இறைச்சிக்காகப் பசு மாடு, காளை, ஒட்டகம் ஆகியவற்றைக் கொல்லக் கூடாது என விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, கடந்த மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது மத்தியஅரசு. அதற்கு, நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலை கிளம்பியது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது. அதற்கு, மாட்டிறைச்சி பற்றிய அறிவிப்பாணையில் விரைவில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தற்போது, மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

‘இது, மக்கள் போராட்டத்துக்கும், அடிப்படை உரிமையைக் காப்பாற்ற நடந்த சட்டப் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்து, தடை ஆணை வாங்கிய மனித உரிமை செயற்பாட்டாளரும், ‘சோக்கோ’ அறக்கட்டளை நிர்வாகியுமான வழக்கறிஞர் செல்வகோமதியிடம் பேசினோம்.
“உணவு உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. தற்போது, அது காப்பற்றப்பட்டுள்ளது. தாம் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றதன் மூலம், மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்துள்ளது என்றும் இதைப் பார்க்கலாம். ‘மக்கள் எதை உண்ண வேண்டும், உண்ணக் கூடாது’ என்பதை ஓர் அரசு முடிவுசெய்ய முடியாது. இது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் செயல். என்னைப்போலவே, பலரும் வழக்கு தாக்கல் செய்தார்கள். மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள், கால்நடை விற்பனையாளர்கள், மாட்டிறைச்சித் தொழில் செய்பவர்கள் எனப் பலரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அதை நாங்கள் சுட்டிக் காட்டினோம். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைதான் மத்திய அரசின் உத்தரவுக்கு முதல் தடை ஆணையை வழங்கியது. அது, இன்றுவரை நீடிக்கிறது. மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது, மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இனிமேலாவது அரசுகள், மக்களின் உணவு மற்றும் பண்பாட்டு வாழ்வுரிமை விஷயங்களுக்கு ஆபத்து வரும் வகையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது’’ என்றார்.
இறைச்சி உணவுக்காக சட்டப்போராட்டம் நடத்திய செல்வகோமதி ஒரு வெஜிடேரியன்.
- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்
