
News
கவிதை: கோகுலா, ஓவியம்: செல்வம் பழனி
அவனொரு
பூனைக்குட்டி வரைந்தான்
என்னிடம் பூனைகள்
இருக்கிறது என்றேன்
அவனொரு
கடவுள் சிலை வடித்தான்
நான் என்னை வணங்குவது
இல்லை என்றேன்
அவனோர் ஓரங்க நாடகம்
நடித்தான்
நானொரு
கதைசொல்லி என்றேன்

அவனொரு
காதல் கவிதை சொன்னான்
எனக்கொரு
கள்ளக்காதலும் இருந்தது என்றேன்
அவன் தீட்சை பெற்றவன்
என்றான்
எனக்கும்
மதுப்பழக்கம் உண்டு என்றேன்
அவன் காறி உமிழ்ந்தான்
நான்
உமிழ்நீர் என்றேன்
அவன் பூனைக்குட்டியைக்
கக்கத்திலும்
கடவுளைக் கைகளிலும்
தூக்கிக்கொண்டு நடந்தபடி
காதலோடு ஞானத்தைத் தேடிக்கொண்டு
போகிறான்.