சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கான நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் திடீர் மரணம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்துக்குத் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறைச் செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோர் டிசம்பர் 18-ம் தேதி வந்தனர். அதே நேரத்தில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, பெருந்துறையில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார் எனச் சொல்லப்படுகிறது.

இதுபற்றிப் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘பெரியார் பல்கலைக்கழகத்தில் 18.8.2014 முதல் 17.8.2015 வரை பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அந்தக் காலகட்டத்தில், முத்துசெழியன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து துணைவேந்தர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கு நெருக்கமானவர்கள். அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணிகளுக்குப் போதிய கல்வித் தகுதியும் அனுபவமும் இல்லாத பலரை நியமித்துள்ளனர். பணி நியமனங்களுக்காகப் பல கோடி ரூபாய் வரை கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இட ஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உடற்கல்வி இயக்குநர், நிதியாளர், உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி ரேட் நிர்ணயித்து வசூலித்தனர். அதைப் பலரும் பங்கு போட்டுக்கொண்டனர்.
இந்தப் பணி நியமனம் தொடர்பான கோப்புகளால் எதிர்காலத்தில் சட்டச்சிக்கல் ஏற்படும் என்று நினைத்து, அவற்றைத் தீ வைத்து எரித்துவிட்டனர். 2015-ல் அங்கமுத்துவின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்குப்பின், மணிவண்ணன் பதிவாளர் ஆனார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணிவண்ணன் பதவியேற்றதும், கோப்புகளைக் காணவில்லை என்று துணைவேந்தரிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்திருக்க வேண்டும். ஜூன் மாதத்துடன் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. பதிவாளரின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகம் வந்துவிட்டது. அப்போதாவது காவல் துறையில் அவர் புகார் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. தற்போது, பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான தேர்வு கமிட்டி இறுதி செய்துள்ள 10 பேர் பட்டியலில் ஒருவராக அங்கமுத்து தேர்வாகியுள்ளார். விரைவில் நேர்முகத் தேர்வுக்கு அவர் அழைக்கப்படுவார் என்ற நிலை இருந்தது. அவருக்கு முதல்வர் எடப்பாடியின் ஆசீர்வாதமும் இருந்துள்ளது. இதனால் துணைவேந்தராக அங்கமுத்துவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பேசப்பட்ட நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்’’ என்றார்கள்.
இதுபற்றி அங்கமுத்துவின் உறவினரான சதாசிவம், ‘‘பல்கலைக்கழகத்துக்கு கவர்னர் வருகிறார் என்று காலை 7 மணிக்கே காரில் கிளம்பினார். 9.15 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். வீட்டில் அப்போது அண்ணனின் மாமியார் மட்டும்தான் இருந்தார். மேல் வீட்டுக்காரர் பார்த்து விட்டுச் சொன்ன பிறகுதான், அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். அண்ணன் சல்ஃபர் பவுடர் உட்கொண்டதாக மருத்துவமனையில் சொன்னார்கள். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையல்ல. வீட்டிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. அண்ணி விஜயலட்சுமி, தோப்புப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். பெரிய மகள் செளமியா தன் கணவருடன் துபாயில் இருக்கிறார். இளைய மகள் வானதியும், அவரின் கணவரும் சென்னையில் ஐ.டி துறையில் பணியாற்றுகிறார்கள். எங்கள் அண்ணனின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது’’ என்றார்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மணிவண்ணன், ‘‘நான் பதிவாளராகப் பதவியேற்ற பிறகு பணி நியமனக் கோப்புகளைச் சம்பந்தப்பட்ட செக்ஷனில் கேட்டேன். அவர்கள் அந்தக் கோப்புகள் இல்லை என்றனர். அதை, அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதனிடம் தெரிவித்தேன். அதுபற்றி அங்கமுத்துவிடம் அவர் கேட்டார். ஒரு காலக்கெடுவை விதித்து, ‘அதற்குள் கோப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார் சுவாமிநாதன். ஆனால், கோப்புகளை அங்கமுத்து கொடுக்கவில்லை. ஜூன் மாதம் துணைவேந்தர் சுவாமிநாதனின் பதவிக்காலம் முடிந்து விட்டது. அதன்பிறகும், சிண்டிகேட் மூலமாக அங்கமுத்துவிடம் கோப்புகள் பற்றிக் கேட்டோம். ‘அலுவலக நடைமுறைப்படி, காவல்துறையில் புகார் கொடுப்போம்’ என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே அங்கமுத்துவிடமும் சொன்னோம். டிசம்பர் 16-ம் தேதி, சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம்’’ என்றார்.

பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனத்திடம் கேட்டதற்கு, ‘‘அங்கமுத்து மரணத்தில் சந்தேகம் இல்லை. அவர் தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார். அவருக்கு ஏதோ உளவியல் பிரச்னை இருந்திருப்பதாகத் தெரிகிறது. விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகாலையில் கிளம்பியவர், பாதி வழியிலேயே வீட்டுக்குத் திரும்பிவந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இடைப்பட்ட அந்த நேரத்தில், தற்கொலை முடிவுக்கு அவரைத் தள்ளியது யார் என்ற மர்மத்துக்கு போலீஸ் விடைதேட வேண்டும்.
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி