Published:Updated:

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

ஓவியங்கள்: செந்தில்

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

ருத்தியின் சந்தை மதிப்பை நிர்ணயிக்கும்
புராதன கோயிலொன்றைக்கொண்ட ஊர் அது
பெரும்பாலும்
விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாத நாட்களை
அவர்கள்
திண்ணையில் டிரான்சிஸ்டரோடு கழிப்பது வழக்கம்
கொட்டத்துப் பசுக்கள் கயிறுகளில் திமிறிக்கொண்டிருந்தன
மண் சுவர்களையொட்டிய பந்தலில்
வளரும் புடலைகளின் நுனியில் கற்களைக் கட்டுவது
குடும்பப் பெண்களின் வழக்கம்
தயிர்க் கிழவி வாரமொருமுறை
மச்சுவீட்டில் வசிப்பவர்களுக்கு நெய் ஊற்றுவாள்
கெக்கலித்தபடிக் கோழிகளைத் துரத்தும் சேவல்களைப் பார்த்தபடி
சீருடையில் கல்விக்கூடத்துக்குச் செல்வோம்
தோட்டப் பாத்திகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த
தம்பு அண்ணா
கிணற்று மோட்டார் அறைகளில் இளைஞர்களை ஆற்றுப்படுத்துவார்

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்


இதுபோன்ற நேரங்களில்
வளர்ப்பு நாயான ஜிம்மியுடன் அமர்ந்துகொண்டு
மவுத் ஆர்கன் வாசிப்பது உற்சாகமானது
தெருவோரம் மற்றும் பொட்டல்களெங்கும்
நுனியில்
பீங்கான் பூச்சுக் கிண்ணங்கள் பொருத்திய கழிகள்கொண்டு சிலர்
காய்ந்த பன்றி விட்டைகளைச் சேகரிப்பர்
மாலையில்
ஜின்னிங் பேக்டரி மற்றும் கட்டடப் பணி முடித்த பெற்றோர்கள்
இல்லங்களுக்குத் திரும்புகையில்
கிழிந்த புறநகர் உந்துகள் செல்லும் சாலையோரம்
தவணை ஏஜென்ஸியில்
வால் கிளாக்குகள் மற்றும் ஸ்டீல் கட்டில்களை விசாரித்துக்கொண்டும்
பெட்ரோமாக்ஸ் வெளிச்சப் புரோட்டா கடை வாசல்களில்
பொறுமையின்றியும் மக்கள் புழங்குவார்கள்
இதற்கிடையே
பரணில் இருந்த என் குதிரை தொலைந்திருந்தது
விடுமுறை தினங்களின்போது
தானியங்கள் உலர்த்தும் களத்துக்கருகே
இரட்டை ஜடை பின்னிய குமரிகளின் சைக்கிள் பழக்கம்
அமைதியான மதியநேரங்களை
கரட்டையொட்டிய கிணற்றில் பெருக்கமடைந்திருந்த
தண்ணீர்ப் பாம்புகளின் மீது
சேகரித்திருந்த கற்களை எறிந்தபடி தீர்ப்போம்
வீதியில் ரிங்பால் ஆட்டம் நடக்கும்போது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

என்னையொத்த சிலர்
வீட்டில் சில்லறைத் திருட்டை முடித்துவிட்டு
புழுங்கும் அரவை மில்லின் தவிட்டு அறையில்
ரகசியமாகக் கரமைதுனத்தில் மூழ்கியிருப்பர்
காலநேரமின்றி
முட்கள் நிறைந்த கருவேலம் எரிக்கலை மற்றும்
படர்ந்த நெருஞ்சியினூடாக
விழியுருட்டியபடி தாடைகள் உப்பிய ஓணான்கள்
பாலித்தீன் நரம்புக் கண்ணிகளில் சிக்கிக்கொண்டிருந்தன
இரவில் வீட்டுவாசலில் அமர்ந்துகொண்டு
கதை கேட்டபடி
சூடான சாமச்சோறு உண்பது விருப்பமானது
மழைக்காலங்களில்
பூமி பிளந்து வெளியேறிய காளான்களின் பாதையெங்கும்
கோராங் கிழங்குகளைத் தேடுவோம்
நீண்ட கிருதாவோடு திரிந்த ஸ்டெப்கட்டிங் வாலிபர்களால்
பெண்களும்
சிறு மணிக்குமிழ்களை ஊக்கிட்டுச் செல்லும்
மாணவிகளின் பாவாடை நாதத்தில்
அதிகம் வசீகரிக்கப்பட்டபோது
சிறுவர்களாகிய நாங்கள் வளர்ந்துகொண்டிருந்தோம்
ஊரின் பிரபல மருத்துவர் சக்திவேல்
பாலியல் குறும்புகள் செய்வதாக எங்கும் பேசினர்
அப்போது எம்ப்ளாய்மென்ட் நியூஸ்
அதிகம் விற்பனையாகின என நினைக்கிறேன்
இரவு உறக்கம் குறைந்திருந்த அந்நாள்களில்
பள்ளி முத்திரை பனியன் இல்லாத காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டு

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்


சில வகுப்பு மாணவர்களோடு வெளியே நிறுத்தப்பட்டவர்களில்
நானும் ஒருவன்
சஞ்சாயிகாவில் நாங்கள் சேர்ந்திருக்கவில்லை
பள்ளித் தேர்வில் தோல்வியடைந்த யுவதிகள்
எம்பிராய்டு தையல் வகுப்புக்குச் சென்றனர்
அரும்பும் மீசையைப் பார்த்தபடி சுதந்திரமாகப் புகைக்க
நடிகைகளின் அரைநிர்வாணப் படங்களோடு
சலூன்கள் திறந்தே கிடந்தன
அரசியல் பேசக் கூடாதென அங்கு அறிவுறுத்தப்பட்டது
வெயில் உக்கிரம்கொண்டிருந்த அந்நாள்களில்
டிப்தீரியா நோய் பரவிக்கொண்டிருக்க
வெள்ளை உடுப்பு அணிந்துவந்த சிலர்
குழந்தைகள் சிறுவர்களுக்கு அம்மை குத்திவிட்டு
மதிற்சுவர்களில் முத்திரையிட்டுச் சென்றனர்
எங்களிடம் டெலிபோன்கள் இருந்திருக்கவில்லை
சாவடி முதியவர்களால் புதிய நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

இளநிறத்து அங்கியின் மேல் சிலுவை தொங்கும்
பெரிய செயின்களோடு
பேசியபடிச் செல்லும் நாசூக்கான பெண்களைக் காண முடிந்தது
பொதுஇடங்களில்
உர விளம்பரப் படங்களைக் காட்டிய வேன்கள்
ஊர்களைத் தாண்டிக்கொண்டிருந்தன
சாகசத்துக்கு அலையும் இளந்தாரிகள்
மரப் பீப்பாய் பொருத்திய ஒற்றை மாட்டுவண்டியில் தொற்றிக்கொண்டு
நல்லதண்ணீர் கிணற்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில்
சில வயோதிகர்கள்
மதிய நிலங்களுக்குக் கமலைகளில் நீரிறைத்தனர்
ஊர்ப் பொங்கல் தொடங்கிய ஒரு நாளின் அதிகாலையில்
லேவாதேவிக்கார குடும்பமொன்று
ஊரைவிட்டுத் தொலைந்திருந்ததைக் கேள்விப்பட்டோம்
பெரும்பாலும்
அவசரமாக மாலையில் ஒப்பனை செய்யும் சில பெண்கள்
மார்புக்கச்சையின் பின்புற ஊக்குகளை மாட்ட யத்தனிக்கும்போது
வாலிபர்கள்
சுருட்டிவிடப்பட்ட சட்டையின் கைமடிப்புகளில்

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

தீக்குச்சியோடு சிறு உரசுப் பட்டைகளை ஒளித்துக்கொண்டு
இருங்குச் சோளக் காட்டின் திசைகளில் நுழைந்தனர்
வார இறுதி நாள்களில்
ஜான்ஸி அக்காவின் வாசனையை வளையவந்தேன்
நூலகப் புத்தகங்களில்
கலாப்ரியா என்ற பெண்ணைத் தேடுவதுண்டு
ஊருக்கு வெளியே
புளியமரக் கள்ளுக்கடையை நோட்டமிட ஆர்வம்
நிறக் கற்களுக்கென ஒரு சாரார் அலைந்துகொண்டிருந்தபோது
தங்கத் துணுக்குகளைச் சலித்தெடுக்க
சாக்கடைகளைத் தேடி எங்கிருந்தோ சிலர் வந்தனர்
கிட்டிப்புள் விளையாட்டில் தோற்றபோது நாங்கள்
வெகுதூரத்திலிருந்து பாடியபடி
புழுதியில் ஓடிக்கொண்டிருந்தோம்
ஊர் மந்தையில் கிடாய்ச் சண்டைகள் நடந்தன
அவ்வப்போது
டேப்ரெக்கார்டர்களோடு வரும் பட்டாளத்து மாமாக்கள்
இரண்டு மாதங்கள் தங்குவர்
ஏலச்சீட்டு பிடிக்கும் ஆசிரியர்கள்
மாலை நேரங்களில் வீட்டில் குலுக்கல் நடத்தும்போது
நிலத்தின் பண மதிப்புப் பெருக்கம் கண்டது
ஆங்காங்கே
நீர்த்தேக்கத் தொட்டிகள் முளைத்தன

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

இசை நிகழ்ச்சிகள் நடக்கும் விழாக்காலங்களில்
ஒப்பனை கலைத்த நாடகக்காரர்களைக் காணும்போது
ஒருவித ஏக்க உணர்வு தொற்றியது
ஊரின் செல்வந்தர்
ஆங்கிலக் கல்விக்கூடத்தை அறிமுகப்படுத்தினார்
அவள் எங்கேயோ பதிவுத்திருமணம் செய்துகொண்டாள்
தூர ஒலிபெருக்கியில் அடிக்கடி கேட்க முடிந்த சில பாடல்களால்
இனம்புரியாத தவிப்பில் தனிமையாக உழன்றதுண்டு
எங்களின் ஒயிலாட்டக் கலைஞர்கள் குறைந்துகொண்டிருந்தனர்
வணிக வளாகங்கள் எழும்பியபோது
வாகனங்கள் பெருகத் தொடங்கின
ஊருக்கு வெளியே
சர்க்கரை ஆலையொன்று நிர்மாணிக்கப்பட்டது
ஹாலோபிளாக் சூளைகள், பதனக்கூடங்களோடு
விளைச்சல்கண்ட நிலங்களில் புதிய கட்டுமானங்கள்
சாலை சந்திப்புகள் தெருவோர முக்குகளில்
சோடியம் விளக்குகள் ஏற்றப்பட்டன
தோன்றியதைச் செய்துகொண்டிருந்த அன்றாடத்தின் மேல்
நாங்கள் பணிக்கென நிர்பந்திக்கப்பட்டபோது
எதிர்காலம் குறித்துத் திகைத்திருந்தோம்
குடும்பத் தொழிலைத் தொடர முடியாத பலர்
தூர நகரங்களுக்குச் சென்றனர்
நானோ
தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பிக்கொண்டிருந்தேன்
நீண்டகால இடைவெளிக்குப் பின்பு
பருத்திகள் வளர்ந்து நின்ற ஈர நிலத்தின் நடுவே
முதன்முதலாக எனக்கு உடல் காட்டியவளை
மருத்துவமனையிலிருந்து திரும்பும்போது
மரங்களடர்ந்த சாலையில் சந்திக்க நேர்ந்தது
தொலைதூரத்தில் வேலை செய்கிறான் கணவன் எனவும்
பகிர்ந்துகொண்டாள்
நீண்ட அமைதி நிலவியது
என்னை விசாரித்தாள்
முற்றிலுமாகச் சிதைந்திருந்தேன்
சில தருணங்களை நினைவுகூர்ந்தபடி
பழப்பை ஒன்றை வற்புறுத்தியளித்தபோது கையில் வாங்கினேனா...
சுமை கூடிய கண்கள் தளும்பத் தொடங்கிய
அந்த மாலையின் மேல்
எச்சங்களின் அடர்ந்த நெடியோடு
பறவைகளின் சர்ச்சைகள் தெறித்துக்கொண்டிருந்தன.
(ஸ்ரீநேசனுக்கு)