Published:Updated:

அடுத்து என்ன? - சோ.தர்மன்

அடுத்து என்ன? - சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சோ.தர்மன்

பிதாவே இவர்களை...படங்கள் : எல்.ராஜேந்திரன்

அடுத்து என்ன? - சோ.தர்மன்

பிதாவே இவர்களை...படங்கள் : எல்.ராஜேந்திரன்

Published:Updated:
அடுத்து என்ன? - சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சோ.தர்மன்

ரு படைப்பாளி, பரந்தவெளியில் சுதந்திரமாகப் பறந்து திரியத் தேர்ந்தெடுக்கும் இலக்கிய வடிவமே `நாவல்.’ படைப்புச் சுதந்திரத்தின் அத்தனை வீச்சுகளையும் பரிசோதித்துப் பார்க்க, நாவலைவிட சிறந்த இலக்கிய வடிவம் வேறு எதுவும் இருக்க முடியாது. என்னுடைய முதல் நாவல் `தூர்வை’ 1996-ம் ஆண்டு வெளியானது. இரண்டாவது நாவல் `கூகை’ 2005-ம் ஆண்டு வெளியானது. மூன்றாவது நாவலான ‘சூல்’ 2016-ம் ஆண்டு வெளியானது. ஒவ்வொரு நாவலும் வெளிவர எடுத்துக்கொண்ட இடைவெளி பத்து ஆண்டுகள். இப்போது என்னுடைய நான்காவது நாவலைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக் கிறேன்.

தினமும் என்னுடைய பாத்திரங்களைச் சுமந்துகொண்டு குளக்கரையில் அமர்கிறேன். பஞ்ச பாண்டவர்கள் நீர் அருந்தி மயங்கி, பிறகு உயிர்த்தெழுந்த அதே குளக்கரை. துத்திப்பூவும், துளசியும், ஆவாரம் பூக்களும், ஆம்பலும், குருக்கத்திச் செடிகளும்,       எருக்களையும், சிறுநெருஞ்சிப் பூக்களும் அடர்ந்த குளக்கரையில் என்னுடைய பாத்திரங்களை இறக்கிவிட்ட பிறகு, தூண்டில் போட்டுக் காத்திருக்கிறேன். குளத்துக்குக் காவல் இருக்கும் யக்ஷனும் நானும் நண்பர்களாகிவிட்டபடியால், எனக்கு எந்தவிதமான கட்டுப்பாடுமில்லை. என் பாத்திரங்களும் யக்ஷனுடன் பரிச்சயப்பட்டுவிட்டன.

அடுத்து என்ன? - சோ.தர்மன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதன்முதலில் நான் குளக்கரையில் வந்து அமர்ந்து தண்ணீரை உற்றுப் பார்க்கையில், நீரின் மேற்பரப்பில் கோலமிட்டபடியும், எழுத்துகளை உருவாக்க, குறுக்கும் மறுக்குமாக வேகமாகச் சுற்றியபடியும் இருந்தது `தானா’ பூச்சி. இவ்விதம் புரியாமல்,  “ஓயாமல் எழுதிக்கொண்டே இருப்பதால் யாருக்கு என்ன பிரயோசனம்?” என்று கேட்டேன்.

“நான் எழுதிக்கொண்டிருப்பது உலகின் தலைவிதியை. தலைவிதி புரிந்துவிட்டால் உலகில் சாவு ஏது, வாழ்வு ஏது? உன் தலைவிதி தெரிந்தால், நீ இந்தக் குளக்கரைக்கு வர மாட்டாய் அப்பனே. என்னிடமிருந்து
தான் ஆதியில் முதல் எழுத்தே பிறந்தது என்பது யாருக்குத் தெரியும்? `நீரின்றி அமையாது உலகு’ என்கிறானே உன்னுடைய பூட்டனுக்குப் பூட்டன், உலகே நீர் என்றான பிறகு, எழுத்து மட்டும் வேறு எங்கிருந்தாவது வந்திருக்குமா என்ன? கோணங்கி எழுதக் கற்றுக்கொண்டது என்னிடமிருந்துதான் என்பது உனக்குத் தெரியுமா?”

“எதை வைத்து நம்புவது?”

“என் எழுத்து புரியவில்லை என்று இங்கு வந்தவுடன் சொன்னதை அதற்குள்ளாகவா மறந்துவிட்டாய்? நான் நீர்மேல் எழுதுகிறேன், அவன் தாள்களின் மீது எழுதுகிறான் அவ்வளவுதான் வித்தியாசம். முழுமையாக நீரைப் புரிந்துகொண்டால், அதன்மேல் எழுதும் என் எழுத்தும் உனக்குப் புரியும்.”

அடுத்து என்ன? - சோ.தர்மன்கொக்கு உதிர்த்த தூவி ஒன்று நீரின் மேல் மிதந்துவந்து தூண்டிலின் அருகில் ஒதுங்கியது. என்ன சேதி என்று எடுத்துப் பார்த்தேன், முத்து முத்தான எழுத்துகள். என் முப்பாட்டன் சத்திமுற்றத்தானின் `நாராய்... நாராய், செங்கால் நாராய்...’ பாடல் எழுதப்பட்டிருந்தது. பாடலின் கீழே குறிப்பு ஒன்று காணப்பட்டது. `நான் சைபீரியாவிலிருந்து வந்திருக்கிறேன். இந்தப் பாடல்தான் என்னை இங்கே இழுத்து வந்தது. எங்கள் மத்தியில் இந்தப் பாடல் மிகப் பிரபலம். நாரைகள் இருக்கும்வரை இந்தப் பாடல் அழியாது. கடல் வற்றிப்போகும் வரை நாரைகள் இருக்கும். பிரபஞ்ச, பிரளயப் பேரழிவுகள் வந்தாலும், கடல் அலைகளில் மிதக்கும் பறவைத் தூவிகளில் படிந்துவிட்ட இந்தப் பாடலுக்கு அழிவேது?
 
உச்சிப்பனையின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மீன்கொத்தி, எறி பந்தாக நீருக்குள் பாய்ந்து அலகில் மீனைக் கவ்வியபடி மிதந்து, இறக்கைகளை உதறி, நீரை உதிர்த்துவிட்டு மீண்டும் பனையில் போய் உட்கார்ந்தது. லேசாக அண்ணாந்து பார்த்தேன். “உன் தூண்டிலில் மீன்கள் படவில்லை என்ற வருத்தம் உன் முகத்தில் தெரிகிறது. பைத்தியக்காரப் படைப்பாளியே, கொக்குகளும் நாரைகளும் உள்ளானும் சிறகியும் தண்ணீருக்குள் தவமிருக்கின்றன. நான் மர உச்சியில் தவமிருக்கிறேன், உன்னைப்போல் கரையில் காத்திருக் கவில்லை. தவத்துக்கும் காத்திருப்புக்கும் வித்தியாசம் தெரியுமா உனக்கு? தவம் இருப்பது எப்படி என்று நாரையிடம் போய்க் கற்றுக்கொள். காற்றிலே கதை எழுதும் கலையை ஆனைச்சாத்தன் குருவியிடம் போய்க் கேள்.”

ஆண்டாளை நீராட எழுப்பிய அலார மணி ஆனைச்சாத்தன். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் அன்றாடம் நீராடிய அபூர்வக் காட்சியை, தினம் தினம் பூச்சியைப் பிடிக்கும் சாக்கில் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து வட்டமடித்து எழுத்துருவாக்கிக் கதைகதையாகக் காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது ஆனைச்சாத்தன் குருவி.

அன்றாடம் என் உருவம் மட்டுமே குளக்கரையில் அமர்ந்திருக்கும். நான் வாசம் செய்வதோ என் பாத்திரங்களுடன். போன வாரம் நானும் பிரிட்டிஷ் மேஜர் வேல்ஸ் துரையும் பேசிக்கொண்டிருந்தோம். இரண்டாம் பாஞ்சால யுத்தத்தில் கோட்டைக்குள்ளிருந்து கேட்ட குலவைச் சத்தத்துக்குப் பயந்து தன்னுடைய முற்றுகையைக் கைவிட்டு, பயத்துடன் தன்னுடைய சைன்யங்களை மீண்டும் பாளையங்கோட்டைக்கே திருப்பிய கதையையும், குலவை என்றால் என்ன என்று வினவ, தாமிரவருணிப் பாசனத்தில் நெல் நாற்று நடவு செய்துகொண்டிருந்த பள்ளியர்களைக் கூட்டிவந்து குலவை போட்டுக் காண்பித்தபோது தான் விழுந்து விழுந்து சிரித்ததையும், அதன் பிறகே ஊமைத்துரையுடன் சமரில் ஈடுபட்ட கதையையும் சொன்னார்.

தண்ணீருக்குள் கூட்டமாக நிற்கும் கொக்குகளைப் பார்க்கும்போதெல்லாம், பனிமயமாதாவின் மணிச்சத்தம் கேட்டு, ஜெபம்  பண்ணச் செல்லும்  கன்னியாஸ்திரீகளின் ஞாபகம்தான் வருகிறது. இந்தக் கன்னியாஸ்திரீ மடத்தின் சமையல்காரத் திருநங்கை ‘செந்தூரானின்’ கதையைத் தனிப் புத்தகமாகவே எழுதலாம். வண்டி வண்டியாக வரும் காமக்கதைகள்.

உலகப்போரில் தன் கால் ஒன்றை இழந்து, மரக்காலுடன் உயர்ந்த குதிரையில் பாய்ந்து, தடதடத்துச் செல்லும் மரக்கால் பாண்டியன் சொல்லும் போர்க்காலக் கதைகள், தோணியிலிருந்து நிலக்கரிகளைச் சுமந்து ரயில் வேகன்களில் ஏற்றும் ஆயிரமாயிரம் பெண்களின் கதைகள், அடையாளமே தெரியாத கறுத்த உருவங்களின் சோகப் பதிவுகள், பன்றிக்குட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலக்கரித் துகள்களின் நிறம் மாறிய உருவங்கள், தண்டவாளத்தில் கைவைத்து உறங்கிய சுடலை மேஸ்திரியின் கைகளைச் சிதைத்துவிட்டுப் போன கூட்ஸ் வேகன், இரண்டு மொட்டைக் கைகளுடன் மேஸ்திரியாக அலையும் சுடலையின் கதைகள், அந்தப் பெரிய நகரத்தின் அத்தனை பிணங்களையும் தன்னகத்தே வாங்கிக்கொள்ளும் பன்னிரண்டு சுடுகாடுகள், சாதிவாரியாகத் தனித்தனி வாசல்கள், சுடுகாட்டு வாட்ச்மேன் அரியான் தோளிலும் மணிக்கையிலும் வெள்ளிக்காப்பு, தடிக்கம்பு, கிடா மீசை, ரத்தக் கண்கள், தினமும் பேய்களுடன் வாசம்செய்யும் அரியானின் ஆயிரமாயிரம் கதைகள், பிணம் எரியும் வெளிச்சத்தில் பெண்களைப் புணரும் சாராய வியாபாரி குட்டியானின் கதைகள் என ஏராளம் ஏராளம்...

ஃபாதர்களின், சிஸ்டர்களின் பல்வேறு கதைகள். கழுத்தில் தொங்கும் சிலுவைகள் சொல்லும் சரித்திரங்கள். ஒருநாள், ஏஞ்சல் சிஸ்டரைப் பார்க்கப் போயிருந்தேன். கன்னியாஸ்திரீ மடம் மௌனமாக இருந்தது. என்னைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் வரவேற்கும் சிஸ்டர், அன்று சோகமாக வந்தாள். கண்கள் சிவந்திருந்தன. அழுதிருக்கிறாள் என்பதைக் கண்டுகொண்டேன். துறவியின் கண்களில் கண்ணீர் வரக் காரணம் வேண்டுமல்லவா?  ‘தன்னைப் பார்க்க அம்மாவும் அப்பாவும் வந்ததாகவும், தன்  அப்பா, அம்மாவுக்கு ஆசையாக மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்ததாகவும், அந்தப் பூவை அம்மா தன் தலையில் வைக்காமல் சாக்கடையில் வீசியதாகவும், மகள் சன்னியாசியாக இருக்கும்போது அவளின் முன்னால் நான் பூ வைப்பதா என்று அம்மா மறுத்து  அழுததாகவும் சொல்லி என்னால்தானே அம்மாவால் பூ வைக்க முடியவில்லை என அழுதாள் ஏஞ்சல் சிஸ்டர்.

நான் வேண்டுமென்றே ஏஞ்சலை `சிஸ்டர்... சிஸ்டர்!’ என்றே எப்போதும் கூப்பிடுவேன். “எல்லோரும் இருக்கும்போது என்னை `சிஸ்டர்’ என்று கூப்பிடு. தனியாக இருக்கும்போது என் பெயர் சொல்லிக் கூப்பிடு.” என்று தலையில் குட்டி ஒரு வெள்ளை வெளேர் முத்தம் கொடுப்பாள் ஏஞ்சல் சிஸ்டர். அவளின் அக்கா பிரசவத்தின்போது இறந்துவிட்டதால் பிரசவத்தைப் பற்றி எண்ணியே பயந்து கன்னியாஸ்திரீயாகிவிட்டாள் ஏஞ்சல் சிஸ்டர்.

அடுத்து என்ன? - சோ.தர்மன்

இடையிலேயே தன் `குரு’ பட்டத்தை நிராகரித்து, உடுப்பைக் கழற்றிவிட்டுக் காதல் கல்யாணம் பண்ணிக்கொண்ட பீட்டர் ஃபாதரின் கதை, பைத்தியமாகி ஃபாதர்களின் ரகசியங்களைப் பேசிப் பேசிச் சிரித்த அதிரியான் ஃபாதரின் அநியாயச் சாவு, ஞானமணி ஃபாதரின் காமக் கதைகள், அதிசயம் ஃபாதர், தாமஸ் ஃபாதர், பங்குராஜ் ஃபாதர், மைக்கேல் ஃபாதர் போன்றோரின் முப்பரிமாணக் கதைகள் என எவ்வளவோ...
இறைப்பணிக்காக வந்து, இறைப்பணியைப் பக்கபலமாக்கிக்கொண்டு, கல்விப்பணியைக் கையில் எடுத்து ஆயிரமாயிரம் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் மிஷனரிகளின் நடைமுறைகள் மீது பல விமர்சனங்கள் உள்ளன.நிறுவனமயமாக்கப்பட்ட இயேசுவின் ரத்தம் எப்படியெல்லாமோ விற்கப்படுகிறது. ஏற்கெனவே, இளைஞர்களுள் படிந்திருக்கும் காந்தியத் தாக்கம் போதாது என்று இயேசுவின் போதனைகள் வேறு... இவை அறச் சீற்றம் மறந்த பொம்மைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்!

அடுத்து என்ன? - சோ.தர்மன்

போப்பாண்டவரின் பிரதிநிதிகளாகச் சிலுவை அணிந்த சீடர்கள், `ஃபாதர்கள்’ என்ற பட்டத்துடன், குருத்துவ அடையாளம் ஏதுமின்றி கல்லூரி மாணவனைப்போல் அல்லது கதாநாயகனைப்போல் புல்லட் வண்டிகளில் புயலாகப் பறந்து ஊழியம் செய்கிறார்கள். தேவாலயங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. வேதக் கோயில் இல்லாத ஊர் இல்லை. எல்லாக் கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோத, உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது. கோர்ட்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கைகளும் கூடிக்கொண்டே போகின்றன. மதங்கள் மனிதர்களிடம் அன்பை விதைப்பதாக இருந்தால் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் குறைய வேண்டுமே. ஆனால், யதார்த்தம் அது இல்லையே... உண்மையில் இங்கே மதத்தின் வேலைதான் என்ன?

இரண்டு சதவிகித மக்களைக்கொண்ட மதத்தின் பெயரால் ஏறக்குறைய நாற்பது சதவிகிதம் கல்வி நிறுவனங்களை நடத்த அரசு அனுமதித்திருக்கிறது. இந்த முரண்பாட்டை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. வேலை நியமனத்துக்கு அரசைக் கேட்க வேண்டியதில்லை. ஆசிரியர்களின் கல்வித் தகுதியை யாரும் கேள்வி கேட்க முடியாது. அரசின் நிதி தவறாமல் கொடுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம்கூட தலையிட  முடியாத தனித்த அதிகாரம் படைத்தவை ‘சிறுபான்மை’ப் பள்ளிகள். போப்பாண்டவர் மட்டுமே இவற்றைக் கேள்வி கேட்க முடியும். இவை அனைத்தையும் குறித்து விரிவாகப் பேசுகிறது இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவல். ஒருவேளை இந்த நாவலை வெளியிட்ட பிறகு, தடை கேட்டாலும் கேட்பார்கள் இடதுசாரிகள். ஏனெனில், இவர்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள். ஆமென்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism