Published:Updated:

ஹாதியா... மாற வேண்டியது எது?

ஹாதியா... மாற வேண்டியது எது?
பிரீமியம் ஸ்டோரி
ஹாதியா... மாற வேண்டியது எது?

ஹாதியா... மாற வேண்டியது எது?

ஹாதியா... மாற வேண்டியது எது?

ஹாதியா... மாற வேண்டியது எது?

Published:Updated:
ஹாதியா... மாற வேண்டியது எது?
பிரீமியம் ஸ்டோரி
ஹாதியா... மாற வேண்டியது எது?

‘ஹாதியா’ என்ற பெயரோடு கட்டுரையைத் தொடங்குவதே பலருக்கு அதிருப்தி தரக்கூடும். விருப்பமோ, இல்லையோ... நாம் அனைவரும் ஹாதியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன்.

கேரளாவைச் சேர்ந்த அகிலாவுக்கு இஸ்லாம்மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. எனவே, 2015 செப்டம்பரில் இஸ்லாமியராக மாறி, தன் பெயரை ‘ஹாதியா’ என மாற்றிக்கொள்கிறார். இது, அவரின் தந்தை அசோகனுக்குப் பிடிக்கவில்லை. மகளை மீண்டும் அகிலாவாக ஆக்கத் துடிக்கிறார். விளைவு, நீதிமன்றத்தில் தந்தை சார்பாக வழக்குத் தொடுக்கப்படுகிறது. ‘மதம் மாறுவது அவரவர் விருப்பம்’ எனத் தீர்ப்பு வந்தது. ஹாதியாவுக்கு சிக்கல்கள் தற்காலிகமாக ஓய்கின்றன. இஸ்லாமிய மேட்ரிமோனி வெப்சைட்டில் திருமணத்துக்காக தன் சுயவிவரங்களைப் பதிந்தார் ஹாதியா. அங்கே அறிமுகமாகும் ஷாபினை, 2016 டிசம்பரில் திருமணமும் செய்துகொள்கிறார்.

ஹாதியா... மாற வேண்டியது எது?

தந்தை மீண்டும் நீதிமன்றம் போகிறார். இம்முறை ‘மதம் மாற்றி என் மகளைத் தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஷாபினுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. அந்த இஸ்லாமியத் திருமணத் தளமே, அந்த அமைப்புகளுக்காக இயங்குவதுதான்’ என்பது அவர் சொல்லும் குற்றச்சாட்டு. இதை விசாரிக்கும் கேரள உயர் நீதிமன்றம், ‘ஹாதியாவின் திருமணம் செல்லாது’ என அறிவிக்கிறது. ‘ஹாதியா பலவீனமானவர். எனவே, தங்களின் நோக்கங்களுக்காக அவரை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ என அதற்கு நியாயமும் கற்பிக்கப்படுகிறது. ‘ஹாதியா தன் பெற்றோருடன் இருப்பதே பாதுகாப்பு’ எனத் தீர்ப்பு சொல்கிறது. வீட்டுச்சிறையில் அடை படுகிறார் ஹாதியா. இதற்குள் விஷயம் தேசிய அளவில் விவாதிக்கப்படும் சப்ஜெக்ட்டாக மாறுகிறது. ‘லவ் ஜிகாத்’ என உக்கிரமாகக் குரல் கொடுக்கின்றன இந்துத்துவ அமைப்புகள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் ஷாபின். அதை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ‘இது லவ் ஜிகாத்தா இல்லையா என்பதைத் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும். அதுவரை ஹாதியா அவரின் பெற்றோர் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும்’ என்கிறது. என்.ஐ.ஏ-வின் தலையீட்டை விரும்பாத கேரள அரசு, ‘ஹாதியா வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதற்கு ஆதாரம் இல்லை’ என்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வழக்கின் சமீபத்திய விசாரணையில், ‘நான் கணவருடன் செல்லவே விரும்புகிறேன். அவர் செலவில் படிக்கவே விரும்புகிறேன்’ எனத் தீர்மானமாக அறிவிக்கிறார் ஹாதியா. ‘ஹாதியா மாநில அரசின் செலவில் படிக்கட்டும். அவரைக் கணவரின் கண்காணிப்பில் விடமுடியாது. எனவே, கல்லூரி டீனே ஹாதியாவின் கார்டியன்’ என நீதிமன்றம் சொல்கிறது. இப்போது சேலம் அனுப்பி வைக்கப்பட்டு, சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பில் உள்ளார் ஹாதியா. 24 மணி நேரமும் ஹாதியாவுடன் ஒரு பெண் காவலர் இருப்பார். ‘‘நான் குழப்பத்துடன் இருப்பதாக என் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்’’ என சேலம் வந்தபிறகு சொல்லியிருக்கிறார் ஹாதியா.

ஹாதியா... மாற வேண்டியது எது?

தன் முடிவைத் தீர்மானமாகச் சொன்ன ஹாதியாவின் வயது 25. தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்றம், தன் விருப்பங்களின்படி, ஒருவர் வாழ்வதற்கு வரையறுத்திருக்கும் வயது வரம்பு 18. ‘தனிநபர் விருப்பம்/ சுதந்திரம்’ என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மிக முக்கியமான உரிமை. ‘18 வயதைக் கடந்த ஒருவர் தன் விருப்பப்படி வாழக்கூடாது, பெற்றோரின் கண்காணிப்பில்தான் வாழமுடியும்’ என்பதே அடிப்படை உரிமை மீறல்தானே!

சுருங்கச் சொன்னால், கடவுளின் தேசத்தில் நடக்கும் ‘கடவுள்கள்’ பஞ்சாயத்து இது. சரி, விருப்பத்தின் பெயரால் அவர் மதம் மாறியிருந்தால், அதில் யாருக்கு என்ன பிரச்னை? இத்தனைக்கும் ஹாதியாவின் தந்தை நாத்திகராம். ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்த பெரியாரே, ‘நானே சொன்னாலும் உன் பகுத்தறிவுக்குத் தோன்றியதைச் செய்’ என்றுதான் சொன்னாரே தவிர, தனிநபர் விருப்பத்துக்கு எதிராக நின்றதில்லை. பெரியாரைக் கேரளத்திலும் புகழ்பெறச் செய்த வைக்கம் மண்ணில்தான் ஹாதியாவின் அப்பா இன்று வாழ்கிறார்.

நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்வதற்குக் காரணமாகச் சொன்னது, ‘ஹாதியா மனதளவில் பலவீனமானவர்’ என்பதுதான். ஒருவரின் மன தைரியத்தை அளவிட அளவுகோல் இருக்கிறதா என்ன? இந்த வழக்குத் தேசிய அளவில் கவனம் பெற்ற பின்பும், கேமராக்கள் சூழ நாட்டின் உச்ச ஸ்தாபனத்தில் பதிலளித்தபோதும், ஹாதியா தான் கொண்ட முடிவில் உறுதியாகத்தான் இருந்தார். இவரா பலவீனமானவர்? சரி, ஹாதியாவின் கணவர் ஷாபின் குற்றவாளியாகவே அறியப்பட்டாலும், ‘குற்றவாளிகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது’ என்றோ, ‘அவர்களின் திருமணம் செல்லாது’ என்றோ, சொல்ல சட்டத்தில் இடமில்லை. பின் எதன் அடிப்படையில் திருமணம் செல்லாது என்ற முடிவுக்கு வரமுடியும்?
 
‘உனக்கென கனவுகள் எதுவும் இருக்கிறதா?’ - உச்ச நீதிமன்ற நீதிபதி ஹாதியாவிடம் கேட்கிறார்.

‘விடுதலை’ என ஒரே வார்த்தையில் பதிலளிக்கிறார் ஹாதியா. 18 வயது தாண்டிய ஓர் இளம்பெண்ணை ‘எனக்கு விடுதலை கொடுங்களேன்’ எனக் கெஞ்ச வைத்ததில் இருக்கிறது நம் தோல்வி.

‘ஹாதியாவை மனம் மாற்றினார்கள், ஹாதியாவைத் தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள், ஹாதியா பலவீனமானவர்’ என முழுக்க முழுக்க யூகங்களின் அடிப்படையிலேயே ஒருவரின் வாழ்க்கையைச் சிதைப்பதை, கண்டும் காணாமல்தான் இருக்கப்போகிறோமா? ஷாபின் குற்றவாளியாகவே இருந்தாலும் அவர் பொருட்டு ஹாதியாவை ‘சிறை’ வைப்பதில் குறைந்தபட்ச அறம்கூட இல்லையே!

ஹாதியா... மாற வேண்டியது எது?

ஹாதியாக்கள் நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள்.

டீக்கடைகளில் அரசியல் தவிர்த்து நமது பேசுபொருள் என்ன? அடுத்தவரின் அந்தரங்கம்தானே! ஒரு பெண் காதலை முறித்துக்கொண்டு இன்னொரு காதலைத் தேடினால், விரும்பாத திருமண உறவை உடைத்து வெளியே வந்து வேறு இணையைத் தேடினால், ஒரு ஆண் தன் விருப்பப்படி ஜோடியைத் தேர்வு செய்தால், அவர்களைப் பற்றி கமென்ட் அடிக்காமல் நம்மால் கடக்க முடிகிறதா? அவர்கள் எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதை நமக்குத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. புரிதல் இல்லாமல் இருப்பது நாம்தானே! பெற்றவர்களாகவே இருந்தாலும், அவரவர் வாழ்க்கை அவர்களுக்கு! சர்வபலமும் பொருந்திய அரசியலமைப்புக்கே இங்கே தனிநபரின் உரிமைகளிலும் விருப்பங்களிலும் தலையிட இல்லாத உரிமை, சாமானியர்களான நமக்கு மட்டும் இருக்கிறது என இன்னும் எத்தனை நாள்களுக்கு அபத்தமாக நம்பிக்கொண்டிருக்கப் போகிறோம்?

நிதர்சனம் புரிந்துகொள்ளவாவது நாம் ஹாதியாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதல் பத்தியில் நான் சொல்லாமல்விட்ட காரணமும் இதுவே. மாறவேண்டியது ஹாதியாக்களின் மதங்களல்ல... நம் மனங்கள்தான்!

- எஸ்.நித்திஷ்