
எஸ்.ராமதாஸ், சேலம்-30.
கோயில்கள், புத்த விகாரைகள் குறித்து திருமாவளவன் பேசியது சரியா?
எந்த விவகாரத்தையும் பொதுமைப்படுத்திப் பேசி விடக்கூடாது. அதுவும், பொதுவாழ்க்கையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அதைச் செய்யக்கூடாது.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.
மறைந்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் நூல்களில் பிடித்தது?
எதை எழுதினாலும் சுவாரஸ்யம். அதுதான், ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி. ‘பாமர கீதை’ என்று ஒரு புத்தகம் எழுதினார், பகவத் கீதையைப் பாமரருக்கும் புரியும் மொழியில் சுவாரஸ்யமாக. கிஷ்டன், பார்த்தி ஆகிய இருவரும் சென்னை மொழியில் கீதையைப் பேசிக்கொள்வார்கள். தத்துவத்தையும் சுவையாய் சொல்லத் தெரிந்தவர் அவர்.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).
ஸ்டாலின் வேட்டியில் ஏற்பட்ட டீ கறையை வைகோ துடைத்தது பற்றி..?
அது, வைகோவுக்கு தரப்பட்ட டீ. தவறுதலாக ஸ்டாலின் வேட்டியில் பட்டுவிட்டது. உடனே பதறிப் போன வைகோ, அதைத் துடைத்துவிட்டார். ‘‘அடுத்து நீங்கள் பேச வேண்டுமே’’ என்று வைகோ பதற... ‘‘போடியம் முன் நின்றுதானே பேசப் போகிறேன். அதனால் யாருக்கும் தெரியாது’’ என்று சாதாரணமாய் ஸ்டாலின் சொல்லியி ருக்கிறார். அது இயல்பாய் நடந்த சம்பவம்தான்.
கோ.அரசு, பாஞ்சாலம்.
நாட்டில் நல்ல செய்தியாக எதுவும் இல்லையா?
சூரத் நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மகேஷ் சவானி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் தினத்தில், ஏழைப் பெண்களுக்குத் தன் செலவில் திருமணம் செய்துவைக்கும் அறப்பணியைச் செய்துவருகிறார். தந்தையை இழந்த 251 ஏழைப் பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். ‘‘ஒரு பெண் தன் தந்தையை இழந்துவிட்டால், அவரது திருமணம் கேள்விக் குறியாகிவிடுகிறது. தந்தை இருந்து என்ன செய்வாரோ, அந்த இடத்திலிருந்து அதை நான் செய்கிறேன்’’ என்கிற மகேஷ் சவானி, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஐந்து லட்ச ரூபாய் சீர்வரிசையும் செய்திருக்கிறார். இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் சொல்கிறார். இந்த ‘குஜராத் மாடல்’தான் இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறது!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.
அன்று ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த தனக்கு ஆதரவு தெரிவித்த ஜெ.தீபாவை, இன்று ஓ.பன்னீர்செல்வம் கண்டுகொள்ளாதது ஏன்?
ஜெ.தீபாவை மட்டுமா கண்டுகொள்ளவில்லை?
ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
துணை முதல்வர் பதவி என்பது அலங்காரப் பதவியா, அதிகாரங்கள் உள்ள பதவியா?
அது, யார் அந்தப் பதவியில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. கருணாநிதி முதல்வராக இருந்து ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது, அதிகாரம் உள்ள பதவியாக அது இருந்தது; எடப்பாடி முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருக்கும்போது அது அதிகாரமற்ற டம்மி பதவியாக இருக்கிறது. எதுவுமே ஆளைப் பொறுத்துதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அந்த நாற்காலி அதிகாரம் பொருந்தியதாக இருந்ததைப்போல இப்போது உள்ளதா?
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
ஆர்.கே. நகர் பரப்புரை மேடையில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் பேசிய பேச்சுகள்...?
தி.மு.க-வுக்கு ஸ்டார் பேச்சாளர்கள் கிடைத்து விட்டார்கள்!
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வந்தது பற்றி?
சுமார் ஓராண்டு காலம் கழித்து கருணாநிதி அங்கு சென்றுள்ளார். ‘‘நீங்க எந்த இடத்துக்கு வந்திருக்கீங்க?’’ என்று ஸ்டாலின் கேட்டபோது, ‘‘அறிவாலயம்’’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அப்போது, அவரது குரலும் லேசாக வெளியில் வந்துள்ளது.
ப.பாலா சத்ரியன், பாகாநத்தம்.
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பதன் பொருள்?
பாகாநத்தத்திலிருந்து புறப்பட்டு ஆர்.கே. நகர் வரவும். கண்ணில் படுபவர்களிடம் கேட்கவும். பதில் கிடைக்கும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
குமரி அனந்தன், ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன் போன்றோர் அரசு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறுவது பற்றி..?
உதாரண புருஷர்கள். நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழட்டும்.

கே.பாலு, சென்னை-33.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அமளியால் சச்சின் டெண்டுகர் பேச முடியவில்லையே?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையில் நியமன எம்.பி-யாக அவரை ஆக்கியதே காங்கிரஸ் அரசுதான். ‘சரியாக அவைக்கு வருவதில்லை’ என்ற சர்ச்சைக்கு ஆளான சச்சின், தன் கன்னி உரையை நிகழ்த்துவதற்குக் கடந்த வாரம்தான் வாய்ப்பு பெற்றார். ‘மன்மோகன் சிங் பற்றிய பேச்சுக்குப் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என அவையை முடக்கியிருக்கும் காங்கிரஸ் கட்சியினர், சச்சினைப் பேச விடவில்லை. இந்தியாவில் விளையாட்டின் நிலை குறித்து பேச நினைத்திருந்தார் சச்சின். அரசியல் விளையாட்டில் அது அடிபட்டுவிட்டது. அவைக்குச் சரியாக வராவிட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை முறையாக செலவழித்த எம்.பி-க்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் சச்சின்.
வி.ஐ.பி கேள்வி
நடிகர் கருணாஸ், எம்.எல்.ஏ

வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தின் கிராமப்புறங்கள் வரையிலும் வேலைக்காக வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக மக்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் இந்தப் போக்கின் பின்னணியில் இருப்பது யார்?
இதை அப்படிப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. ‘இந்தியாவின் பல்வேறு மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பைத் தரும் அளவுக்கு தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது’ என்று வேண்டுமானால் சொல்லலாம். பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடி தமிழகம் வருகிறார்கள். அந்த மாநிலங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கின்றன என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். நம் மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிச் சென்றிருக்கும் சூழலில், தமிழகத்தில் நடைபெறும் கட்டடத்தொழில் உள்ளிட்ட அடிப்படை வேலைகளைச் செய்வதற்கு இங்கே உழைக்கும் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அதைவிட முன்னேறிய வேலைகளுக்குத் தமிழக இளைஞர்கள் போய்விட்டனர். இதைத்தான் இந்தச் சூழல் உணர்த்துகிறது. வடமாநிலத்தவர் இங்கு வருவதனால், தமிழினத்துக்குப் பாதிப்பு கிடையாது. இப்படிப் பார்க்க ஆரம்பித்தால், தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களிலும், நாடு கடந்து பார்த்தால் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என்று வெளிநாடுகளிலும் உயர் பதவிகளில் இருக்கின்றனர். அந்தந்த மாநிலங்களையும் நாடுகளையும் வளப்படுத்துவதற்காகத்தான் தமிழர்கள் சென்றுள்ளார்கள். அதேபோல, மற்ற மாநிலத்தவர்கள் நம் மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வருகிறார்கள் என்றுதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!