Published:Updated:

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

Published:Updated:
நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

னது பத்தாவது வயதில் தற்செயலாக வாசித்த குழந்தைகளுக்கான நாவலொன்று ஏற்படுத்திய விநோத அனுபவம் இன்று வரையிலும் தீரவில்லை. புதிய நாவலின் அட்டையைப் பார்த்தவுடன் மனதில் கொப்பளிக்கிற உற்சாகம் அளவற்றது. ஒரு தீவிரமான நாவலை வாசித்து முடித்தவுடன், பித்துப் பிடித்ததுபோல வேறு உலகிற்குள் பயணிக்கத் தொடங்குவதற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை. நாவல் இலக்கியக் கதையாடல் ஏன் இவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கிறது? அண்மையில் கடலூரில் நடைபெற்ற ஆம்பல் இலக்கியக்  கூட்டத்தில் எனக்கு முன்னர் பேசிய நாவலாசிரியர் சு.தமிழ்ச்செல்வி, “ஒவ்வொரு நாவலை எழுதி முடித்தவுடனும், அதிலிருந்து வெளியேறும்போது, நான் வேறு ஆளாக மாறிவிடுகிறேன்” என்றார். அவருடைய கூற்று, வாசகர்களுக்கும் அப்படியே பொருந்தும். நாவல் என்பது காப்பிய வடிவத்தின் நீட்சி என்றாலும் நவீன வாழ்க்கையின் முரண்/இசைவு, நாவல் சித்திரிக்கிற உலகில் நுட்பமாக வெளிப்படுகின்றன. நாவல் இல்லாத உலகினை என்னால் ஒருபோதும் கற்பனை செய்ய இயலவில்லை. நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால், அதிலிருந்து மீள்வது சிரமம். இன்று உலகம் முழுக்க நாவல்கள்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இது ஒரு நாவல் காலம் என்பதில் எனக்கு முழுக்க உடன்பாடு. 1879-ம் ஆண்டு முதலாகத் தமிழில் வெளியான நாவல்களை அணுகினால், அண்மைக்காலத்தில் பிரசுரமாகிற நாவல்கள், ஒப்பீட்டளவில் காத்திரமானவை. இளையர்கள் தங்களுடைய முதல் நாவலாக்கத்திலேயே பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். வேறுபட்ட கதையாடல்களுடன் வெளியாகிற தமிழ் நாவல்கள், உலகத்து நாவல்களுடன் போட்டியிடுகிற வகையில் உள்ளன. அண்மையில் பிரசுரமாகியுள்ள குறிப்பிடத்தக்க நாவல்களில் எனக்குப் பிடித்த ஐந்து நாவல்களைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒருவகையில் சவால்தான். வாசித்து முடித்தவுடன் எனக்குள் மிதக்கிற ஐந்து நாவல்களை வகைமாதிரிகளாக இங்கே குறிப்பிட்டுள்ளேன். இந்தப் பட்டியலின் நீட்சியாக இடம்பெறத்தக்க அளவில், நாவல்கள் இன்னும் கணிசமாக இருக்கின்றன. இணையத்தின் பயன்பாடு காரணமாக உலகமெங்கும் இலக்கியத்தின் செயற்பாடுகளைக் கண்டறிவது இளைஞர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. குடும்பக் கதையாடலுக்கு மாற்றாகப் புதிய போக்குகளுக்கு முக்கியத்துவம் தருகிற பிறமொழி நாவல்களை வாசிக்கிற படைப்பாளரால் தமிழ் நாவலின் போக்குகள்  மாறியுள்ளன.

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன் 

புலம் பெயர்ந்தவர்களின் வலியையும் அவலத்தையும் முன்னிலைப்படுத்தும் புனைவுகள் வெளியான காலகட்டத்தில், சரவணன் சந்திரனின், ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவல் சித்திரிக்கிற உலகம் தமிழுக்கு மிகவும் புதிது. காட்சி ஊடகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சரவணன் சந்திரன் சர்வதேசப் பின்புலத்தில் அரசியலை முன்வைத்து எழுதியுள்ள முதல் நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’, வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெற்காசியாவிலுள்ள தைமூர் நாட்டில் தொழில் தொடங்கி, அந்த நாட்டின்  பொருளியல் வளத்தைச் சுரண்டலாம் எனத் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய கதைசொல்லியின் அனுபவங்கள் தனித்துவமானவை. காலனியாதிக்கத்தின் கீழ் பல்லாண்டுகள் கடுமையாகச் சுரண்டப்பட்ட தைமூரில் மக்களின் வாழ்க்கை மோசமான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்பதற்காகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள், இரையை விழுங்கிட அலைகிற முதலைகளாக நுழைகின்றனர். அடுத்தவேளை உணவிற்காகச் சிரமப்படுகிற மக்கள் நிரம்பிய நாட்டில், முதலீடு என்ற பெயரில் கொடூரமான செயல்கள், வரன்முறையற்று நிகழ்த்தப்படுகின்றன. துரோகம் என்பது இயல்பானதாகக் கருதப்படுகிற சூழலில், எப்படியாவது பணத்தைக் குவித்திட பண முதலைகள் துடிக்கின்றன. மார்க்ஸிய ஆசான் மார்க்ஸ்  ‘மூலதனக் கொடுங்கோன்மை’ எனச் சொன்னது இங்கு முழுக்கப் பொருந்துகிறது. கதைசொல்லி, தைமூரில் செழிப்புடன் இருக்கிற தொழில் முனைவர்களான முதலைகளுடன் கூட்டுச் சேர்ந்து செய்கிற ஒவ்வொரு முயற்சியிலும் தடங்கல் ஏற்படுகிறது. கடல் அட்டைகள், காஃபி லூவாக்,  கூட்டு உழவாரன் பறவைக் கூடு எனத் தேடியலைகிற வாழ்க்கையில், பொருளீட்ட முயலுவதைத் தவிர்த்து, ஒழுங்கு எதுவும் இல்லை. தொழில், முதலீடு என விரிந்திடும் புதிய காலனியாதிக்கத்தில் சக முதலீட்டாளர்களுடனான உறவென்பது நம்பிக்கைத் துரோகம், வஞ்சகம், கொண்டாட்டம், காமம், வெறுப்பு என உருமாறுகிறது. எங்கும் முதலைகள் வாயைப் பிளக்கின்றன. அவற்றின் வாய்களில் வைரச் சுரங்கங்களும் எண்ணெய்க் கிணறுகளும்...

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

நாவலின் களம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தைமூர் எனப் பரந்து வேறுபட்ட சூழல்களில் வேற்று நாட்டவர்களுடனான கதைசொல்லியின் அனுபவங்கள், ஒருவகையில் சாகசம்தான்.

ஆட்சியதிகாரத்தில் இருக்கிற ஆளும்கட்சியின் பினாமிகள், தமிழ்நாட்டில் நடத்துகிற மணல் கொள்ளை, மணல்  மாஃபியாக்களின் சாம்ராஜ்யம் எப்படி எல்லா மட்டங்களிலும் ஊடுருவியுள்ளன என்ற கதைசொல்லல், தமிழக அரசியலுடன் நாவலைப் பொருத்துகிறது. திடீரெனச் சூழலில் ஏற்பட்ட நெருக்கடிக் காரணமாகக் கிளம்பிய கதைசொல்லி, அந்நிய நாட்டில் மூலதனமிட்டுப் பெரும் பணத்தைக் குவித்திட முயலுகிறார். ‘உலகமயமாக்கல் அரசியல்’ தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து, ஏழை நாடுகளின்  பணத்தையும் விழுங்கிடத் துடிப்பதைச் செறிவுடன் சித்திரிக்கின்றன நாவலின் பதிவுகள்.முதலீட்டாளர்களிடையே நிலவுகிற  போட்டி வாழ்க்கையில், துரோகமும் நட்பும் அர்த்தமற்றவை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் துரோகி அல்லது நண்பனாக மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதைக் கதையாடல் உணர்த்துகிறது. தனியார்மயம், தாராளமயம், கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் என முன்னிறுத்தி, இந்திய நடுவண் அரசில் அதிகாரம் செலுத்துகிற பி.ஜே.பி அரசின் உலகமயமாக்கல் போக்கு, சமூகப் பண்பாட்டுத்தளத்தில் எத்தகைய மனித மதிப்பீட்டு வீழ்ச்சிகளை உருவாக்கும் என்பதை அறிந்திட ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவல், முக்கியமான ஆவணம். சிறிய முதலீட்டாளர்கள் முதலைகளாக மாறிப் பேராசையில் தவிக்கும்போது, பன்னாட்டுப் பெரிய முதலைகளின் நாடு கடந்த கொள்ளை வியாபாரம் சூடு பிடிக்கும். உலகமயமாக்கல் என்ற சொல்லுக்குப் பின்னால் பொதிந்திருக்கிற அரசியல், சுரண்டல், கொள்ளை, பண்பாட்டுச் சீரழிவு குறித்த பேச்சுகளை உருவாக்குகிற ஐந்து முதலைகளின் கதை, தமிழில் வெளியாகியுள்ள முதல் சர்வதேச அரசியல் நாவல்.

குன்னிமுத்து - குமாரசெல்வா

புதிய இசங்கள் செல்வாக்குச் செலுத்துகிற சூழலில், யதார்த்தமான கதைசொல்லல் இன்று வலுவிழந்துகொண்டிருக்கிறது. புனைவின் வழியாகப் படைப்பாளர் கட்டமைக்கிற விநோத உலகிற்குள் பயணிப்பது வாசிப்பைப் புரட்டிப் போடுகிறது. இத்தகுச் சூழலில் குமரி மாவட்டத்தில் விளவங்கோடு பகுதியின் வட்டார மொழியில் குமாரசெல்வா எழுதியுள்ள ‘குன்னிமுத்து’ நாவலின் யதார்த்தக் கதையாடல், மொழியாளுகை காரணமாகத் தனித்து விளங்குகிறது. பல்லாண்டுகளாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த குமாரசெல்வாவின் முதல் நாவலான ‘குன்னி முத்து’, சமூகம் இதுவரை புனிதம் என்ற பெயரில் கட்டமைத்துள்ள புனிதங்களைப் பகடி செய்கிறது. குமரி மாவட்டத்தில் வலுவாக நிலவுகிற மத அடிப்படைவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கிடும் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள நாவல், நடப்புச் சமூகத்தின் மீதான கடுமையான விமர்சனமுமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

மதங்கள் தனிமனிதனின் வாழ்க்கையில் ஊடுருவி ஏற்படுத்துகிற சேதங்கள் காலந்தோறும் தொடர்கின்றன. சகமனிதனை மத அடிப்படையில் ஒதுக்கி, தன்னையும் ஒதுக்கிக்கொள்கிற மனப்பான்மையை மக்களிடையே உருவாக்குகிற நிறுவனமாகிப்போன மதங்கள், எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்பதை நாவல் விவரித்துள்ளது.

நாட்டார் சமய மரபினைப் புறக்கணித்துவிட்டு, வைதீக மதம் முன்னிறுத்துகிற கடவுளை வழிபடுகிற ஒற்றைத்தன்மை இன்று வலியுறுத்தப்படுகிறது. பத்ரகாளியம்மன் கோயில் பூசாரியாகப் பரம்பரை அடிப்படையில் வந்த தங்க நாடனின் உரிமை மறுக்கப்பட்டு, பிராமணரான ‘போற்றி’, பூசாரியாக நியமிக்கப்படுகிறார். இந்துத்துவா என்ற அரசியல் அதிகாரத்துடன் நாட்டார் சமயத்தை ஒன்றிணைப்பது நடந்தேறுகிறது. இன்னொருபுறம் டயோசிஸ் அமைப்பினால் நடத்தப்படுகிற கிறிஸ்தவத் திருச்சபையில் நடைபெறும் அதிகாரப் போட்டி உக்கிரமாக இருக்கிறது. அன்றாடம் யாரையாவது ஏமாற்றிப் பிழைக்கிற நடராஜன், கிறிஸ்தவனாக மதம் மாறி, சர்ச்சில் செயலராகிச் சுரண்டுவது நடைபெறுகிறது. ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த பொன்னையா கம்பவுண்டர், புதிதாகப் பெந்தகோஸ் சபை ஆரம்பித்து, ஏசுவின் பெயரால் விசுவாசிகளைச் சுரண்டுகிறார். திருமண வீட்டில் மதத்தின் பெயரால், பெந்தகோஸ் சபையினர் செய்யும் அபத்தங்களும் அதற்கு ஊராரின் எதிர்வினைகளும் நகைச்சுவையின் உச்சம். எந்தவொரு மதம் சார்ந்தும் தனிப்பட்ட அபிப்ராயம் எதையும் முன்வைக்காமல், சம்பவங்கள், பாத்திரங்கள் மூலம் மதங்களின் இருப்பினை விவாதத்திற்குள்ளாக்குவது குமாரசெல்வாவின் தனித்துவம். யதார்த்த வாழ்க்கையில் மதங்கள் எப்படியெல்லாம் மக்களைப் பாடாய்ப்படுத்துகின்றன என்பதைப் பகடியான மொழியில் சொல்வது, இன்றைய மத அடிப்படைவாத அரசியல் ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் மிகத் தேவையான ஒன்று.
வயதுக்கு வராத பெண்ணைக் குறிக்கிற குமரி வட்டாரச் சொல்லால் அழைக்கப்படுகிற ‘இருளி’ என்பவளை முன்வைத்து விரிந்திடும் நாவலில், பெண்ணுடல் அரசியல் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. ஆண்-பெண் உறவு பற்றிய கேள்விகள், கதையாடலில் வெளிப்பட்டுள்ளன.  குன்னிமுத்து விதை ஒருவகையில் இருளியுடன் தொடர்புடைய தாகிறது. செடியின் அடியில் சிந்திக்கிடக்கிற குன்னிமுத்துகளின் சிவந்த வண்ணம், இருளிக்கு மாயக் கவர்ச்சியைத் தருகிறது. கிராமத்தினரின் கேலிக்குள்ளானபோதும், அவளது மனம் ப்ரியத்தினால் ஈரத்துடன் ததும்புகிறது; அன்புக்காக ஏங்குகிறது. பொறுக்கியான வண்டவாளத்தின் மீது இருளிக்கு ஏற்பட்ட விருப்பம், குடும்ப வாழ்க்கையில் அடி, உதை, தந்தையின் கொலை, கணவனான வண்டவாளத்தின் துர்மரணம் என அவளது வாழ்க்கையில் எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை. இந்நிலையில் கணவனுக்கு இன்னொரு பெண் மூலம் பிறந்த சுந்தரியை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி வளர்த்து ஆளாக்குகிறாள். வயதுக்கு வராத பெண்ணை உடல்ரீதியில் இருளி என ஒதுக்குகிற அரசியலைப் பேசுகிற நாவல், அவளைச் சக உயிராகக்கூட மதிக்காத சமூகச்சூழல் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.

மனிதனுக்கு ஆறுதல் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட மதமும், குடும்பமும்  அவனின் இருப்புக்கு எதிராக மாறியுள்ளதைச் சுவராசியமான கதையாடலின்மூலம், ‘இப்படியெல்லாம் நடக்கிறபோது என்ன செய்ய?’ என வெள்ளந்தியாகக் கேட்கிறார் குமாரசெல்வா.

ஆதிரை - சயந்தன்

தமிழில் நாவல்கள், தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கை, மலேஷியா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் பிரசுரமாகின்றன. குறிப்பாக ஈழப் போராட்டம்  வீழ்ச்சியடைந்த பின்னர், இயக்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பிரச்னைகளை மையமிட்ட கதையாடல்கள் நாவல்களாகியுள்ளன. எழுபதுகளில் சிங்களக் காடையர்கள், மலையகத் தமிழர்கள்மீது நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களிலிருந்து தொடங்கும் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்குப் பின்னான தமிழரின் வாழ்க்கைக் குறித்தும் கதைக்கிறது. வன்னியின் பூர்விகக் குடியினர், தமிழகத்திலிருந்து குடியேறிய மலையகத் தமிழர்கள், போரினால் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தார் என நாவலின் கதைக்களன் விரிந்துள்ளது.

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

‘ஈழத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த, பொருளியல்-சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களும், மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வன்னியில் குடியேறிய மக்களும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடியவர்கள்’ என்ற சயந்தனின் கணிப்பு, முக்கியமானது. நாவல் முழுக்க, யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் வசதியானவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறுவதும், விளிம்புநிலையினர் ராணுவத்தின் ஷெல்லடிகளுக்கிடையில் வாழ்வதும் நடைபெறுகிறது. எளிய மனிதர்கள்மீது போரினால் உருவான வன்முறை இடைவிடாமல் துரத்துகிறது. மனிதர்களை துர்க்கனவுகள் விரட்டுவது போல, அரசியலின் சூழ்ச்சியினால் ரத்தமும் சதையுமாக எளிய மக்கள் குண்டுகளினால் பிய்த்தெறியப்படும் கோரம் தொடர்கிறது.

ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராட முன்வருகிற போராளி, ஒருநிலையில் மக்களைவிடத் தன்னை மேன்மையான வனாகக் கருதுவதும், மக்கள்மீது அதிகாரம் செய்கிறவனாக மாறுவதும் என இயக்கங்களில் நடைபெறுவதைச் சயந்தன் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளார். அமைப்பின் தலைமையின் மீதான விமர்சனமோ, அமைப்புச் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்பதோ துரோகமாகக் கருதப்படுவது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லா இயக்கங்களிலும் நடைமுறையில் இருந்தது. ஆனால், மக்கள் எல்லாவற்றையும் குறித்துக் கடுமையான விமர்சனங்களை மனதுக்குள் வைத்திருந்தனர் என்பதை  ‘ஆதிரை’ நாவல் பதிவாக்கியுள்ளது. இருண்ட வானத்தில் ஓளிர்ந்திடும் விண்மீனான ஆதிரை என்றும் ஈர்க்கும் இயல்புடையது. அம்பாறையில் ‘ஜோன் தமிழரசி’யாகப் பிறந்து, இயக்கத்தில்  ‘ஆதிரை’யாக மாறி, இறுதியில் போர்க்களத்தில் தன்னையே பலியாகத் தந்த பெண் போராளியின் இழப்பு என்பது வெறுமனே கதைதானா?

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் வன்முறையை எதிர்த்த போராட்டங்கள் ஒய்ந்த நிலையில், தமிழர்கள், அதிகாரத்தில் இருக்கிற ஆட்சியாளர்களுடன் மட்டுமின்றி, பெரும்பான்மையினரான சிங்களவர்களுடன் இயைந்துபோக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தோல்வி ஏற்படுத்திய வெறுமையும் கசப்பும் மனதுக்குள் ததும்பினாலும், ஈழத் தமிழர்கள் அடுத்தகட்ட வாழ்க்கையை வாழ வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஈழப் போருக்காக இன்னுயிரைத் தந்து போராடிய இயக்கப் போராளிகள் அனுபவித்த துயரங்களும், ஈழத் தமிழரின் இழப்புகளும் காற்றில் கரைந்துபோகிற விஷயங்கள் அல்ல. இன்னும் நூறாண்டுகள் கழித்துப் பிறக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு, ஈழப் போர் குறித்த அறிமுகமாகச் சயந்தனின் ‘ஆதிரை’ போன்ற நாவல்கள்தான் இருக்கும்.

இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்புலத்தில் எழுதப்படுகிற நாவலின் வழியாகப் படைப்பாளி கட்டமைத்திட விழைகிற அரசியல் முக்கியமானது. அண்மைக்காலத்தில் வரலாற்றுச் சம்பவங்களை முன்வைத்து எழுதப்படுகிற நாவல்கள், தமிழில் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. ‘நெடுங்குருதி’, ‘யாமம்,’  ‘துயில்’ எனத் தமிழக வரலாற்றின் பக்கங்களில் பயணித்த எஸ்.ராமகிருஷ்ணன், வட இந்தியாவில் அரசாண்ட இஸ்லாமிய மன்னரான ஔரங்கசீப் பற்றி எழுதியுள்ள ‘இடக்கை’ நாவல், நீதியை மையமாகக்கொண்டு விரிந்துள்ளது. அதிகாரத்தின் உச்சியில் இருந்த மன்னரான ஔரங்கசீப் பற்றியும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த விளிம்பு நிலையினர் பற்றியும் எஸ்.ரா. எழுதியுள்ள ‘இடக்கை’ நாவல், பல பெருமூச்சுகளின் தொகுப்பாகும்.

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

மனித உடலில் சமமான இடம் பெற்றுள்ள இடது கையைத் தீட்டாகவும் விலக்காகவும் கருதுகிற வழக்கம் இந்தியாவில் பல்லாண்டுகளாக நிலவி வருகிறது. வலது  கை என்பது மதிப்பிற்கு உரியதாகப் போற்றப்படுகிற சூழலில், இடது கையினால் ஒரு பொருளைத் தந்தால் கௌரவமற்றதாகக் கருதப்படுவதை, அப்படியே மனிதர்களுக்கும் வைதீக இந்து மதம் பொருத்துகிறது. தீண்டப்படாத சாதியினராகக் கருதப்படுகிற ‘சாமர்’ இனத்தவரான தூமகேது, நாவலின் மையப் பாத்திரம். அவருடைய சாதியினர் வலது கையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். பிஷாட மன்னனுக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைத் தூமகேது மீது சுமத்தி, விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைக்கின்றனர். சத்கேர் நாட்டை ஆண்ட சிற்றரசனான பிஷாடனின் கொடுங்கோல் ஆட்சியில் வக்கிரமும் வன்முறையும் எங்கும் பரவியிருந்தன. எளியவர்கள் தங்களுக்கான  நீதியைத் தேடி அலைந்தாலும் விடிவு என்பது கேள்விக்குறிதான். இந்நிலைமை இன்றளவும் தொடர்கிறது என்பதை நாவல் சுட்டுகிறது.

நாவலின் தொடக்கத்தில் 89-வது வயதில் மரணத்தின் நிழலில் வசித்த ஔரங்கசீப்பின் இறுதி நாள்கள், வெறுமையும் கசப்பும் ததும்பிடச் சொல்லப்பட்டுள்ளன. அரியணையைக் கைப்பற்றிட சகோதரர்களைக் கொன்றது முதலாக ஔரங்கசீப்பின் அதிகாரம் போர்களின் மூலம் ரத்தக்கவிச்சியுடன் எங்கும் பரவியது. அளவுக்கு அதிகமான அதிகாரம் தந்த போதையினால் கொன்று குவித்த மனிதர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கேது? யாரையும் நம்ப முடியாமல், நெருங்கிய உறவினர்களையும் அண்டவிடாமல், அரவாணியும் மஹல்தாருமான அஜ்வா பேகத்தின் உபசரிப்பில் வாழ்ந்திடும் ஔரங்கசீப்பின் இறுதி நாள்கள் வலியுடன் கண்ணீரில் கரைகின்றன. அவரின் இறப்பிற்குப் பின்னர் மாறுகிற அரசியல் காட்சிகளின் காரணமாக அரவாணியான அஜ்வா - குற்றங்கள் சுமத்தப்பட்டு; சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார்.

வரலாற்றின் மறுபக்கத்தில் அதிகாரத்தின் ஆதிக்கத்தினால் குரலற்றவர்கள் பட்ட துயரங்கள்  காலந்தோறும் காற்றில் மிதக்கின்றன.  அதிகாரத்தின் பிடியில் சிக்கி, உரிமை இழந்த ஒடுக்கப்பட்டவர் களுக்கான நீதி, எப்போதும் கேள்விக்குறியாவதை அழுத்தமாகப் பேசுகிறது நாவல். வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டுள்ள நாவலான  ‘இடக்கை’, ஒரு காலகட்டத்தின் பதிவாகும்.

புதிய எக்ஸைல்  -  சாரு நிவேதிதா

இரண்டாயிரம் ஆண்டு பாரம்பர்யமும் தொன்மையும் மிக்க தமிழர் வாழ்க்கையில், காலந்தோறும்

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

பதிவாகியுள்ள இலக்கியப் பின்புலத்தில், சமகாலம் குறித்த விமர்சனமான சாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ நாவல், காத்திரமானது.  தன்வரலாற்றுப் பாணியில் சொல்லப்பட்டுள்ள நாவலின் மையமற்றத் தன்மை, வாசிப்பில் இருப்பினைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. நாவலில் இடம்பெற்றுள்ள கிளைக் கதைகளும் துணைக் கதைகளும் காப்பிய மரபிலான கதைசொல்லல் முறையில் அமைந்துள்ளன. கதைசொல்லி பாத்திரத்திலிருந்து விலகி, இதில் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பது நாவலைக் கேளிக்கையாகத் துய்த்து மயங்குவதிலிருந்து தடுக்கிறது. தமிழ்மொழி உருவாக்கிய அரசியல் பின்புலத்திலான  நிலவெளியில் தொல்காப்பியம், சங்கக்கவிதை தொடங்கி பக்தி மரபு, சித்தர் மரபின் வழியாகச் சித்திரிக்கிற சம்பவங்கள், நாவலுக்குக் காவிய மரபிலான தன்மையினை அளிக்கின்றன. நெடிய மரபில் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் அணுகியுள்ள சாருவின் நாவல்,  தமிழர்களின் கதையாடலுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது.

நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

சாருவின் பண்டைய இலக்கியத் தேடல் வியப்பளிக்கிறது. தொல்காப்பியர் ‘மரபியல் இயலி’ல் குறிப்பிட்டுள்ள உயிரினங்கள் பற்றிய விவரிப்பை நவீன அறிவியலுடன் ஒப்பிட்டு சாரு அடைந்திருக்கிற பிரமிப்பு, வாசகரையும் தொற்றுகிறது. சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள், பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கபிலர் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 பூக்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. கொன்றை மலரின் அழகில் ஈடுபட்ட கதைசொல்லி, ‘மடவமன்ற தடவுநிலைக் கொன்றை’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார். குறுந்தொகைப் பாடல்களைக் கதைப் பிரதியில் தந்துள்ள சாருவின் நோக்கம், நவீன வாசகருக்குத் தமிழ் அடையாளத்தை அறிமுகப்படுத்துவதுதான் என்று நினைக்கிறேன்.

‘புதிய எக்ஸைல்’ பிரதியானது, வாசிப்பின் வழியாக ஒற்றையாக நுழைகிற வாசகரின் மனநிலையைச் சிதலமாக்கி, வேறுபட்ட மனிதர்களாக உருமாற்றுகிற தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. கதைசொல்லி முடிவற்று விவரிக்கிற கதைகள், ஒருநிலையில் வாசகர் தனக்கான பிரதிகளை உருவாக்குவதன்மூலம் வலிகள், கசப்புகள், கொண்டாட்டம் ததும்பிய உலகில் பயணிக்கிறார். எங்கும் கதைகள் நிரம்பி வழிந்திடும் சூழலை உருவாக்குவதில் சாருவின் எழுத்து, தனித்துவமானது. புதிய எக்ஸைல் நாவலை வாசிக்கிற இளம் வாசகர்கள் இது என்ன கோளாறு என்று யோசிப்பார்கள். கட்டுரைக்கும் புனைகதைக்கும் இடையிலான வேறுபாடு தகர்ந்து, வேறுபட்ட அனுபவங்களைக் குவிக்கிற சாருவின் எழுத்து, புதிய வகைப்பட்ட வாசிப்பைக் கோருகிறது தமிழரின் வாழ்க்கை குறித்த பன்முகப் பதிவாக விளங்குகிற புதிய எக்ஸைல் நாவல், கட்டற்ற சம்பவங்களின் பதிவாக விவரிக்கிற உலகம், கொலாஜ் பாணியில் விரிந்துள்ளது. அகத்தியர் தொடங்கி இன்றைய இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலியல் உரையாடல்கள் வரை அழுத்தமான கேள்விகளை வாசிப்பில் எழுப்புகிற கதையாடல், சமகாலத்தின் விமர்சனம். கதைசொல்லியாகச் சாரு நாவல் பிரதியின் வழியாக எழுப்பியுள்ள கேள்விகள், தமிழ்ச் சமூகம் குறித்த காத்திரமான  விமர்சனங்கள், பதிவுகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism