ரகசியத்தை அம்பலமாக்கிய 210 துறைகள்!
‘‘மாப்பிள்ளை இவருதான். ஆனால், இவர் போட்டிருக்கற சட்டை என்னோடது’’ என்ற ‘படையப்பா’ டயலாக்கை ஞாபகப்படுத்தும் காமெடியைச் செய்திருக்கிறது ஆதார் ஆணையம். ‘ஆதார் அட்டை பெறுவதற்காக ஒவ்வொருவரும் தரும் ரகசியத் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்’ என்கிறது மத்திய அரசு. ஆனால், ‘210 அரசுத்துறைகளின் இணையதளங்கள், ஆதார் தகவல் களைப் பகிரங்கமாக வெளியிட்டு விட்டது’ என ஒப்புக்கொண்டுள்ளது ஆதார் ஆணையம். அப்போதும்கூட, ‘தவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என சொல்லியிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறும் பயனாளிகள் யார் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். இதைத் தங்கள் துறையின் இணையதளங்களில் வெளியிடும்போது பெயர், முகவரி போன்ற தகவல்களோடு ஆதார் எண்ணையும் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்குத் தரும் ஸ்காலர்ஷிப் விவரங்களில் இப்படி ஆதார் தகவல்களெல்லாம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இடம்பெற்றுவிட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறும்போது, இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது ஆதார் அமைப்பு. ‘210 அரசுத் துறைகள் இப்படிச் செய்துவிட்டன. எங்களுக்குத் தகவல் தெரியவந்ததும், உடனே அவற்றை அகற்றச் சொல்லிவிட்டோம். அவர்கள் ஒவ்வொரு தனிநபரிடமும் தகவல்களை வாங்கித்தான் இப்படி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எங்களிடம் உள்ள தகவல்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றன’ என்கிறது ஆதார் ஆணையம்.
முடக்கப்பட்ட 81 லட்சம் அட்டைகள்!
இதுவரை கொடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில், 81 லட்சம் அட்டைகளை முடக்கியுள்ளதாக ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் ஆதார் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்தார், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி. ‘‘உரிய விவரங்கள் தரப்படாதது, ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் தோராயமாக 81 லட்சம் ஆதார் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன” என்று அதில் அவர் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்படாத பயோமெட்ரிக் தகவல்கள், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அந்த ஆதார் அட்டையை முடக்கும் அதிகாரம் அந்தப் பகுதியில் இருக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணைய அதிகாரிக்கு உண்டு. அதேபோல், ஆதார் அட்டை பெற்றுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்களது பயோமெட்ரிக் தரவுகளை ஐந்து வயதான பின்னரும், பதினைந்து வயதான பின்னரும் பதிவுசெய்ய வேண்டியது அவசியம். இதுபோன்று தகவல்களை அப்டேட் செய்யவில்லை என்றால் ஆதார் அட்டைகள் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதிகமா எடுத்துட்டாங்க!
ஹைதராபாத் நகர மக்கள்தொகை, சுமார் 43 லட்சம். ஆனால், ஆதார் ஆணையத் தகவல்படி, இந்நகரில் ஆதார் அட்டை எடுத்தவர்கள் 66 லட்சம் பேர். மக்கள்தொகைக் கணக்கைவிட அதிகமாக 23 லட்சம் பேர் எப்படி ஆதார் வாங்கியிருக்க முடியும்? குழம்பிப் போயிருக்கும் அதிகாரிகள், ‘பக்கத்திலிருக்கும் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் ஹைதராபாத் வந்து ஆதார் எடுத்துவிட்டார்கள்’ எனக் காரணம் சொல்கிறார்கள். ஆனால், அந்த மாவட்டத்தில் வசிக்கும் 57.4 லட்சம் பேரில் 50.6 லட்சம் பேர் அங்கேயே ஆதார் எடுத்துவிட்டார்கள்.
‘எப்படிப் பார்த்தாலும் கணக்கு உதைக்கிறதே’ எனப் புது ஆதார் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆதார் தகவல்களைத் திருட ஓர் ஆப்!
ஆயிரக்கணக்கானவர்களின் ஆதார் விவரங்களை அத்துமீறி Access செய்ததாக ஓலா நிறுவனத்தில் பணிபுரிந்த இன்ஜினியர் அபிநவ் ஸ்ரீவஸ்தவா என்பவர் இந்த வருடம் ஆகஸ்ட்டில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ‘நம்முடைய ஆதார் விவரங்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டுள்ளனவா’ என்ற கேள்வியை எழுப்பியது.
இவர் இந்தத் தகவல்களை எடுக்கப் பயன்படுத்திய தந்திரம் அபாரமானது. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அப்பாயின்ட்மென்ட் தேவைக்கென e-hospital என்ற ஒரு செயலியை இந்திய அரசின் நிறுவனமான நிக்நெட் உருவாக்கியது. நோயாளிகளின் ஆதார் எண்ணை இந்த இ-ஹாஸ்பிடல் செயலி பெற்றுக்கொள்ளும்.

அபிநவ், தான் தயாரித்த e-kyc என்ற செயலி மூலம், e-hospital செயலி துணையுடன் ஆதார் தகவல்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பல இலவச செயலிகள் கிடைக்கும் கூகுள் ப்ளே ஸ்டோரில் அபிநவ் தயாரித்த e-kyc செயலி கிடைத்து வந்ததால், ஆயிரக்கணக்கானோர் அதை டவுன்லோடு செய்து பயன்படுத்தியுள்ளனர். இந்தச் செயலியில் ஒருவரின் ஆதார் நம்பரைத் தந்தால், அவரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களைத் தந்துவிடும்.

பெங்களூருவில் உள்ள ஆதார் அலுவலகம்தான், நாடு முழுக்கப் பெறப்படும் ஆதார் தகவல்களைச் சேமித்து வைக்கும் தொழில்நுட்ப மையமாகச் செயல்படுகிறது. ‘இங்கிருக்கும் யாருடைய உதவியையாவது பெற்று அபிநவ் இந்த மோசடியைச் செய்தாரா’ என விசாரணை நடந்துவருகிறது. ஆதார் விஷயத்தில் இதுவரை நடந்திருக்கும் மிகப்பெரிய ‘தொழில்நுட்ப மோசடி’ இதுதான். கைது செய்யப்பட்டபோது, ‘எப்படி ஆதார் தகவல்களை இணையதளத்திலிருந்து திருடினேன்’ என ஆறு மணி நேரம் அபிநவ் டெமோ செய்து காண்பித்ததாகக் கூறப்படுகிறது. ஆதார் ஆணையம், தங்கள் தரப்பிலிருந்து தகவல் கசிந்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. ‘மத்திய அரசின் National Informatics Centre (NIC) வைத்திருக்கும் தகவல்களை அபிநவ் பெற்றிருக்கலாம்’ என்பது ஆதார் ஆணையத்தின் குற்றச்சாட்டு.
- கார்க்கிபவா