Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

யரமான வட்ட வடிவக் கறுப்புத் தொப்பி, மண்டைஓட்டு முகம், வாயில் சுருட்டு, கையில் ரம், வால்போலத் தொங்கும் நீள கறுப்பு கோட். Baron Samedi என்றழைக்கப்படும் ஹைதி எமக்கடவுளின் நவீன உருவச் சித்திரிப்பு இதுவே. ‘மண்ணில் உதித்திருக்கும் பரானின் அவதாரம் நானே’ என்று பகிரங்கமாகவே பிரகடனப்படுத்திக்கொண்டார் ஹைதி அதிபர் பப்பா டாக். ‘அந்த எமனுக்கே எமன் நாங்கள்’ என்று நியூயார்க்கிலிருந்து, ‘Jeune Haiti’ (இளைய ஹைதி) என்ற அமைப்பினர் ரகசியமாகக் கிளம்பினார்கள்.

13 பேர். அனைவருமே பப்பா டாக்கினால் குடும்பத்தையோ, உறவுகளையோ இழந்து பாதிக்கப்பட்டவர்கள். 1964, ஆகஸ்ட் 5 அன்று, ஹைதியில் வந்து இறங்கினார்கள். கியூபாவில் காஸ்ட்ரோவின் புரட்சி வென்றதுபோல, ஹைதியில் தங்கள் புரட்சியும் வெல்லும் என்று கனவு கண்டார்கள். கெரில்லா தாக்குதல் நடத்தி, பப்பா டாக்கைக் கொன்று, அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவர்களது லட்சியம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

இப்படி ஒரு குழு ஹைதிக்குள் ஊடுருவியிருக்கிறது என்ற தகவல் பப்பா டாக்கின் காதுகளுக்கு வெகு சீக்கிரமே வந்துசேர்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட டான்டான் படையினரையும், ஹைதி ராணுவ வீரர்களையும் தேடுதல் வேட்டை யில் இறக்கினார். அந்த 13 பேரும் தங்கள் திட்டத்துக்குள் முழுமையாக இறங்கும் முன்னரே உயிர் தப்பிக்க காடு, மலை என்று பதுங்கி ஓடினார்கள். செப்டம்பர் 8-ம் தேதிக்குள், அமைப்பின் தலைவரான ஜெரால்டு உள்ளிட்ட நான்கு பேர் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப் பட்டிருந்தனர். தேடுதல் வேட்டை மேலும் முடுக்கிவிடப்பட்டது. அக்டோபர் 26-க்குள் மேலும் இருவர் கைதாகியிருந்தனர். ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மீதி அனைவரும் கொல்லப் பட்டிருந்தனர்.
1964, நவம்பர் 12, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. கைதான லூயிஸ் டுரோயின், மார்சல் நுமா ஆகிய இருவரும் பொது இடத்தில் தனித்தனியே கம்பங்களில் கட்டப்பட்டிருந்தனர். வெறுமையும் பயமும் சூழ்ந்திருந்த அந்த இரு ஜோடிக் கண்களுக்கு முன், ஏகப்பட்ட வீரர்கள், துப்பாக்கியால் குறிபார்த்தபடி. அவர்களுக்கான மரண தண்டனை, மக்கள் முன்னிலையில், ஏராளமான பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட வேண்டுமென பப்பா டாக் கட்டளையிட்டிருந்தார். தவிர, அந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டு நாடெங்கும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. ‘இனி எவனுக்கும் புரட்சி செய்யும் எண்ணமெல்லாம் பொங்கக்கூடாது’ என்று பூச்சாண்டி காட்டவே அந்த ஏற்பாடு. கட்டளையிடப்பட்ட நொடியில் சரவெடி போல, தோட்டாக்களின் தொடர் முழக்கம். ரத்த வெள்ளத்தில் இருவரது தலைகளும் தொங்கின.

பப்பா டாக், தனது சொந்த இன மக்களைக் கொல்வதற்கென்றே வதைக்கூடங்களையும் ஏற்படுத்தியிருந்தார். கூடங்களின் சுவர்களில் இருக்கும் துவாரங்கள் வழியாக சித்ரவதைகளைச் சில்லென ரசிப்பது அதிபரின் பொழுதுபோக்கு. குறிப்பாக, கந்தக அமிலத்தைக் கொட்டி, அதில் கைதிகளைக் குளிக்கச் சொல்லித் தள்ளப்படுவதை மிகவும் ரசித்தார். கொல்லப்பட்ட சிலரது தலைகள் மட்டும் தனியே அதிபருக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு அவர் வூடு பூஜைகள் செய்தார் என்றும், சாகடிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டுத் தனித்தனியாக விற்கப்பட்டன என்றும் தகவல்கள் உண்டு.

விஷயமெல்லாம் பெரிதாக வெளியே பரவவில்லை. காரணம், அதிபரான பிறகு அனைத்துப் பத்திரிகைகளுக்குமே முடிவுரை எழுதினார் பப்பா டாக். அவருக்கு எதிராகச் செயல்பட்ட பத்திரிகையாளர்களைக் கொன்றார். அடித்து விரட்டினார். குடும்பத்தினரை வதைத்தார். அந்தக் குடும்பத்தின் பெண்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

இதெல்லாம் தெரிந்தும் சில வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அரும்பாடுபட்டு அவரைச் சந்தித்துப் பேசினர். பப்பா டாக்கின் ஆட்சியை ஆவணப்படுத்திய பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் விக்கர் கேட்ட கேள்வி இது. ‘உங்களைச் சர்வாதிகாரி என்கிறார்களே?’ அலட்சியமும் செருக்கும் நிறைந்த ஓரப்புன்னகையுடன் அவர் சொன்ன பதில், ‘‘அமைதியும் நிலையான ஆட்சியும் நிலவ என்னைப் போல வலிமையான தலைவர் ஒவ்வொரு தேசத் துக்கும் வேண்டும். வலிமையான தலைவர் என்றால் சர்வாதிகாரி அல்ல. நீங்கள் சர்வாதிகாரம் என்றழைப்பதை, எங்கள் தேசத்தில் ஜனநாயகம் என்கிறோம்.’’

மக்களை நேரடியாக வதைத்தது மட்டுமன்றி, வரிகள் மூலமாகவும் வதைத்தார். ஹைதியின் முக்கிய விளைபொருள்களான கரும்பு, காபி, கடலை போன்றவற்றுக்கே வரிகள் கடுமையாக இருந்தன. அரசு லாட்டரி, அரசுப் பத்திரங்களை யெல்லாம் வாங்கியே தீரவேண்டுமென அரசு ஊழியர்களின் சம்பளப் பணம் அபகரிக்கப்பட்டது. Duvalierville என்றொரு அதி நவீன நகரம் கட்டப் போவதாகச் சொல்லி, அதில் பெரும் பணத்தை ஏப்பம் விட்டார் பப்பா டாக். அது கட்டி முடிக்கப் படவே இல்லை.

‘தோட்டாக்களால் என் உடலைத் துளைக்கவே முடியாது. ஏனென்றால், நான் மனிதனைவிட மேலானவன்! மரணமில்லாதவன்!’ – என்று பொதுக் கூட்டங்களில் மார்தட்டிக் கொண்டார் அதிபர். ஆனால், அவரைச் சுற்றி எப்போதும் விசுவாச டான்டான்கள் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்கு நின்றனர். எந்தச் சதிகாரன் எப்போது தன்னைக் கொல்வானோ என்ற பயம் நிரந்தரமாக அவரது மனதில் அப்பிக் கிடந்தது. ஆயுதக் கிடங்கைத் திறக்கும் தங்கச் சாவியை எப்போதும் அவர் கோட் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டார். வீரர்கள் சூழ காரில் வலம் வந்தாலும், தன் பாதுகாப்புக்காகக் கையோடு ஒரு ‘மெஷின் கன்’னும் எடுத்துக் கொண்டார். அவர் பயந்ததுபோலவே, அடுத்த சதியும் அரங்கேற எத்தனித்தது.

1967. ராணுவ அதிகாரிகள் 19 பேர் தனக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டறிந்தார். உடனே, துப்பாக்கிகள் வெடித்தன. 19 பேரைக் கொன்ற பிறகு, பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் மத்தியில் பப்பா டாக் உரையாற்றினார். அப்போது, அந்த பத்தொன்பது பேரின் பெயர்களை வரிசையாக வாசித்தார். ‘மேஜர் ஹாரி டேஸி...’ அவரே இடைவெளி விட்டு ‘ஆப்சென்ட்’ என்றார். ‘கேப்டன் செர்ஜ் ஹிலெய்ரே... ஆப்சென்ட். லெஃப்டினன்ட் ஜோஸ்மா வேலன்டின்... ஆப்சென்ட்.’ வருகைப் பதிவேடு எடுத்து முடித்துவிட்டு, தொண்டையைச் செருமியபடி பெருமிதத்துடன் சொன்னார். ‘அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

19 பேரைக் கொன்ற பின்னரும், இருபதாவதாக மேலும் ஒருவர்மீது பலத்த சந்தேகம் இருந்தது. அவர்தான் அந்தக் கும்பலின் தலைவன் என்றே எண்ணினார். அவர் பெயர், கர்னல் மேக்ஸ் டொமினிக். அதிபரின் மருமகன். அவரின் மகளான டெனிஸைத் திருமணம் செய்திருந்தார். டெனிஸ் கெஞ்சிக் கூத்தாட, இரக்கப்பட்ட பப்பா டாக், மருமகனுக்கு ஸ்பெயினின் தூதர் என்ற பதவி கொடுத்து, இருவரையும் நாட்டை விட்டு விரட்டினார். 1970-ல் மகளுக்கும் தந்தைக்குமான பிணக்குகள் தீர்ந்தன. மகள் திரும்பி வந்தாள். அதிபரின் காரியதரிசியாகப் பொறுப்பேற்றாள். மருமகன் மேக்ஸுக்குப் புதிய பதவி. பிரான்ஸின் தூதர்.

அதிபருக்கு எதிராகச் சிந்திப்பதற்குக்கூட மக்கள் பயந்தார்கள். யாராலும் அவரை அசைக்கவே முடியாது என்ற நிலை. ஆனால், ‘நிரந்தர முதல்வர்’, ‘நிரந்தர அதிபர்’ என்றெல்லாம் யாரும் நிலைத்திருக்க முடியாதல்லவா? மருத்துவரான பப்பா டாக், தன் உடல்நிலை தளர்வதை உணர்ந்தார். தினமும் பள்ளிக் குழந்தைகள் சொல்லும் கடவுள் வாழ்த்தை, தன் புகழ்பாடுவதாக மாற்றியமைத்தார். அப்படிச் செய்தால் தன் ஆயுள் கூடும் என்ற நப்பாசை.

ஜீன்-கிளெட் டுவாலியெர் (Jean-Claude Duvalier) என்ற பேபி டாக். டாக்டரெல்லாம் அல்ல, பப்பா டாக்கின் மகன் என்பதால் அந்தச் செல்லப் பெயர். செல்லமாகவும் செழிப்பாகவும் செருக்குடனும் வளர்ந்த பணக்காரப் பொறுக்கி. பிளேபாயாகத் திரிந்துகொண்டிருந்தார். ‘அவன் அரசியலுக் கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்’ என்று பப்பா டாக் உணர்ந்திருந்தாலும், வேறு வழியின்றி தன் அரசியல் வாரிசாக முன்னிறுத்தினார். ஹைதியின் அடுத்த அதிபராக, அதுவும் வாழ்நாள் அதிபராக அறிவித்தார். ம், எத்தனைப் பேருக்கு அந்தக் கொடுப்பினை அமையும்?

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

1971, ஏப்ரல் 21. பப்பா டாக் தன் படுக்கையிலேயே அமைதியாக இறந்துபோனார். அவரது ஆட்சிக்காலத்தில் ஹைதியில் அமைதியின்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 30,000. இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாகவும் இருக்கலாம். ‘உலகின் இளம் அதிபர்’ என்ற பெருமையுடன், 19 வயதில் பதவிக்கு வந்த பேபி டாக், எதையும் கிழிக்கவில்லை. முழுமையான அதிகாரம் ‘மாமா டாக்’ என்றழைக்கப்பட்ட தாயார் சிமோன் வசம் இருந்தது. டாக் குடும்பத்தினரது சர்வாதிகார வாழ்க்கை ஏகபோகமாகத் தொடர்ந்தது.

1980. பேபி டாக், மிக்கேல் பென்னெட் என்ற பெரும் பணக்காரியுடன் காதலில் விழுந்தார். வளர்ப்பு மகன் திருமணத்துக்கு முன்னோடியாக, பெரும் செலவு செய்து மிக்கேலை மணந்தார் பேபி டாக். அடுத்த மூன்று மாதங்கள் தேனிலவு, ஐரோப்பியச் சுற்றுப்பயணங்கள், ராயல் ஷாப்பிங், ஆடம்பர விருந்து எல்லாம் மக்களின் வலி கலந்த வரிப்பணத்தில் அரங்கேறின. பின் மருமகள் மிக்கேல், மாமியாரை ஓரங்கட்டினாள். வெளியேற்றினாள். அதிகாரத்தைக் கைப்பற்றினாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்!

பேபி டாக்கின் ஆட்சிக் காலத்திலும் ஆயிரக்கணக்கான அரசியல் கொலைகள், விதவிதமான சித்ரவதைகள் நடந்தன. கணக்கற்றோர் ஹைதியை விட்டுத் தப்பியும் ஓடினர். எய்ட்ஸ் அதிகம் பரவியது. விஷக்காய்ச்சலாலும் பட்டினியாலும் சாவுகள் பெருகின. பற்றிக்கொள்ள ஆதாரமின்றிப் பொருளாதாரம் வீழ்ந்துகிடந்தது. இருந்தாலும், தனது கம்யூனிஸ எதிர்ப்பு நிலையை அழுத்தமாகச் சொல்லிக் காட்டி, அமெரிக்க அரசின் செல்ல நாய்க்குட்டியாக வாலாட்டினார் பேபி டாக்.
 
1983-ல் ஹைதிக்கு வந்த போப் இரண்டாம் ஜான் பால், வேதனையை வெளிக்காட்டினார். ‘‘ஹைதியில் மாற்றம் நிகழ வேண்டும்’’ என்று கோடிட்டுக் காட்டினார். மாற்றம் அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே நிகழ்ந்தது. 1984-ல் Gonaives நகரத்தில் மக்களின் போராட்டம் ஆரம்பமானது. 1986-ல் அது தேசம் தழுவிய புரட்சியாகப் பரவிப் படர்ந்தது. அமெரிக்க அதிபரான ரொனால்டு ரீகன், பேபி டாக்கைப் பெட்டியைக் கட்டச் சொன்னார். பெரியண்ணனே கைவிட்டதால், பேபி டாக் தன் குடும்பத்துடன் ஹைதியை விட்டுக் கிளம்பினார். தனி அமெரிக்க விமானம். அது முழுக்கச் செல்வங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு பிரான்ஸுக்குத் தப்பியோடி னார். ஹைதி மண்ணில் டுவாலியெர் குடும்பத்தின் சுமார் 30 வருட இருண்ட கால ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால், இன்று வரை ஹைதிக்கு விடியவே இல்லை.

(வருவார்கள்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism