Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

அ. திராவிடமணி, காஞ்சிபுரம்.

‘நான் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது எந்த வகையில் நியாயம்? அவர், சசிகலாவால் பதவியைப் பெறவில்லை என்கிறாரா?


சசிகலா காலில் அவசரமாக விழுந்து பவ்யமாக, படிப்படியாக எழுந்ததைத்தான் படிப்படியான முன்னேற்றம் என்று சொல்கிறார்போலும். சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும் பன்னீர்செல்வமும் இப்படித்தான் படிப்படியாக விழுந்து எழுந்தார். ‘அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா’ என்ற முழக்கத்தைக் கண்டுபிடித்துப் பிரபலப்படுத்தியவர்களே இவர்கள்தான். சசிகலா குடும்பம் இல்லாமல் இவர்கள் இல்லை; இல்லவே இல்லை.

மதியாக்கூடலூர் பூவேந்தரசு, சிறுதாரை.

‘ஏற்கெனவே ஆர்.கே. நகரில் விதைத்த பயிரை இப்போது அறுவடை செய்துவிடலாம்’ என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறாரா டி.டி.வி.தினகரன்?


சூப்பர்! ஆர்.கே. நகர் மக்களுக்கு இது கவனத்தில் இருக்கட்டும். சில மாதங்களுக்குமுன் ‘கொடுத்தவர்’கள் இப்போது பிரிந்துவிட்டார்களே!

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘கமல்ஹாசன் யாருடைய கைக்கூலியாகவோ செயல்படுகிறார்’ என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?


ஆட்சிக்கு எதிராக கருத்துச் சொன்னாலே, அவர்கள் யாருக்கோ கைக்கூலிகள் என்று முத்திரை குத்தி விஷயத்தைத் திசைதிருப்பப் பார்ப்பது தவறானது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

நடூர். மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.


‘‘ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, ஜெயக்குமார் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்’’ என்று வெற்றிவேல் அதிரடியாகச் சொல்லியிருக்கிறாரே?


சபாநாயகர் பதவியில் இருந்த ஜெயக்குமார், அதிரடியாக ஒரு நாள் நீக்கப்பட்டார். அதற்கான காரணம் என்ன என்று அவர்தான் சொல்ல வேண்டும். மற்றபடி, ஜெயலலிதா இருந்தபோது முதல்வர் பதவிக்கு அ.தி.மு.க-வில் பலரும் ஆசைப்பட்டார்கள். கிடைத்தது என்னவோ பன்னீருக்குத்தான்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.


‘ஜெயலலிதாவின் கர்ச்சீப்புக்குக்கூட நான்தான் உரிமையாளர்’ என்கிறாரே ஜெ.தீபா?

நல்லவேளை, இது ஜெயலலிதாவுக்குத் தெரியாது!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி.


தி.மு.க கூறியதைவிட அதிகமான போலி வாக்காளர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் நீக்கப்பட்டுள்ளார்களே?


ஆர்.கே. நகரில் போலி வாக்காளர்களைவிட போலி வேட்பாளர்கள் அதிகமாகி வருவதைப் போலத் தெரிகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘இளம் வயதிலேயே கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வருவதற்குக் காரணம், நாம் செய்த பாவங்கள்தான்’ என்கிறாரே அசாம் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா?


நோய்கள் வருவதற்கும் பாவ புண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்? இது அபத்தமானது. பிஞ்சுக் குழந்தைகளுக்குக்கூட கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறதென்றால், அவர்கள் என்ன பாவம் செய்திருக்க முடியும்? இதுபோன்ற அபத்தமான கருத்துகளைக் கவனத்தில் கொள்ளாதீர்கள். ஹிமந்த பிஸ்வா சர்மா, அந்த ஊர் செல்லூர் ராஜுவாக இருப்பார்போல!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).


அருணாசலப் பிரதேசத்துக்கு இந்திய ஜனாதிபதி பயணம் செய்ய சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளதே?


இன்னமும் அருணாசலப் பிரதேசத்துக்குச் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது சீனா. இது மிக மோசமானது. இந்திய எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதிக்குள் இந்திய ஜனாதிபதி செல்வதற்கு இன்னொரு நாட்டின் அனுமதியோ, சிக்னலோ தேவையில்லை. இதற்கு, இந்தியா கடுமையான பதிலைத் தரவில்லை!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘இந்திரா காந்தியால் நான் அரசியலுக்கு வந்தேன்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே... இது காங்கிரஸ் கட்சிக்குப் பெருமையா?

காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் ஸ்டாலின் இப்படிச் சொல்லியிருக்கிறார். 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி, இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். அதை எதிர்த்து தீர்மானம் போட்ட கருணாநிதியின் ஆட்சி தமிழகத்தில் டிஸ்மிஸ் செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து  தி.மு.க-வினர் பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஸ்டாலினும் ஒருவர். அப்போது சென்னை மத்திய சிறையில் இருந்த ஸ்டாலின், சிறைக்காவலர்களால் தாக்கப் பட்டார். ஓராண்டுச் சிறைக்குப் பின் வெளியே வந்த ஸ்டாலின், தீவிர அரசியலில் இறங்கினார். அதை வைத்துத்தான் ‘இந்திரா காந்தியால் நான் அரசியலுக்கு வந்தேன்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதில் காங்கிரஸ்காரர்கள் பெருமைப்பட எதுவும் இல்லை.

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றப் பார்க்கிறது என்றால் காங்கிரஸ் கை ஊன்றப் பார்க்கிறதா?


பி.ஜே.பி கால் ஊன்றட்டும்; காங்கிரஸ் கை ஊன்றட்டும். ஆனால், இவை இரண்டும் அந்தந்தக் கட்சிகளின் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

‘அரசியலில் இறங்கிப் பணியாற்ற இப்போதைக்கு அவசரம் இல்லை’ என்று ரஜினி சொல்லியிருப்பது பற்றி?


‘அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை’ என்பதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். பாவம், அவரை விட்டுவிடுங்கள்!

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

எம்.ஜி.தேவசகாயம், ஐ.ஏ.எஸ் (ஓய்வு)

ஜனநாயக நாட்டில் தங்களை ஆள்வதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நாள்தான் தேர்தல். இந்த ஜனநாயகத் தெளிவு நம் மக்களுக்குக் கொஞ்சமாவது இருக்கிறதா?

தேர்தல் தேதி என்பது எம்.பி., எம்.எல்.ஏ-க்களைத் தேர்ந்தெடுக்கும் நாள் மட்டுமல்ல, நம்முடைய அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஜனநாயக தினமும்கூட. அதைப் பெரும்பான்மை மக்கள் இன்னமும் உணரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. வாக்களிப்பதை, சிலர் மட்டுமே அதற்கான உண்மையான பொருள் தெரிந்து செய்கிறார்கள். பலரும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாக்களிக்கிறார்கள்.

சாதிக்காக, மதத்துக்காக, கட்சிக்காகச் சிலர் வாக்களிக்கிறார்கள்; ‘பணம் கொடுக்கிறார்கள்’ என்று சிலர் வாக்களிக்கிறார்கள். ‘அரசாங்கம் விடுமுறை விட்டுள்ளது, சும்மா போய் போட்டு வைப்போம்’ என்று சிலர் நினைக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு சிலர் யாருக்கோ போட்டுவிட்டு வருகிறார்கள். ‘மூணாம் நம்பர்ல யாரு பேரு இருக்கோ, அவருக்குப் போடுவேன்’ என்று ஒருவர் நம்பராலஜி சொல்கிறார். இப்படி இருந்தால் ஜனநாயகம் எப்படி சாத்தியமாகும்?

வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் இருந்த வாக்களிக்கும் உரிமையை, வயதுவந்தவர்கள் அனைவருக்கும் என்று மாற்றியதே ‘அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமை வேண்டும்’ என்பதற்காகத்தான். ஆனால், வாக்களிப்பவர்களும் தேர்ந்தெடுக்கும் செயல்திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால்தான் தேர்ந்தெடுக்கப்படுவர் தகுதியானவராக இருப்பதில்லை. ஜனநாயகத்துக்கு இது கெட்ட காலம்.

கழுகார் பதில்கள்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!