Published:Updated:

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

Published:Updated:
கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

சுனாமிக்கே உரிய நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து மக்களைக் காக்கின்றன பல நாடுகள். ஆனால், ஒரு புயலை உருப்படியாகக் கணித்துச் சொல்லாமல் பல மீனவர்களைக் கடல் சமாதி  ஆக்கியுள்ளன நம் அரசுகள். புயலின் கோரத் தாண்டவத்தால் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் உருக்குலைந்துபோயுள்ளது. 

வங்கக் கடலில், நவம்பர் 30-ம் தேதி உருவான ஒகி புயலால் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. ‘கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காணவில்லை’ என்று குமரி மாவட்டம் முழுவதும் கதறல் குரல் எதிரொலித்தது. சுமார் 2,000 மீனவர்கள் பல்வேறு இடங்களிலும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களின் குடும்பங்கள் சாலைகளில் அமர்ந்து கண்ணீருடன் கதறும் வேதனைமிகுந்த காட்சிகளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காணமுடிகிறது.

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிழுந்ததால், குமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்துத் தடைப்பட்டது. பஸ் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாயினர். மூன்று நாள்களாக விடாமல் பெய்த மழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கிய வீடுகளிலிருந்து படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டனர். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. சுசீந்தரம் பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கன்னியாகுமரி சாலை துண்டிக்கப்பட்டது. புத்தேரி குளத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லை - நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மரச்சீனிக் கிழங்கு, நெல், வாழை, ரப்பர் தோட்டங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகிறார்கள்.

கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!

எல்லாவற்றையும்விட ஈடு செய்ய முடியாத இழப்பு மீனவர்களுக்குத்தான். ஆரோக்கியபுரம் முதல் கேரள எல்லையான நீரோடி வரை 48 மீனவக் கிராமங்கள் உள்ளன. 

குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு அதிகம். 80,000 பேர் மீன்பிடித் தொழிலில் உள்ளனர். ஆழ்கடல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்து 40,000 பேர் உள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப்பு என்பது கடலுக்குத் தொழிலுக்குச் செல்பவர்கள் 7 நாள் முதல் 45 நாள்கள் வரை தங்கியிருந்து மீன் பிடிக்கும் தொழிலைச் செய்வார்கள். இந்த வகை மீன்பிடித் தொழிலின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60,000 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. அதனால், இந்த வகை மீன்பிடித் தொழிலைத் தமிழக அரசு ஊக்கப்படுத்துகிறது. ஆனால், பேரிடர் காலங்களில் இவர்களின் நிலை மிகவும் மோசமானதாக மாறிவிடுகிறது. 

குமரி மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களில் 188 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒகி புயலின் காரணமாக இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீன் பிடிக்கச் சென்று கடலில் உயிரிழந்தவரின் உடல் கிடைத்துவிட்டால், அவர் இறந்ததாகக் கணக்கில் கொள்ளப்படுவார். அவ்வாறு இல்லையென்றால், காணாமல் போனதாக அறிவிப்பார்கள். ஏழு வருடங்களுக்குப் பின்னரே அவர் உயிரிழந்ததாகக் கருதப்படுவார். ஒகி புயலால் பல ஆயிரம் மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக மீனவர்கள் அஞ்சுகிறார்கள்.

‘இதுவரை, எட்டுக் கிராமங்களைச் சேர்ந்த 254 படகுகளுடன் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ‘அலைகள்’ அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

மீட்புப் படை வேண்டும்!

நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளரான குறும்பனை பெர்லினிடம் பேசினோம். ‘‘ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் அரசு, ஆழ்கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ன செய்திருக்கிறது? வருடத்துக்கு ரூ. 60,000 கோடி அந்நியச் செலாவணியை அள்ளிக்கொடுக்கும் மீனவர்களைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அவர்களின் அழிவுக்கான திட்டங்களையே அரசு கொண்டுவருவதுதான் வேதனை.

புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை எதுவும் வெளியிடப்படாதது மிகப்பெரிய தவறு. எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்படவில்லை. காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பதாக மட்டுமே அறிவித்துவிட்டு, ‘புயல்... கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என்று திடீரெனச் சொன்னால் எப்படி? ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களுக்குத் தகவல் தெரிவிப்பது யார்? புயல் உருவானதும், கடலுக்குள் மீனவர்கள் சிக்கிக்கொண்டிருப்பதாக நாங்கள் பதறித் துடித்தோம். அப்போது, பேரிடர் மீட்புக்கு யாரும் வரவில்லை.

மீனவர்களைத் தேடும் பணியில் எட்டு கப்பல்களும் 14 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புயல் அடித்தபோது, இவற்றில் ஒரு கப்பலை அனுப்பியிருந்தாலே அனைவரையும் காப்பாற்றியிருக்க முடியும். காற்று அடிக்கிறது, மழை பெய்கிறது என்று பயந்துகொண்டு, பாதுகாப்புப் படையினர் உள்ளே செல்லவில்லை. எதற்கும் பயப்படாத மீனவர்களைக்கொண்டு தனியாக மீட்புப் படையை உருவாக்குங்கள். அவர்களே கடலுக்குள் சென்று மீனவ மக்களின் உயிரைப் பாதுகாப்பார்கள். 

புயலில் சிக்கிய படகுகளில் 600 மீனவர்கள் குஜராத் கடல் பகுதியில் தத்தளிக்கிறார்கள். அங்கு தேர்தல் நடப்பதால், அங்குள்ள துறைமுகத்தில் அந்த மீனவர்கள் நுழைவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மத்திய அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா’’ என்றார் ஆற்றாமையுடன்.

9 மாதங்களில் உடைந்த பாலம்!

ஒகி புயல், நெல்லையையும் விட்டு வைக்கவில்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்தன. சுமார் ஒரு லட்சம் வாழைகள் சூறைக்காற்றில் சரிந்து விழுந்து விவசாயிகளை வேதனைப்பட வைத்தன. கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

திருக்குறுங்குடி அருகே ஆவாரந்தலை - தளவாய்புரம் ஆற்றுப்பாலம் கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளாகவே இடிந்து விழுந்திருக்கிறது. நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தப் பாலம் வெள்ளத்தின்போது, இடிந்து விழுந்ததால் சர்ச்சையாகி இருக்கிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட ம.தி.மு.க செயலாளரான ராஜேந்திரன், ‘‘55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது இடிந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். இதைக் கட்டிய கான்ட்ராக்டர், இதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், பொறியாளர்கள் என அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்ய வேண்டும். பணத்தையும் கான்ட்ராக்டர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்’’ என்றார்.

 தூத்துக்குடியிலும் கோரத் தாண்டவம்!

ஒகி புயல்,தூத்துக்குடி மாவட்டத்திலும் கோரத் தாண்டவம் ஆடியது. ஆத்தூர், ஆறுமுகநேரி, முக்காணி, சேதுக்குவாய்த்தான் உள்பட 23 கிராமங்களில் குலைதள்ளும் நிலையில் இருந்த சுமார் ஐந்து லட்சம் வாழைமரங்கள் சரிந்துவிழுந்தன. வெற்றிலைக் கொடிக்கால்கள் சரிந்ததால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். 

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

தூத்துக்குடியிலிருந்து ஹெர்மன் மேரி, ஆரோக்கிய மேரி என்ற இரண்டு தோணிகள் சரக்குகள் ஏற்றியபடி மாலத்தீவுக்குச் சென்றன. அவை, ஒகி புயலின் சீற்றத்தில் சிக்கின. அதனால், விழிஞ்சம் துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தன. புயலின் தாக்குதலில் இரு தோணிகளும் மோதிக்கொண்டு கடலில் மூழ்கின. இதில் தத்தளித்த 16 மீனவர்களை, கொச்சி கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடி மீட்டனர்.

தூத்துக்குடியில் தங்குகடல் மீன்பிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், மீனவர்கள் பலரும் தங்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்குகடலில் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். இப்படிச் சென்றிருக்கும் பலரும் இறந்திருப்பது, தூத்துக்குடியையும் கண்ணீர்க்கடலில் மூழ்கடித்துள்ளது.

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் இருப்பவர்களைக் கரையிலிருந்து தொடர்புகொள்வதில் சிரமம் இருக்கிறது. அதனாலேயே ஆபத்து நேரங்களில் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க முடியவில்லை. ‘‘சாட்டிலைட் போன் இருந்தால் இந்தப் பிரச்னை இருக்காது’’ என்கிறார்கள் மீனவர்கள். ஒகி மரணங்கள், இந்தக் கோரிக்கையை இன்னும் வலுவாக்கக்கூடும். 

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்

வெள்ளத்தில் பசுக்கள்!

கண்ணீரில் குமரி - கடல் கொண்ட மீனவர் வாழ்க்கை!

சுசீந்திரம் அருகே உதிரப்பட்டி பகுதியில் கோசாலை அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒகி புயல் தாக்கத்தால் பெய்த மழையில், இந்தக் கோசாலையை வெள்ளம் சூழ்ந்தது. அருகில் உள்ள கால்வாயிலிருந்து வெளியேறிய வெள்ளம் கோசாலைக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த பசுக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 25 பசுக்கள் உயிரிழந்தன.