Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!

‘ஆட்டு மந்தைக்குள் ஓர் ஓநாய் புகுந்துவிட்டால், அது உள்ளுக்குள் இருந்தபடியே ஒவ்வோர் ஆட்டையும் கொன்றுவிடும். இறுதியில் ஓர் ஆடுகூட மிஞ்சாது. ஆடுகளெல்லாம் சேர்ந்து அந்த ஓநாயை ஒழித்துக்கட்டினால்தான் தப்பிக்கவே முடியும்.’ தன் இன மக்களிடம் இளவரசர் மால் இப்படித்தான் சொன்னார். கி.பி பத்தாம் நூற்றாண்டில் உக்ரைன் பகுதியில் வாழ்ந்த டிரெவ்லியன் (Drevlyan) என்ற பழங்குடி இனத்தின் இளவரசர் அவர். அவரின் இனம் ஆட்டு மந்தை என்றால், யார் அந்த ஓநாய்?

ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்த வைகிங்குகளில் ஒரு பிரிவினர், கிழக்கு ஐரோப்பிய மற்றும் ரஷ்யாவின் ஆறுகள் வழியே பயணம் செய்து புதிய நிலப்பிரதேசங்களில் குடியேறினர். அவர்களின் முக்கிய தளபதியான ரூரிக், ரஷ்யாவின் நாவ்கராடை மையமாகக் கொண்டு ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தார். இந்த ரூரிக் பரம்பரையினர், சுமார் 700 ஆண்டுகளுக்கு ரஷ்யா மற்றும் உக்ரைனின் பல பகுதிகளை ஆட்சி செய்தது வரலாறு. 13-ம் நூற்றாண்டு வரையில் அந்தப் பிரதேசங்களை ஆண்ட பல்வேறு ராஜ்ஜியங்களின் கூட்டமைப்பு கீவ்யன் ரஷ் (Kievan Rus) என்றழைக்கப்பட்டது. பொது வரலாற்றுத் தகவலை இங்கு நிறுத்திவிட்டு... ஆடு – ஓநாய் கதைக்குத் திரும்புவோம்.

ரூரிக்கின் இறப்புக்குப் பிறகு, அவரின் மகனான இகோர் ஆட்சிக்கு வந்தார் (கி.பி. 914). பல்வேறு பழங்குடி இனத்தவர்கள் ரூரிக் ராஜ்ஜியத்துக்குக் கட்டுப்பட்டு கப்பம் (ஆடுகள், கம்பளி மற்றும் தேன் உள்ளிட்ட காட்டின் விளைபொருள்கள்) கட்டிக்கொண்டிருந்தனர். டிரெவ்லியன் இனத்தவர்கள் மட்டும் மறுத்தனர். பொறுமை யிழந்த இகோர், களத்தில் இறங்கினார் (கி.பி. 945). டிரெவ்லியன்களைச் சந்தித்து மிரட்டினார். டிரெவ்லியன் ஆடுகள், இகோர் ஓநாயைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தன. ‘ஆடுகள் பொங்கியெழும்’ என்று அந்த ஓநாய் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. டிரெவ்லியன்கள், இரண்டு உயரமான பிர்ச் மரங்களின் மேற்பகுதியைத் தரையை நோக்கி வளைத்தார்கள். இரண்டு மரங்களின் உச்சிகளில் பிணைத்திருந்த கயிற்றில், இகோரின் இரண்டு கால்களும் கட்டப்பட்டன. மரங்களை வளைத்து இழுத்த கயிறுகள் விடப்பட்டன. மரங்கள் நிமிர்ந்து மேலேழ, இகோரின் உடல் வானை நோக்கி இரண்டு பாதிகளாகப் பிய்த்தெறியப்பட்டது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!

நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியழுதாள் ஒல்கா (Olga). கொல்லப்பட்ட அரசர் இகோரின் மனைவி. அவர்களுக்கு மூன்று வயதில் ஸ்வியாட்டோஸ்லாவ் (Sviatoslav) என்ற மகன் இருந்தான். சிறுவனை அடுத்த அரசனாக்க இயலாது என்பதால், அரசரின் பிரதிநிதியாக அதிகாரத்தில் ஒல்கா அமர்ந்தாள்.

டிரெவ்லியன் இளவரசர் மால், ஒரு கணக்குப் போட்டார். ஒல்கா வலியமையற்றவள்; அரசியல் தெரியாதவள். நாம் அவளைத் திருமணம் செய்து கொண்டால், எப்போதும் கப்பம் கட்ட வேண்டாம். டிரெவ்லியன்களின் ராஜ்ஜியம் வலிமை பெறும். நானே அதன் புதிய அரசன்! குறுக்குவழியில் கொழுத்த கனவுகண்டார் மால். திருமணத்துக்குப் பெண் கேட்டு டிரெவ்லியன் தூதுவர்கள் சிலரை ஒல்காவின் அரண்மனைக்கு அனுப்பிவைத்தார்.

அவர்களும் ஒல்காவைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள். ‘‘எனக்கு முடிவெடுக்க ஒருநாள் அவகாசம் கொடுங்கள். இன்று உங்கள் படகில் சென்று தங்குங்கள். நாளை நீங்கள் என்னைப் பார்க்க நடந்தோ, குதிரையிலோ, ரதத்திலோ வரக்கூடாது. நான் உங்களுக்குச் செய்யும் மரியாதையாக, எம் வீரர்கள் உங்களைப் படகோடு தூக்கிக்கொண்டு வருவார்கள்’’ எனத் தேனொழுகப் பேசினாள் ஒல்கா. அவர்களும் நம்பி, படகுக்குச் சென்றார்கள்.

அடுத்த நாள். ஊரே வியப்புடன் பார்க்க, அந்தத் தூதுவர்கள் படகுடன் தூக்கி வரப்பட்டார்கள். ஒல்கா ஓரிடத்தில் காத்திருந்தாள். அவர்களைப் புன்னகையுடன் வரவேற்றாள். அங்கே மாபெரும் குழி ஒன்று வெட்டப்பட்டிருந்தது. என்னவென்று அவர்கள் யோசிக்கும் முன்பே, படகுடன் குழியில் தூக்கி எறியப்பட்டனர். ஒல்கா ஒய்யார நடை நடந்து வந்து, குழிக்குள் எட்டிப்பார்த்தாள். ‘‘எப்படி இருக்கிறது இந்த வரவேற்பு?’’ என்று ஏளனமாகச் சிரித்தாள். ‘‘உயிருடன் புதையுங்கள்!’’ என்று அவள் சொல்லவும், குழியை நிரப்ப ஆரம்பித்தார்கள். சில நிமிடங்கள் மட்டும் கேட்ட தூதுவர்களின் மரண ஓலம், விரைவில் அடங்கிப்போனது. ‘அரசர் இகோரும் இப்படித்தானே கதறியிருப்பார்? அவரைக் கொன்றுவிட்டு, திருமணத்துக்குத் தூதும் அனுப்புகிறாயா?’ அரசி ஒல்காவின் பழிவாங்கும் வெறி பயங்கரமாகத் தூண்டப் பட்டிருந்தது.

இளவரசர் மாலுக்கு ஒரு செய்தி அனுப்பினாள். ‘‘திருமணத்துக்குச் சம்மதம். ஆனால், உரிய மரியாதைகளுடன் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்ல, டிரெவ்லிய சான்றோர்களும் மேன்மக்களும் வரவேண்டும். அப்போதுதான், எம் மக்கள் இந்தத் திருமணத்தின் அவசியத்தை உணர்வார்கள்!’

இப்படி ஒரு செய்தியைக் கண்டதும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில்  உருவமில்லா ஓர் உருண்டை உருள, ஏற்பாடுகளை உடனே செய்தார் மால். முக்கியஸ்தர்கள் அடங்கிய டிரெவ்லியன் குழுவினர், அரசி ஒல்காவைச் சந்திக்கவந்தனர். ‘‘என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி. நீண்ட தூரம் பயணம் செய்திருப்பீர்கள். குளித்து, களைப்பு நீங்கி வாருங்கள்!’’ – ஒல்கா இலவம்பஞ்சு வார்த்தைகளால் இதமாகப் பேசினாள்.

வந்த பெரியவர்களும் அகமகிழ்ந்து அவள் சொன்னதுபோல குளிக்கச் சென்றனர். ரஷ்யாவின் குளியல் அறைகளுக்கு banya என்று பெயர். கடுங்குளிருக்கு இதமான வெந்நீர்க் குளியல் முதல் நீராவிக் குளியல் வரை சகல வசதிகளும் அங்கே உண்டு. பெரியவர்களைக் குதூகலப்படுத்தும் மசாஜுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. களைப்பிலும், குளியலின் சுகத்திலும் அந்த டிரெவ்லியன்கள் கிறங்கிக் கிடந்த வேளையில், அந்த மாபெரும் குளியலறையின் கதவுகள் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டன. ‘‘கொளுத்துங்கள்!’’ - ஒல்கா கட்டளையிட்டாள். அந்தக் கட்டடத்துக்குத் தீ வைத்தார்கள். குளித்துக்கொண்டிருந்தவர்கள் தீக்குளிக்க வைக்கப்பட்டனர்.

வெறி தீராத ஒல்கா, மூன்றாவது சுற்றுக்குத் தயாரானாள். டிரெவ்லியன்களின் இடத்துக்கே சென்று ஆட்டம் காட்டத் திட்டமிட்டாள். மாலுக்கு அடுத்த செய்தியை அனுப்பினாள். ‘‘சில நாள்களில் நான் அங்கே வருகிறேன். கொல்லப்பட்ட என் கணவருக்கு உங்கள் இடத்தில் ‘காரியம்’ செய்ய விரும்புகிறேன். அதுவே எனக்கு அமைதியைத் தரும். அதற்காக பிரமாண்ட விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.’’

தான் அனுப்பிய டிரெவ்லியன்களுக்கு நடந்த கொடுமை எதையும் அறியாத மால், இந்தச் செய்தியையும் அப்படியே நம்பினார். விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். டிரெவ்லியன்களின் தலைநகரமான இஸ்கோரோஸ்டென் ( Iskorosten- உக்ரைனின் இன்றைய கோரோஸ்டென்) சென்றாள் ஒல்கா. உடன் சிறு படை மட்டும். மாலும் ஒல்காவும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். அவளது அழகைக் கண்டு மால் உற்சாகமானார். ‘எனக்கே எனக்கா’ என்று ஏகபோக குஷியில் அவரது இதயம் துள்ளியது.

இருந்தாலும் கேட்டார். ‘‘நான் அனுப்பியவர்க ளெல்லாம் எங்கே?’’ ஒல்கா பிசகின்றி பொய் சொன்னாள். ‘‘எனது பரிவாரங்கள் சூழ, பின்னால் வந்துகொண்டே இருக்கிறார்கள். நாம் விருந்தை ஆரம்பிக்கலாமா?’’ அவள் மது சிந்தும் கண்களால் கேட்கவும், மதி மயங்கிய மால் சற்றுக் கூடுதலாகவே குடித்தார். அந்த விருந்தில் கலந்துகொண்ட சுமார் 5,000 டிரெவ்லியன்களும் மூக்குமூட்டத் தின்று, மூச்சுமுட்டக் குடித்தனர். ஒல்காவும் அவரின் படையினரும் அளவுடன் நிறுத்திக்கொண்டு அமைதியாகக் காத்திருந்தனர்.

நள்ளிரவு நேரம். டிரெவ்லியன்கள் அனைவரும் மயங்கிக்கிடந்த வேளையில், ஒல்கா ‘‘சீக்கிரம் ஆகட்டும்!’’ என்று கட்டளையிட்டாள். அவளின் சிறுபடையினர் சரசரவென அங்கிருந்த அத்தனை டிரெவ்லியன்களின் கதையையும் முடித்தனர். அதில் மாலும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விடிவதற்குள் ஒல்காவும் படையினரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

கி.பி. 946-ல் ஒல்காவின் நான்காவது சுற்றுப் பழிவாங்கும் படலம் தொடங்கியது. அப்போது பெரும் படையுடன் நேரடியாகவே டிரெவ்லியன்கள்மீது படையெடுத்தாள். சுற்றி வளைத்துத் தாக்குதல். பல மாத முற்றுகை. நகரத்துக்குள் சிக்கிக்கொண்ட டிரெவ்லியன்கள், நெடுஞ்சாண்கிடையாக அடிபணிந்தனர். ‘‘நாங்கள் கப்பம் கட்டுகிறோம். அரசி ஒல்காவின் ஆட்சிக்குக் கட்டுப்படுகிறோம். எங்களை மன்னித்து உயிருடன் விட்டுவிடுங்கள்’’ என்று செய்தி அனுப்பினர். கூடவே, கம்பளிகளையும், தேன் குடுவைகளையும் அனுப்பி வைத்தனர். அந்தத் தேன் அவளுக்குத் தித்திக்கவில்லை. பதிலுக்கு வேறு செய்தி அனுப்பினாள். ‘‘உங்களை மன்னிக்கிறேன். எனக்கு மரியாதை செய்யும் விதமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மூன்று புறாக்களையும் மூன்று சிட்டுக் குருவிகளையும் கொடுத்துவிடுங்கள்.’’

எதற்கு புறா, குருவி என்றெல்லாம் டிரெவ்லிய மக்கள் யோசிக்கவில்லை. ஒல்கா கொல்லாமல் விடுகிறாளே என்று மகிழ்ந்து அவற்றைக் கொடுத்தனர். புறாக்களையும் குருவிகளையும் ஒல்காவின் வீரர்கள் புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டனர். இரவு நேரம். ஒல்கா தன் வீரர்களிடம் கட்டளையிட்டாள். ‘‘ஒரு சிறு துணியில் ஒரு துண்டு கந்தகத்தை முடியுங்கள். அதை ஒவ்வொரு பறவையின் காலிலும் கட்டுங்கள்.’’ அப்படியே செய்தார்கள். ‘‘அந்தப் பறவைகளைப் பறக்க விடுங்கள்!’’ என்றாள் ஒல்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 38 - புனிதப் பழிவாங்கல்!

புறாக்கள் அவற்றின் வீடு திரும்பின. குருவிகள் அதனதன் கூடு திரும்பின. காற்றில் கந்தகம் வினைபுரிந்து தீப்பற்றிக் கொள்ளுமல்லவா? அதுவே நிகழ்ந்தது. தவிர, ஒல்காவின் கட்டளைப்படி, தீ ஏந்திய அம்புகள் Iskorosten நகரத்தை நோக்கிப் பாய்ந்து வந்தன. எங்கெங்கும் நெருப்பின் தாண்டவம். டிரெவ்லிய மக்கள் தூக்கம் கலைந்து அலறி ஓடி நெருப்பில் சிக்கி இறந்தார்கள். அதையும் மீறி நகரத்துக்கு வெளியே ஓடி வந்தவர்களை ஒல்காவின் வீரர்கள் கொன்று குவித்தனர். மேலும் பலர் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர். ஒரு கொலைக்காக, ஓர் இனத்தையே கிட்டத்தட்ட அழித்த பிறகு, ஒல்கா தனது பழிவாங்கும் படலத்தை நிறுத்திக் கொண்டாள்.

ஒல்காவின் இருள் பக்கம் இதுவென்றால், மறுபக்கம் மலைக்கச் செய்வது. அரசியாக சில படையெடுப்புகளையும் நிகழ்த்தி, ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினாள். மகனுக்கு உரிய வயது வந்தபிறகு, அவனிடம் அதிகாரத்தை ஒப்படைத்தாள். நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொண்டாள். கிழக்கு ஐரோப்பியப் பகுதியின் முதல் சட்டபூர்வமான வரி வசூல் முறை ஒல்கா உருவாக்கியதே. வணிகம் செழிக்கவும் பல வழிமுறைகளை உருவாக்கினாள்.

பாகான் (Pagan) என்ற தொன்ம ஐரோப்பிய மதத்திலிருந்து கிறிஸ்துவத்துக்கு மாறிய முதல் நபர் ஒல்காதான். பின், பாகான் மத மக்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தாள். அவள் மகன், இந்த மதமாற்றத்தை எதிர்த்தார். ஆனால், பேரனான விளாதிமிர் (Vlamidir the great), தேசத்தின் அதிகாரபூர்வ மதமாக கிறிஸ்துவத்தை அறிவித்தார். வரலாற்றில் ரத்தவெறி பிடித்த அரசிகளின் பட்டியலில் ஒல்காவுக்கு நிரந்தர இடமுண்டு. அதே சமயம், ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் கிறிஸ்துவம் தழைக்கக் காரணமாக இருந்த ஒல்காவுக்கு, கி.பி 1547-ல் மேன்மையான பட்டம் ஒன்று வழங்கப்பட்டது. புனிதர் ஒல்கா!

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism