கங்கு
சுருட்டு பிடித்தபடி,
தோட்டத்தில் விளைந்த பழங்களை
எங்கள் வீட்டுக்குச் சுமந்து வரும்
கிராமத்துத் தாத்தனும்
விபத்தில் இறந்துபோனான்.
புகைபிடித்தபடி,
தெருவோரம் வரிசையாக
அமர்ந்து நாங்கள் சைக்கிள் பழகுவதை வேடிக்கை பார்க்கும்,
துரட்டி அடுப்பில் சமையல் மணக்கும் நகரியத்தின் வீடுகளும்
புகைப்பழக்கத்தை எப்போதோ விட்டுவிட்டன.
பால்யமும் மகிழ்ச்சியும் இரு தண்டவாளங்களாகக் கிடக்க,
களைப்பு தெரியாமல் புகைபிடித்துக்கொண்டே ஓடிய நீராவி இன்ஜின்கள்கூட எங்கோ ஓடி மறைந்துவிட்டன.
புகைபிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு என்கிற போதனை
அதன் இரும்பு இதயத்தை
உருக்கியிருக்கலாம்.
ஆனாலும் ஓயாமல் கனிகிறதே
யாருடைய சிகரெட்டின் கங்கு இந்தச் சூரியன்?
ஆழமாய் உள்ளிழுத்து -
மேகமாய்ப் புகைவிட்டு -
வானத்தை அழகாக்கும் அந்த
செயின் ஸ்மோக்கர் யாரென்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.
- கார்த்திக் திலகன்

அடையாளம்
கடலில் பிடிபட்ட
பெருமீனின்
வயிற்றுக்குள்ளிருந்து
கிடைத்தது
காணாமல்போன மீனவனின்
ஆதார் அட்டை!
- பழ.அசோக்குமார்
பறவை
இந்த நதியைக் கடப்பது
எப்படி என்று யோசித்துக்கொண்டே
நின்றிருந்தேன்...
சட்டென்று எனைக்
கடந்து சென்றது
பறவை..
- கிருத்திகா தாஸ்
