Published:Updated:

காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...

காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...
பிரீமியம் ஸ்டோரி
காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...

பாரதி தம்பி

காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...

பாரதி தம்பி

Published:Updated:
காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...
பிரீமியம் ஸ்டோரி
காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...

‘‘மூணு கொமருகளை விட்டுட்டு, கடலுக்குப் போன அப்பனையும் மகனையும் இதுவரைக்கும் காணல்ல... 45 நாளாச்சு. ஒரு சேதியும் தெரியல்ல... நாங்க எப்படியய்யா வாழுவோம்?’’ என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘‘அப்பா... எப்பப்பா வருவ? கிறிஸ்துமஸுக்கு டிரஸ் வாங்கிட்டியா?’’ எனக் கேட்கும் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையின் மழலைக் குரல் இதயத்தை உலுக்குகிறது.

தென் தமிழகக் கடலோரத்தின் ஓலம் நெஞ்சை அறுக்கிறது. முட்டம் தொடங்கி நீரோடி வரையிலும் எந்த மீனவக் கிராமத்துக்குள் நுழைந்தாலும் ஒவ்வொரு வீதியிலும் மீனவப் பெண்களின் கதறல் காற்றைக் கிழிக்கிறது. தமிழக - கேரள எல்லையிலிருக்கும் இந்தக் கடலோர மீனவக் கிராமங்கள் நூற்றாண்டு காணாத மாபெரும் அழிவைச் சந்தித்திருக்கின்றன. ஒகி புயல் அவர்களை நிலைகுலைய வைத்திருக்கின்றது.

வள்ளவிளை என்ற ஒரு ஊரில் மட்டும் 23 விசைப் படகுகளில் 300-க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனர். இவர்களில் புயலுக்குப் பிறகு கரை திரும்பியோர் ஒரு சிலர் மட்டுமே. மற்றவர்கள் நிலை என்னவென்றே தெரியவில்லை. தூத்தூரில் நான் சந்தித்த இரண்டு மீனவர்கள், ஒகி புயலில் சிக்கி மூன்று நாள்கள் கடலில் நீந்திக் கரை சேர்ந்தவர்கள். அவர்கள் விவரிக்கும் காட்சிகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. ‘‘எங்க போட்டுல நான், என் அண்ணன் உள்பட நாலு பேர் இருந்தோம். புயல் அடிச்ச அன்னைக்கு நைட் 11 மணிக்கு எங்க போட் கவிழ்ந்துச்சு. கையில கிடைச்ச எதையோ பிடிச்சுக்கிட்டு காலையில வரைக்கும் மிதந்துக்கிட்டே கெடந்தோம். யாராவது காப்பாத்த வருவாங்களான்னு பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சுகிட்டே வந்துச்சு. என் அண்ணன், ‘என்னால முடியல்ல’ன்னு மிதவையில இருந்து கையை எடுக்கப் போனார். நான் இழுத்துப் பிடிச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அவர் மயங்கி சரிஞ்சார். உடல் விறைச்சுப் போச்சு. உயிர் இல்லை. உடலையாவது பிடிப்போம்னு இழுத்துப் பிடிச்சுப் பார்த்தேன். அண்ணன் உடலைப் பிடிச்சிருந்தா நானும் உள்ளே போகணும்ங்கிற நிலைமை. அப்படியே அவரை விட்டுட்டேன்.

காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...

பிறகுதான், ‘இனிமே யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். கரை இருக்கிற திசையைப் பார்த்து நீந்துவோம்; ஆண்டன் விட்ட வழி’ன்னு நீந்த ஆரம்பிச்சோம். உடம்புல தெம்பு இல்ல... மெதுவா நகர்ந்து வந்தோம். எங்க மூணு பேர்ல ஒருத்தர், ‘இதுக்கு மேல முடியலை’ன்னு நீந்துறதை விட்டுட்டார். எதுவும் செய்யுறதுக்கு இல்லை. மிச்சம் இருந்த ரெண்டு பேர் நீந்த ஆரம்பிச்சோம். தூரத்துல ஒரு கப்பல் தெரிஞ்சது. அதை நோக்கி நீந்தினோம். அது ஒரு ஜப்பான் சரக்குக் கப்பல். அவங்க காப்பாத்தி உள்ளே தூக்கினாங்க. அந்தக் கப்பல் மட்டும் அரை மணி நேரம் தாமதமா கண்ணுல பட்டிருந்தா நாங்க ரெண்டு பேரும் உள்ளே போயிருப்போம்’’ என மரணத்தின் கணங்களை நினைவு கூர்கிறார் தூத்தூரில் நாம் சந்தித்த ஒரு மீனவர். இப்படி தப்பி வந்தோர் சொல்லும் ஒவ்வொரு கதையும் இதயத்தை அறுக்கிறது. 

மீனவக் கிராமங்களில் ஆண்கள் மிக முக்கியமானவர்கள். ஆண்கள் இல்லாத மீனவக் குடும்பம், முதுகெலும்பு ஒடிந்தது போல் ஆகிவிடுகிறது. மக்களின் இந்தத் துன்பத்தைத் துடைக்க வேண்டிய மத்திய பி.ஜே.பி அரசோ, மாநில அ.தி.மு.க அரசோ, நிலைமையின் தீவிரத்தை ஒரு சதவிகிதம் கூட உணரவில்லை. புயல் வரப்போவதை முன்கூட்டியே அறிவிக்க வக்கற்ற இவர்கள், வந்தபிறகு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதது மட்டுமல்ல... இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் ஆபாசமான வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

‘‘இப்போது அதைவிடக் கேவலமான ஒரு வேலையில் கோஸ்ட் கார்டு ஈடுபட்டுள்ளது’’ என்று சொல்லும் மீனவர்கள், புயலுக்குத் தப்பித் தங்கள் படகுகளில் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் மீனவர்களைத் தங்கள் கப்பல்களில் கட்டாயமாக ஏற்றி, அவர்களையும் மீட்கப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாகக் கூறுகின்றனர். இதை நம்மிடம் தெரிவித்த சின்னத்துறை கிராம மீனவர்கள், ‘‘நாங்களா கரை வந்து சேர்ந்தா படகாவது மிஞ்சும். ஆனா இவங்க எங்களைக் கட்டாயப்படுத்தி கப்பல்ல ஏத்தி, படகை நடுக்கடல்ல விட்டுட்டு வந்திடுறாங்க. ஒவ்வொரு ஆளுக்கும் 5 லட்சம், 10 லட்சம் நஷ்டம்” என்கிறார்கள்.

இந்த 5 லட்சம், 10 லட்சம் என்பது கரையோரத்தில் மீன் பிடிக்கும் சிறிய படகுகளின் விலை. ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்லும் ஒரு விசைப் படகின் விலை குறைந்தது 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை. புயலில் மூழ்கிய ஒவ்வொரு படகின் பொருளாதார இழப்பும் மிகப்பெரியது. 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் லிட்டர் டீசல் பிடித்துக்கொண்டு, 10 டன்னுக்கும் மேல் ஐஸ் பாறைகள் ஏற்றிக்கொண்டு, பெரிய டிரம்களில் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் நிரப்பிக்கொண்டு இவர்கள் ஒருமுறை கடலுக்குக் கிளம்பினால் கரை திரும்ப 40 நாள்கள், 50 நாள்கள் ஆகும். குமரிக் கரை மீனவக் கிராமங்கள் கிறிஸ்தவர்களால் நிரம்பியவை. ஆண்டின் முக்கால்வாசி நாள்கள் கடலில் இருக்கும் இவர்கள், எது எப்படியிருந்தாலும் கிறிஸ்துமஸுக்கு முன்பாக கரை சேர்ந்துவிடுவார்கள். இப்போது கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில், கரையெங்கும் சோகக் குரல்கள் நிரம்பியுள்ளன.

புயல் முடிந்து 10 நாள்களாகியும் காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விரக்தியடைந்த தூத்தூர் பகுதி மீனவர்கள் சிலர் தங்களின் படகுகளில் மீனவர்களைத் தேடிச் சென்றனர். அப்போது அவர்கள் படம் பிடித்தக் காட்சிகளில், சில மிதவைப் பொருள்களை உடலில் கட்டிக்கொண்டு செத்து மிதக்கும் மீனவர்களின் உடல்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. இந்த பிரமாண்ட சமுத்திரத்துடன் காலமெல்லாம் போராடி, உறவாடி வாழ்ந்த மீனவன், அதே கடலில் காப்பாற்ற யாருமற்று சடலமாக மிதக்கிறான்.

‘‘எப்படியாவது காப்பாத்த ஆள் வந்திருவாங்கன்னு நம்பி எல்லாரும் ஒரே இடத்துல கையைக் கோத்துக்கிட்டு மிதந்திருக்காங்க. பசியாலதான் ஒவ்வொருத்தரா செத்திருக்காங்க. ஆரம்பத்துலயே போயிருந்தா நிச்சயமா உயிரோட காப்பாத்தியிருக்கலாம். உடல்களை எடுத்துட்டு வரலாம்னு முயற்சி செஞ்சோம். ஆனா, தண்ணியில ஊறி உப்பிப்போய், கையைத் தொட்டா கை வருது, காலைத் தொட்டா கால் வருது. ஒண்ணும் பண்ண முடியலை’’ என்று வேதனையுடன் விவரிக்கிறார்கள்.  

மலேசிய விமானம் MH 370 கடலுக்குள் விழுந்தபோது, அது உலகத்தின் தலைப்புச் செய்தி. உலகின் பல நாடுகள் ஒன்றிணைந்து, நவீனக் கருவிகளின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி, கடல் பரப்பின் ஒரு சதுர அடி விடாமல் தேடினார்கள். இங்கு ஏன் அப்படி தேடவில்லை? இவர்கள், கரையின் விளிம்பில் சிதறி வாழும் வெறும் மீனவர்கள்; அவர்கள் ‘விமானத்தில் பறக்கும் அளவுக்கான கௌரவம் மிக்க உயிர்கள்’ என்பதாலா? மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 239 பேர். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் மொழியில் சொல்வதானால், அந்த ‘நம்பர்ஸை’ விட, ஒகி புயலில் காணாமல் போனவர்களின் ‘நம்பர்ஸ்’ அதிகம்தானே! ஏன் உலக நாடுகளைத் துணைக்கு அழைத்துத் தேடவில்லை? இந்தியாவின் விமானப் படையும், கப்பல் படையும் சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து சர்க்கஸ் காட்டுவதற்கு மட்டும்தானா? மீனவர் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இல்லையா? இந்தக் கேள்விகளைக் குமரிக் கடலோர மீனவன் ஒவ்வொருவனும் கேட்கிறான்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பதாக அறிவிக்கிறார். அரசு வேலை தருவதாகச் சொல்கிறார். நேரில் சென்று மக்களைச் சந்திக்கிறார். ஒகி புயல் பாதிப்புகளைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கோருகிறார். ஆனால், இங்கே மீனவர்கள் செத்து மிதக்கும்போது ’மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். 

‘புயல் என்பது இயற்கைப் பேரிடர். அதற்கு அரசு என்ன செய்ய முடியும்?’ என்று கேட்கலாம். இது அரசின் கையறு நிலை அல்ல; கையாலாகத்தனம். ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற பெயரில் வானிலைக் கணிப்புகளை ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜான் என்ற தனி நபர், நவம்பர் 29-ம் தேதி காலை 9 மணிக்கு இப்படி ஒரு புயல் வரப்போவதை அறிவிக்கிறார். ஆனால், அதிலிருந்து 36 மணி நேரத்துக்குப் பிறகுதான் அரசு அறிவிக்கிறது. சரியான நேரத்துக்கு அறிவித்திருந்தால், குறைந்த நாட்டிக்கல் தூரம் சென்று வரும் மீனவர்கள் கடலுக்குப் போவதை நிறுத்தியிருப்பார்கள்.

2004 சுனாமியில் இறந்துபோன குமரி மீனவர்கள் 800 பேர். ஆனால் இப்போது கடலுக்குள் சென்று திரும்பி வராதவர்களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு மேல். எனவே, இது இயற்கைப் பேரிடர் மட்டுமல்ல. அரசின் அலட்சியம் உருவாக்கிய செயற்கைப் பேரிடரும்கூட. இந்தச் செயற்கைப் பேரிடருக்குப் பின்னால் ‘மீனவர்கள்தானே’ என்ற அலட்சியமும், அவர்களைக் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இருக்கிறது. ஏன் மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்? ஏனெனில், துறைமுகம் கட்டவும், சொகுசு விடுதிகள் கட்டவும், சுற்றுலாவுக்கும், ஏற்றுமதி- இறக்குமதிக்கும், கனிம வளங்களை அள்ளவும் அவர்களுக்குக் கடற்கரை வேண்டும்.

இந்தப் பேரிடரில் நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம் என்பதுதான் இங்குள்ள கேள்வி. மீனவர்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், மெரினா போராட்டத்தின் இறுதி நாள்களில் போலீஸின் வன்முறையை முழுமையாகச் சுமந்தவர்கள் அவர்கள். தமிழகத்தின் உணர்வைத் தனதாக்கிக்கொண்ட மீனவர்களின் துயரத்தை நமதாக்கிக்கொள்ளப் போகிறோமா? குமரிமுனை கேட்கிறது. என்ன பதில் சொல்லப் போகிறோம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடற்புரத்துக்குப் பேரிழப்பு!

ழ்கடல் மீன்பிடிப்புக்கு இந்திய அளவில் புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 500 நாட்டிக்கல் மைல், 1,500 நாட்டிக்கல் மைல் என ஏமன், பாகிஸ்தான் வரை சென்று மீன் பிடிப்பவர்கள். வெறும் விசைப் படகுகளை வைத்துக்கொண்டு பிரமாண்டமான சர்வதேசக் கப்பல்களுடன் போட்டிப் போடும் திறன் மிக்கவர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருப்பது தென்முனை கடற்புரத்துக்கு மிகப்பெரும் இழப்பு.

காலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...

குமரியில் காணாமல் போனதில் நாகை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் அடக்கம். அதேபோல, தமிழக மீன் பிடித் தொழிலில் வட மாநிலத் தொழிலாளர்கள் கணிசமானோர் உள்ளனர். இவர்கள் எத்தனை பேர் உள்ளே சென்றார்கள் என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை. படகு உரிமையாளர்களுக்கு இவர்களின் பெயரைத் தவிர வேறெதுவும் தெரியாது.