Published:Updated:

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

டவுள் எப்போதும் அவருடைய சொர்க்கத்தில் இருப்பதில்லை. உலகத்தில் எல்லாமே எப்போதும் சரியாக இருப்பதில்லை. எல்லாமே மோசம் என்பதில்லை. அதேசமயம் எல்லாமே நல்லது என்பதுமில்லை. எல்லாமே அசிங்கமில்லை. அதேசமயம் எல்லாமே அழகு என்பதுமில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை - அது மட்டுமே பெறுமதியானது. அது காட்டுமிராண்டித்தனமானது, குரூரமானது, கருணையானது, மேன்மையானது, உணர்ச்சிமயமானது, சுயநலமானது, பெருந்தன்மையானது, மடத்தனமானது, அசிங்கமானது, அழகானது, வலி நிரம்பியது, குதூகலமானது – இவை எல்லாமும் அதற்கு மேலும் கொண்டதுதான் வாழ்க்கை. இவை எல்லாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன் – அதற்காக அவர்கள் என்னை சிலுவையில் அறைந்து கொன்றாலும் சரி, நான் அறிந்தே தீர்வேன். - தாமஸ் வுல்ஃப்

‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலுக்கான முகப்புக் குறிப்பாக ஜி.நாகராஜன் ஆங்கிலத்தில் தந்திருக்கும் மேற்கோளின் தமிழாக்கம் இது. இந்த வேட்கைதான் அவருடைய வாழ்வுக்கும் எழுத்துக்குமான ஆதாரசக்தியாக அவரை இயக்கியது. அவருடைய வாழ்வையும் எழுத்தையும் தீர்மானித்த சக்தியாகவும் இயங்கியது.

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீனத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஜி.நாகராஜனின் படைப்புகள் முற்றிலும் புதிதான ஒரு தனிப் பிராந்தியம். அவர் வருகைக்கு முன்வரை தமிழ் எழுத்துலகம் அறிந்திராத ஒரு பிரதேசம். வேசிகளும், மாமாக்களும், அத்தான்களும், பொறுக்கிகளும், உதிரிகளும் தம் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடு சுபாவமாக வாழும் உலகம் அது. தன் கால வாழ்வோடுகொண்ட தீர்க்கமான, இயல்பு உணர்வோடு திளைத்த உறவிலிருந்து அவருடைய படைப்பு மனம் உருவாக்கிய அசலான பிராந்தியம். இதனாலேயே, தமிழில் லட்சியவாதத்துக்கு எதிரானதும், தனிமனித இயல்புணர்ச்சிகள் சுபாவமாக வெளிப்படுவதன் மூலம் வாழ்வின் அழகு பூரணமாக  விரிவதைக் கொண்டாடுவதுமான முதல் குரலாக இவருடைய படைப்புலகம் அமைந்தது. விளிம்புநிலை மனிதர்களிடம் இயல்புணர்வுகள் சுபாவமாக மொக்கவிழ்வதைக் கண்டதும், அந்த உலகை எந்த வித மனச்சாய்வுகளோ, அசட்டு அபிமானங்களோ, பச்சாதாப உணர்வுகளோ இன்றிக் கலை நேர்த்தியுடன் படைப்பித்ததும்தான் ஜி.என்-னின் அபாரமான தனித்துவம்.

சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து, மனித வாழ்வைக் குறுகிய, நிர்ணயிக்கப்பட்ட வரையறைக்கு உட்பட்டதாகக் கட்டமைத்திருக்கிறது. மனித வாழ்வு இயந்திரரீதியான இயக்கத்துக்கு ஆட்பட்டிருக்கும் இந்நிலையில், படைப்பு மனதின் அடிப்படையான சுதந்திர வேட்கையிலிருந்து உருவாகியிருக்கும் கலைப் பிரதேசம் ஜி.நாகராஜனுடையது. சமூகத்தின் நெறிப்படுத்தப்பட்ட இலக்குகளுக்குச் சேவகம் செய்வதல்ல படைப்பாளியின் பணி. மாறாக அவன், வாழ்வின் இயல்பான பூரண மலர்ச்சிக்கான கனவுகளை வசப்படுத்துபவன்; வாழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைக் கண்டடைபவன். அப்படியான ஒரு மலர்ச்சிக்கும் சாத்தியத்துக்கும் குந்தகமாகவும் தடையாகவும் இருக்கும் சமூக மதிப்பீடுகளையும் நியதிகளையும் உதாசீனப்படுத்துவதிலிருந்தும் நிர்மூலமாக்குவதிலிருந்துமே வாழ்வுக்கும் கலைக்குமான புதிய பாதைகள் விரிகின்றன. வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் ஒப்பனைகளையும் வழித்துத் துடைத்து, வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி, அதன் இயல்பான அழகுகளிலிருந்து தார்மீகங்களையும் அறங்களையும் படைக்கும் மனமே கலை மனம். பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகுகளையும் கண்ட படைப்புமனம் ஜி.நாகராஜனுடையது.

தமிழில் குறைவாக எழுதி, முக்கியப் படைப்பாளுமையாக நிலைபெற்றவர்களில் ஒருவர் ஜி.நாகராஜன். இவருடைய படைப்புலகம், அளவில் சிறியது; ஒரு தொகுப்பு நூலுக்குள் அடங்கிவிடக்கூடியது; அடங்கிவிட்டிருப்பது. அதேசமயம் அடர்த்தியில் அலாதியானது; தனித்துவத்தில் மகத்தானது. `குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), `நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்) மற்றும் 34 சிறுகதைகளும் 4 குட்டிக் கதைகளும் அடங்கிய படைப்புலகம். வாழ்க்கையை அவதானிப்பதும், நாம் அறிந்திராத அதன் வேறுபட்ட முகங்களை அறிவதுமாக அமைந்தது. வாழ்க்கையே பிரதானம் என்ற அவருடைய வேட்கையின் வெளிப்பாடுகளே அவருடைய படைப்புலகம்.

நம் கால வாழ்க்கை குறித்த அவருடைய அவதானிப்புகளும், மனித மன, குண விசேஷங்கள் பற்றிய

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

புரிதல்களும், விளிம்புநிலை மனித வாழ்வு குறித்த அறிதல்களிலிருந்தும் சுய அனுபவங்களிலிருந்துமே உருவாகியிருக்கின்றன. இவை மிகவும் பெருமதியானவை. ஏனெனில், அவர் எழுத்துலகப் பிரவேச காலகட்டத்துச் சூழலில் இது ஒரு துணிகரப் பாய்ச்சல். மேலும், அந்த உலகை அவர் அணுகிய விதம்தான் மிகவும் விசேஷமானது. இந்த உலகைப் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற விமர்சன யதார்த்தப் படைப்பாளிகளும் இவருக்கு முன்னர் சற்று அணுகியிருக்கிறார்கள்தான். ஆனால், இந்த உலகுடனான ஜி.என்-னின் உறவுநிலை முற்றிலும் வேறானது. பொதுவாக, நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் செய்யப்படுவதைப்போல, இந்த வாழ்வுலகை மீட்சிப் பாதைக்கோ ஆன்மிகத் தளத்துக்கோ நகர்த்த முனையும் சிறு பிரயாசைகூட இவரிடம் வெளிப்படுவதில்லை. எந்த வித நம்பிக்கைக்கும் இடமளிக்காத விளிம்புநிலை மனிதர்களின் வாழ்நிலைகளை, `இது இப்படியாக இருக்கிறது’ என்று மட்டுமே விலகிநின்று காட்டுகிறார். இந்தக் கதையாடல் முறை நவீனத் தமிழ் இலக்கியத்தில் அபூர்வமான ஒரு  நிகழ்வு. இத்தகையதொரு படைப்பு மனோபாவத்தை, நவீனத் தமிழ் இலக்கியம் அப்போதுதான் முதன்முறையாக அறிந்துகொண்டது. இதன் காரணமாக, அது முற்றிலுமான ஒரு புதிய ஒளியைப் பெற்றது.

இந்த மனோபாவம்தான் எழுத்துலகில் அவரை வழிநடத்திய அவருடைய படைப்பிலக்கியக் கோட்பாடு. அவர் எழுதிய மிகக் குறைந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்தும் இது தெளிவாகப் புலப்படுகிறது. அசோகமித்திரனின் `இன்னும் சில நாள்கள்’ சிறுகதைத் தொகுப்புக்கு, `ஞானரதம்’ (ஜனவரி, 1973) இதழில் அவர் எழுதிய விமர்சனத்தின் முடிவு வரிகள் இவை: `பெரும்பாலான தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடம் அரிதே காணக்கூடிய சொற்செட்டு, புறநிலை உணர்வு, வலிந்து எதையும் புகுத்தாத போக்கு, வாழ்க்கையின் சலனத்தை உள்ளபடியே பிரதிபலிக்கும் திறன், கலை உணர்வுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களிலிருந்து பூரண விடுதலை... இவை அனைத்தும் அசோகமித்திரனின் சிறப்புத்தன்மைகளாக எனக்குப் படுகின்றன.’

ஒரு படைப்பாளியின் சிறப்புத்தன்மைகளாக, தான் கருதும் படைப்புக் குணங்களைத்தான் ஜி.என் தன் படைப்புலகோடு கொண்ட உறவில் நிலைநிறுத்தியிருக்கிறார். அதில் கலைவெற்றியும் அடைந்திருக்கிறார். மேலும், ஒரு படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் இடையேயான உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய அவருடைய எண்ணம், `ஞானரதம்’ 1973, அக்டோபர் இதழில் வெளியான தர்மோ சிவராமின் `சதுரச் சிறகு’ சிறுகதைக்கு `ஞானரதம்’ 1974, ஜனவரி இதழில் அவர் எழுதிய விமர்சனத்தில் வெளிப்படுகிறது. `படைப்பாளிக்கு, தன் படைப்பைத் தன்னிலின்றும் முற்றும் துண்டித்துத் தூர நிறுத்தும் தார்மீகத் தைரியம் வேண்டும். `சதுரச் சிறகுகளி’ன் ஆசிரியரோ, தான் இல்லாது தன் எழுத்து நிற்காது என்ற அவநம்பிக்கையில் தானே அதைச் சுற்றிச் சுற்றி வருகிறார். கதைக்கு ஆதாரமான ஆசிரியரின் அனுபவம் இன்னும் ஆசிரியரின் உள்மனதோடு கொண்டிருக்கும் தொப்புள்கொடி உறவை அறுத்து விடுதலை பெறவில்லைபோல் தோன்றுகிறது.’ படைப்பாக்கம் பற்றிய அவருடைய சிந்தனைகளில் பொலிவு பெற்றுத் துலங்குபவையாகவே அவருடைய படைப்புகள் ஒளிர்கின்றன.

அந்தக் காலகட்டத்திய உலக இலக்கியப் போக்கின் பின்புலத்தினூடே அவதானிக்கும்போதும் ஜி.என்-னின் தனித்துவம் அலாதியானது. சமூகத்தின் ஒழுக்கம் சார்ந்த நியதிகளும் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும்

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

தனிமனித வாழ்வின் எழுச்சியையும் வீரியத்தையும் காயடிக்கும் வன்முறையாகிவிட்ட நிலையில், தனிமனிதனின் பூரணத்துவ வாழ்வைக் கொண்டாடும் குரல் நீட்ஷேயிடமிருந்து எழுந்தது. மனித மனதிலும் உடலிலும் அரும்பும் மொக்குகளைப் பாலியல் கட்டுப்பாடுகள் கருக்கும் நிலையில் ஏற்படும் விபரீதங்களை ஃப்ராய்டின் குரல் மொழிந்தது. லட்சியவாதத்தின் பெயரால் மனித வாழ்வுக்கான மாறுபட்ட சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குரல்வளை நெரிக்கப்படுவதும் அறியப்பட்டது. அறிவும் நடைமுறை தர்க்கமும் மனித வாழ்வை அபாயகரமாகக் குலைத்துப்போடும் கொடூரம் இரண்டு உலகப்போர்கள் மூலம் உணரப்பட்டன. இவை காரணமாக, தனிமனிதனின் மெய்யான உணர்வுகளை வசப்படுத்துவதன் மூலம் வாழ்வின் எண்ணற்ற பரிமாணங்களையும் சாத்தியங்களையும் அகப்படுத்தும் முனைப்போடு மேலை கலை இலக்கியப் படைப்பாளிகள் விந்தையான கனவுப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்கத் தலைப்பட்டனர். காரண-காரியரீதியான நடைமுறை தர்க்கங்களின் தளைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரமான கனவுலகு குறித்தும், மாயப்புதிர் அனுபவ உலகு குறித்துமான வேட்கை, படைப்பு மனங்களில் உருப்பெற்றது. கனவுலக வெளிப்பாடுகளில் மலரும் தனிமனித இயல்புணர்வுகளை அகப்படுத்துவதன் மூலமே வாழ்வின் மெய்மைகளை அறிய முடியும் என்று உணர்ந்து மேலைக் கலைஞர்கள் பிரயாசைப்பட்டபோது, விளிம்புநிலை மனிதர்களிடம் இயல்புணர்வுகள் சுபாவமாக மொக்கவிழ்வதைக் கண்டு, அதன் மலர்ச்சியைப் படைப்புகளாக ஆக்கியதுதான் ஜி.நாகராஜனின் தனிச்சிறப்பும் முக்கியத்துவமும்.

ஜி.நாகராஜனின் முதல் படைப்பு எனக் கருதத்தக்கது, `குறத்தி முடுக்கு’ குறுநாவல். அன்றைய கம்யூனிசக் கட்சி நாளிதழான `ஜனசக்தி’யின் 8.6.1957 வார மலரில் `அணுயுகம்’ என்ற அவருடைய சிறுகதை வெளியானதிலிருந்து அவருடைய எழுத்துலகப் பிரவேசம் வெளிப்படையாக நிகழ்ந்திருக்கிறது. எனினும், அவர் திருநெல்வேலியில் கம்யூனிசக் கட்சியின் நகரச் செயலாளராகக் கட்சிப் பணிகளைத் துடிப்போடு ஆற்றியபடி, வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகவும் செயல்பட்ட 1952-56 (23-27 வயது) காலகட்டத்தில் தன்னுடைய முதல் படைப்பான `குறத்தி முடுக்கு’ குறுநாவலை எழுதியிருப்பதாக அறிய முடிகிறது.

அவருடைய நெல்லை வாழ்க்கையில் பாலியல் தொழிலாளிகளின் உலகோடு அவர்கொண்டிருந்த நெருக்கமான உறவின் பின்புலத்தில் உருவாகியிருக்கும் படைப்பு, `குறத்தி முடுக்கு’. அவருடைய இந்த நெருக்கமான உறவின் விளைவாக, கட்சி அவர்மீதுகொண்ட அதிருப்தியின் தொடர்ச்சியாகத்தான் அவர் கட்சியிலிருந்தும் நெல்லையிலிருந்தும் வெளியேறி மதுரை திரும்பினார். மதுரையில் தனிப்
பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகச் செல்வாக்கும் பிரசித்தியும் பெற்றிருந்தபோது, `பித்தன் பட்டறை’ என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து, அதன் முதல் புத்தகமாக இந்தக் குறுநாவலைக் கொண்டுவந்தார். ஆனால், இந்தப் படைப்பு திருநெல்வேலி காலத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பதை ஆர்.எஸ்.ஜேக்கப்பின் `மரண வாயிலில்...’ என்ற சுய வரலாற்று நாவல் மூலம் அறிய முடிகிறது. ஆர்.எஸ்.ஜேக்கப், பள்ளி ஆசிரியராகவும் கம்யூனிச அனுதாபியாகவும் இருந்தவர். அவருடைய இந்த நாவலில், குறத்தி முடுக்கின் கையெழுத்துப் பிரதியை அவர் நெல்லையில் தங்கியிருந்தபோது வாசித்திருப்பதும், குறத்தி முடுக்கின் மையப் பெண் பாத்திரமான தங்கத்திடம் ஜி.என் கொண்டிருந்த நெருக்கமான உறவும் காதலும் தங்கத்தை மணக்க அவர் பெருவிருப்பம் கொண்டிருந்ததும் வெளிப்பட்டிருக்கிறது (`மரண வாயிலில்...’, பக்.172-182).

`குறத்தி முடுக்கு’ குறுநாவலை 1954-55 காலகட்டத்தில் ஜி.என் - குறைந்தபட்சம் அதன் முதல் பிரதியையாவது எழுதியிருக்க வேண்டும் என ஆர்.எஸ்.ஜேக்கப் தன் படைப்பில் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களிலிருந்து அனுமானிக்க முடிகிறது. ஜி.என் தன்னுடைய 25-வது வயதில் இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தன் இளம் வயதிலேயே இப்படியாக வெளிப்பட்ட ஒரு படைப்புச் சக்தி, மாபெரும் ஒரு படைப்பு வெளியை சிருஷ்டிக்காமல் போனதற்கு, வாழ்க்கையோடு அவர்கொண்ட மூர்க்கமான உறவுக்கும் ஒரு பங்கு உண்டு என்றாலும், நம் சூழலுக்கும் கணிசமான பங்கு உண்டு.

`குறத்தி முடுக்கு’ தெளிவாக வரையறுக்கப்பட்ட இரு தளங்களில் ஒன்று மாற்றி ஒன்றாக நகரும் கட்டமைப்பு கொண்டது. ஒரு தளமானது, மைய ஆண் பாத்திரம் – ஜி.என் ஒரு பத்திரிகைச் செய்தியாளராக இந்தப் பாத்திரத்தில் உருமாற்றம் பெற்றிருப்பது; குறத்தி முடுக்கில் பாலியல் தொழில் புரியும் தங்கம் என்கிற பெண்மணியுடன் கொள்ளும் முதல் உறவிலிருந்து விரிந்து செழிக்கும் காதலும், அது சார்ந்த சிடுக்குகளும் என்றான கதையோட்டம்கொண்டது. மற்றொரு தளமானது, குறத்தி முடுக்கில் தொழில் புரியும் பெண்களின் நிலை பற்றிய ஒரு வரைமுகம் என அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி, அதிர்வூட்டும் பல கோட்டுச் சித்திரங்களாக உருக்கொண்டிருக்கிறது.

 இந்தப் படைப்பின் மையப் பெண் பாத்திரமான தங்கம், அபூர்வமான பெண். காலத்தால் கனிந்து, தான் ஈடுபடும் எந்த ஒன்றிலும் முழுமையான அர்ப்பண உணர்வோடு தன்னை ஒப்படைக்கிறாள். ஆனால், அதன் மையப் பாத்திரமான ஆண், மத்தியதர வர்க்க வாழ்நிலைகொண்டவன். அதனாலேயே அந்தப் பாத்திரம் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளும் சிடுக்குகளும் அதிகம். ஒழுக்க நியதிகளை உதறி, தன் இயல்பூக்கம் சார்ந்து தன் வாழ்வைக் கொண்டாட அந்தப் பாத்திரம் விழைகிறபோதிலும், விலைப்பெண்ணான தங்கத்திடம் கொள்ளும் உறவு, நெருக்கமும் வலுவும் பெற்றுக் காதலாக விகசிக்கும்போது, அப்பெண்ணை உடைமைப்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கும் அது சார்ந்த உளைச்சலுக்கும் ஆளாகிறது. தங்கத்தின் வாழ்நிலையைச் சீண்டிக் குதறும் கோபமும் பதற்றமும் அவனிடம் சீற்றம்கொள்கின்றன. அதேசமயம், அந்தச் சீற்றங்களிலிருந்து மீளவும் தெளிவு பெற்று மீண்டும் சகஜம்கொள்ளவும் அவனால் முடிகிறது. வார்ப்புநிலைக்கும் சிந்தனைத் தெளிவுக்குமான இந்த மனப் போராட்டம் படைப்புக்கு வலுவூட்டும் ஓர் அம்சம்.
 
குறத்தி முடுக்கில் வாழும் பெண்களின் நிலை துயர் நிரம்பியதாக இருக்கிறது. ஒருத்திக்கு மனநிலை பிறழ்கிறது. இன்னொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளப் பிரயாசைப்பட்டு, அதன் காரணமாக பெரும் வேதனைகொள்கிறாள். வேறொருத்திக்கு வாய்த்ததோ அவள் காதலைச் சுரண்டிப் பிழைக்கும் எத்தனாக ஒரு காதலன். மற்றொருத்தி துயர் தாங்காது தற்கொலைக்கு முயல்கிறாள். இவர்கள் மீது மெல்லிய பச்சாதாப உணர்வு படரும்விதமாக இவருடைய இந்த முதல் படைப்பு வெளிப்பட்டிருக்கிறது.

ஒழுக்கத்துக்கும் அறத்துக்குமான முரண்நிலைகளில் ஜி.என்-னின் படைப்புப் பார்வை எப்போதும் அறம் சார்ந்து மையம்கொண்டிருக்கிறது. படைப்பாளிக்கும் காலத்துக்குமான உறவில் ஜி.என் பதித்திருக்கும் பிரத்தியேக அடையாளம் இது. கருத்தின் மீதுகொண்ட கரிசனத்திலிருந்து உருவாகாமல், புனைவின் இயல்பான மலர்ச்சியில் தனதாகக்கொண்டிருக்கும் மகரந்தமாக உள்ளுறைந்திருக்கிறது.

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

பொதுவாக, ஜி.என்-னின் எழுத்துகளில் கதைசொல்லி ஒரு பார்வையாளனாகப் புறநிலையில் இருந்தபடி, படைப்புலகை அவதானிப்பதாகவும் அணுகுவதாகவும்தான் சொல்முறை இருக்கிறது. அந்த உலகத்தின் மீது அனுதாபமோ, பச்சாதாபமோ, பரிதாபமோ, குற்றமோ, புகாரோ கொள்வதில்லை. படைப்புலக விளிம்புநிலை மனிதர்களைத் தியாகிகளாகவோ, சமூக அவலத்துக்குப் பலியானவர்களாகவோ சித்திரிப்பதில்லை. ஆனால், அவருடைய இந்த முதல் படைப்பான குறத்தி முடுக்கில் பச்சாதாப தொனி மெல்லிய சரடாக ஊடுபாவியிருக்கிறது. அதேசமயம், உரத்த குரலாகவோ, கண்டனக் கூப்பாடாகவோ, கொள்கைப் பிரசங்கமாகவோ கொஞ்சமும் வெளிப்படாத ஒரு கதை சொல்லியை இந்த முதல் படைப்பிலேயே காண முடிகிறது. கொள்கைப்பிடிப்பும் செயல்திறனும்கொண்ட துடிப்பான 25 வயது இளைஞனின் இத்தகைய படைப்பாக்கச் செயல்பாடு, தேர்ந்த படைப்பு மேதையின் அசாத்தியக் கலை குணாம்சத்தைக்கொண்டிருப்பது ஓர் அபூர்வம்தான்.

விலைப்பெண்கள் குறித்த ஜி.என்-னின் பெருமதியான ஒரு எண்ணவோட்டம் இது: `அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது, அவனிடத்து தன்னைத்தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு முயற்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும். எது எப்படி இருப்பினும் `தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. பறத்தை மாதவியின் நல்லியல்புகள்தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன.’ - இத்தகைய பார்வை தீட்சண்யத்துடன் ஒரு தனித்துவ ஒளியில் சுடர்கிறது `குறத்தி முடுக்கு’ குறுநாவல்.

‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், ஜி.நாகராஜனின் பிரதான படைப்பு. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் நெருக்கடிகளும் செறிவாகவும் அடர்த்தியாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் படைப்பு. அந்த உலகை அவர் கட்டமைத்திருக்கும் தன்மையும் அதில் வெளிப்படும் அபார ஆற்றலும்தான் `நாளை மற்றுமொரு நாளே’ நாவலை மிகவும் பிரத்தியேகமான படைப்பாக ஆக்கியிருக்கிறது. படைப்பாளியிடம் வெளிப்படும் புறநிலை உணர்வு, படைப்புலக வாழ்க்கையின் சலனத்தை வெகு இயல்பாகப் பிரதிபலிக்கும் திறன்கொண்ட அணுகுமுறையைத் தந்திருக்கிறது. சொற்சிக்கனமும் மொழிநடையும் படைப்புக்கு ரத்தநாளங்களாக அமைந்திருக்கின்றன. வலிந்து எதையும் புகுத்தாமல் விலகி நிற்கும் மனோபாவமும், கலையுணர்வுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களிலிருந்து பூரண விடுதலை பெற்றிருப்பதும் இந்தப் படைப்பைப் பிரகாசிக்க வைத்திருக்கின்றன.
கார்கோடை நகரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. தன் குடிசையில் காலைக் கனவிலிருந்து விழித்தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்கப்பில் மீண்டும் ஒரு அதிகாலைக் கனவிலிருந்து விழித்தெழுவது வரையான ஒரு நாளின் சம்பவங்களும் கிளைக்கதைகளுமாக நெய்யப்பட்டு, கந்தனின் கடந்த 12 ஆண்டுகால வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் நாவல்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கும் என்று எண்ணி, விலைப்பெண்ணாக வாழ்ந்த மீனாவைக் கோயிலில் தற்செயலாகச் சந்தித்த மாத்திரத்திலேயே அவளை மணக்க விரும்பி மணந்துகொண்ட கந்தன், பிறகு தன் திருவாளத்தான் வேலைகளோடும் மீனாவை விலைப்பெண்ணாகத் தொழில் புரியவைத்தும் இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்துவந்தான். ஆனால், அன்று காலை தன் உடல்நிலை மோசமாகிவருவதை உணரும் கந்தன், மீனா குறித்து `இதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்றதுதான் நல்லது’ என யோசனைகொள்கிறான். அன்று மாலை தரகர் அந்தோணியை அவர் வீட்டுக்குச் சென்று சந்திக்கிறான். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி,``... ... சரி, இப்ப என்ன விஷயம்?” என்றார் அந்தோணி.

``அதான் சொன்னேனே, மீனா விஷயமா...”

``மீனாவுக்கு இப்ப என்ன?”

``நல்லாத்தான் இருக்கு. எனக்குதான் ஒடம்புக்கு முன்னே மாதிரி இல்லை. மீனாவை ஒரு நல்ல இடமா பார்த்து ஏற்பாடு பண்ணிட்டா, எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றான் கந்தன்.

``போடா பைத்தியக்காரா, மீனா தங்கமான பொண்ணு. அது இல்லாட்டி நீ இன்னும் குட்டிச்சுவராப் போவே.”

``நா எப்படியும் போறேன். அது எங்காச்சும் நல்லா இருந்தா போதும்.”

கந்தன் தனக்கான தார்மீக நியதிகளையும் அறத்தையும் கொண்டிருப்பதை இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது. ஒழுக்கம், சமூக நெறிமுறைகளால் கட்டமைக்கப்பட்டு நம் வாழ்வின்மீது திணிக்கப்படுவது. அறம், மனிதன் தன் வாழ்வுக்கான தார்மீகமாகக்கொள்வது. சமூகத்தின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை நிராகரிக்கும் ஜி.என்., அறநிலைப்பாட்டில் ஒரு கலைஞனின் அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்.

சமூக வாழ்வின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அண்டாமல் தன் போக்கில் ஒரு வாழ்வை அமைத்துக்கொண்டு வாழும் கந்தனுக்கு,  இந்தச் சமூகத்தில் வாழ்வதனாலேயே தன் வாழ்முறை சார்ந்த மனச் சங்கடங்களுக்கு ஆளாவதும் நேர்கிறது. சம்பிரதாய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைச் சார்ந்து இயங்கும் பிற மனிதர்களோடு வாழ வேண்டியிருக்கும் வரை, அந்த ஒழுக்க நியதிகளின் இறுக்கங்களிலிருந்து முழுமுற்றாக விடுதலை பெறுவது என்பது சாத்தியமுமில்லை. அதேசமயம் அதிலிருந்து விடுபட்ட வாழ்வை மேற்கொண்டிருப்பதும், அந்த வாழ்வினூடாகத் தனதான தார்மீகங்களை உருவாக்கிக்கொள்வதும்தான் முக்கியம். கந்தனுக்கு அது கூடிவந்திருக்கிறது.

ஜி.நாகராஜனின் படைப்புமனம் இந்த வாழ்வோடுகொண்டிருக்கும் உறவு, தீர்க்கமும் அர்த்தமும் கூடிச் செழித்திருப்பதை உணர்த்தும் அம்சம் இது.

தரகர் அந்தோணியைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் கந்தன், அவர் வீடு இருக்கும் ஷெனாய் நகரில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களைக் கவனிக்கிறான். அவன் அதற்கு முன்னதாக அங்கு வந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், கந்தனின் வாழ்க்கை என்பது எந்த வித மாறுதலுக்கும் இடமளிக்காத ஒன்றாகவே இருக்கிறது. காலமோ நாளோ மாறாத்தன்மையுடன்தான் அவனுக்கு இருந்துகொண்டிருக்கின்றன. கந்தன் அதை இப்படியாக உணர்கிறான்:

எங்கு பார்த்தாலும் வளர்ச்சி. எங்கு பார்த்தாலும் மாறுதல். ஆனால், தன் வாழ்க்கையில் மட்டும் மாறுதலே இல்லைபோல் அவனுக்குப்பட்டது. எல்லோரும், அவனை விட்டுவிட்டு எங்கேயோ

ஜி.நாகராஜன் - அழியாச் சுடர் - சி.மோகன்

சென்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எங்கு செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் எனத் தெரிந்திருந்தது. அவனுக்கு மட்டும் தெரியவில்லை. மீனாவுக்கும் தெரியவில்லை. திருவிழாக் கோலாகலத்தில் எல்லோரும் உற்சாகத்தோடு அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தனர். கந்தனும் மீனாவும் மட்டும் எங்கு போவது, எதைப் பார்ப்பது, எதை வாங்குவது, எப்படி வாங்குவது என ஒன்றும் அறியாமல் தெருவோரம் தனித்து உட்கார்ந்திருந்தனர், அவனுக்கும் அவளுக்கும் இருந்ததெல்லாம் `இன்று’ மட்டும்தான். `நாளை’கூடப் பிடிபடவில்லை. `நாளை திங்கள் கிழமை’ என்று அர்த்தமில்லாமல் நினைத்துக்கொண்டான் கந்தன். தேதி... தேதியை யார் கண்டது? நாயுடு வாடகைக்கு வந்தால் தேதி 6... அவ்வளவுதான். கந்தனுக்கு நாளை என்பது மற்றொரு நாளாகவே இருந்து கொண்டிருக்கிறது.

ஜி.என்-னின் படைப்பூக்கம் செழுமை பெற்றிருந்த காலம் என்று அல்லது அவர் படைப்பாக்கத்தில் தீவிர முனைப்புகொண்டிருந்த காலம் என்று 1972-1974 வரையான இரண்டு ஆண்டுகளைக் கருதலாம். இந்தக் காலகட்டத்தில் `ஞானரதம்’ என்ற மாதாந்திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான 12 இதழ்களில் `நாளை மற்றுமொரு நாளே’ நாவல் தொடராக வெளிவந்தது. பிறகு, அவருடைய `பித்தன் பட்டறை’ வெளியீடாக 1974-ம் ஆண்டில் ஜி.என் அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தார்.

`நாளை மற்றுமொரு நாளே’ நாவல் 2010-ம் ஆண்டு பெங்குவின் வெளியீடாக ஆங்கிலத்தில் `Tomorrow one more day’ என்ற தலைப்பில் வெளிவந்தபோது, அதன் வெளியீட்டு விழாவில் நான் நிகழ்த்திய உரையின் சிறு பகுதியை பொருத்தம் கருதி இங்கு முன்வைக்கிறேன்: `ஒவ்வொரு காலமும், வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம், மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அந்த விதிகளுக்கு எதிராக நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவி, புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தித் திரைக்காவியமான `மொஹல் ஏ ஹாசம்’ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி இது: அனார்கலி மீது சலீம் கொண்ட எல்லையற்ற காதலுக்காக, அக்பரால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனார்கலியை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரசுப் பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம், `அரசப் பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்கும் அளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி, அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்: `சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’ ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை, சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி.நாகராஜனின் வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.

சிறுகதைகளைப் பொறுத்தவரை, ஜி.நாகராஜன் பல்வேறு வாழ்நிலைகளைக் களன்களாகக்கொண்டிருக்கிறார். அவருடைய வசீகர ஈர்ப்புப் பிரதேசமான விளிம்புநிலை வாழ்வும் ஒரு பிரதானக் களனாக இருக்கிறது. 1957-1967-ம் ஆண்டு வரையிலான இவருடைய சிறுகதைகள் கம்யூனிஸக் கட்சி சார்ந்த கலை இலக்கிய இதழ்களான `ஜனசக்தி’, `சரஸ்வதி’, `சாந்தி’ ஆகியவற்றிலேயே பிரசுரமாகியுள்ளன. அவருடைய முதல் சிறுகதையான `அணுயுகம்’ 1957, ஜூன் 8 `ஜனசக்தி’ வாரமலரில் வெளியானது. 1956-ம் ஆண்டே அவர் கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டபோதிலும், கட்சித் தோழர்களோடும் கட்சி சார்ந்த படைப்பாளிகளோடும் அவர்  தொடர்ந்து உறவில் இருந்துவந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனாலும், அவற்றில் அவர் எழுதிய ஆரம்பகாலச் சிறுகதைகள், உள்ளடக்கத்திலோ உருவத்திலோ சொல்முறையிலோ கட்சியின் கலை இலக்கியக் கோட்பாட்டை உரத்த குரலில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. அதேசமயம், அவை அடித்தட்டு மக்களின் வாழ்நிலைகளைக் களனாகக்கொண்டு, விமர்சனத் தொனியுடன் அணுகியவை என்பதால் எதிரானதாகவும் இல்லை.

 1967-ம் ஆண்டுக்குப் பிறகுதான் அவருடைய கதைகள் ‘கண்ணதாசன்’, ‘ஞானரதம்’, ‘சதங்கை’, ‘கணையாழி’ போன்ற அந்தக் காலகட்டத்திய இலக்கியச் சிற்றிதழ்களில் பிரசுரமாகின. எனவே,
1967-ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியச் சிற்றிதழ் படைப்பாளிகளோடு உறவும் நட்பும் ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது. 1971-ம் ஆண்டில் `பித்தன் பட்டறை’ வெளியீடாக, அதுவரை எழுதிய கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக, `கண்டதும் கேட்டதும்’ நூலைக் கொண்டுவந்தார். இந்தத் தொகுப்பு, அவர் எழுதத் தொடங்கிய காலகட்டத்திலேயே தெளிவான இலக்கியக் கண்ணோட்டமும், கலைநுட்பம்கூடிய வெளியீட்டு உத்திகளும், செறிவான படைப்பு மொழியும் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது. `கண்டதும் கேட்டதும்’ தொகுப்புக்குப் பிறகான அவருடைய சிறுகதைகளை அவருடைய இரண்டாம்கட்ட சிறுகதைகள் என்று கருதலாம். அவருடைய படைப்பூக்கம் செழித்திருந்த 1972-74 காலகட்டத்தில் எழுதப்பட்டவை இவை. இந்தக் காலகட்டத்துச் சிறுகதைகள், நுட்பமான படைப்புமொழியும், செய்நேர்த்தியும், பன்முகத் தன்மையும், நவீன வெளிப்பாட்டுக்கூறுகளும் கொண்டிருக்கின்றன.

 `கிழவனின் வருகை’ (கணையாழி, ஜனவரி, 1972) கதையிலிருந்து இந்தக் காலகட்டம் தொடங்குகிறது. இந்தக் கதை குறியீட்டுத்தன்மையில் தளமாற்றம் கொள்ளும் கதை. கிழவனை `காந்தி’ எனக்கொண்ட வாசிப்புக்கு இடமளிப்பது. இந்தக் காலகட்டத்தில் அவர் மதுரை, காந்தி மியூசியத்திலேயே தங்கியிருந்து பணிபுரிந்தார். (அவர் கடைசியாகப் பார்த்த வேலை இதுதான். அவருடைய நடத்தை அவரை அங்கிருந்தும் வெளியேற்றியது.) அப்போது அவர் காந்தி மீது தீவிரப் பற்றுக்கொண்டார். அரசியல் - சமூக - கலாசாரத் தளங்களில் நேர்ந்துள்ள அவலத்தைப் படைப்புமொழியில் இந்தக் கதை, தொனி நுட்பங்களுடன் விரித்திருக்கிறது.

 அதுபோன்றே, இந்தக் காலகட்டக் கதைகளில் `மனிதன்’, `லட்சியம்’, `டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டியவை. ஜி.என்-னின் மிகச்சிறந்த கதையான `டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ மாயப் புதிர்த்தன்மைகொண்டது. `குறத்தி முடுக்கு’ குறுநாவலில் தேவயானை என்கிற இளம் விலைப்பெண் பற்றிய கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருக்கும் பகுதியை மீள்படைப்பாக்கம் செய்து இந்தக் கதையைப் படைத்திருக்கிறார். இந்தக் கால இடைவெளியில் அவருடைய படைப்புமனம் கலைவெளியில் விகாசம் பெற்றிருப்பதை இந்தக் கதை நிரூபணம் செய்கிறது.

ஜி.நாகராஜனின் நாவல் படைப்புகளிலும் சரி, அநேகமான சிறுகதைகளிலும் சரி, ஆண்-பெண் உடலுறவுச் சம்பவங்கள் சகஜமாக இடம்பெற்றிருக்கும். ஆனால், அவை ஒருபோதும் விரசமாக வெளிப்படுவதில்லை. அதற்குக் காரணம், அவருடைய தனித்துவச் சொல்முறையான புறநிலை அணுகல்தான். அதை வாழ்வின் இயல்பான ஒரு நிகழ்வாகவே, சுபாவமான ஒரு வெளிப்பாடாகவே அந்த அணுகுமுறை முன்வைக்கிறது. தான் உருவாக்கும் ஒரு சம்பவத்தில் படைப்பாளியே உணர்ச்சிபூர்வமாகத் திளைக்கும்போதுதான் அது ஆபாசமாகவோ விரசமாகவோ உருப்பெறுகிறது. ஜி.என்-னுடைய கதை சொல்முறையில் இத்தகைய விபரீதங்கள் நிகழ்வதில்லை.

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல்மீது ஜி.நாகராஜன் கொண்டிருந்த வசீகர ஈடுபாடு அவருடைய படைப்புலகமாகியது மட்டுமில்லாமல், பின்னாளில் அவருடைய சுய வாழ்க்கையையும் விளிம்புநிலைக்குத் தள்ளியது. வாழ்க்கையும் படைப்பும் ஒன்றானது, நம் காலத்திய அபூர்வ நிகழ்வு.

1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி, மதுரையில் பிறந்தார் ஜி.நாகராஜன். பெரும்பாலும் அவருடைய படைப்புலகின் பின்புலமாக இருந்த அந்தக் கோயில் நகரத்தில், தன் வாழ்வின் பெரும்பகுதியை வெவ்வேறு கோலங்களிலும் வெவ்வேறு சாத்தியங்களிலும் வாழ்ந்த அந்த மதுரை நகரில், 1981-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம்  நாள் நள்ளிரவுக்கும் அதிகாலைக்குமிடையே மதுரை அரசு மருத்துவமனையின் பொது வார்டில் எந்த விதத் துணையுமின்றி மரணமடைந்தார். எனக்குத் தெரிந்தவரை, தன் காலத்திய வாழ்வில் மாறுபட்ட மற்றும் அதிகபட்ச சாத்தியங்களில் தன் வாழ்வை ஈடுபடுத்திக்கொண்ட ஓர் அரிய மனிதர், ஓர் அபூர்வப் படைப்பாளி ஜி.நாகராஜன். அவருடைய மரணத்தின்போது பொருள்களாக அவரிடம் எஞ்சியிருந்தவை, சார்மினார் சிகரெட் பாக்கெட் ஒன்றும் ஒரு தீப்பெட்டியும் சிறு கஞ்சாப் பொட்டலமும்தான்.

ஜி.நாகராஜனுடைய வாழ்க்கைப் பாதை இரு வேறு காலகட்டங்களால் ஆனது.

1974-ம் ஆண்டு வரையிலான காலம், அவர் ஆளுமையின் சகல அம்சங்களோடும் உச்சத்தை நோக்கிச் சென்றது. அதற்குப் பின்னான ஏழு ஆண்டுகள், ஒரு பெரும் சரிவுப் பாதையில் வழுக்கிச் சென்றது. இளமையிலேயே தன் தோற்றத்தில்கூட சாதி அடையாளத்தை பிரக்ஞைபூர்வமாக அகற்றிவிட்டிருந்த ஜி.என்., கடைசி ஏழு ஆண்டுகால வாழ்க்கைமுறையின் மூலம் தன் வர்க்க அடையாளங்களையும் அறவே துறந்தார். அவருடைய படைப்புகள் எப்போதுமே இந்த இரு அடையாளங்களுக்கும் எதிராகவே உருவாகியிருக்கின்றன.

1974-ம் ஆண்டு வரை (அதாவது, அவருடைய 45-வது வயது வரை) உடல் நலமும் தோற்றமும் பொலிவை இழந்துவிடவில்லை. பிறகு மெள்ள மெள்ள சிதைவுக்கு ஆளானது. தோற்றம், உணவு, உடை, இருப்பிடம், நடத்தை எனச் சகல அம்சங்களிலும் சரிவு நிகழ்ந்தது. வீடற்றவராகவும் வேலையோ வருமானமோ இல்லாதவராகவும் ஆகி, ஒரு நாடோடியைப்போல் திரிந்த காலம். அதிலும் குறிப்பாக அவருடைய கடைசி நாள்கள் மிகவும் துயரமானவை.

நேரடிப் பழக்கத்திலிருந்தும் திரட்டிய தகவல்களிலிருந்தும் அவர் வாழ்க்கையின் போக்கு பற்றிய சிறு கோட்டுச் சித்திரம் இது. ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஆசிரியராக, தீரமிக்கக் கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல்கொண்டவராக, அதைப் பேணிப் பராமரிப்பவராக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கிலமொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, போதையில் களித்திருப்பவராக, வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவராக, சாதி, வர்க்க அடையாளங்களைத் துடைத்தெறிந்தவராக, வாழ்வின் சரிவுப்பாதையில் தயக்கமின்றி கால் வைப்பவராக, அந்தப் பாதையில் சல்லென வழுக்கிச் செல்பவராக, வீடற்றவராக, வீதிகளில் படுத்துறங்குபவராக, போதைகளின் தேவைக்காக இரைஞ்சுபவராக, ஒரு நாடோடியாக, வாழ்வின் இறுதியில் மோசமான நோயாளியாக, தன் 52-வது வயதில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அநாதையாக மடிந்தவர்.

கடைசிக்கால நாடோடி வாழ்க்கை, அவருடைய தேர்வா, உள்ளார்ந்த விருப்பமா, அது அப்படியாக அமைந்ததா என எதையும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. எல்லாவற்றின் பின்னங்களாலும் அது நேர்ந்திருக்கலாம். எது எப்படியென்றாலும், வாழ்க்கையை அதன் அதிகபட்ச சாத்தியங்களில் வாழ்ந்து பார்த்த நம் காலத்திய அபூர்வம், ஜி.நாகராஜன்.

ஜி.நாகராஜன் இறந்து 35 ஆண்டுகளாகிவிட்டன. வாழ்ந்த காலத்தில் அவர் அதிகம் அறியப்படாத ஓர் எழுத்தாளர். அவருடைய இறுதிச் சடங்கின்போது உறவினர்களும் நண்பர்களுமாக அதிகபட்சம் 15 பேர் இருந்திருப்பார்கள். எழுத்துகள் உரிய கவனிப்பைப் பெற்றிருக்கவில்லை. ஆனால்,  இன்று நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில்  ஒப்பற்ற ஓர் ஆளுமையாக அவர் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய படைப்புலகமும் படைப்பாக்க நெறிகளும் நவீனத் தமிழ் இலக்கியம் அதுவரை அறிந்திராதவையாக, தனித்துவமிக்கவையாக இன்று அடையாளம் காணப்படுகின்றன; கொண்டாடப்படுகின்றன. ஒரு புது இலக்கியப் போக்குக்கான ஒளியாகவும் அவருடைய எழுத்துகள் அவதானிக்கின்றன. மேலும், நம்முடைய பெருமதியான படைப்பாளியாக அவருடைய படைப்புகள் உலக மொழிகளில் பெயர்க்கப்படுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய மூன்று புத்தகங்கள் அவராலேயே வெளியிடப்பட்டு, முறையாக விநியோகிக்கப்படாததால் சரியாக அறியப்படாமலும் போயின. இன்று, அவருடைய எல்லா எழுத்துகளும் தொகுப்பாகவும் தனித்தனிப் புத்தகங்களாகவும் விடாது வெளியிடப் படுகின்றன. இதன் காரணமாக, அவருடைய எழுத்துகளின் தனித்துவம் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு முக்கியத்துவமும் பெற்றிருக்கிறது.விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கை பற்றிய கவனம் என்பது, இன்று அரசியல், கலை இலக்கியக் கோட்பாட்டுப் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் வலுவான தடம் பதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த வாழ்வின் வசீகர ஈர்ப்போடு அந்த மக்களின் வாழ்வை கலை நேர்த்தியோடு பதிவுசெய்தவர் ஜி.நாகராஜன்.அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறை மீதான அலாதியான ஒரு கவர்ச்சி நவீனத் தமிழ்ச் சிற்றிதழ் இயக்க இளம் எழுத்தாளர்களிடம், 1980-களின் பிற்பாதியிலும் 90-களின் தொடக்க ஆண்டுகளிலும் நிலவியது. சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு கலகக்காரனின் வாழ்வாகக் கருதப்பட்டுக் கொண்டாடப் பட்டது. இதன் காரணமாகவும் அவருடைய மரணத்துக்குப் பிறகு அவர் மீதும் அவருடைய எழுத்துகள் மீதும் ஒரு கவனக்குவிப்பு ஏற்பட்டது.

ஜி.என்-னின் மரணத்துக்குப் பிறகு, அவரை மையப்பாத்திரமாகக்கொண்ட ஐந்து சிறுகதைகள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. இது, உலக இலக்கியப் பரப்பில்கூட நிகழ்ந்திராத ஓர் அபூர்வம். அவை: அசோகமித்திரனின் `விரல்’ (1984), திலீப் குமாரின் `ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ (1985), பிரபஞ்சனின் `ஒரு நாள்’ (1993), சுந்தர ராமசாமியின் `நண்பர் ஜி.எம்.’ (2004) மற்றும் நான் எழுதிய `விலகிய கால்கள்’ (2015). இந்தச் சிறுகதைகள் ஜி.என்-னின் நடத்தையை மையமாகக்கொண்டவை. இந்தக் கதைகளின் சம்பவங்கள் அவருடைய வாழ்நாளில் நிகழ்ந்தவை என்றாலும் இந்தக் கதைகள் எல்லாமே அவருடைய மரணத்துக்குப் பின்னர்தான் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும், இவை அவருடன் இருக்க நேரிட்ட ஒரு நாளின் சம்பவங்களையே களமாகக்கொண்டிருக் கின்றன. அவை, ஜி.என்-னின் சில விசித்திர நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கின்றன. ஒரு சம்பவம்- அவருடைய இருப்பில், அதை அவர் எதிர்கொள்ளும் முறையில், அப்போது வெளிப்படும் அவருடைய நடத்தையில் அசாதாரணமானதாக மாறிவிடுகிறது. அந்தச் சம்பவத்தின்போது அவரோடு இருக்க நேர்ந்த சக எழுத்தாளரிடம் அது அவரை உலுக்கி எடுக்கும் ஒரு விசித்திர அனுபவமாக உள்ளுறைந்துவிடுகிறது. பிறகு, ஒரு படைப்பாக்க மனநிலையில் அது மேலெழுந்து படைப்பாகப் புத்தாக்கம் பெறுகிறது.

ஒரு படைப்பாளி, தன் மரணத்துக்குப் பின்னும், தன் சமகாலத்திய மற்றும் அடுத்த தலைமுறை படைப்பாளிகளின் படைப்பாக்கங்களில் ஒரு மையப் பாத்திரமாக அமைவது என்பது ஓர் அபூர்வக் கலைநிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. தன் மரணத்துக்குப் பின்னும் ஓர் அசுர நிழலாகக் காலத்தில் அவர் தொடர்ந்துகொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

ஜி.நாகராஜனின் எழுத்தும் வாழ்வும் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் அபூர்வ நிகழ்வு. அவருடைய பிரத்தியேகமான உலகம் கால தீபத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. அதன் ஒளி, வாழ்வு குறித்தும் மனிதர்கள் குறித்துமான நம் பார்வைக்குப் புது வெளிச்சம் தந்திருக்கிறது. காலத்தில் பிரகாசிக்கும் படைப்பு மேதையாக அவர் நிலைபெற்றிருக்கிறார். ஓர் அழியாச் சுடராக அவர் என்றும் நிலைத்திருப்பார். இனி வரும் காலங்களும் அந்தச் சுடரில் ஒளி பெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism