Published:Updated:

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்
பிரீமியம் ஸ்டோரி
சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

Published:Updated:
சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்
பிரீமியம் ஸ்டோரி
சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

னித ராசியின் தாய்மொழி கவிதை. அது மொழிகளுக்கு அப்பாலிருக்கும் மொழி. அது எல்லோருக்கும் சொந்தமானதுதான். மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட என்று சொல்லவே விரும்புகிறேன். ஏனெனில், கவிதையினூடாகப் பேசுவது மனிதர்கள் மட்டுமல்ல. அசைவதும் அசையாததுமான பிரபஞ்சம் முழுவதும்தான்.

- சச்சிதானந்தன்

கேரள சாகித்ய அகாடமியின் ‘எழுத்தச்சன் விருது’ இந்த ஆண்டு கவிஞர் சச்சிதானந்தனுக்கு வழங்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்த விருது இது. மலையாளத்தின் பிதாவான துஞ்சத்து எழுத்தச்சன் பெயரால் வழங்கப்படுகிறது என்பதால் இலக்கிய மதிப்பும், பரிசுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் அளிக்கப்படுவதால் பண மதிப்பும் விருதை உயரியதாக்குகின்றன. சமகால மலையாள இலக்கியத்தில் இன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களில் இந்த உயர்வுக்கு முற்றிலும் தகுதியான இலக்கிய ஆளுமை சச்சிதானந்தனே. அவர் அளவுக்கு மலையாளக் கவிதையில் தொடர்ந்து இயங்கியவர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். கால அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது கவிதைப் பங்களிப்பு மிக அதிகமானது; விரிவானது; வித்தியாசமானது.

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

சென்னையிலிருந்து வெளிவந்த ‘ஜெயகேரளம்’ என்ற மாத இதழில் அவரது கவிதை அச்சிலேற்றப்பட்டபோது சச்சிதானந்தனுக்கு வயது 16. அன்று தொடங்கிய கவிதைச் சுரப்பு தற்போதைய 72-ம் வயதிலும் தூர்ந்துவிடவில்லை. இந்த உயிரோட்டமே அவரை மலையாளக் கவிதையில் நிகரற்றவராக ஆக்குகிறது; அவர் பெறவிருக்கும் எழுத்தச்சன் விருதுக்கு உபரி மதிப்பையும் அளிக்கிறது. 1993-லிருந்து வழங்கப்பட்டுவரும் எழுத்தச்சன் விருதைப் பெறும் 25-வது இலக்கியவாதி சச்சிதானந்தன். அவருக்கு முன்னராக விருது பெற்றவர்களில் பெரும்பான்மையினர் தமது சாதனைகளை நிகழ்த்தி ஓய்ந்த பின்னரோ மறைந்த பின்னரோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கவிதை உலகுக்குப் புதிதாக அறிமுகமான இளைஞனுடன் போட்டியிட்டுக்கொண்டு இன்றும் கவிதைகள் எழுதுகிறார் சச்சிதானந்தன். இந்த மாளா இளமைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவும் எழுத்தச்சன் விருதைக் குறிப்பிடலாம். எழுதத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தான் வாழும் காலத்துடன் ஒரு கவிஞன் மேற்கொள்ளும் நிரந்தர உரையாடல் இது. சச்சிதானந்தன் ஓயாமல் காலத்தைக் கேள்விக்குட்படுத்துகிறார். அலுக்காமல் காலத்தின் கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுகிறார். இதன் மூலம் மலையாளக் கவிதையில் என்றும் நிகழ்காலத்தைச் சேர்ந்தவராகவே இருக்கிறார்.

மலையாள இலக்கியத்தில் நவீனத்துவப் போக்கின் (மலையாளத்தில் ஆதுனிகத) அலைகள் எழத் தொடங்கிய 1960-களை ஒட்டி எழுத வந்தவர் சச்சிதானந்தன். அவரது ஆரம்பகாலக் கவிதைகளில், அன்று நடைமுறையிலிருந்த கற்பனாவாதக் கவிதைகளின் நிழல் படந்திருந்தது. ஆனால், நவீனத்துவ முயற்சிகள் வலுப்பெற ஆரம்பித்த தருணத்தில் சச்சிதானந்தன் தனித்துவமான கவிதை மொழியை வசப்படுத்திக்கொண்டார். அவரது கவிதைமொழியும் நவீனத்துவத்தின் பாகமாக மாறியது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கவிதையுலகில் தீவிரமாக இயங்கியவர்களான கே.அய்யப்பப் பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், ஆற்றூர் ரவிவர்மா, கே.ஜி.சங்கரப் பிள்ளை இவர்களைத் தொடர்ந்து எழுதவந்த  ஏ.அய்யப்பன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆகியோரும் அடங்கிய தலைமுறை, மலையாள நவீனத்துவக் கவிதைக்கு வாசகக் கவனத்தையும் விமர்சக ஏற்பையும் உருவாக்கியது.  பெரும்பாலும் ஆகிவந்த கவிதைப்பொருள்களுடனும் பழகித் தேய்ந்த சொற்களுடனும் சொல்லப்பட்டு வந்த மலையாளக் கவிதையைப் புதிய உணர்வின் வெளிப்பாடாக நவீனத்துவக் கவிதை மாற்றியது. இந்த மாற்றத்தில் பெரும் பங்காற்றியவர் சச்சிதானந்தன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

எல்லாக் காலங்களிலும் அந்தந்தக் காலத்தின் கருத்தோட்டங்கள் கவிதையைப் பாதிக்கின்றன. ஆனால், அவை வெறும் கருத்துகளின் வடிவமாக வெளிப்பட்டால் மட்டும் போதாது. அனுபவமாகவும், பார்வையாகவும், புதிய உருவத்துடனும், புதிய நடையுடனும் வெளிப்பட வேண்டும். இதை நவீனத்துவத் தலைமுறை சாத்தியமாக்கியது. நவீனத்துவத் தலைமுறை செயல்பட்ட காலத்தில் இருத்தலியமும் மார்க்ஸியமும் நிகழ்காலச் சிந்தனையின் இரு கருத்தாக்கங்களாக இருந்தன. ஆனால், அந்தக் கருத்தாக்கங்களின் சூத்திரங்களை அல்ல; அவை சார்ந்த வாழ்வியல் அனுபவங்களையே நவீனத் தலைமுறை கவிதையாக்கியது. கவிஞர்கள் பார்த்ததும் அனுபவித்ததுமானவையே கவிதைகளாயின. சரியாகச் சொன்னால் அனுபவமே கவிதை - கருத்தாக்கங்கள் அதை அணுகும் வழி என்பதை நவீனத்துவக் கவிதை நிறுவியது. சச்சிதானந்தன் இதைத் தனது கவிதைகளில் தொடர்ந்து முன்வைத்தார்.

சச்சிதானந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘அஞ்சு சூரியன்’ (ஐந்து சூரியன்) 1971-ம் ஆண்டு வெளிவந்தது. `சமுத்ரங்ஙள்க்கு மாத்ரமல்ல’ (சமுத்திரங்களுக்கு மட்டுமல்ல) 2017-ல் வெளிவந்திருக்கும் தொகுப்பு. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாகக் கவிஞராகத் தொடர்ந்து இயங்கிவருகிறார். இந்த இயக்கம் அவரது கவிதையுலகை மிக விரிவானதாக ஆக்கியிருக்கிறது. அவரது கவிதைப் பங்களிப்பு எண்ணிக்கையில் பரந்தது; வகைமைகளில் வேறுபட்டது. சரியாகச் சொன்னால் மலையாளக் கவிஞர்களில், இன்னும் அழுத்தமாகச் சொன்னால் இந்தியக் கவிஞர்களிலேயே இந்த அளவு பங்களிப்புச் செய்த கவிஞர்கள் இல்லை. அவரது பார்வையும் காலத்தின் வற்புறுத்தலுக்கு ஏற்பத் தொடர்ந்து மாற்றம் கண்டிருக்கிறது. ஆரம்பகாலக் கவிதைகள் ஓர் இருத்தலியவாதியின் பார்வையைக் கொண்டவை. எழுபது, எண்பதுகளை ஒட்டிய கவிதைகள் மார்க்ஸிய நோக்கில் உருவானவை. அதன் பின்னரான கவிதைகள் ஓர் இடதுசாரி சுதந்திர மனப்போக்கை வெளிப்படுத்துபவை.

பத்தாண்டுகளுக்கு முன்பு, சச்சிதானந்தன் அதுவரை எழுதிய கவிதைகளின் பெருந்தொகுப்பு மூன்று நூல்களாக வெளிவந்தன. தொகுத்தவர் ரிசியோ ராஜ். அகம், புறம், மொழி என்று அவை பகுக்கப்பட்டன. அவரது கவிதை உலகைத் துல்லியமாக அடையாளப்படுத்தும் பகுப்பு அது. அவரது மொத்தக் கவிதைகளையும் இந்த மூன்று பகுப்பில் அடக்கிவிடலாம். தனக்கு நேர்ந்த எல்லா அனுபவங்களையும் கவிதையனுபவமாக மாற்றிக்கொண்டவர் என்பதை இந்தப் பகுப்பு உறுதிப்படுத்துகிறது. ‘பிஞ்சு மகளின் கொதிக்கும் காய்ச்சல் படுக்கையில் அமர்ந்திருப்பதும்’, தனது ‘சரீரம் ஒரு நகரம்’ என்று உணர்வதும், ‘நினைவில் காடுள்ள மிருகமாக’ உருமாறுவதும், ‘எழுத்தச்சானின் பனையோலையாகப் படபடப்பதும்’, ‘பாட்டியின் பைத்தியத்தைத் தாய்வழி பெற்றவனாக’ தன்னை இனங்காண்பதும், மாயகோவ்ஸ்கியின் தற்கொலைக்குச் சாட்சியாவதும், காந்தியைக் கவிதையாக வாசிப்பதும், எம்.டி.ராமநாதனின் இசையாகப் பிரவாகம் எடுப்பதும், வீட்டை முதுகில் சுமந்து தீர்த்த யாத்திரை செய்வதும், தடைவிதிக்கப்பட்ட இடத்தில் தனித்து நிற்பதைப் போராட்டமாகப் பிரகடனம் செய்வதுமான எல்லா அக, புற நிலைகளிலும் சச்சிதானந்தனின் கவிதை செயலாற்றுகிறது. மலையாளி வாழ்வனுபவங்களிலிருந்து வேர்கொண்டது எனினும் அதைக் கடந்து  சர்வலோகத்திலும் கிளை விரித்துப் படர்ந்திருப்பவை அவரது கவிதைகள். சச்சிதானந்தனின் கவிதைகளில் இடம்பெறும் கேரள அனுபவம், உலக அனுபவமாவதும் உலகின் ஏதோ மூலையில் நிகழும் அனுபவம், மலையாளியின் அனுபவமாவதும் அவரது கவிதைகளின் இயல்புகளில் ஒன்று. அதனாலேயே சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூதாவும் ஜெர்மானியரான பெர்டோல்ட் ப்ரக்டும் மலையாளக் கவிஞர்களாகிறார்கள். எழுத்தச்சனும், அக்கமகாதேவியும், ஆண்டாளும் உலகப் பிரஜைகளாக மாறுகிறார்கள். அவர் கவிதைகளில் பெருகி ஓடும் பெரியாறும், காவிரியும், கங்கையும், மிசிசிபியும், டான்யூப்பும், மஞ்சளாறும், டான் நதியும் ஓரே நீரியல்பு கொண்டவை. அதுபோலவே அவரது கவிதைகளும்.

தனது கவிதைகள் மூலமாக மட்டுமல்ல இந்திய, உலக மொழிக் கவிதைகள் வாயிலாகவும் மலையாளக் கவிதையை வளப்படுத்தியவர் சச்சிதானந்தன். சொந்தக் கவிதைகள் வெளிவரத் தொடங்கிய அதே காலப் பகுதியிலிருந்தே அந்நிய மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டார். ஏறத்தாழ உலக நாடுகளின் சிறந்த கவிஞர்கள் பலரும் அவர் வாயிலாகவே மலையாளத்துக்கு அறிமுகமானார்கள். நஸ்ருல் இஸ்லாம், ஹோசிமின், பாப்லோ நெரூதா, செஸார் வயெஹோ, பெர்டோல்ட் ப்ரக்ட் முதல் 2011-ல் கவிதைக்காக நோபல் பரிசு பெற்ற தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் உட்பட அறியப்பட்டவர்களும் அறியப்படா தவர்களுமான பல கவிஞர்களைத் தனது மொழிபெயர்ப்புகள் வழியே மலையாள வாசகர்களிடம் நெருங்கச் செய்தார். ஸ்ரீகாந்தவர்மா முதலான மிக முக்கியமான இந்திய மொழிக் கவிஞர்கள் சிலரையும் அவர்தான் மலையாளத்துக்கு அழைத்து வந்தார். அயல்மொழிப் பெண் கவிஞர்கள், இந்தியப் பெண் கவிஞர்கள் ஆகியோரது கவிதைகள் சச்சிதானந்தனாலே அறிமுகம் பெற்றனர். சச்சிதானந்தனின் கவிதைகள் ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்டவை. அவரது மொழியாக்கங்களும் ஏறத்தாழ அதே அளவு பக்கங்களில் விரிந்திருப்பவை. உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளிருந்தும் அவர் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த கவிதைகள் மலையாளக் கவிதையைச் செழுமைப்படுத்தின. நவீன மலையாளக் கவிதைகளுக்குப் புதிய உணர்வையும் உருவையும் அளித்தன.

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

எழுபதுகளில் இடதுசாரி இலக்கிய உணர்வுக்கும் போராட்டங்களுக்கும் சச்சிதானந்தனின் கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும் பெரும் துணையாக இருந்தன. தெருக்களிலும் முச்சந்திகளிலும் மாணவர்கள் தொழிலாளர்கள் இடையிலும் அவரும் பிற கவிஞர்களும் நிகழ்த்திய கவிதை வாசிப்புகள் விழிப்புஉணர்வை ஏற்படுத்தின. ஓர் இடதுசாரி அழகியலை உருவாக்க உதவின.

கவிஞராக மட்டுமல்ல, இலக்கிய விமர்சகராகவும் கவிதையியலின் நடைமுறையாளராகவும் சச்சிதானந்தனின் பங்களிப்புகள் காத்திரமானவை. மலையாளத்தின் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றியும் கவிஞர்கள் பற்றியும் மிக விரிவாக எழுதியவர். அதற்கு இணையாகவே அவரது கவிதைகள் பற்றியும் மிக அதிக அளவில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் பரஸ்பரப் பகிர்வு வேறு எந்த மலையாளக் கவிஞருக்கும் வாய்க்காதது.

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்த சச்சிதானந்தன் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக 20 ஆண்டுக்காலம்  பணியாற்றினார். மலையாள நவீனக் கவிதையின் திசைகாட்டியான டாக்டர். அய்யப்ப பணிக்கரின் ஆலோசனையின் பேரில் 1992-ம் ஆண்டு சாகித்ய அகாடமியின் ஆங்கில இதழான இந்தியன் லிட்ரேச்சரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். தில்லிவாசியானார். அரசுத் துறையின் கெஸட்போல சுவாரஸ்யமோ புதுமையோ இல்லாமல் சடங்காக வெளியிடப்பட்டு வந்த இந்தியன் லிட்ரேச்சர் இதழ், அவர் பொறுப்பேற்ற பின்னரே ஓர் இலக்கிய இதழாக முக்கியத்துவம் பெற்றது. எல்லா இந்திய மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. புதிய திறமைகள் இடம்பெற்றன. அதுவரை அபூர்வமாக ஆங்கிலத்தில் எழுதிவந்த சச்சிதானந்தன் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். இந்தச் செயல்பாடு மலையாள இலக்கியத்துக்கு அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுத்தந்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல, தேசிய - சர்வதேசிய அரங்கில் இப்படி ஓர் ஆளுமை இல்லை என்பதை உணரும்போது, மலையாளத்தில் சச்சிதானந்தனின் பங்களிப்பு எவ்வளவு முதன்மையானது என்பது விளங்கும். இதன் விரிவாகவே அவர் உலக அரங்கில் இந்திய இலக்கியத்தையும் கவிதையையும் பரவலான கவனத்துக்கு எடுத்துச் சென்றார். சாகித்ய அகாடமியின் செயலாளராக அவர் வகித்த பதவி இதற்கு உதவியது.

 புதிய கவிஞர்களையும், புதிய போக்குகளையும், புதிய ஊடகங்களையும் மலையாளத்தில் முதலில் இனங்கண்டவர் சச்சிதானந்தனாகவே இருப்பார். தலித்தியம் சார்ந்து எழுதவந்த எஸ்.ஜோசப், ரேணுகுமார் போன்றவர்களை அவரே முன்னிலைப் படுத்தினார். தலித்தியம், பெண்ணியம், சூழலியல், ஆதிவாசி வாழ்வியல் ஆகியவற்றுக்கு ஓர் இலக்கியப் பரிமாணம் அளித்ததில் அவர் பங்கு குறிப்பிடத்தகுந்தது. பெண்ணெழுத்து என்ற வகைமையை அறிமுகப்படுத்தியதும் அதன் அழகியலை முன்மொழிந்ததும் அவரே. கேரளத்திலிருந்து எழுதும் கவிஞர்கள், கேரளத்துக்கு வெளியிலிருந்து எழுதும் கவிஞர்கள் என்ற இரு பிரிவைத் தாண்டி, வளைகுடா நாடுகளிலிருந்து எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து அவர் வெளியிட்ட ‘மூன்றாம் இடம்’ என்ற தொகுப்பும் இணையதளங்களில் வெளியாகும் கவிதைகளைக் கண்டடைந்து திரட்டிய கவிதைகளின் தொகுப்பான ‘நான்காம் இடம்’ என்ற தொகுப்பும் கவிதைகளின் புதிய எல்லைகளைக் காட்டின. புதிய ஊடகமான இணையத்திலும் அவர் பங்கு தொடர்ச்சியானது. அவர் அளவுக்கு இலக்கிய விழிப்புஉணர்வு கொண்ட செயல்பாட்டாளர்கள் இந்திய இலக்கிய அரங்கில் இல்லை. மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்குப் பிறகு, அவர் அளவுக்கு இலக்கியச் சுற்றுப்பயணம் செய்பவர்களும் இல்லை. அவருடைய கவிதைகள், பதினொரு இந்திய மொழிகளிலும் ஐந்து உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. சச்சிதானந்தன் தமிழிலும் ஓரளவு கவனம்பெற்ற கவிஞர். அவரது கவிதைகள் நேரடியாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலம் வழியாகவும் பலராலும் அவ்வப்போது மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. நிர்மால்யா ‘சரீரம் ஒரு நகரம்’ என்ற தொகுப்பையும் சிற்பி, ‘சச்சிதானந்தன் கவிதைகள்’, ‘கவிதை மீண்டும் வரும்’ ஆகிய தொகுப்புகளையும் வெளியிட்டிருக் கிறார்கள். அவரது கட்டுரைகள் பலவும் வெவ்வேறு தருணங்களில் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

சச்சிதானந்தன் ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக எழுதிவருகிறார். மிக அதிக எண்ணிக்கையில் எழுதியிருக்கிறார். அவற்றில் மிகச் சிறந்தவையும் நல்லவையும் சாதாரணமானவையும் அடங்கும். அவை அனைத்தையும் வாசித்து மதிப்பிட்டால், அதில் சில பொது இயல்புகளைக் காண முடியும்; அவரது கவிதை மனதை அறிய முடியும். அந்த மனதின் குணங்களாகப் பின்வருவனவற்றை வரிசைப்படுத்த முடியும். சச்சிதானந்தனின் கவிதை மனம் - கேரள மண்ணின் வாசனைகொண்டது; அதேசமயம் ஆகாய விசாலம் உடையது; இந்திய மரபில் ஊறியிருக்கும்போதே உலக மரபுகளைப் பிரதிபலிப்பது; மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவையே ஆன்மிகமாகக் காண்பது; சமூகநீதிக்கான குரலை எழுப்புவது; சுதந்திரத்துக்கான வேட்கை தணியாதது; இடதுசாரி நிலைப்பாட்டில் உறுதியானது; இடதுசாரி அதிகாரத்துக்கு எதிரானது; மதச் சார்பற்றது; எனினும் மதத்தின் மானுட வாஞ்சையை வலியுறுத்துவது; மனிதனின் ஆதாரமான படைப்பாற்றல் கவித்துவமானது என்று பகிரங்கமாக அறிவிப்பது.

மலையாளக் கவிதை உலகில் விசித்திரமான ஒரு பழக்கம் உண்டு. மலையாளிகள் தங்களுக்குப் பிடித்த கவிஞர்களுக்கு மனமுவந்து அளிக்கும் பட்டம் ‘மகாகவி’ என்பது. அநேகமாக 60 வயதைக் கடந்த கவிஞர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த வள்ளத்தோள் நாராயண மேனன் முதல், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஓ.என்.வி.குறூப்பு வரை கேரளத்தில் மகாகவிகளின் எண்ணிக்கை அதிகம். எழுபதைக் கடந்த சச்சிதானந்தனும்  ‘மகாகவி’ பிராப்தி அடையப்போகிறார் என்ற லேசான அச்சம் அவரது வாசகர்களுக்கு இருந்தது. இதுவரை மகாகவிகளாக முடிசூட்டப்பட்டவர்கள், அனைவரும் கற்பனாவாதத்தின் பிரதிநிதிகள் என்பதால் ஏற்பட்ட அச்சம் அது. நிகழ்காலத்துடன் வாதாடும் சச்சிதானந்தன் போன்ற கவிஞருக்கு அந்த மகுடம் பொருந்தாதே என்ற சந்தேகத்தில் விளைந்த அச்சம் அது. மகாகவிகளின் காலம் முடிந்துவிட்டது என்பதனால் இருக்கலாம். சச்சிதானந்தன் மகாகவியாகாமல் தப்பினார். சமீபத்தில், அவருக்கு வழங்கப்படவிருக்கும் விருது விழா ஒன்றுக்கான அழைப்பிதழில் ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொஞ்சம் உயர்வுநவிற்சியாகத் தென்பட்டாலும் அவருக்கு அது பொருத்தமானது; உண்மையானது!

கருகிய கவிதை

நான் கருகித் தீரவிருக்கும்
ஒரு கவிதை
நீங்கள் யூகித்ததுபோலவே
ஒரு பெண்பிள்ளையின் காதல் கவிதை.

பெண்பிள்ளைகளின் காதல் கவிதைகள்
சில சமயங்களில் மட்டுமே
நெருப்பிலிருந்து தப்புகின்றன
அப்பாவின் நெருப்பிலிருந்தும் அண்ணனின் நெருப்பிலிருந்தும்
அம்மாவின் நெருப்பிலிருந்தும்கூட:
அவர்களுடைய அம்மாவிடமிருந்து பரவியது அந்த நெருப்பு.

சச்சிதானந்தன்: ‘மலையாளத்தின் சர்வதேசியக் கவிஞர்’ - சுகுமாரன்

சில பெண்பிள்ளைகள் மட்டுமே
இந்த நெருப்பிலிருந்து அரைகுறையாகத் தப்புகிறார்கள்
முழுவதும் கருகாத அவர்களை
நாம் சில்வியா பிளாத் என்று
அக்மதோவா என்று
கமலாதாஸ் என்று அழைக்கிறோம்.

சில பெண்பிள்ளைகள்
நெருப்பின் விதியிலிருந்து தப்புவதற்காக
காதலுக்கு
பக்தியின் முகத்திரையை அணிவிக்கிறார்கள்
அப்போது ஒரு மீரா பிறக்கிறாள்
ஒரு ஆண்டாளும் ஒரு மகாதேவி அக்காவும் பிறக்கிறார்கள்.

ஒவ்வொரு கன்னியாஸ்திரீயும்
நித்திய இளைஞரான யேசுவுக்கான
கருகிய காதல் கவிதையே

அபூர்வமாக, அதி அபூர்வமாக
ஒரு பெண்பிள்ளை உலகைப் பார்த்துச் சிரிக்கும்
வலிமை பெறுகிறாள்
பெண்களுக்கு மட்டும் சாத்தியமான மென் பரிவுடன்.
அப்போது நாம் அவளுக்கு
சிம்போர்ஸ்கா என்று பெயரிடுகிறோம்.

அப்புறம்
சாப்போ தப்பியது
அவளுடைய காதல் கவிதைகளில்
பெண்பிள்ளைகளையே முன்வைத்துப் பேசியதனால்தான்.

திக்கல்

திக்குவாய் ஊனமல்ல
ஒரு பேச்சுமுறை

வார்த்தைக்கும் அர்த்தத்துக்கும் இடையிலான
சில மௌனங்களையே
நாம் திக்கல் என்று சொல்கிறோம்
வார்த்தைக்கும் செயலுக்கும் இடையிலான
மௌனங்களை
முடம் என்று சொல்வதுபோல.

மொழிக்கு முன்பே திக்கல் உண்டானதா
அல்லது மொழிக்குப் பின்பா?
மொழியின் வட்டார வழக்குதான் திக்கலா
அல்லது அதுவே ஒரு மொழியா?

இந்தக் கேள்விகளுக்கு முன்னால்
மொழிவல்லுநர்கள் திக்குகிறார்கள்.

ஒவ்வொருமுறை திக்கும்போதும்
அர்த்தங்களின் கடவுளுக்கு
ஒரு பலி கொடுக்கிறோம்
ஓர் இனம் ஒன்றாகத் திக்கும்போது
அவர்கள் தாய்மொழி திக்கலாகிறது
இப்போது நமது மொழியைப்போல.

மனிதனைப் படைத்தபோது
கடவுள் திக்கியிருக்க வேண்டும்
அதனால்தான்
மனிதர்களின் எல்லா வார்த்தைகளும்
பூடகமாகின்றன
அதனால்தான்
மனிதர்களின் பிரார்த்தனைகளிலிருந்து கட்டளைகள் வரை
எல்லாம் திக்குகின்றன
கவிதையைப்போல.

தமிழில்: சுகுமாரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism