Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

னவில் சிங்கங்கள் வருவது தவறில்லை. ஆனால், சிங்கங்கள் தன்மீது பாய்ந்து கடித்துக் குதறுவதுபோல் கொடூரக் கனவு வந்தால்... பீதியுடன் தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்து உட்கார்ந்தார் எகிப்தின் இளம் மன்னரான ஃபாருக். ஜோதிடரை அழைத்துப் பரிகாரம் கேட்டார். ‘சிங்கத்தைக் கொன்றுவிடுங்கள்’ என்று அபாரமான யோசனை சொன்னார் ஜோதிடர்.

கெய்ரோவின் விலங்குக் காட்சி சாலைக்குச் சென்றார் மன்னர். அங்கே கூண்டுக்குள் அக்கடாவென சில சிங்கங்கள் படுத்துக் கிடந்தன. வீர தீர சூரராக கூண்டுச் சிங்கங்களைச் சுட்டுக் கொன்றார். லாஜிக்படி, அவர் கனவில் வந்த சிங்கங்களைக் கொல்லவில்லை அல்லவா! ஆகவே, அதற்குப் பிறகும் சிங்கங்கள் கழுத்தைக் கவ்வும் கனவுகள் தொடரவே செய்தன. ‘பகல் கனவு’ என்றுதான் சொல்லவேண்டும். இரவெல்லாம் கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு, அதிகாலையில் தூங்க ஆரம்பித்து, உச்சிவேளையில் சோம்பல் முறித்து எழுவதே ஃபாருக்கின் வழக்கமாக இருந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

மதியம் உண்ணும் அவரது ‘ப்ரேக்ஃபாஸ்ட்’ மெனு இது... ஒரு டின் நிறைய caviar என்ற மீன் உணவே ஸ்டார்ட்டர். அப்புறம் கணக்கு வழக்கின்றி அவித்த முட்டை, அள்ளிச் சாப்பிட சில கிலோ இறால், மென்று மகிழ மட்டன், சப்புக்கொட்ட சிக்கன், ருசித்துப் புசிக்க புறாக்கறி, மாட்டுக்கறியும். பின், பருக பல லிட்டர் சோடா. ஏவ்வ்வ்வ்வ்! இவை ஒருவேளை உணவு மட்டுமே. வகைதொகையின்றி வளர்ந்து, தாராள தேக எடையுடன் (130+ கிலோ) திரிந்தார். 

1943-ல் நடந்த விபத்தில் அவரது சிவப்பு கார், லாரி ஒன்றில் மோதி, மரத்திலும் மோதி நசுங்கி நின்றது. விலா எலும்பிலும், இடுப்பெலும்பிலும் முறிவுகள். ஃபாருக்கை அள்ளி ஸ்ட்ரெச்சரில் போட்டபோது, அது பாரம் தாங்காமல் முறிந்துபோனது. தேறி எழுந்து நடப்பதற்குச் சில மாதங்கள் பிடித்தன. இது மன்னருக்கு நடந்த விபத்து. மன்னரால் நடந்த விபத்துகள் பற்றிப் பேசுதலும் அவசியம்.

ஃபாருக் கண்மூடித்தனமாகவும் விளையாட்டுத் தனமாகவும் கார் ஓட்டி மகிழ்வார். அவருக்குப் பிடித்தது, சிவப்பு நிறம். மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஃபோர்ட், காடிலாக் என அனைத்து சொகுசு கார்களையும் தன் இஷ்டப்படி சிவப்பாக்கினார். சாலைகளும் அவர் ஏற்படுத்திய விபத்துகளால், ரத்தம் கொட்டி சிவப்பாகின. மக்கள் யாரும் சிவப்பு நிறக் காரைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. மன்னரது காரும், சில ராணுவ ஜீப்களும் மட்டுமே சிவப்பாக இருக்க வேண்டும். யாராவது தம் காரில் வேகமாகச் சென்றாலோ, வழிவிடாமல் சென்றாலோ, ஃபாருக் தன் துப்பாக்கியை எடுப்பார். அந்தக் காரின் டயர்களை நோக்கி தோட்டாக்கள் பாயும். அதற்காக மனிதாபிமானம் இல்லாதவரென நினைத்துவிடக் கூடாது. ஏனென்றால், அவர் காரின் பின்னாலேயே ஆம்புலன்ஸ் ஒன்றையும் வரச் சொல்லியிருந்தார். 

தன் சிவப்பு கார்களிலேயே ஃபாருக் அதிகம் விரும்பியது, மெர்சிடிஸ் பென்ஸ் 540K ரக கார். ஃபாருக் – ஃபரிடா திருமணத்துக்கு ஹிட்லரிடமிருந்து வந்த பரிசு அது. இப்படி ஓர் ஆடம்பர காரா என்று அனைவரும் வியந்து நின்றனர். ஹிட்லர் அதை அன்புப் பரிசாக மட்டும் அனுப்பிவைக்கவில்லை. ‘ஜெர்மானியர்களின் எந்திரவியல் அறிவை, தொழில்நுட்ப அறிவைப் பாரீர்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காகவே அனுப்பியிருந்தார். ஹிட்லருக்கு ஃபாருக்மீது தனி அன்பு இருந்தது. ‘இரண்டாம் உலகப் போரில் எகிப்து நடுநிலைமை வகிக்கும்’ என்று ஃபாருக் அறிவித்திருந்தார். ஆனால், அவரது மனம் ஹிட்லரை ஆதரித்தது; ஆராதித்தது. நேச நாடுகளின் பெரும்புள்ளியான பிரிட்டன், எகிப்தைத் தன் முக்கிய ராணுவத்தளமாகக் கொண்டு இயங்கியது. எகிப்துக்குப் பெயரளவி லேயே சுதந்திரம் வழங்கியிருந்த பிரிட்டன், அதனுடைய ராணுவம், வெளியுறவுத் துறையை எல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்து, ஓர் அதிரடி கவர்னர்போல செயல்பட்டது. ‘எனில், முதல்வர் என்றொருவர்... மன்னிக்கவும், மன்னர் என்றொருவர் எதற்கு?’ எகிப்தியர்களிடையே அதிருப்தி வளர்ந்தது.

பிரிட்டிஷார் மீதான மக்களின் வெறுப்பை, ஃபாருக் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முனைந்தார். ஹிட்லருக்கு ரகசியச் செய்தி அனுப்பினார். ‘ஜெர்மானியப் படைகள் எகிப்தை ஆக்கிரமிக்கலாம். வரவேற்கிறேன்’ என்பதுபோல. நாஜிப் படைகள் எகிப்துக்கு வந்து, பிரிட்டிஷாரின் படைகளை அடித்துவிரட்டி, தம் மண்ணுக்குப் பரிபூரண சுதந்திரம் வழங்குமென்று கனவு கண்டார். ஹிட்லர் இதைச் சாத்தியமாக்கினால் தனக்கும் எகிப்து மக்களிடையே ஆதரவு பெருகும் என்று கணக்கு போட்டார்.

போர் தீவிரமாகியிருந்த நேரத்தில் ஜெர்மனியும் இத்தாலியும் எகிப்தைத் தாக்கக்கூடும் என்று செய்தி கிடைத்தது. ஃபாருக்கின் அரண்மனையில் இத்தாலியப் பணியாளர்கள் பலர் இருந்தனர். எகிப்தில் இருந்த பிரிட்டிஷ் தூதர் மைல்ஸ் லாம்ப்ஸன், ஃபாருக்கிடம் வலியுறுத்தினார். ‘உமது இத்தாலியப் பணியாளர்களை இங்கிருந்து விரட்டியடியும்!’ பதிலுக்கு ஃபாருக்கும் மூக்குடைத்தார், ‘நீர் உமது பொஞ்சாதியைத் துரத்திவிடும். பின்பு நான் செய்கிறேன்’ என்று. ஆம், மைல்ஸின் வீட்டம்மா ஜாக்குலின் ஓர் இத்தாலியப் பெண். மைல்ஸுக்கும் மன்னருக்குமான உரசல்கள் தொடர்ந்தன.

இந்தச் சூழ்நிலையை எகிப்தின் முக்கிய கட்சியான Wafd, தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டது. மன்னருக்கு விசுவாச அடிமையாகவும், எகிப்தின் பிரதம மந்திரியாகவும் சேவகம் செய்தவர் ஹுசைன். அவர் தலைமையிலான அரசைக் கவிழ்க்க Wafd, பிரிட்டிஷ் அரசுடன் கைகோத்தது. 1942, பிப்ரவரி 4 அன்று, கெய்ரோவிலிருந்த மன்னரது அப்தீன் அரண்மனை பிரிட்டிஷ் படையினரால் சூழப்பட்டது. மன்னர் ஃபாருக் மாளிகைக்குள் மடக்கப்பட்டார். மைல்ஸ் லாம்ப்ஸன், ஃபாருக்கை மிரட்டினார். ‘‘நாங்கள் சொல்வதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் மன்னராக நீடிக்கலாம். இல்லையேல்...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

பிரிட்டிஷார் விதித்த நிபந்தனைகளுக் கெல்லாம் வேறு வழியின்றி தலையாட்டினார் ஃபாருக். ஹுசைன் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. Wafd கட்சியின் மூத்த தலைவரும், ஏற்கெனவே பிரதமராக இருந்த அனுபவஸ்தருமான எல்-நஹஸ், மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். ‘மன்னர் ஃபாருக் வெறும் தலையாட்டி பொம்மை’ என்ற முத்திரை மக்கள் மனத்தில் அழுத்தமாக விழுந்தது. அவமானத்தில் துடித்தார் ஃபாருக். போரின் பிற்பாதியில் ஹிட்லர் சறுக்க ஆரம்பித்தார். ஃபாருக்கின் ஆசை, நிராசையானது. போரின் இறுதியில் பிரிட்டன் கொடுத்த பெரும் அழுத்தத்துக்குப் பிறகுதான், ஃபாருக் நேச நாடுகளுக்கு வேறு வழியேயின்றி ஆதரவு கொடுத்தார். எகிப்தின் எல்லையில் அச்சு நாட்டுப் படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இறங்கினார். ஆனால், போருக்குப் பிறகு ஃபாருக், நாஜி ராணுவத்தின் மாஜி தளபதிகளை எகிப்துக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார். அவர்களைக் கொண்டு எகிப்திய ராணுவத்துக்குப் பயிற்சி கொடுத்தார். எகிப்துக்கென ஒரு ராணுவத்தை உருவாக்கி, போஷித்து வந்த பிரிட்டன், இதனால் கடும் ஆத்திரத்துக்குள்ளானது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிரான எகிப்தியர்களின் போராட்டம் வலுப்பெற்றது. ‘என் தேசம், என் உரிமை’ என்று தீவிரமாகக் குரலெழுப்பினார்கள். மன்னராட்சி மீதான நம்பிக்கையின்மையும் பெருகியது. 1947-ல் பிரிட்டன், சூயஸ் கால்வாய் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய பெரும்பாலான படைகளை விலக்கிக்கொண்டது. 1948-ல் மன்னர் ஃபாருக்கின் முதல் மனைவியான ஃபரிடாவும், அவரிடமிருந்து தன் திருமண உறவை சட்டப்படி விலக்கிக்கொண்டாள்.

இரண்டு விஷயங்களுமே மன்னரை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. அதே சமயத்தில் சில இடிகளும் விழுந்து அவரது இமேஜைப் பதம் பார்த்தன. அப்போது எகிப்தில் பரவிய காலரா நோயால், ஆறு மாதங்களில் சுமார் 35,000 பேர் மாண்டனர். மன்னரது நிர்வாகத் திறமை கேள்விக்குள்ளானது. 1948, மே 14 அன்று இஸ்ரேல் தேசம் உருவானதாக யூதர்கள் அறிவித்தனர். இஸ்ரேல்மீது அரபு நாடுகள் போர் தொடுத்தன. எகிப்துப் படைகளும் அதில் கலந்துகொண்டன. மார்ஷல் உடையை மாட்டிக்கொண்டார் மன்னர் ஃபாருக். பாலைவனப் போர்க்களத்தில் அங்குமிங்கும் கெத்தாக, வெத்தாக உலா வந்தார். இஸ்ரேல் வென்றது. அரபுப் படைகள் வீழ்ந்தன. தோல்வியால் ஃபாருக்கின் கொஞ்சநஞ்ச மதிப்பும் பஸ்பமாகிப் போனது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 33 - சிவப்பு கார் வருகிறது!

‘அதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நானே இந்த மண்ணின் மன்னன்’ என்னும் தலைக்கனத்துடனும், குறையவே குறையாத உடல் கனத்துடனும் வழக்கம்போல மஜா வலம் வந்தார் ஃபாருக். ‘எப்படியாவது ஓர் ஆண் வாரிசுக்குத் தகப்பனாகிவிட வேண்டும். தன் வாரிசை முகம்மது அலி பரம்பரையின் அடுத்த மன்னராக்கிவிட வேண்டும்’ என்ற வேட்கை அவருக்குள் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதற்கேற்றாற்போல தகுதியும், வம்சப் பெருமையும் கொண்ட ஓர் எகிப்திய அழகியைத் தேடிக்கொண்டிருந்தார். அந்தத் தேடலில்தான் தேவதை அம்சங்கள் பொருந்திய அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அவள் பெயர் நாரிமன்.

நாரிமனுடனான அத்தியாயம் மட்டுமல்ல... ஐரின், பார்பரா, ஃபாத்திமா, லிலியேன், சமியா, அன்னி, பேட்ரிஸியா, ஜோன், லூசியானோ, பிரிகிட்டா, இர்மா... என காதல் ரசம் ஊற்றெடுக்கும் பல அத்தியாயங்கள் ஃபாருக்கின் மதன வாழ்க்கையில் உண்டு. அத்துடன் நாக்யுப், நாஸிர் என்ற இரு வில்லன்களின் அத்தியாயமும் முக்கியமானது.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism