Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

க்களின் முட்டாள்தனமே ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான மூலதனம். அதுவும் கல்வியறிவற்ற, மூடநம்பிக்கை களில் ஊறிய பாமர மக்கள் என்றால், ஏமாற்றுவதற்கு மிகவும் வசதி. பிரான்கோயிஸ் டுவாலியெர் (எ) பப்பா டாக், ஒரு மருத்துவராக ஊர் ஊராகச் சேவை செய்தார். மருந்துகள் கொடுத்து நோயைப் போக்கினார். ஆனால், அந்த மக்களோ மருந்துகளின் சக்தியையெல்லாம் உணரவில்லை. ‘எல்லாம் வல்ல பப்பா டாக்கின் மந்திர சக்தியே சர்வரோக நிவாரணி’ என்று மனதார நம்பினர். அவரும் தன்னை ‘வூடு’ மார்க்கத்தின் தீவிர ஆதரவாளராக நிலைநிறுத்தினார். 1957-ல் ஹைதியின் அதிபராக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

அதுவரையிலான ஹைதியின் அதிபர்கள் பலரும் முழு ஆட்சிக்காலத்தை அனுபவித்ததில்லை; அல்லது அவர்களுக்கு நல்ல சாவே வந்ததில்லை. பப்பா டாக்கும் பதவியேற்ற ஒரு வருடத்துக்கு உள்ளாகவே கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார். எல்லாம் ராணுவத்தின் சதி. அதுவரை ராணுவத்திலிருந்துதான் அதிபர்கள் பலரும் உதித்திருக்கிறார்கள். ஆகவே, ராணுவத்தின் முக்கிய தலைகளையெல்லாம் தூக்கினார். ஹைதியில் ராணுவம் என்பதையே டம்மியாக்கினார். பதிலாக, தனக்கு விசுவாசமான, தன் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செயல்படும் மூர்க்கப் படை ஒன்றை உருவாக்கினார். Tonton Macoute.

‘ரொம்ப சேட்டை பண்ணா பூச்சாண்டி புடிச்சுட்டுப் போயிடுவான்’ என்று குழந்தைகளைப் பயமுறுத்துவோம் அல்லவா? ‘டான்டான் மேக்கூட்’ என்பவன் ஹைதி நாடோடிக் கதைகளில் வரும் பூச்சாண்டி. ‘அடங்காத குழந்தைகளைச் சாக்குப்பையில் பிடித்துச்சென்று காலை உணவாகக் கடித்துத் தின்பான்’ என்று மக்கள் பயமுறுத்துவார்கள். அந்தப் பூச்சாண்டிக்கு உயிர்கொடுத்து உலவ விட்டார் பப்பா டாக். ‘தேசத்தைப் பாதுகாக்கவே இந்த மக்களின் ராணுவம்’ என்றார். உண்மையில் அவர்கள் துப்பாக்கிகளுடன் திரிந்த கூலிப்படை. வூடு மந்திரவாதிகள் பலர் டான்டான் தளபதிகளாக மாறினர். அதிபரைப் பாதுகாப்பது அவர்களின் கடமை. அதற்காக யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்பது அவர்களின் உரிமை. ஆம், அவர்களின் சின்னம்கூட மண்டைஓட்டின் மரணப் புன்னகையாகத்தான் இருந்தது. அந்தப் படையைப் போஷாக்குடன் வளர்க்க, பணத்தை அளவின்றிச் செலவு செய்தார் பப்பா டாம். ஆனால், செலவு கட்டுப்படியாகவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

அந்தத் தருணத்தில்தான், ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா வடிவத்தில் அதிர்ஷ்டக் காற்று ஹைதி பக்கமாக வீசியது. 1959 ஜனவரியில் கியூபாவில் காஸ்ட்ரோவின் புரட்சி வென்றது. கியூபா தன்னை சோஷலிச நாடாகப் பிரகடனம் செய்துகொண்டது. ஆகவே, அமெரிக்காவுக்கு அடிவயிறு எரிந்தது. கியூபாவிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த ஹைதியும் அமெரிக்காவுக்குப் பிடிக்காத தேசம்தான். ஆனால், பப்பா டாக்கை அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டானது. ‘நான் கம்யூனிஸத்தின் தீவிர எதிர்ப்பாளன். ஆனால், எப்போதும் அப்படி இருக்க முடியாதல்லவா? கரீபியன் தீவுகளெங்கும் கம்யூனிஸக் காற்று வீசும்போது, அது ஹைதியிலும் வீசலாம்தானே?’ – நெளிவு சுளிவுடன் தெளிவாக அமெரிக்காவை மிரட்டினார் பப்பா டாக். ‘ஹைதியின் மேம்பாட்டுக்காக இத்தனை மில்லியன் டாலர் முதல் கட்டமாக ஒதுக்குகிறோம்’ என்று அறிவித்தது அமெரிக்க அரசு. பப்பா டாக் நன்றியுடன் கைகுலுக்கினார்.

தேசத்தின் மேம்பாட்டுக்காகக் கிடைத்த நிதியைத் தனக்கும், தன் கூலிப்படையைக் கொழுகொழுவென வளர்க்கவும் பயன்படுத்திக் கொண்டார். ஹைதியின் ராணுவத்தைவிட, பல மடங்கு பெரிய படையாக டான்டான் மேக்கூட் வளர்ந்து நின்றது. குறிப்பாக அரசியல் எதிரிகளுக்கும், கறுப்பு-வெள்ளைக் கலப்பினத்த வர்களான முலாட்டோக் களுக்கும் எதிராகத் தோட்டாக்களைப் பாய்ச்சியது. ஒருவர் காணாமல்போனால், அவர் அடுத்த சில நாள்களில் ஏதாவது ஒரு மரத்தில் பிணமாகத் தொங்கலாம் அல்லது ஏதாவது ஒரு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டுச் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கலாம் அல்லது கல்லால் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம். ‘ஐயோ’ என்று கதறியழுது அந்த உடலை எடுத்து இறுதிச்சடங்கு செய்ய நினைக்கும் குடும்பத்தினருக்கும் அதே கதிதான். அளவற்ற கொலைகள். எண்ணற்ற பாலியல் பலாத்காரங்கள். நீல டெனிம் உடை, வைக்கோல் தொப்பி, கறுப்புக் கண்ணாடி, கையில் துப்பாக்கி, இடுப்பில் பட்டைக்கத்தி தோற்றத்துடன் திரிந்த டான்டான்களின்  ஆட்டத்துக்கு அதிபரின் முழு ஆசியும் இருந்தது.

பப்பா டாக்கின் அரசியல் வளர்ச்சியில் பங்கெடுத்தவரும், நீண்டகால நண்பருமான கிளமென்ட் பார்போட், டான்டான் படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 1959-ல் பப்பா டாக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சில காலம் ஓய்வில் இருந்த சமயத்தில், பார்போட் வசமே ஆட்சி அதிகாரம் இருந்தது. பப்பா டாக் உடல் தேறியும், சற்றே மனநலம் பாதிக்கப்பட்டும் மீண்டுவந்தபோது, அவரைச் சந்தேகம் அபகரித்தி ருந்தது. பார்போட் தன்னைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறாரோ? யோசிக்கவே இல்லை. பார்போட்டைச் சிறையில் அடைத்தார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

1961-ல் அதிபர் பப்பா டாக்கின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வரவிருந்தது. ஹைதியின் அரசியல் சட்டப்படி, ஒருவர் ஒருமுறை மட்டுமே அதிபராக முடியும். சர்வாதிகார மனோபாவத்தைச் சட்டம் என்ன செய்ய முடியும்? பப்பா டாக், ஹைதியின் இரண்டு அவைகளையும் இணைத்து ஒரே அவையாக மாற்றினார். 1961-ல் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். ‘பிரான்கோயிஸ் டுவாலியெர், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் அதிபராகத் தொடரலாமா?’ வாக்குச்சீட்டில் ‘ஆம்’ என்பது மட்டுமே உண்டு. ‘இல்லை’க்கு இடமில்லை. ‘13,20,748 பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எதிராக விழுந்த ஓட்டு 0’. அப்படித்தான் முடிவை அறிவித்தார்கள்.

‘‘மக்களின் தீர்ப்பை மறுப்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை’ – அதிபர் மாளிகையின் பால்கனியிலிருந்து வெற்றிச் சின்னம் காட்டினார் பப்பா டாக். ஆட்டுமந்தைக் கூட்டத்தின் ஆரவாரம் ‘ம்மே’ என்று ஒலித்தது. ‘நியூயார்க் டைம்ஸ்’ கதறியது. ‘லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேர்தல்களில் எத்தனையோ மோசடிகள் நடந்துள்ளன. இப்படி ஒரு மூர்க்கத்தனமான மோசடி, வரலாற்றிலேயே பதிவானதில்லை!’

1963-ல் பார்போட்டை பாவப்பட்டு விடுதலை செய்திருந்தார் பப்பா டாக். வெளியில் வந்த பார்போட், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார். அதன்படி, பாதுகாப்பு அதிகாரிகளைச் சுட்டு வீழ்த்தி, பப்பா டாக்கின் குழந்தையைக் கடத்தி மிரட்டினர். அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தனர். விஷயமறிந்து விஷப்பாம்பாகச் சீறினார் அதிபர். டான்டான்கள் எட்டுத்திக்கும் தேடுதல் வேட்டை நடத்தினர். சந்தேகத்துக்குரிய பழைய எதிரிகளை, மிஞ்சியிருக்கும் அவர்களின் குடும்பத்தினரைச் சுட்டுவீழ்த்தினர். பார்போட் எளிதில் பிடிபடவில்லை.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

‘அவன் வூடு மந்திர சக்தி மூலம் தன்னை ஒரு கறுப்பு நாயாக மாற்றிக் கொண்டிருந்தால்?’ – பயந்தார் பப்பா டாக். தேசமெங்கும் திரியும் கறுப்பு நாய்களையெல்லாம் சுட்டுக் கொல்லச் சொன்னார். ஏராளமான கறுப்பு நாய்களது உயிர்த் தியாகத்துக்குப் பிறகு பிடிபட்ட பார்போட், மனித வடிவிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிபர் மாளிகையில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டது. திரும்பிய திசையெங்கும் துப்பாக்கி வீரர்கள். அந்நியர் எவரும் நுழைந்துவிடவே முடியாது. பப்பா டாக் எங்கே சென்றாலும் சுற்றிலும் பல கார்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பின்தொடர்ந்தனர். இருந்தாலும், அவர் சில இடங்களில் மக்களோடு மக்களாகக் கலந்து நின்றார். அவர்களிடம் ரேஷன் புன்னகை சிந்தி பேசினார். தன் கோட் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து, எண்ணிப் பார்க்காமல் கொடுத்தார். பொன்மனச் செம்மலாகவும், வாழும் வள்ளலாகவும் அவரை அப்பாவி மக்கள் கொண்டாடினார். அவர் காருக்குப் பின்னே ஏழை மக்கள், ‘பப்பா... பப்பா...’ என்று கத்தியபடியே ஓடுவதும், அவர் உள்ளிருந்தபடியே பணத்தை விட்டெறிவதும் வழக்கமான காட்சிகள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

‘யார் அப்பன் வீட்டுப் பணத்தை எவன் அனுபவிப்பது?’ அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி ஆத்திரமடைந்தார். ஹைதிக்குப் பாய்ச்சும் பணமெல்லாம் அதிபரின் வாய்க்குள் போகிறதென உஷ்ணமானார். அமெரிக்க உதவி அனைத்தையும் நிறுத்தினார். ‘பப்பா டாக்கை அகற்றுவது எப்படி, ஹைதியில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது எப்படி’ என்றெல்லாம் வெள்ளை மாளிகையில் விவாதித்தார்கள்.

1963, நவம்பர் 22. அதிகாலை முதலே ஹைதி அதிபர் மாளிகையில் பப்பா டாக்கின் வூடு பூஜைகள் ஆரம்பமாகியிருந்தன. ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, பொம்மை ஒன்றைக் கையில் எடுத்தார். அதை ஊசியால் குத்த ஆரம்பித்தார். மீண்டும் மீண்டும். 2222 முறை. (22 என்பது பப்பா டாக்கின் அதிர்ஷ்ட தேதி. அவர் அதிபராக ஆனதும் 22-ம் தேதியில்தான்).

அதே தினத்தில், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். காதுகளுக்கு செய்தி எட்டிய தருணத்தில், பப்பா டாக் தன் ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாக ஷாம்பெய்ன் அருந்திக் கொண்டிருந்தார். அலட்சியப் புன்னகையுடன் சில சொற்களை உதிர்த்தார். ‘‘வூடு மந்திர சக்தியால் கென்னடிமீது சாபத்தை ஏவினேன். அதுவே அவரது உயிரைப் பறித்தது.’’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை!

1964, ஜூன் 14 அன்று, பப்பா டாக் வாக்கெடுப்பு என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நிகழ்த்தினார். ‘பிரான்கோயிஸ் டுவாலியெரை ஹைதியின் வாழ்நாள் அதிபராகத் தேர்ந்தெடுக்கிறேன்’. வாக்குச்சீட்டில் ‘ஆம்’ என்பது பெரும்பாலும் டிக் செய்யப்பட்டிருந்தது. அவற்றைப் பெட்டியில் போட மட்டும் வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இருந்தும் 0.1% (3,234 பேர்) இல்லை என்று வாக்களித்திருந்தனர். அந்த நல்லவர்களை பப்பா டாக்கால் கண்டறிய முடியவில்லை. ஜனநாயகத்துக்குச் சவப்பெட்டி வாங்க, சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்தி ஹைதியின் அல்டிமேட் சக்தியாக விஸ்வரூபம் எடுத்தார் பப்பா டாக்.

கென்னடியின் மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அழுத்தத்திலிருந்து விடுபட்டார் பப்பா டாக். ஆனால், அதே அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து 13 பேர் கிளம்பினார்கள். அவர்கள், அமெரிக்காவில் வாழ்ந்த ஹைதி இளைஞர்கள். ‘பப்பா டாக்கைக் கொன்று, அவரது கோரப் பிடியிலிருந்து ஹைதியை மீட்டே தீர வேண்டும்’ என்று சபதம் எடுத்திருந்தார்கள். உத்வேகத்துடன். உக்கிரத்துடன்.

(பப்பா டாக் வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism