Published:Updated:

மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

கொதிக்கும் தமிழகம்

மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

கொதிக்கும் தமிழகம்

Published:Updated:
மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!
மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

மிழக மக்கள் எதிர்க்கும் பல திட்டங்களை விடாப்பிடியாக மத்திய அரசு செயல்படுத்தத் துடிக்கிறது. இந்த வரிசையில் மீண்டும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைத் தூசு தட்டி எடுத்திருக்கிறது மத்திய அரசு. ‘தேனி மாவட்டத்தில் வரவிருக்கும் இத்திட்டத்துக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை உடனடியாக வாங்க வேண்டும்’ எனப் பிரதமர் மோடி இந்திய அணுசக்திக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் கேபினெட் செயலாளர்    பி.கே.சின்ஹா இந்தத் திட்டத்தை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், தேனி மாவட்டம் மீண்டும் கொதிநிலைக்கு வந்துள்ளது. 

அணுசக்தி சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிக்காக ‘இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம்’ என்ற திட்டத்தை 2010-ம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கச் சரியான இடத்தைத் தேர்வு செய்ய இந்தியா முழுவதும் விஞ்ஞானிகள் இடம் தேடினர். இறுதியாக, தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் அம்பரப்பர் மலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கத் தேர்வானது. ஒரே பாறையினால் ஆன இதன் அமைப்புதான் இதற்குக் காரணம். மலையின் உச்சியில் இருந்து 1.3 கிலோ மீட்டர் கீழே, சுரங்கத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அதன் உள்ளே நியூட்ரினோ துகள்களைக் கண்டறியும் டிடெக்டர் பொருத்தப்படும். இதுவே திட்டம்.

மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்குச் சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சுழல் அமைப்புகளும், கட்சிகளும் அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க, நியூட்ரினோ ஆய்வுப் பணிகளுக்கு எதிராக சில வழக்குகள் தொடுக்கப்பட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டன. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு துடிக்கிறது.

இது தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜனிடம் பேசினோம். ‘‘நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமையவுள்ள இடம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி. பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த, யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களின் பட்டியலில் இருக்கும் ஓர் இடம். இப்பகுதியைச் சுற்றி முல்லைப்பெரியாறு உள்பட 12 அணைகள் உள்ளன. நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க, பாறையைத் துளை போட வேண்டும். அதற்குப் பல ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் உபயோகிக்கப்படும். இதனால் அணைகள் மட்டுமல்லாமல், சூழலியலும் பாதிப்புக்குள்ளாகும்.

‘இதைத் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்த முடியும்’ என்று, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல்செய்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நாங்கள் தாக்கல் செய்த வழக்கில், ‘நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைப்பதாக’ உத்தரவு வந்துள்ளது. இவ்வளவு நடந்த பின்னரும், ‘நீங்கள் உடனே ஆய்வுத்திட்டத்தைத் தொடங்குங்கள்’ என்று மத்திய அரசு கட்டளையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது சட்டத்துக்குப் புறம்பான செயல். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்’’ என்றார் அவர்.

மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றிய, நாம் தமிழர் கட்சியின் தேவாரம் நகரச் செயலாளர் குணசேகரன், ‘‘எங்கள் வாழ்வாதாரமே இந்த மலைப்பகுதியை நம்பித்தான் இருக்கிறது. அதில் கை வைப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அணுக்கழிவுகளை மறைத்து வைக்கத்தான் இந்த மலையைக் குடையத் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. எங்கள் பகுதியை செர்னோஃபில் போல தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றத்தான் இந்த அரசு முயற்சி செய்கிறது’’ என்றார்.

பொட்டிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதிக்குள் இருக்கும் பகுதிகள். பொட்டிபுரம் மக்களிடம் பேசினோம். ‘‘அம்பரப்பர் மலை எங்களுக்கு சாமி போன்றது. அதை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். முதலில் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள், ‘மலைக்கு எந்தப் பாதிப்பும் வராது. நீங்கள் மலையடிவாரத்தில் வழக்கம்போல ஆடு மாடு மேய்க்கலாம்’ என்றனர். இப்போது பல கிலோ மீட்டருக்கு மலையைச் சுற்றிக் கம்பிவேலி போட்டுள்ளனர். எங்கள் மலையை அழிக்க நாங்கள் விடமாட்டோம்’’ என்றனர் ஆக்ரோஷமாக.

மீண்டும் மிரட்டும் நியூட்ரினோ!

‘தமிழகத்திலும் கேரளாவிலும் எதிர்ப்பு எழுந்ததால், நியூட்ரினோ திட்டம் ஆந்திராவுக்குப் போகும்’ எனச் சில மாதங்களாகச் செய்திகள் பரவின. இந்தநிலையில், மீண்டும் தேனியையே குறிவைக்கிறது இந்திய அணுசக்திக் கழகம். ஹைட்ரோகார்பன், மீத்தேன், இப்போது நியூட்ரினோ எனத் தமிழகத்தைக் கொதிநிலையிலேயே வைத்திருக்க மத்திய அரசு நினைக்கிறதா?

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி