் சுருங்கிவிட்டன, நீளமாக ஏன் நாவல்கள் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஒருவகையில் நாவல்கள் என்னை அச்சுறுத்துகின்றன. அவ்வளவு பக்கங்களைப் பார்க்கும்போது எனக்கு மூச்சுமுட்டுகிறது. பெரிய பெரிய நாவல்களை வாசிக்க நேரிட்டால், இறந்துவிடுவோமோ என்றுகூட சில சமயம் நான் பயந்திருக்கிறேன்.”

“இந்தச் சூழலுக்கு என்னதான் காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

“மனம் நவீனமடையவில்லை. உடல், உணவு, உடை, வாழிடம் எனப் புறப்பொருள்கள் யாவும் நவீனமயமாகிவிட்டன. ஆனால், மனமும் சிந்தனையும் இன்னும் பழைமையிலேயே உழன்றுகொண்டிருக்கின்றன. அதுதான் முக்கியமான காரணம்.”

“படைப்புகளில் அரசியல் அவசியமாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால், ‘படைப்புகளில் அரசியலைக் கொண்டுவர வேண்டியதில்லை’ என்றொரு தரப்பு உள்ளதே?”

“அரசியல் யுகத்தில் அரசியலை எழுத வேண்டாம் என்றால், வேறு என்ன எழுத வேண்டுமாம்... பெண்களுக்கும் தலித்துகளுக்கும் நடக்கும் வன்முறைகளைப் பற்றி எழுதாமல், மொத்த வளமும் சூறையாடப்படுவதை எழுதாமல், படைப்புகளின் வழியே இங்கு பேச வேண்டிய முக்கியமான பிரச்னைதான் என்னவாம்? சரி, நாங்கள் படைப்புகளில் அரசியல் எழுதுவதை விட்டுவிடுகிறோம். கலைகளில் அரசியல் வேண்டாம் என்பவர்கள், இந்தப் பிரச்னைகளைச் சமூகத்திடம் கவனப்படுத்துகிற பொதுமனிதனாகவாவது செயல்படுகிறார்களா? எதுவுமே இந்தச் சமூகத்தில் தனியாக இல்லையே. எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்ததுதான். கலை தனித்தன்மையானது என்று சொன்னால், அது கலையைக் கடவுளாக்கும் வேலை. அதை ஒப்புக்கொள்ள முடியாது. இந்த உலகில் அனைத்தும் கட்டுடைப்பு செய்து பார்க்க வேண்டிய விஷயங்கள்தான். கவிதை உட்பட.”

“சமகாலப் பிரச்னைகளை, அரசியலைப் பேசுகிற படைப்புகள் காலம் கடந்து நிற்குமா? அதன் அரசியல் தேவை முடிந்தவுடன் காலாவதியாகிவிடாதா?”

“ஏன் காலம் கடந்து நிற்க வேண்டும். எது காலம் கடந்து நின்றாலும் ஆபத்துதான். எல்லாமும் ஒரு கட்டத்தில் எக்ஸ்பயரி ஆக வேண்டும். காலம் காலமாக நிலைத்து நிற்கிற இலக்கியங்களை நாம் சந்தேகப்படத்தான் வேண்டும். இலக்கியம் என்பது முழு உண்மைகளின் தொகுப்பு கிடையாது. எனவே, ஒரு பிரதி நீண்டகாலம் நிலைத்திருந்தால், அது நீதி வகைமையைச் சார்ந்ததாகிவிடும். இலக்கியம் நீதியைப் போதிப்பதாக இருக்க வேண்டியதில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் அது அரசின், அதிகாரத்தின் பக்கம் நின்றுவிடும். இலக்கியம் என்பது தோன்றி மறைகிற மலரைப்போல, பயன்மதிப்பைத் தாண்டி மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்க வேண்டும். மொழி வேண்டுமானால் காலம் கடந்து நிற்கலாம். இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை. அது அந்தந்த சமகாலத்தின் விஷயங்களைப் பேசி மறைந்துபோவதுதான் நியாயம்.”

“பெண் கவிதைகள் - தலித் கவிதைகள்  எனத் தமிழில் உருவான இரண்டு முக்கியமான போக்குகள் குறித்த உங்களது பார்வை?”

“வானம்பாடி காலத்திலிருந்தே பெண்கள் எழுதி வந்தாலும், இரண்டாயிரத்துக்குப் பிறகுதான் அவர்களின் எழுத்து தீவிரமானது.  இன்று நன்றாக எழுதக்கூடிய 20 பெண் கவிஞர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இலக்கியப் பத்திரிகைகளில் அதிகமான பெண் கவிஞர்களின் பெயர்களைப் பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடக்கத்தில், ஆண்களுடனான ஓர் உரையாடல் வடிவிலேயே பெரும்பாலான கவிதைகள் எழுதப்பட்டன.  ‘எங்களை ஒரு தனி உயிரியாக உணரச் செய்கிறீர்கள்’, ‘குடும்ப அமைப்பு சிறைப்படுத்துவதாக இருக்கிறது’, என்பதான குரல்களே வெளிப்பட்டன. பின்பு வந்தவர்கள், ஆணாதிக்கம் குறித்தும் மதப் பிற்போக்குத்தனங்கள் குறித்தும், பெண் உடல் குறித்தும் ஒரு பலமான எதிர்க்குரலை அரசியல் உணர்வோடு முன்வைத்தார்கள். பெண்கவிதைக்கான ஒரு பெரிய வெளி உருவானது. ஆனால், தொடர்ந்து  உலகமயமாக்கல், பின்காலனியம் என அரசியல் கவிதைகளுக்குள் அவர்கள் நகர்ந்து வரவில்லை. அடுத்த கட்டம் என்கிற விஷயம் இல்லாமல் போய்விட்டது. இது தலித் கவிதைகளுக்கும் பொருந்தும்.”  

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

“உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்  ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை குறித்த பார்வை என்ன?”

“இன்னும் தெளிவுறாத அறிவியல் விஷயங்களை, புலன்களால் அறிய முடியாத சில மர்மங்களை நான் ஆன்மிகம் என்று சொல்ல மாட்டேன். சிறு வயதிலேயே எனது வீட்டில் கடவுள், மதம், சாதி குறித்தெல்லாம் சொல்லி அச்சுறுத்தினார்கள். ஆனால், நான் அப்போதிருந்தே அவற்றை நம்பவில்லை. எனது கான்ஷியஸில் இல்லாத ஒன்றை நான் எப்போதும் நம்ப மாட்டேன். நிகழ்தகவுகளை மர்மமாக மாற்றி ஆன்மிகம் எனச் சொல்லி மக்களை ஏமாற்றக் கூடாது. உளவியல் பிரச்னைகளுக்குத் தீர்வாக உருவாக்கப்பட்ட கடவுள், நவீன வாழ்வின் புதிய பிரச்னையாக மாறிவிட்டார். அதுதான் கதை.”

“கடவுளும் ஆன்மிகமும் இன்று முன்னைக் காட்டிலும் கூடுதலாக முன்னெடுக்கப்படுகிற விஷயமாக இருக்கிறதே?”

``ஆமாம். மோசமான ஒரு சமூகத்திலிருந்து மிக மோசமான சமூக நிலைமைக்கு மாறியிருக்கிறோம். இதன் உளவியல் பிரச்னைகள் இன்னும் சிக்கலானவை. ஆக, ஆன்மிகமும் கடவுளும் கூடுதலாக முன்னெடுக்கப்படுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆன்மிகத்தில் இன்று அரசியல் வேறு கலந்துவிட்டது அல்லவா, கஷ்டம்தான். எளிய மக்கள் தங்களது தலைமீது வந்து இறங்கப்போகிற அபாயங்கள் குறித்து அறியாமல் கடவுளை நம்பிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது நம்பவைக்கப்படுகிறார்கள். இன்னொரு வகையில் வாழ்க்கையின் அதீத நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க ஒரு கொண்டாட்டமாகவும் மக்கள் கடவுளை நோக்கிப் போகிறார்கள். மரணம் பற்றிய எண்ணத்தின்போதான பாலியல் வேட்கையைப்போல, துன்பத்தின்போது, பிரச்னைகளின்போது கொந்தளிக்கும் உடலுக்கான, மனதிற்கான பாலியல் கொண்டாட்டம்போலத்தான் ஆன்மிகம் இருக்கிறது.”

“உங்கள் கவிதைகளில் பாலியலின் இடம் குறித்து விரிவாகச் சொல்ல முடியுமா?”

“பாலியல் என்பது உயிரியலில் புத்துயிர்ப்பிற்கான முக்கியமான மன எழுச்சி; ஆற்றல்; கொண்டாட்டம். அனைத்துக்கும் ஆதாரம் பாலியல் உணர்ச்சிதான் என்கிறார் ஃப்ராய்ட். ஒழுக்க விதிகளால், சட்டதிட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகம், ஒரு சிறிய பாலியல் மீறலுக்கே பதற்றமடைந்துவிடுகிறது.  ஒரு கூட்டத்தில் இரண்டு பாலியல் வார்த்தைகளை ஒருவர் பேசினாலே, கூட்டம் பதற்றமடைந்துவிடுகிறது அல்லது அவர் தவறாகப் பார்க்கப்படுகிறார்; தாக்கப்படுகிறார். ‘பாலியல் ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று; அந்தரங்கமாக இருக்க வேண்டிய ஒன்று; மறைவாக வெளிப்படுத்த வேண்டிய ஒன்று’ என்பதாகத்தான் இந்தியச் சமூகம் நம்பிக்கைகொண்டிருக்கிறது. இதிலுள்ள ஆழமான ஓர் அரசியல் உண்மை என்னவென்றால், கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படாத காமம், சாதியக் கலப்பை ஏற்படுத்திவிடும்; அகமண முறையைப் பேணும் இந்தியச் சமூகத்தில் ஓர் உடைப்பை ஏற்படுத்திவிடும் என்ற பயம். ஆக, நான் அந்தக் கட்டுப்பாட்டுச் சுவரை அடிக்கடி கவிதையின் வழியாக மீறிப் பார்க்கிறேன். பாலியல் ஓர் அழகியல்பூர்வமான இயல்பு உணர்ச்சி என்பதைக்கூட புரிந்துகொள்ளாத சமூகம் எப்படிப் பண்பட்ட சமூகமாக இருக்க முடியும். வாழ்தலுக்கான மனிதர்களின் ஆற்றலே பாலியல் ரீதியானது எனும்போது கவிதைகளுக்கும் அது அவசியத் தேவை அல்லவா!?”

“நீங்கள் எழுத வந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒரு சூழல் இருந்தது. சிற்றிதழ் பரப்பில் ஒருவர் கவிஞராக அடையாளப்பட அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. இன்றைய இலக்கியச் சூழலை  எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இன்றைய சூழலை, நேர்மறை - எதிர்மறை என இரண்டு அம்சங்களையும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன்.

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

பல்வேறு இழப்புகளுக்கு மத்தியிலும்கூட முன்பெல்லாம் சிறுபத்திரிகைகளில் மட்டுமே எழுத வேண்டும் என்ற ஒரு பிடிவாத மனநிலை எல்லோரிடமும் இருந்தது. இன்று காலமும் மனநிலையும் நிறையவே மாறிவிட்டன. வெகுசனப் பத்திரிகைகளும்கூட தீவிரமான விஷயங்களை மறுக்காமல் பிரசுரிக்கின்றன. சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின் இலக்கியம் மொத்தமாகவே ஜனநாயகமடைந்துவிட்டது. அதேசமயம், சிறுபத்திரிகைகள், இலக்கியத்தின் மீது வைத்திருந்த கறாரான மதிப்பீடுகளை இவை கலைத்துப்போட்டிருக்கின்றன. யாருடைய மதிப்பீட்டையும் அங்கீகாரத்தையும் கோராமல் கவிதைகள் சுயபிரசுரம் செய்யப்படுகின்றன. என்னைக் கேட்டால், நெருக்கடியான ஒரு சமூகத்துக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் ஊடகம் கிடைத்திருக்கிறது, அதை வைத்துக்கொண்டு மொத்த சமூகமும் மொழியால் முணுமுணுக்கிறது. கவிதை வடிவில் சொல்ல எத்தனிக்கிறது. நடக்கட்டுமே. எல்லோரும் எழுதட்டுமே. காலப்போக்கில் எல்லாம் தீவிரமடையும். ஒருவரைக் கவிஞரா இல்லையா என்று முடிவுசெய்யும் அதிகாரத்தை நாம் ஏன் யாருக்கும் தர வேண்டும். எல்லா சூழலிலும் அதற்கே உரிய பிரச்னைகள் எப்போதும் உண்டுதானே?”

“கோட்பாடுகள் சார்ந்து, ரசனை சார்ந்து  பல்வேறு விமர்சனப் போக்குகள்  இருந்த தமிழ்ச் சூழலில், அப்படியான நிகழ்வுகளே இல்லாத நிலையை என்னவாகப் புரிந்துகொள்கிறீர்கள்?”

“இங்கு விமர்சன மரபு முற்றாக முடிந்துவிட்டது. முன்பு பெரும்பாலும் விமர்சனத்தில் இயங்கியவர்கள் கல்விப்புலம் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு இலக்கியத்தில் பயிற்சியும் விருப்பமும் அக்கறையும் இருந்தன. கைலாசபதி முதல் தி.சு.நடராசன், ந.முருகேச பாண்டியன் வரை ஒரு தொடர்ச்சி இருந்தது. இன்றைய கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு இலக்கியத்தில் வாசிப்பும் இல்லை அக்கறையும் இல்லை. இன்றைய இலக்கியத்தில் விமர்சனம் இல்லை - மதிப்புரைகள், வாழ்த்துரைகள், தாக்குதல்கள் மட்டுமே உண்டு. அவையும்கூட குழு அரசியல் சார்ந்ததாக இருக்கின்றன.”

“ உங்களுடனான உரையாடலில் ‘நிறப்பிரிகை’ என்ற பெயரை அடிக்கடி கேட்கமுடியும். ‘நிறப்பிரிகை’ இதழ், அதன் வழியாக உரையாடப்பட்ட பின்நவீனத்துவப் பார்வைகள் உங்களைப் பாதித்தனவா?”

“நிச்சயமாக. மதவாத எதிர்ப்பில், தலித்துகளுக்கும் பெண்களுக்குமான உரையாடலில் முக்கியப் பங்களித்தது நிறப்பிரிகை. பெரியார் குறித்த கூட்டுவிவாதங்களை நடத்தியது.  ‘மாற்றுகள்’ குறித்த ஏராளமான பார்வைகளை முன்வைத்தது. பலரை இலக்கியத்துக்குள்ளும் அரசியல் பார்வைக்கும் கொண்டுசென்றது. இதில் அ.மார்க்ஸுக்கு முக்கியப் பங்கு உண்டு.

என்னளவில் அந்தக் காலகட்டம் மிகக் குழப்பமான ஒன்றும்கூட. இடதுசாரிகள், ‘வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்’, ‘வரலாறு உன்னை விடுதலை செய்யும்’ என்று சொல்லிக்கொண்டிருக்க, பின்நவீனத்துவம் வரலாறு என்பதையே மொத்தமாக நிராகரித்தது. நிறப்பிரிகை வழியாக நான் அறிந்த பின்நவீனத்துவமும் இன்று பல மொழிபெயர்ப்புகளின் வழியாக வாசித்து அறிந்துகொண்டிருக்கும் பின்நவீனத்துவமும் நிறைய வித்தியாசங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும்,  ‘நிறப்பிரிகை’யின் வரவு, பெரியாருக்குப் பின் நிகழ்ந்த முக்கியமான மற்றொரு சீர்திருத்தத் தோற்றுவாய்.”

“நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதிவிட்டீர்கள். ஆனால், இன்னும் கவிதைக்குள் கொண்டுவர முடியாத விஷயங்கள் என்று ஏதேனும் உண்டா?”

``அறிவியல் சார்ந்து நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை உண்டு. இவ்வளவு ஆற்றல்கொண்ட மனிதர்களின் உடலில் கறுப்பு, சிவப்பு, மாநிறம் என்ற குறிப்பிட்ட சில நிறங்களைத் தவிர்த்து வேறு நிறங்களே இல்லையே... ஒரு கடல் இறால் தனது கொம்புகளில் மட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட நிறங்களை வைத்திருக்கிறதே... தாவரங்களுக்கும் பூச்சிகளுக்கும்  விலங்குகளுக்கும் இயற்கை எவ்வளவு வண்ணங்களைத் தந்திருக்கிறது, நமக்கு இல்லையே என்று ஏங்குவேன். இந்த ஏக்கத்தை ஒரு புனைவாக எழுத வேண்டும் என்று நீண்டகாலமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன்.”   

“கவிதையைக் கற்றுக்கொடுக்க - கற்றுக்கொள்ள முடியுமா?”

“கவிதையில் கற்றுத்தரவோ, கற்றுக்கொள்ளவோ ஒன்றுமில்லை.

Becoming - ஆவதுதான், உருவாவதுதான் முக்கியம். பண்புநிலையில் மாற்றம் நிகழ வேண்டும். உதாரணமாகப் பெண்களைச் சமமாக மதிக்க வேண்டும் என்று ஆரம்ப வகுப்பிலேயே கற்றுத்தரப்படுகிறது, நாமும் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், எத்தனை பேர் பண்புரீதியாக உண்மையாகவே உள்ளுக்குள் மாற்றமடைந்திருக்கிறோம்? அப்படித்தான் கவிதையும். கவிஞன் என்பவன் சூழலிலிருந்து உருவாகி வர வேண்டும்.”

“யாரைவிடவும் ஒரு கவிஞனுக்கு அதிகச் சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கிற வகையில் உங்களது சொல் தேடல்கள் எப்படியானவை?”

“சிறு வயதிலேயே எனக்குச் சொல்லின் சுவையை அறிமுகப்படுத்திவிட்டார் எனது அம்மா. அம்மா பாடும் வள்ளலார் பாடல்கள், பள்ளிச் செய்யுள்கள், வாசித்த பாரதியார் கவிதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், சங்க இலக்கியம் என எழுதத் தொடங்கிய நாள்களிலேயே என்னிடம் வளமான சொற்சேகரம் இருந்தது. ஒரு சொல்லுக்கு இணையான நான்கு சொற்களையாவது தெரிந்து வைத்திருந்தேன். இவை தவிர, நண்பர்களுடன் பேசும்போது புதிய சொற்களைப் புகுத்திப் பேசிப் பார்ப்பேன். வாக்கிய அமைப்புகளை வழக்கத்துக்கு மாறாக மாற்றி புதுவகையில் கேள்விகளை முன்வைப்பேன். ஒரு கவிதையில் நான் பயன்படுத்திய சொல்லையோ, வாக்கிய அமைப்பையோ, அதே மாதிரி மீண்டும் வந்துவிடாத வகையில் முடிந்தவரைத் தவிர்ப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் வாசிப்பை நான் கைவிட்டதில்லை.”

“புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?”

“அறிவுரை சொல்வதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. 90-களில் ஒரு பெரிய அலையாக பலரும் எழுத வந்தார்கள். அழுத்தமாக எழுதவும் செய்தார்கள். அவர்களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் பலர் நம்பிக்கை தருகிறார்கள். செல்மா ப்ரியதர்ஷன், லீனா மணிமேகலை, ஸ்ரீஷங்கர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், சம்யுக்தா மாயா, பாலைவன லாந்தர், கனிமொழி.ஜி, ராஜன் ஆத்தியப்பன், எஸ்.சுதந்திரவல்லி எனப் பலர் நம்பிக்கையோடு எழுதிக்கொண்டிருக்கி றார்கள். அவர்களை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். ஞாபகக்குறைவு காரணமாகச் சில பெயர்கள் விடுபடுவதாகவும் உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்வதைத் தவிர, அவர்களுக்குச் சொல்ல விஷயங்கள் ஏதும் இல்லை.”

“இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை!” - யவனிகா ஸ்ரீராம்

“ஆரம்பத்தில் கவிதைக்குள் வரும்போது கவிதை எழுதுவதைத் தன்னம்பிக்கையாக உணர்ந்ததாகச் சொன்னீர்கள். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கடந்த பின் ஒரு கவிஞனாக எப்படி உணர்கிறீர்கள்?”

“பொருளாதாரத் தேவை சார்ந்த எனது தொடர்ச்சியான போராட்டத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். சக மனிதர்களிடத்தில் அதீத அன்பு செய்கிறவனாக, அன்பைப் பெறுகிறவனாக இருக்கிறேன். விரோத, வெறுப்பு மனப்பான்மையே இல்லை என்று சொல்கிற அளவுக்கு அது என்னிலிருந்து  கரைந்துகொண்டிருக்கிறது. உலகின் எல்லா மனிதர்களிடத்திலும் ஏதோ ஓர் ஆற்றல் ஒளிர்வதாக நம்புகிறேன். கவிதையின் வழியே ஒரு முக்கியமான இடத்திற்கு நான் உருமாற்றமடைந்திருப்பதாக நம்புகிறேன்.”

“உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...”

``என் உடன்பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். எல்லோரும் வசதியாக  இருக்கிறார்கள். நான் இரண்டாவதாகப் பிறந்தவன். 21 வயதிலேயே எனக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். எங்கள் சமூகத்தில் இளமையிலேயே  திருமணம் செய்துவைப்பது வழக்கமான ஒன்றுதான். வியாபாரரீதியாக வெளியூர் செல்கிறவன், நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும் என்பதற்கான உளவியல் ஏற்பாடு அது. என் மனைவியும் ஓர் அப்பாவி. இருவருமாக  விளையாட்டுப்போக்கில் வாழ்க்கையை வாழ்ந்தோம். விளையாட்டுத்தனமாகவே குழந்தைகளைப் பெற்றுக்கொண்டோம்.  நான் உரியவகையில் குடும்பப் பொறுப்பை ஏற்று வழிநடத்தியவன் அல்லன். ஆனாலும், பிள்ளைகள் தானாக வளர்ந்தன. ரயில்வே பிளாட்பாரத்தில் கூட்டத்துக்கு நடுவே நின்றால், கூட்டம் தன் போக்கில் நம்மை இழுத்துச் செல்லுமே... அதுபோல சமூகம் தன்போக்கில் பிள்ளைகளை வளர்த்து விட்டது. ஒருவழியாக நான் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் எனத் திரும்பியபோது குடும்பமே முடிந்திருந்தது. (சிரிக்கிறார்) என் பிள்ளைகளுக்குத் திருமணமாகிவிட்டன. பேரன், பேத்திகளுடன் விளையாடுவதில் நாள்கள் மகிழ்ச்சியாகக் கழிகின்றன.”

“உங்களை இடதுசாரிக் கவிஞர் எனக் குறிப்பிடலாமா?”

“நிச்சயமாக நான் இடதுசாரிக் கவிஞனாகத்தான் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருகிறேன். ஆரம்ப காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் மீதான விமர்சனங்களை முன் வைத்திருந்தாலும், நான் என்னை ஓர் இடதுசாரிக் கவிஞனாகவே உணர்கிறேன். அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”

“உங்களுடைய கவிதைகளுக்குக் கிடைத்த முக்கியமான  பாராட்டாக  எதைக் கருதுகிறீர்கள்?”

“ ‘வளைகுடா எண்ணெய் யுத்தங்கள்’ பற்றிய என்னுடைய கவிதையை  ‘சிறப்பாக எழுதப்பட்ட அரசியல் கவிதை’ எனப் பல மேடைகளில், கட்டுரைகளில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதை என் கவிதைகளில் வெளிப்பட்ட அரசியல் கூர் உணர்விற்கான பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்.”

 “யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?”

“கவிதைகளுடனான எனது நெருக்கடியான  வாழ்க்கைத் தருணங்கள்  அத்தனையிலும், ஆதாரமாக நின்று எனக்கு உதவிகள்செய்து பராமரித்த நண்பர் கவிஞர் தேவேந்திர பூபதிக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்ள விரும்புகிறேன். நண்பர்கள்தான் எனது வாழ்வின் ஆதார பலம். எனது எல்லா நண்பர்களையும் இந்நேரம் நினைவில் ஏந்திக்கொள்கிறேன்.”