Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

ங்க நாணயமா அது? அரண்மனை வேலைக்காரர் கண்களை நன்றாகத் துடைத்து விட்டு மீண்டும் பார்த்தார். நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தின் அடியில் நாணயம் ஒன்று கிடந்தது. அவர் சுற்றும்முற்றும் பார்த்து, யாரும் அந்த அறையில் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டார். தனது வேலையைத் தொடருவது போன்ற பாவனையுடன் பாத்திரத்தை நெருங்கினார். உற்றுக் கவனித்தார். நிச்சயம் தங்க நாணயமேதான்!

எடுக்கலாம் என்ற நினைப்புடன் பாத்திரத்துக்குள் கைவிட்டார் வேலைக்காரர். திரவத்தில் கை நனையவும் அலறினார். பதறி, கையை உதறித் துடித்தார். அந்தச் சத்தம் கேட்டு மன்னர் அங்கே பிரசன்னமானார். அவரது உதட்டில் வெற்றிப் புன்னகை ஒன்று முடி சூடியிருந்தது. கண்கள், ‘மாட்டிக் கொண்டாயா?’ என்று ஏளனமாகக் கேட்டன.

அது, தங்க நாணயம்தான். ஆனால், அந்தத் திரவம் நீர் அல்ல; ஏதோ ஓர் அமிலம். வேலைக்காரர்களின் நேர்மையைச் சோதிக்க மன்னர் அடிக்கடி கையாண்ட உத்தி இது. அந்த அன்புக்குரிய மன்னரது பெயர் ஃபுவாட் (Fuad). பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் எகிப்தையும் சூடானையும் ஆட்சி செய்த முகமது அலி பரம்பரையில் வந்தவர். அந்த ராஜ்ஜியத்தின் ஒன்பதாவது ஆட்சியாளர்.

ஃபுவாடுக்கு எங்கும் எப்போதும் எதிலும் சுத்தம் வேண்டும். தூசியும், அழுக்கும், நாற்றமும் ஆகவே ஆகாது. ஆகவே வேலைக்காரர்களைப் படுத்தியெடுப்பார். ‘அதைத் துடை. அங்கே பார் அழுக்கு.’ ஒரு நாளில் எத்தனை முறை தம் கைகளைக் கழுவுவார் என்பதற்கெல்லாம் கணக்கே கிடையாது. இதை Mysophobia என்பார்கள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

ஃபுவாடின் மனைவிகளும் அவரை எப்போது கைகழுவலாம் என்ற வெறுப்புடன்தான் காத்திருந்தனர். அப்பேர்ப்பட்ட சந்தேகப் பேர்வழி அவர். மனைவிகள் தம்மை விட்டு ஓடிவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை அந்தப்புரத்துக்குள்ளேயே சொகுசு அறைகளில் சிறை வைத்திருந்தார். ஷிவாகியார், முதல் மனைவி. இருவருக்கும் கி.பி. 1895-ல் திருமணம் நடந்தபோது, அவர் வெறும் இளவரசரே. பிள்ளைகள் பிறந்தாலும் அவர்களுக்குள் காதல் சுரக்கவே இல்லை. ஒரு தகராறு. அதில் ஷிவாகியாரின் சகோதரர், ஃபுவாடைத் துப்பாக்கியால் சுட்டார். உடலில் தோட்டாக்கள் பாய்ந்தாலும் உயிருக்குச் சேதாரமின்றிப் பிழைத்தார் ஃபுவாட். தொண்டையில் பாய்ந்த தோட்டாவை மட்டும் முழுமையாக நீக்க முடியவில்லை. இச்சம்பவத்துக்குப் பின் ஷிவாகியாரை விவாகரத்து செய்தார்.

‘தொண்டையில் குண்டடிபட்டால், மாபெரும் மக்கள் தலைவராகலாம்’ என்பது ஃபுவாட் விஷயத்திலும் நடந்தது. கி.பி. 1917-ல் ஃபுவாடின் மூத்த சகோதரரும், எகிப்தின் சுல்தானுமான கமீல் இறந்துபோனார். ஃபுவாட், அடுத்த சுல்தான் ஆனார். எகிப்தில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை எதிர்த்து 1919-ல் மாபெரும் புரட்சி வெடித்தது. அதன் விளைவாக எகிப்தில் தன் ஆதிக்கத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்த பிரிட்டன், அதற்குப் பெயரளவில் சுதந்திரம் வழங்கியது(1922). அதாவது வெளியுறவு, ராணுவம் உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் பிரிட்டனின் தலையீடு இருக்கும்.

அதன்பிறகு சுல்தான் ஃபுவாட், தன்னை ‘மன்னர் ஃபுவாட்’ என்று அறிவித்துக்கொண்டார். தன்னைவிட 25 வயது இளையவரான நஸ்லி ஷப்ரி என்ற பெண்னை இரண்டாவது திருமணமும் செய்திருந்தார். அந்தப் பெண்ணுடனும் சந்தேகம் சூழ்ந்த தாம்பத்யமே தொடர்ந்தது. ஐந்து குழந்தைகள் பிறந்தன. நான்கு இளவரசிகள். ஓர் இளவரசன். ஜோதிடர் ஒருவர் ‘F என்று ஆரம்பிக்கும் பெயர்தான் குழந்தைகளுக்கு உகந்தது’ என்று மன்னரிடம் சொல்லியிருந்ததால் பிள்ளைகளின் பெயர்கள் இப்படி வைக்கப்பட்டன. ஃபௌஸியா, ஃபைஸா, ஃபைகா, ஃபதியா. இளவரசனின் பெயர் ஃபாருக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

1920-ல் ஃபாருக் பிறந்தான். தாய், சகோதரிகள், பிரிட்டிஷ் டீச்சர் என்று பெண்கள் சூழ்ந்த அந்தப்புரச் சுவர்களுக்குள் அவனது பால்யம் கழிந்தது. ராஜ வாரிசு அல்லவா? மகனுக்கு மட்டும் கூடுதலாகச் சிறகுகளை அளித்தார் ஃபுவாட். ஆறு மணிக்கு எழுந்ததும் உடற்பயிற்சியும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியும். பின் பாடங்கள். கணிதம் மிரட்டியது; வரலாறு வாட்டியது. ஆனால், மொழிகள் அவனுக்குப் பிடித்திருந்தன. அவனது செல்ல முயல் ஒன்றை பருந்து தூக்கிச் சென்றபோது, நாள்கணக்கில் அழுதான். ‘உயிர்களிடத்தில் அன்பு கொண்டவன்’ என்று மற்றவர்கள் சிலாகித்த போதே, தான் விரும்பாத பூனை ஒன்றின் வாலைப் பிடித்துத் தூக்கி, அதன் தலையைச் சுவரில் அடித்துக் கொன்று புன்னகை செய்தான்.

ஃபாருக்கின் 11-வது பிறந்த நாளில், அவனுக்கு ‘ஆஸ்டின் 7’ ரகக் காரைப் பரிசளித்தார் மன்னர். 15 வயதில் மோரிஸ் ரக ரேஸ் கார் அவனுக்குக் கிடைத்தது. கெய்ரோவின் சாலைகளில் இளவரசன் கார் ஓட்டி வருகிறார் என்றாலே பொதுமக்கள் பீதியாயினர். சொகுசாகவும் வசதியாகவும் வளர்ந்த இளவரசனுக்குக் கட்டுப்பாடான ராணுவப் பயிற்சியும் தேவை என்று மன்னர், அவனை பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தார். ஓராண்டுக்குள்ளாகவே ஃபாருக் திரும்பி வர வேண்டியிருந்தது. காரணம்? தொண்டையில் சிக்கிய தோட்டாவின் மீதியால், நாய் குரைப்பதுபோல பல காலமாகச் சிரமத்துடன் குரலெழுப்பிக் கொண்டிருந்த மன்னர் ஃபுவாட், தன் குரைப்பை நிரந்தரமாக நிறுத்தியிருந்தார் (1936).

அப்போது ஃபாருக்கின் வயது பதினாறுதான் என்றாலும், மைனர் மன்னராக அறிவிக்கப்பட்டார். வானொலியில் உரையாற்றிய முதல் மற்றும் ஒரே எகிப்திய மன்னர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ‘இறைவன் இந்த ராஜ்ஜியத்தை ஆளும் உரிமையை எனது இளம் தோள்களில் இறக்கி வைத்துள்ளார். நான் என் கடமைகளை நிறைவேற்ற எந்தவிதமான தியாகங்களுக்கும் தயார். என் உன்னத மக்களே! நான் கடவுளிடம் வைத்திருக்கும் விசுவாசம்போல, நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் விசுவாசத்தைக் கண்டு பெருமை யடைகிறேன்! வாருங்கள். சேர்ந்து இயங்குவோம்! வெற்றி பெறுவோம்! மகிழ்வுடன் இருப்போம்!’

இப்படி மன்னரின் குரலைக் கேட்பதெல்லாம் அந்த மக்களுக்குப் புதுசு! எகிப்தியர்களுக்கெல்லாம் உடல் சிலிர்த்தது. ‘புதிய மன்னர் வாழ்க... வாழ்க!’ என்று உதடுகள் அனிச்சையாகவே உச்சரித்தன. ஆட்சியாளர்களின் ஆரம்ப ஜோர் (மட்டும்) அட்டகாசமாகத்தானே இருக்கும்.

ஃபாருக் மைனர் என்பதால், மூவர் குழு ஆட்சியை வழிநடத்தியது. மூவரில் அஹ்மத் ஹாசனின் என்பவர் முக்கியமானவர், அனுபவஸ்தர். ஃபாருக்குக்கு அரபி மொழியும் அரசியலும் கற்றுத் தந்த வாத்தியார். ராஜமாதா நஸ்லிக்கு ‘மிக மிக நெருக்கமானவரும்’கூட. சகல சௌபாக்யங்களுடனும் சர்வ அதிகாரத்துடனும் வளர்க்கப்பட்ட எந்த இளவரசனாவது அடுத்தவரது அறிவுரையை மதிப்பானா? ஃபாருக், மூவர் குழுவின் சொற்களை மதிக்கவில்லை. மேஜர் ஆனபின் ஃபாருக், 1937, ஜூலை 29 அன்று முடிசூட்டிக் கொண்டார்.

அழிச்சாட்டியங்கள் ஆரம்பமாயின. கிளப்களுக்கும் ரெஸ்டாரன்ட்களுக்கும் செல்வார். வசதியான ஓரிடத்தில் உட்காருவார். பிரெட் துண்டுகளை உருண்டையாக உருட்டி, வருவோர் போவோர்மீது எறிந்து விளையாடுவார். வயதானவர்கள், முக்கியஸ்தர்கள் என்றாலும் அவர்கள் மீதும் ஏதாவது எறியப்படும். எரிச்சலும் கோபமும் வந்தாலும், மன்னரிடம் வெளிக்காட்டாமல் இளித்தபடிக் கடக்க வேண்டும்.

ப்ளேபாயாக சுற்றிய மன்னரின் மன்மத மனது, ஒருத்திமீது மையம் கொண்டது. 1937-ல் ஃபாருக் தன் குடும்பத்தினர் மற்றும் பரிவாரங்களுடன் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது லண்டனில் அவளைச் சந்தித்தார். பதினேழு வயது ஃபரிடா (அவர் F-ல் பின்பு வைத்த பெயர்தான்). அந்த ஆகஸ்டில் காதலைச் சொன்னார். அடுத்த ஜனவரியில் திருவிழா போலத் திருமணம். கோலாகலக் கொண்டாட்டம். கூடவே திகட்டத் திகட்ட ரொமான்ஸ். தினமும் காலையில் ஃபரிடா கண்விழிக்கும்போது, அசத்தல் பரிசுடன் கண் சிமிட்டி, உதட்டைக் குவிப்பார் ஃபாருக். தன் தந்தையைப் போலல்லாமல், மனைவிக்குச் சுதந்திரம் தந்தார். தான் போகுமிடமெல்லாம் அழைத்துச் சென்றார். ஃபாருக் அம்மை நோயால் பாதிக்கப்பட்டபோது, ஃபரிடா அங்குமிங்கும் நகராமல் கவனித்துக் கொண்டாள். நெகிழ்ந்தார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா!

இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. இளவரசிகள். ஃபெரியல், ஃபௌசியா, ஃபடியா. எகிப்தின் மன்னரான எனக்கு மகன் வேண்டாமா? அடுத்தவர்களெல்லாம் தன் ஆண்மை பற்றி இழிவாகப் பேசுவார்களே என்று ஃபாருக் தவித்தார். பாரியாள் ஃபரிடாவைத் தவிர்த்தார். உறவு கசந்தது. ஃபாருக்கின் இரவுகளெல்லாம் நைட் கிளப்களில் இனிக்க ஆரம்பித்தன.

இரண்டாம் உலகப்போர் சமயம். அச்சு நாடுகளும் நேச நாடுகளும் நேசம் தொலைத்து வெவ்வேறு அச்சுகளில் போரைத் தொடங்கியிருந்தன. உலகமே இறுக்கமானதொரு மனநிலையில் இருந்தபோதும், எகிப்து மன்னர் ஃபாருக்கின் ‘இயல்பு’ வாழ்வில் கொஞ்சம்கூடப் பாதிப்பில்லை. இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்! உலகப்போரே நடந்தாலும் இதுதான் எனது உலகம் என்று மகிழ்ந்திருந்தார்.

சரி, உலகப்போரில் எகிப்து மன்னரான ஃபாருக்கின் நிலைப்பாடு என்ன? எகிப்தில் அதிகாரத்தைத் தக்க வைத்திருந்த பிரிட்டன், நேச நாட்டு அணியில் பெரும்புள்ளி. ஆனாலும் ஃபாருக், நடுநிலைமை வகிப்பதாகத்தான் தெரிவித்திருந்தார். அவரது இதயத்திலோ அச்சு நாடுகளின் அசுரத்தலைவர் அடால்ஃப் ஹிட்லர் மௌனமாகப் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார்.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism