Published:Updated:

பரமேஸ்வரி - சிறுகதை

பரமேஸ்வரி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பரமேஸ்வரி - சிறுகதை

சிறுகதை: சாம்ராஜ், ஓவியங்கள்: ரமணன்

பரமேஸ்வரி - சிறுகதை

சிறுகதை: சாம்ராஜ், ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
பரமேஸ்வரி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பரமேஸ்வரி - சிறுகதை
பரமேஸ்வரி - சிறுகதை

ரமேஸ்வரியின் மகனுக்கு, மாமனாரின் பெயரைத்தான் சூட்டியிருந்தனர். மரியாதை காரணமாக, எவரும் `உலகநாதன்’ என்று அழைப்பதில்லை. பரமேஸ்வரியின் கணவர் ராமச்சந்திரன், `மணி’ என்றுதான் அழைப்பார். பரமேஸ்வரி, ``என் சர்க்கரைக்கட்டி...  என் பூந்திக் குஞ்சே!” என இஷ்டம்போல் கொஞ்சுவாள்.

கணவர் ராமச்சந்திரனுக்கு, ஊர் ஊராகச் சென்று பிரின்டிங் ஆர்டர் எடுக்கும் வேலை. மாமா உலகநாதன், கலெக்டர் ஆபீஸில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர்.

பரமேஸ்வரி, ராமநாதபுரம் அலையாங்குளத்துக்காரி (அழகன்குளம்தான்  அவ்வளவு அழகாக உருமாறியிருக்கு!). சாதுவாக, அப்பிராணியாக இருந்தாலும் போக்குவரத்தெல்லாம் அடிதடிக் குடும்பங்களோடுதான். பேச்சு அதாட்டியமாக இருக்கும், பயப்பட மாட்டாள். ஆண் பிள்ளைக்குச் சமமாக மல்லுக்கு நிற்பாள். ராமச்சந்திரன் அவளைப் பெண்பார்க்க வந்தபோதே அவளுக்குப் புரிந்துவிட்டது, `அவனை தொழுவத்தில் பிடித்துக் கட்டிவிடலாம்’ என. மணமேடையிலேயே அதட்ட ஆரம்பித்துவிட்டாள், ``என்ன... பேக்கு மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் பார்த்துக்கிட்டு! ஒழுங்கா உட்காருங்க.” மாமியார் சவுந்திரம், அப்படியே ராமச்சந்திரனுக்கு அம்மா.

மாமனார் வீட்டோடுதான் இருந்தார்கள். இவர்களுக்கு ராத்திரிக்கு எனச் சிறிய அறை ஒன்று இருந்தது, ஏறக்குறைய ஒரு மோட்டார்  செட் அளவில். நிமிர்ந்தால் தலை இடிக்கும். மேலே தகரம் போட்டிருக்கும்.
இரண்டு நாளில் மாமனாரைக் கண்டுபிடித்துவிட்டாள், இது திருட்டுப் பூனை என. கல்யாணத்தன்றே கவனித்திருந்தாள், உலகநாதன் பெண்களை உற்று உற்றுப் பார்ப்பதையும், வாய்ப்பு கிடைத்தால் தொட்டுப் பேசுவதையும், சின்னப் பிள்ளைகளை இழுத்துவைத்துப் பேசுவதையும்.

இவர்கள் ராத்திரி படுத்த பிறகு, யாரோ எங்கிருந்தோ பார்க்கிற உணர்வு. புருஷனிடம் சொன்னால், ``ஏதாவது பூனையாக இருக்கும்!’’ என்றான்.

மாமியார்காரி, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மலங்க மலங்க முழிப்பாள். ராமச்சந்திரனின் அண்ணன் பொண்டாட்டி பிச்சையம்மா விலாவாரியாகச் சொன்னாள். ``அந்தக் காலத்துலேயிருந்து இந்த ஆளு அடிச்சு அடிச்சு, இப்படி ஆகிருச்சு. கல்யாணம் ஆகி வரும்போதே அது பிள்ளைப்பூச்சின்னுதான் சொல்வாங்க. அப்புறம் இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டா. நானும் கொஞ்சநாள் இங்கே இருந்தேன். ஒருநாள் படக்குன்னு இந்த ஆளு என் கையைப் பிடிச்சு இழுத்துட்டான். கண்மாய்க்குப் போயி சாகலாம்னு இறங்கிட்டேன். சித்தாயி அத்தைதான் `வாடி மூத்தவளே!’னு என்னைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தாங்க. அன்னிக்கு ராத்திரி முச்சூடும் அவங்க வீட்டுலதான் இருந்தேன். இவர் ஊருக்குப் போயிருந்தார். வந்த உடனே கட்டன்ரைட்டா சொல்லிட்டேன், தனிக்குடித்தனம்தான்னு. புதூருக்குக் குடி போனோம். அதுக்குப் பிறகு இங்கே வந்தா போனா, இவன் என் முகத்தைக்கூடப் பார்க்க மாட்டானே!”

பரமேஸ்வரியின் புருஷன் காலையிலேயே வேலைக்குப் போய்விட, மாமியார் ஏதாவது கைவேலையாக இருப்பாள். கோயில், குளம் என அலைவாள். மாமனார் வீட்டிலேயேதான் இருப்பார். வீட்டில் உள்ள அத்தனை மேசை நாற்காலிகளிலும் `மா.ஆ.அ.ப.எ’ (மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பதிவு எண்) எனப் பொறிக்கப்பட்டிருக்கும். பெரிய ரோமன் இலக்கமிட்ட கடிகாரம் ஒன்று வீட்டின் மத்தியில் இருக்கும். அதுவும் ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான். மாமனார், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும் அதற்கு வெகுசிரத்தையாகச் சாவிகொடுப்பார். எப்போதும் நாற்காலியில் அமர்ந்தபடி வெளுத்த மற்றும் அடர்ந்த முடியுடைய மார்பைத் தடவிக்கொண்டிருப்பார். பரமேஸ்வரி முடிந்தவரை எச்சரிக்கையாகவே இருந்தாள். வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு, வெளியே வந்து உட்கார்ந்துவிடுவாள். ஆனாலும் மாமனார் ஏதாவது கேட்டுக்கொண்டிருப்பார். ``தண்ணி” என்பார், கை மேலே படும். ``சோறு” என்பார், விலகும் சேலையில் பார்வை நிற்கும்.

பரமேஸ்வரி - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு தெருவிலிருந்து சற்று உள்ளே தள்ளி செண்பகம் ஆசாரி வீட்டுக்குப் பின்னால் ஒளிந்து கிடந்தது. `செண்பகம் ஆசாரி வீடு இருக்கும் இடம் இவர்களுடைய இடம்’ என்றும், ‘ஆசாரி எப்படியோ ஏமாற்றி வாங்கிவிட்டார்’ என்றும் மொட்டையம்மாள் சொன்னாள். இரண்டரை அடி அகலச் சந்து வழியாகத்தான் வீட்டுக்குள் வரவேண்டும். இவள் சீராகக் கொண்டுவந்த பீரோவை, அந்தப் பாதை வழியாகக் கொண்டுவர முடியாமல், சொர்ணம் அத்தை வீட்டு மாடிக்குக் கொண்டுபோய், அங்கிருந்து கீழே இவர்கள் வீட்டுவாசலில் இறக்கினார்கள். ஊரிலிருந்து வந்திருந்த  சித்தப்பா, ``ஆள் ஜனத்தைக் கூப்பிடணும்னா, மைக் வெச்சுதான் கத்தணும்போலிருக்கே!” என்றார்.

மாமனாரைப் பற்றி, புருஷனிடம் சாடைமாடையாகச் சொல்லிப்பார்த்தாள். புரிந்த மாதிரி தெரியவில்லை. நேரடியாகச் சொன்னாள். பதில் பேசாமல் இருந்தான். ``நான் வேணும்னா நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி கேட்கவா?” என்று கேட்டவளுக்கும் பதில் சொல்லவில்லை. அத்தைகாரியிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. தனிக்குடித்தனம் போக முடியாது என்று பரமேஸ்வரிக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. அதற்கு உதவ, தன் வீட்டுக்கும் வக்கில்லை.

புரு‌ஷன் மாசத்துக்கு 10, 15 நாள் வெளியூர் வேலையாகப் போய்விடுவான். அந்த நாள்களில் தகர டப்பாவில் (அவள் அதை அப்படித்தான் சொல்வாள்) பதக் பதக்கெனப் படுத்திருப்பாள்.

குளித்துக்கொண்டிருந்தவள் திடீரென நிமிர்கையில், கதவில் போட்டிருந்த ஒரு துணியையும் காணவில்லை. முழு நிர்வாணமாகக் குளித்துதான் அவளுக்குப் பழக்கம். அத்தையும் இல்லை, எங்கோ கல்யாணத்துக்குப் போயிருக்கிறாள். சாயங்காலம்தான் வருவாள். முண்டக்கட்டையாக நின்று யோசித்தாள். ரூமுக்குப் போக வேண்டும் என்றால், மாமா அறையைத் தாண்டித்தான் போக வேண்டும். வாளியைத் திருப்பிப் போட்டு ஜன்னலில் மறைப்புக்கு இருக்கும் அட்டையை எடுத்தாள். எப்போதாவது எண்ணெய் விற்க வரும் வாணிபச்சி, அவர்களின் இரண்டரை அடி சந்தில் அதிக ஆள் புழக்கமில்லாததால் கொஞ்ச நேரம் கட்டையைச் சாத்துவாள். எட்டிப் பார்த்தால் யாரும் இல்லை. அந்த முட்டுச்சந்துக்குள் வருவதற்கு யாருக்கும் வேலையும் இல்லை; தேவையும் இல்லை. வாளி மேல் உட்கார்ந்தாள் – எவ்வளவு நேரம் எனத் தெரியாது. நடுநடுவே மாமனாரின் செருமல் சத்தம்.

புளிச்சென்று எச்சில் துப்பும் சத்தம் வெளியே கேட்க, பிரயாசையுடன் ஏறி எட்டிப்பார்த்தாள். எண்ணெய்காரக் கிழவிதான் படுத்திருந்தாள். இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். காது சுமாராகத்தான் கேட்கும். 200ml எண்ணெய் கேட்டால் 400ml ஊற்றுவாள். ``நான் எரநூறுதானே கேட்டேன். எதுக்கு கூட ஊத்தின?” என்று கேட்டால், ``சேர்த்துக் கொடு ஆயி” என்பாள். ``அவ, எண்ணெய் விக்கிறதுக்காகக் காது கேட்கிற மாதிரி நடிக்கிறா!” என்பாள் கமலம்.

பழைய பயோரியா பல்பொடி டப்பாவைத் தூக்கி மேலே போட்டாள். ``எந்த எடுபட்ட முண்டடி என் மேல என்னத்தையோ விட்டெறியுறது?” என்றபடி எழுந்தவள், இவள் வெளியே கையை நீட்டி ஆட்டுவதை அப்போதான் கவனித்தாள்.

``அங்க என்னாத்தா பண்ற?”
 
``ஆத்தா... முன்னாடி கொடியில சேலை காயுது, அதை எடுத்துத் தர்றியா?” என்றதும், அந்தக் கிழவி, ஏன் எதற்கு எனக் கேட்காமல் எடுத்து வந்தாள். அவளால் எட்டிக்கொடுக்க முடியவில்லை. சேலையை எண்ணெய்ச் சட்டியின் மேல் வைத்து, தலையில் தூக்கியபடி சுவர் ஓரமாக நின்றாள். அப்போதும் கை எட்டவில்லை. தண்ணி போகும் தூம்பைக் குத்துவதற்கு மூலையில் சாத்தியிருக்கும் குச்சியால்  சேலையை மெதுவாக எடுத்து, கையில் பிடித்தாள் பரமேஸ்வரி.

சேலையை ஒரு மாதிரி கட்டிக்கொண்டு கதவைத் திறந்தால் மொத்த உருப்படியும் கதவுக்குப் பக்கத்திலேயே கிடக்கிறது. யாரையும் சந்தேகப்பட முடியாத மாதிரி, மாமனார் அறையைத் தாண்டிப் போனாள். மாமனார் செருமினார். அவரைப் பார்க்காமல் கடந்து போனாள்.

புருஷன் இரண்டு நாள்கள் கழித்து வந்தான். இவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனாக ஒருநாள் கேட்டான், ``இப்ப எதுவும் பிரச்னையிருக்கா?”

``இல்லை” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள். அவனும் இந்தப் பதிலைத்தான் விரும்பியிருப்பான்போல.

பரமேஸ்வரி - சிறுகதை

செவ்வாய்க்கிழமை விரதத்தில் மல்லிகாக்கா கேட்டாள், ``என்னடி ஈஸ்வரி, சும்மாவே இருக்க. என்னதான் பண்றீங்க ரெண்டு பேரும்?” பரமேஸ்வரி பதில் ஒன்றும் சொல்லவில்லை. பச்சரிசி மாவை அழுத்திக் கொழுக்கட்டை பிடிக்க, விகாரமான ஓர் உருவம் வந்திருந்தது.

காலையிலிருந்து பரமேஸ்வரிக்குப் பதற்றமாக இருந்தது. மாமனார், அவளிடம் நேரடியாகவே ``வர மாட்டியா?” எனக் கேட்டார். இவள் ஒரு பார்வை பார்த்துவிட்டு, காபி டம்ளரை நங்கென வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

அத்தைகாரி போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். ``மாமா ரூமைக் கொஞ்சம் கூட்டுறியாமா? எனக்கு முடியலை!” என்றார். மாமா குளிக்கப் போயிருந்தார். கூட்டும்போதுதான் கவனித்தாள், கடிகாரம் நின்றிருந்ததை. நாற்காலியை நகர்த்தினாள், பாச்சை கத்துவதுபோல் கத்தியது. கால் பக்கம் இரண்டு பெரிய ஆணிகள் லேசாக லூஸாகியிருந்தன. இவள் அவற்றை மேலும் லூஸாக்கினாள். ஒன்றை உருவி மறுபடியும் செருகினாள்.
துவைக்கவேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டு கண்மாய்க்குக் கிளம்பினாள். ஜமுனாவை வழியில் பார்த்தாள். இருவரும் பேசிக்கொண்டே துணிகளுக்கு சோப் போட ஆரம்பித்தனர்.

யாரோ ஓடிவந்தார்கள். ``உன் மாமா சேரோடு கீழ விழுந்துட்டார். அவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போறாங்க!”

``இந்தா வர்றேன்” என்று சொன்ன பரமேஸ்வரி, நிதானமாக சோப் போட்டு, துணியைத் துவைத்து, வாளியில் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

இடுப்பெலும்பு முறிந்திருந்தது. ஒரு மாசம் செண்பகா ஆஸ்பத்திரியில்  வைத்துப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு அழைத்துவந்தார்கள். எல்லாம் படுக்கையில்தான். அத்தைதான் கஷ்டப்பட்டாள். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.

மாமியார்காரி, அடுப்படிப் பக்கம் வருவதே இல்லை. பரமேஸ்வரிதான் சமையல். பரமேஸ்வரிக்கு எப்போதும் இனிப்பு தூக்கலாகப் போட்டுச் சாப்பிடுவதுதான் பிடிக்கும். காலையும் மாலையும் அவள்தான் வீட்டில் காபி போடுவாள்.

பரமேஸ்வரி - சிறுகதை

மாமனார் காலில் புண் ஆறவேயில்லை. டாக்டர் ``சர்க்கரை அளவு கூடிவிட்டது’’ என்றார்.

பரமேஸ்வரி உண்டானாள். ஒன்பதாவது மாசம் வளைகாப்பு முடிந்து அலையாங்குளம் புறப்பட்டாள். ஊரில் வைத்துதான் பிரசவம் பார்க்க வேண்டும் எனக் கல்யாணத்தின்போதே பேச்சு. பரமேஸ்வரி போன 15-வது நாளில் மாமனார் இறந்துபோனார். வயிற்றுப் பிள்ளைக்காரி அலையவேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள்.

ராமச்சந்திரன், ``அப்பா எப்பவும் உட்காரும் மரச்சேரில் வைத்துதான் போட்டோ எடுக்க முயற்சி செய்தார்களாம். முடியாததால் படுக்கவைத்து போட்டோ எடுக்கப்பட்டதாம்’’ எனச் சொன்னான்.

மூன்று மாதப் பிள்ளையோடு வீட்டுக்கு வந்தவளை, மூத்தவரின் சம்சாரம் பிச்சையம்மாதான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். உள்ளே நுழைந்த பரமேஸ்வரி கடிகாரத்தைப் பார்த்தாள். ஓடிக்கொண்டிருந்தது.

முன்பைவிடக் கூடுதலாக நொறுங்கிப் போயிருந்த அத்தை, ``பக்கத்து வீட்டு முருகேசு மகன்தான் வந்து சாவிகொடுக்கிறான்” என்றாள்.

அந்தக் கடிகாரம், அதற்குப் பிறகு நீண்டநாள் ஓடிக்கொண்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism