மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

ரா.சென்றாயன்

“பண்பாட்டின் அடித்தளத்தில் நிகழும் நுண்தாக்குதலைத் தடுத்து ஆட்கொள்ளும் சிறு கேடயமே என் எழுத்து. வாழிடம் பறிக்கப்பட்டு, நிகழ்ந்த நெடும் தாக்குதலில் நகரத்து வெம்மைக்குள் சிதறிப்போய் பிடிமண் கலயத்தோடு வாழும் எம் உறவுகளின் அவலத்தை, பறை காய்ச்சும் நெருப்புக் கங்கின் உக்கிரத்தோடு வார்த்தையாகப் பெயர்க்கிறேன். கோபம், காதல், அன்பு, குரோதம், கொதிப்பெனச் சகல உணர்வுகளின் கலவையாகப் பீரிடுகிற என் கவிதைகள் இந்தச் சமூகத்தின் மேனியில் தழும்பாகப் பதிந்தே தீரும்”

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படம்: ஜி.பாலாஜி

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ரா.சென்றாயன், கட்டடப் பொறியாளர். ‘உருவி எடுக்கப்பட்ட கனவு’, ‘நிலமிழந்த மண்புழு’ ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ‘பருக்கைகளால் நிரம்பிய நிலா’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. திருப்பரங்குன்றத்தின் 2000 ஆண்டுகால சமயம், வேளாண்மை, பண்பாடு, வாழ்க்கையை மையப்படுத்தி ‘கரம்பை’ எனும் நாவலை விரைவில் வெளியிடயிருக்கிறார்.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படம்: ப.சரவணகுமார்

அமுதா பொற்கொடி

“இந்தப் பிரபஞ்சத்தைக் கவிதைகளால் அளந்து, ஈற்றடிக்குள் சுருக்கிய என் மூதாதைகளின் சின்னதொரு ஜீன் என்னுள் ஊறிக்கிடக்கிறது. அது நிகழ்த்தும் கிளர்ச்சியே கவியாகிறது. மொழியின் ஊடறுத்து எனக்கானதோர் உலகை என் கவிதைகளின் வாயிலாகக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறேன். தாய்வழியின் தொப்புள்கொடியைத் துச்சமென அறுத்தெறிந்துவிட்டு, ஆதிக்க வெறி பிடித்தலையும் இந்தச் சமூகத்தின் குரல்வளையை நெறிக்கும் என் கவிதைகள். தீட்டுத்துணி அகற்ற மறைப்பின்றி அவஸ்தையில் தவிக்கும் என் சாலையோரத் தோழிகளின் ரத்தத்தையே என் பேனா இந்தச் சமூகத்தின் மேல் உமிழ்கிறது...”
நெல்லை மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சேர்ந்த அமுதா பொற்கொடி, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் தாளாளராகப் பணியாற்றுகிறார். ‘அகச் சுவடுகள்’, ‘தமிழ்ச்சிமிழ்’ ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  ‘எளிய திருப்பாவை’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. இவரது இயற்பெயர் வை.அமுதா.

ஆங்கரை பைரவி

“வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையும் மட்டுமே என் உலகம். எவ்வித இலக்கும் இல்லாத எளியதொரு மனிதன். என் இருத்தலை அழுத்தமாகப் பதிவுசெய்யும் நிமித்தம் எழுதுகிறேன். என் வாழ்க்கையை எவரும் வாழ முடியாது. நான் எதனோடும் ஒட்ட இயலாத, எவரோடும் இணைய இயலாத தனிமையின் அடர்ந்த இருளுக்குள் வாழும் விசித்திரன். நான் விட்டுப்போகும் சிறு பொறி என் எழுத்து. அதைக் காலத்தில் எவரேனும் மெள்ள மெள்ள ஊதிப் பெரிதாக்கலாம். பொறி அணைந்தும் போகலாம். ஆயினும், நான் எழுதுவேன்!”

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

திருச்சி, லால்குடிக்கு அருகில் உள்ள ஆங்கரை கிராமத்தைச் சேர்ந்த, ‘ஆங்கரை’ பைரவி, திருச்சியில் அரசு அலுவலகம் ஒன்றில் பதிவறைத் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகிறார். ‘பின்னிருக்கையில் ஒரு போதி மரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘விரல் தொட்ட வானம்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. இவரது இயற்பெயர் ரெங்கராஜன்.

கோ.கலியமூர்த்தி

“பாலையாகத் திரிந்துவிட்ட மருதத்தின் பிள்ளை நான். பசிபடர்ந்த உதயமும் நம்பிக்கைகள் வறண்ட நடுப்பகலும் சேர்ந்து வனைந்த ஓட்டைப்பானை இந்த வாழ்வு. பாட்டில்கள் பருகிவிட்ட எம் நதிகளை, அழுதபடியே லாரிகளில் பயணிக்கும் அவற்றின் மணலுடலை, ஆழ்துளைக் குழாய்கள் வன்புணரும் நிலத்தின் வலியை தீகொண்டு எழுதும் என் பேனா, துயர்மிகு வரிகளின் வழியே மௌனத்தின் கனத்த ஓடுகளை உடைக்கத் துடிக்கிறது. காதலின் நிலமும் நிலத்தின்மீதான காதலும் பூத்துச் சொரியும் தீக்கொன்றை மலர்களே என் சொற்கள்...”

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

படங்கள்: தே.தீட்ஷித்

திருவாரூர் மாவட்டம் பண்டித சோழநல்லூரைப் பூர்வீகமாகக்கொண்ட கோ.கலியமூர்த்தி, ‘அனல்குடித்த மலர்’, ‘தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி’, ‘மஞ்சள் தட்டான்கள் அழிந்துவிட்டன’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவராகச் செயல்படும் இவர், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஆலைத் தொழிலாளியாக வேலை செய்கிறார். ‘அரூபா’ என்ற கவிதைத் தொகுப்பும் ‘நட்சத்திரங்கள் உதிரும் இரவு’ என்ற நாவலும் விரைவில் வெளியாக உள்ளன.