Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

ந்தக் கெட்டப்பழக்கத்தை kleptomania என்பார்கள். ஏதாவது ஒரு பொருள் மனதுக்குப் பிடித்து விட்டால், எப்படியாவது அதைத் திருடியே தீரவேண்டுமென்று உள்ளம் படபடக்கும்; கை பரபரக்கும். எகிப்து மன்னர் ஃபாருக்கும் அந்த மேனியாவால் ஆட்கொள்ளப் பட்டிருந்தார். ஆகவே, நகரத்தின் ஆகச்சிறந்த பிக்பாக்கெட் திருடனிடம் ‘தொழில்’ நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, திறம்படக் கைவரிசை காட்டினார்.

மன்னர் ஓரிடத்துக்கு வந்து போனாலே, யாராவது எதையாவது இழந்துவிட்டுப் பதறுவது வாடிக்கையானது. பர்ஸ், வாட்ச், நகை, லைட்டர் எனக் ‘கண்டதை’ எல்லாம் களவாடி னார். ஒருமுறை ஃபாருக்கைச் சந்திக்க வந்த வின்ஸ்டன் சர்ச்சில், தனது பாக்கெட் கடிகாரத்தை இழந்தார். ஈரானின் முன்னாள் ஆட்சியாளர் ரேஷா ஷா 1944-ல் இறந்துபோனார். அவரது இறுதிச்சடங்கு கெய்ரோவில் நடந்தபோது, ஷாவின் சடலத்துடன் வைக்கப்பட்டிருந்த வாள், பெல்ட், பதக்கங்களையெல்லாம் ‘சுட்டு’க் கொண்டார் ஃபாருக். அது, ஈரானுடனான எகிப்தின் நல்லுறவையே பாதித்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

திருடுவது மட்டுமல்ல, ஃபாருக் அடித்துப்பிடுங்கவும் செய்தார். எங்கே, யாரிடம், எதைப் பிடுங்கி வரவேண்டு மென, மன்னர் பட்டியல் கொடுப்பார். அதற்கென அரண்மனையிலிருந்து டிரக் ஒன்று சீறிக் கிளம்பும். இந்த மேனியா, பெண்கள் விஷயத்திலும் மன்னருக்கு இருந்தது, ‘அடுத்தவன் காதலியை அபகரிப்பது’, ‘மாற்றான் மனைவியைப் பிடுங்கிக்கொள்வது’ என்று.

முதல் மனைவி ஃபரிடாவுடன் உறவு கசக்க ஆரம்பித்த தருணத்திலேயே, ஐரின் என்பவளிடம் கிறங்கிக்கிடந்தார் ஃபாருக். மன்னரின் முதல் அதிகாரபூர்வ ஆசைநாயகி என்ற அந்தஸ்துடன் செழிப்பாக வலம்வந்தாள் ஐரின். குடி, கூத்து. கும்மாளம். இரண்டாண்டு பந்தம் அது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தன் சகோதரனுக்கு பென்சிலின் ஏற்பாடு செய்து தரச்சொல்லி (காதல்) மன்னரிடம் கெஞ்சினாள் அவள். அவர் கண்டுகொள்ளவில்லை. வெறுப்புடன் விலகிச் சென்றாள்.

அடுத்தவள் வந்தாள். நாவலாசிரியையான பார்பரா ஸ்கெல்டன். மன்னருடனான தன் உறவு பற்றி எழுதி வைத்திருக்கிறாள். ‘அவர் மோசமான காதலர். ஆனால், முத்தத்தில் வித்தகர். மன்னர் அல்லவா. அவருக்கு அதிகம் சேவை தேவைப்படும்!’

ஃபாருக் படுக்கையில் டெஸ்ட் மேட்ச் விளையாடவே மெனக்கெட்டார். கஞ்சாவைத் தேனில் கலந்து நக்கி, காண்டாமிருகக் கொம்பைப் பொடியாக்கி... பலரது ஆலோசனை களையும் அரைகுறையாகப் பின்பற்றி தடுப்பாட்டம் ஆடிச் சமாளித்தார். சிறந்த ஆட்டக்காரர் இல்லையென்றாலும், சீஸனுக்கொரு காதலியென எண்ணிக்கைக்குக் குறைவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

முதல் மனைவி ஃபரிடாவுடனான உறவில் விரிசல் விழுந்தபின், வேண்டுமென்றே அவள் கண்ணெதிரிலேயே மற்ற பெண்களுடன் கொஞ்சி குலாவுவதை வழக்கமாக்கிக்கொண்டார் ஃபாருக். ஃபாத்திமா கைரின் என்ற ராஜ குடும்பத்துப் பெண்மீது கண்மூடித்தனமான காதலில் விழுந்தார். ‘நீ உன் புருஷனையும், நான் என் பொண்டாட்டியையும் விவாகரத்து பண்ணிட்டு, நாம கல்யாணம் பண்ணிக்குவோம்!’ என்றார். எதுவும் நடக்கவில்லை. ஃபாத்திமாவின் கணவர் இறந்தும் போனார். அப்போது அவள்மீது ஈர்ப்பு குறைந்துபோனதால், ஃபாருக் கண்டுகொள்ளவில்லை.

ஃபாருக் வாழ்வில் இளம்பெண் லிலியேன் அத்தியாயம் ஆரம்பமானது. பாடகியான அவள், காதல் சொட்டும் பாடல்களைப் பாடிக்கொண்டு ஆட, திம்மென்று உட்கார்ந்து ரசிப்பார். அவள் சீக்கிரமே விபத்தொன்றில் செத்தும்போக... கட் செய்தால் அடுத்த ஷாட்டில், சமியா என்ற பெல்லி மங்கையின் ஜெல்லி இடுப்பசைவுகளில் ஜொள் வடித்தார் ஃபாருக். அன்னி என்ற பாடகியின் ராகத்திலும் தேகத்திலும் தன்னைத் தொலைத்தார். இந்தப் பெண்களை யெல்லாம்விட, பேட்ரிஸியா வைல்டர் என்ற அமெரிக்க நடிகையுடன் டேட்டிங் செல்வதைப் பெரும் விருப்பத் துடன் செய்தார். பேட்ரிஸியாவும் இரண்டு திருமண உறவுகள் முறிந்தபின், சில காலம் இந்த எகிப்து குண்டருடன் காதல் வளர்த்தாள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஃபாருக், அவரைவிட 13 வயது இளையவளான நாரிமன் என்ற எளிய குடும்பத்து எகிப்து அழகியின் புகைப்படத்தை நோக்கினார். ‘கண்டேன் ரெண்டாவது பொண்டாட்டியை’ என்று துள்ளியது மனம். அவளை நகைக்கடை ஒன்றில் நேரில் சந்தித்து, ‘கட்டிக்கலாமா?’ என்றார். ‘அய்யோ! எனக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே’ என்று அந்தப் பதுமை தயங்கினாள். ‘மன்னராகிய நான் அதை ரத்து செய்து உத்தரவிடுகிறேன்’ என்று நாரிமனை அபகரித்தார்.

எகிப்தின் வருங்கால ராணியல்லவா! சகல வசதிகளுடனும் ரோம் நகரத்துக்கு அனுப்பி வைத்தார் (1950). ஒரு ராணிக்குரிய நடை, உடை, பாவனை, உச்சரிப்பு, உபசரிப்பு, மிதப்பு, மினுமினுப்பெல்லாம் பழக! அங்கே நாரிமன் வரலாறு படித்தாள். இசை கற்றாள். ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன் எனப் பல மொழிகள் பயின்றாள். உடல் எடை குறைத்து அழகை நிறைத்தாள். 1951 ஜனவரியில் நிச்சயதார்த்தம். மே மாதம் திருமணம். மூன்று மாதங்கள் திகட்டத் திகட்டத் தேன்நிலவு! பல நாடுகளைச் சுற்றி வந்து சுகித்தார்கள். இரண்டாவது திருமணத் துக்குப் பிறகு, சில மாதங்கள் மட்டும் ஃபாருக் ஏகபத்தினிவிரதராக வாழ்ந்தார். கர்ப்பமுற்ற நாரிமன், அவரது வாழ்வின் மகோன்னத லட்சியத்தை நிறைவேற்றினாள். மகன் பிறந்தான் (1952). அகமத் ஃபுவாட் (எ) இரண்டாம் ஃபுவாட். 101 முறை துப்பாக்கிகள் முழங்கின. ஹெலிகாப்டர் நிறைய சாக்லேட்டுகளை நிரப்பிக் கொண்டு கெய்ரோவின் அரண்மனை வளாகத்தில் கூடிய மக்கள்மீது வீசியெறிந்தார்கள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

இனிப்புக்கு அந்த மக்கள் ஆலாய்ப் பறந்தாலும் அவர்கள் மனதில் மன்னர்மீதான கசப்பு உணர்வே தூக்கலாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் எகிப்தின் பொருளாதாரம் நொடிந்துபோயிருந்தது. ஏகப்பட்ட அரசியல் குழப்பங்கள். மக்களைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், ‘சபலமும் சல்லாபமுமே தன்னிரு கண்கள்’ என்று மன்னர் அடிக்கும் கூத்தால் வெறுத்துப் போயிருந்தார்கள். மக்கள் மட்டுமல்ல, எகிப்தின் ராணுவ முக்கியஸ்தர்களும் அவரது ஆட்டத்தை முடிக்க அடித்தளம் போட்டார்கள். ராணுவப் புரட்சி செய்து ஃபாருக்கைத் தூக்கிக் கடாச, மேஜர் ஜெனரல் முகமத் நாக்யுப், கர்னல் காமல் நாஸிர் இருவரும் நிதானமாக, ரகசியமாகத் திட்டமிட்டார்கள். இது Free Officers Movement என்றழைக்கப்படுகிறது.

1952, ஜனவரியில் Army Officers Club-ன் தேர்தல் நடந்தது. மன்னரின் ஆசிபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரே அதில் வெல்வது வாடிக்கை. ஆனால், அந்த முறை, எதிர்த்து நின்ற நாக்யுப் வென்றார். மன்னருக்கும் அவருக்கும் உரசல் நேரடியாக ஆரம்பமானது. எகிப்தின் சில பகுதிகளில் தனது படைகளை நிறுத்திவைத்திருந்தது பிரிட்டன். அந்த ஜனவரி 26-ல் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கும், உள்ளூர் போலீஸுக்கும் முட்டிக்கொண்டது. மக்களிடையே அது கலவரமாகப் பரவி, தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. பிரிட்டிஷார் வீசிய குண்டுகளால், 50 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் அதிகாரத்தை முழுமையாக அகற்ற வக்கற்ற ஃபாருக் மீதான பெருங்கோபமாக அந்த ‘Cairo Fire’ சம்பவம் உருவெடுத்தது.

நாக்யுபும் நாஸிரும் எகிப்து ராணுவத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். கம்யூனிஸ்டுகளின் ஆதரவையும் பெற்றனர். ராணுவப் புரட்சி வந்தே விடும் என்று உணர்ந்த ஃபாருக், முக்கியத் தலைகளைக் கைது செய்யத் திட்டமிட்டார். இதை உணர்ந்த ராணுவத்தினர், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே கலகத்தைக் கச்சிதமாக ஆரம்பித்தனர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

1952, ஜூலை 23, காலை ஏழரை மணிக்கு ஜெனரல் நாக்யுப் வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். எகிப்தியர்களின் அவலங்கள் தீர, மக்களின் சார்பாகத்தான் இந்த ராணுவப் புரட்சி என்றார் அழுத்தமாக. மன்னர் ஃபாருக்கின் ஆட்சி முடிவுக்கு வருவதாக அவர் அறிவித்ததும், தேசமெங்கும் மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடத் தொடங்கினர். ஜூலை 25 அன்று, ராணுவம் அலெக்ஸாண்டிரியாவைக் கைப்பற்றியது. அங்கே மாண்டாஸா அரண்மனையில் பதுங்கிக் கிடந்த ஃபாருக் வெலவெலத்துப் போனார்.

ஃபாருக் மீது நீதி விசாரணை நடத்தி, அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமெனப் பலரும் வலியுறுத்தினர். இளவரசர்மீது இரக்கப்பட்ட நாக்யுப், வேறு முடிவெடுத்தார். அதன்படி, ஜூலை 26 அன்று பகலில் ஃபாருக்கின் மன்னர் பட்டம் பறிக்கப்பட்டது. இளவரசனும், ஆறு மாதக் குழந்தையுமான இரண்டாம் ஃபுவாட், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டான். மாலை ஆறு மணிக்குள் பெட்டிப் படுக்கையுடனும் குடும்பத்துடனும் ஓடிப்போய்விட வேண்டுமென்று இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. 204 பெட்டிகள் நிறைய பொருள்கள் (சில பெட்டிகள் நிறைய தங்கக்கட்டிகள்) அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டன. புரட்சியின் சூடு தாங்காமல், புறமுதுகிட்டு கப்பலில் ஏறினார் ஃபாருக். உடன் நாரிமன், மூன்று மகள்கள், புதிய பேபி மன்னன் இரண்டாம் ஃபுவாட். துரத்திவிடப்பட்ட மன்னரின் வாழ்க்கை இத்தாலியிலும், பெரும்பாலும் கேப்ரி தீவிலும் கழிந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்!

நாக்யுப் எகிப்தின் அதிபர் ஆனார். நாஸிர் பிரதமர் ஆனார். பிரிட்டன் தன் படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. 1953, ஜூன் 18-ல் எகிப்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. பேபி மன்னன் இரண்டாம் ஃபுவாட், விவரம் தெரிவதற்கு முன்பாகவே பதவியிழந்த எகிப்தின் கடைசி மன்னன் ஆகிப் போனான். நாரிமன், ஃபாருக்கிடமிருந்து விவாகரத்து வாங்கி விட்டு விலகினாள்.

ஃபாருக், தனது ப்ளேபாய் வாழ்க்கையை சௌகரியமாகவே தொடர்ந்தார். ஜோன் என்ற சர்க்கஸ் பெண், லூசியானோ என்ற நிழலுலக மங்கை, பிரிகிட்டா என்ற பேரழகுப் பதுமை, இறுதியாக இர்மா என்ற இத்தாலியப் பாடகி. குதூகலங்
களுக்குக் குறைவே இல்லை. 1965, மார்ச் 17 அன்று ஃபாருக் வழக்கம்போல இறாலையும், இன்னபிற இறைச்சிகளையும் எக்கச்சக்கமாக உண்டார். சோடா குடித்தார். பின்பு ஹவானா சுருட்டு. சிறிது நேரத்தில் அப்படியே செத்துக் கிடந்தார் (வயது 45).

மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைந்துவிட்டது என்றெல்லாம் பிரேதப் பரிசோதனை செய்யாமலேயே சொன்னார்கள். அவரது உடலை எகிப்துக்குள் அனுமதிக்காமல் இத்தாலியிலேயே அவசரமாகப் புதைத்தார்கள். எந்தக் காதலியும் வந்து கண்ணீர் சிந்தியதாகத் தகவல் இல்லை. எகிப்து ஆட்சியாளர்களின் சதியால் விஷம் கலக்கப்பட்ட இறால்தான் அவரது உயிரைப் பறித்தது என்ற தீரா சர்ச்சையும் உண்டு. அதனால்தானோ என்னவோ, நாஸிர் மீண்டும் ஃபாருக்கின் உடலைப் பெற்று எகிப்தில் ரகசியமாகப் புதைத்தார்.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism