Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

1967 அல்லது 1968-ம் ஆண்டு. அந்த ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசியது, அங்கே பணிபுரிந்த சாதாரண இளைஞன். எதிர்முனைக் குரலைக் கேட்டதுமே, தனது ஹைதி தேசத்தின் அதிபர் பேசுகிறார் எனப் புரிந்துகொண்டான். குறிப்பிட்ட விமானம் குறித்த விவரங்களை அவர் கேட்க, பவ்யமாக, தெளிவாகப் பதில் சொன்னான். அதிபருக்குத் திருப்தி. ‘‘உன் பெயரென்ன?’’ – அதிபர் கேட்டார். அந்த இளைஞன் சொன்னது அதிபருக்குப் புரியவில்லை. தயக்கத்துடன் மேற்கொண்டு விளக்கினான்.

‘‘மாண்புமிகு அதிபரே. என் தந்தை பெயர் மேஜர் டூபாண்ட். அவர் அதிபரின் மெய்க் காப்பாளர் பணியில் இருந்தார். 11 வருடங்களுக்கு முன்பு காணாமல்போய்விட்டார்’’ – சொல்லி முடிக்கும்போது, அந்த இளைஞனுக்கு நாக்கு வறண்டுவிட்டது. சரியாக 11 வருடங்களுக்கு முன்பாகத்தான், அவர் ஹைதியின் அதிபராகப் பதவியேற்றிருந்தார். ‘‘ஓ... ஆமாம். நினைவிருக்கிறது. உன் உதவிக்கு நன்றி. மகிழ்ச்சி’’ என்று தொலைபேசி அழைப்பை முடித்தார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

பின்பு அதிபர், தன் பிரத்யேக உதவியாளரை அழைத்தார். ‘‘மேஜர் டூபாண்ட் இருக்கிறாரா? இல்லை, சுட்டுவிட்டோமா?’’ சிறை ஒன்றில் 11 வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. மறுநாள் மேஜர் விடுதலை செய்யப்பட்டார்.

‘வாவ், வாட் ஏ ஹ்யூமன் பீயிங்!’ என்றெல்லாம் சிலிர்க்க வேண்டாம். பிரான்கோயிஸ் டுவாலியெர் என்ற இயற்பெயர் கொண்டவரும், பப்பா டாக் (Papa Doc) என்று அனைவராலும் அன்பாகவும் அச்சத்துடனும் அழைக்கப்பட்ட அந்த அதிபரின் வன்முறை வரலாற்றை விரிவாகத் தெரிந்து கொண்டபின், ஒரு முடிவுக்கு வாருங்கள்.

பிரான்ஸின் மிக முக்கியமான காலனி நாடாக இருந்தது, கரீபியன் தீவான ஹைதி. பல்வேறு தேசங்களில் காலனியாதிக்கம், இருபதாம் நூற்றாண்டில்தான் முடிவுக்கு வந்தது. ஆனால், 1804-லேயே மாவீரன் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்த ஹைதி வீரர்கள், தம் தேசத்தை பிரான்ஸிடமிருந்து விடுவித்தனர். ஆனால், ஹைதி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிட்டவே இல்லை. இன்றைக்கும் உலகில் பின்தங்கிய நாடுதான் அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரணங்கள் பல உண்டு. மக்கள்மீது அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள் அங்கே தோன்றவில்லை. பப்பா டாக்குக்கு முன்பாக, ஹைதியில் 31 பேர் அதிபராக இருந்துள்ளனர். அதில், 18 பேர் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்; அல்லது கொல்லப்பட்டுள்ளனர். அந்தத் தர(மற்ற) வரிசையில் நிரந்தர சூப்பர் ஸ்டார், பப்பா டாக்!

அமைதியான நீதிமான், சிறந்த நீதிபதி என்ற பெயர் டூவால் டுவாலியெருக்கு உண்டு. அவரின் மனைவி உல்லிஸியா, பேக்கரி தொழில் செய்தவர். இருவருக்கும் பிறந்த மகன் பிரான்கோயிஸ் டுவாலியெர் (1907). கல்வியில் ஆர்வமுடன் இருந்த பிரான்கோயிஸ், டாக்டர் ஆனார். உள்ளூர் மருத்துவமனைகளில் தனது பணியைத் தொடங்கினார். பின், ஒரு வருடம் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

Yaws என்ற தோல் தொற்றுநோய், மலேரியா, டைஃபஸ் போன்றவை ஹைதியில் அதிகமாகப் பரவின. அவற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் நிதியுதவியுடன் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. அதில் பிரான்கோயிஸும் இடம்பெற்றார். தேசம் முழுக்கப் பயணம் செய்து பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தது, அவருக்குப் பேரனுபவமாக இருந்தது. தம்மை நோயிலிருந்து மீட்க வந்த அந்த உள்ளூர் கறுப்புக் கடவுளை ஹைதி மக்கள் அன்புடன் கொண்டாடினர். ‘பப்பா டாக்’ என்று செல்லமாக அழைத்தனர். பப்பா, அங்கே மரியாதைக்குரிய சொல். டாக்டரின் சுருக்கம் ‘டாக்’.

ஹைதி சுதந்திரத் தேசமெனினும், அமெரிக்காவின் ஆதிக்கம் அங்கே பரவியிருந்தது. முலாட்டோ (Mulatto) என்றால் கறுப்பினத்தவரும், வெள்ளையினத்தவரும் கலந்து உருவாக்கிய சந்ததியினர். ஹைதியில் முலாட்டோக்களின் எண்ணிக்கை குறைவென்றாலும், அவர்களே அதிகாரம் செய்யும் இடத்தில் இருந்தனர். பப்பா டாக், ஒரு மருத்துவராக அமெரிக்கர்களுடன் ஒட்டி உறவாடினாலும், அவர் வெள்ளை ஆதிக்கத்தை வெறுத்தார். முலாட்டோக்கள் முடக்கப்பட்டு, தன்னைப்போல அசல் கறுப்பினத்தவர்களே முழுமையாக அதிகாரப் பீடத்தில் அமர வேண்டுமென விரும்பினார். கறுப்பின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் Négritude என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அது ‘வூடூ’ மார்க்கத்தை ஆதரிக்கும் இயக்கம்.

அதென்ன வூடூ (Voodoo)? பொம்மையில் ஊசிகளைக் குத்தி, பில்லி சூனியம் வைக்கும் மாந்திரீக முறை; அல்லது இறந்தவர்களை எழுப்பி ரத்தம் குடிக்கும் ஸோம்பிகளாகத் திரிய விடும் வழிபாடு. இவையெல்லாம் ஹாலிவுட் படங்கள் உருவாக்கியிருக்கும் வூடூ குறித்த பொய் பிம்பங்கள். வூடூ என்பது கடவுளை வழிபடும் மாந்திரீக முறைதான். மந்திர தந்திரங்களுடன், ஆப்பிரிக்க பச்சை இலை மருத்துவமும் உள்ளடங்கியதே வூடூ. அதில் பில்லி சூனியம் ஒரு சிறுபகுதி. ஹைதி மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம், தொழில், பகை என அனைத்திலும் வூடூ பின்னிப் பிணைந்தது. பிரெஞ்சுக்காரர்களை ஹைதியிலிருந்து விரட்டியடிக்கவும் வூடூ மந்திர சக்தி பயன் படுத்தப்பட்டதாகப் பதிவுகள் உள்ளன.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

வூடூ மந்திரவாதிகள் பலரையும் சந்தித்த பப்பா டாக், அவர்களது மந்திர சக்தியில் மனம் தொலைத்தார். ஹைதியின் பாரம்பர்யமும் பெருமையும் நிறைந்த ‘வூடூ’ மார்க்கத்தின் மீது அதீதப் பற்று அவருக்கு உண்டானது. Gradual Evolution of Voodoo என்ற ஒரு புத்தகத்தை எழுதினார்; ஒரு பத்திரிகையையும் நடத்தினார். பிற்காலத்தில் பப்பா டாக், தனது அரசியல் வளர்ச்சிக்கும், மக்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளவும் வூடூவை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், இந்துத்துவா போல.

திருமணம் (சிமோன் என்ற பெண்ணுடன்). குழந்தைகள். தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவர். பத்திரிகையாளர். நிதானமாக அரசியலிலும் அடியெடுத்து வைத்தார் பப்பா டாக். 1946-ல் ஹைதியின் அதிபராக இருந்த டுமார்செய்ஸுக்கு நெருக்கமாக இருந்தார். தேசியப் பொதுசுகாதார சேவைத் துறையின் நிர்வாக இயக்குநர் பதவி கிட்டியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறையின் அமைச்சராகவும் உயர்ந்தார். 1950-ல் டுமார்செய்ஸ் தனது அதிபர் பதவிக்காலத்தை நீட்டிக்க நினைத்தார். ராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த பவுல் மக்லோய்ரெ, டுமார்செய்ஸை விரட்டியடித்துவிட்டு தானே அடுத்த அதிபர் ஆனார்.

டுமார்செய்ஸின் ஆதரவாளர்களுக்கெல்லாம் கெட்ட காலம் ஆரம்பமானது. ஆகவே, பப்பா டாக்கும் பதுங்கினார். பெண் வேடமெல்லாம் போட்டுக்கொண்டு வெளியே திரிந்த அந்த இக்கட்டான காலகட்டத்தில், அவருக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருந்த நபர் கிளெமென்ட் பார்போட். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் பப்பா டாக்கு. அந்தக் கறுப்புக் கொக்கின் வசந்த காலம் 1956-ல் வந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

பவுலின் பதவிக்காலம் முடிந்ததும் அவரும் விரட்டியடிக்கப்பட்டார். பின், தற்காலிக அதிபராக சிலர் வந்து போயினர். 1957-ல் ஹைதி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘நானும் போட்டியில் இருக்கிறேன்’ - நீண்ட காலத்துக்குப் பிறகு வெளியே வந்து நெஞ்சு நிமிர்த்தினார் பப்பா டாக். நேஷனல் யுனைட்டி பார்ட்டியின் வேட்பாளராக நின்ற அவருக்கு மக்கள் ஆதரவும், ராணுவத்தின் ஆதரவும் பெருகியது. எதிர்த்து நின்ற லூயிஸும் லேசுப்பட்ட ஆள் அல்ல. வசதியான பண்ணையார். விவசாயக் கட்சியின் அனுபவ அரசியல்வாதி. நேஷனல் பார்ட்டியைச் சேர்ந்த கிளமென்ட் என்பவரும் போட்டியில் நின்றார். அதிபர் பதவி வெறியிலிருந்த பப்பா டாக், தனது அசிங்க அரசியலை ஆரம்பித்தார். கடத்தல், முறைகேடுகளுடன் நடந்த அந்த அநீதித் தேர்தல் முடிவுகளின்படி, பப்பா டாக் 72.4 சதவிகித வாக்குகளுடன் வென்றார். ஹைதியின் 32-வது அதிபராக 1957 அக்டோபர் 22 அன்று பதவியில் அமர்ந்தார். ‘சேவை மனம் கொண்ட ஒரு மருத்துவர் அதிபராகி விட்டார். இது ஹைதியின் மறுமலர்ச்சி’ என்று மக்கள் கொண்டாடினார்கள்.

அதிபராக பப்பா டாக்கின் ஆரம்ப காலம், அவருக்கு அச்சுறுத்தல் நிறைந்ததாகத்தான் இருந்தது. ஹைதியின் தலைநகரமான போர்ட்-ஓ-பிரின்ஸில், 1958, ஜூலை 28 அன்று ஓர் அரைவேக்காட்டு ராணுவப்புரட்சி நிகழ்ந்தது. அமெரிக்கக் கூலிப்படையினர் ஐந்து பேர், ஹைதி ராணுவ அதிகாரிகள் மூவருடன் இணைந்து ராணுவ வளாகத்தைக் கைப்பற்றும் முயற்சியையும், அதிபர் மாளிகையைத் தாக்கி பப்பா டாக்கைக் கொல்லும் திட்டத்தையும் செயல்படுத்தினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல ராணுவ ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. திட்டங்கள் சொதப்பின. விஷயமறிந்த பப்பா டாக், காக்கி ராணுவ உடை, தலையில் ஹெல்மெட், கைத்துப்பாக்கியுடன் களத்தில் இறங்கினார். புரட்சி வீழ்த்தப்பட்டது. எட்டுப் பேருமே கொல்லப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்கள் சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டபோது, ‘தர்மத்தின் வாழ்வுதனை...’ என்ற மனநிலையில் ஹைதி மக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். ராணுவ உடையில் பப்பா டாக்கின் புகைப்படம் நாளிதழ்களில் வெளிவர, அவர் ‘சூப்பர் ஹீரோ’ ஆனார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 35 - பப்பா டாக் பராக்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பப்பா டாக், தன் உடலில் இன்சுலின் செலுத்திக்கொள்வது வழக்கம். 1959-ல் ஒருநாள் இன்சுலின் அதிகமாகிப் போக, கடும் மாரடைப்பால் மூர்ச்சை யடைந்தார். ஒன்பது மணி நேரம் கழித்தே நினைவு திரும்பியது. அந்த மாரடைப்பால் பப்பா டாக்கின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது; சற்றே மனநலமும்.

அடுத்தடுத்து இருமுறை மரணத்திலிருந்து தப்பித்த பப்பா டாக், அதுவரை பல உயிர்களை நோயிலிருந்து மீட்ட அந்த டாக்டர், அதற்குப்பின் பல்லாயிரம் உயிர்களைப் பிடுங்கியெறியத் தயாரானார்.

(பப்பா டாக் வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism