‘‘இங்க பயங்கரமா மணல் கொள்ளை நடக்குது. அதனால, விவசாயம் எல்லாம் ரொம்ப பாதிக்கப்படுது. அந்த ஆதங்கத்துலதான், குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்குப்போன எங்க அப்பா, ‘அம்மா... மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கன்னு பல தடவை அதிகாரிகள்கிட்ட மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கல. நீங்ககூட நடவடிக்கை எடுக்கமாட்டீங்கறீங்களே...’ன்னு கலெக்டர்கிட்ட கேட்டிருக்கார். அதுல கலெக்டர் கோபமாயிட்டாங்க. அதோட இல்லாம, எங்க ஊர்ல மணல் அள்ளுறதுக்கு, கோர்ட்டுக்குப்போய் எங்க அப்பா இடைக்காலத் தடை வாங்கினார். அந்தக் கோபத்துல எங்க அப்பாவை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க” என்று கண்கலங்கினார் திலீப்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூரைச் சேர்ந்தவர் லிங்கத்துரை. இவருக்கு, இளையான்குடி தாலுகா, சாலைக்கிராமம் அருகே பரத்தவயல் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. பரத்தவயல், வடக்கு கீரனூர் பகுதிகளில் சவடு மண் எடுப்பதற்காகப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அங்கு மணல் மாஃபியாக்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என்றும் அந்தக் கிராமத்தினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
பரத்தவயல் கிராம மக்களிடம் நாம் பேசியபோது, “சாத்தனூர், வடக்கு கீரனூரைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பரத்தவயல் கண்மாய்தான் நீர் ஆதாரம். இந்த ஆண்டு விவசாயம் நடக்காத சூழலில், நீர்வரத்துள்ள ஓடை, ஆற்றுப்படுகை, கண்மாய் என எல்லா இடங்களிலும் மணல் மாஃபியாக்கள் மணலைச் சுரண்டுகிறார்கள். இங்கு, மூன்று அடி சவடுமண்ணுக்குக்கீழே, ஆற்றுமணல் கிடைக்கிறது. அதனால் மணல் மாஃபியாக்கள், சுமார் 30 அடி ஆழத்துக்கு மணலைச் சுரண்டி கோயமுத்தூர், பழனி, திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, மதுரை, ராமநாதபுரம் எனப் பல இடங்களுக்குக் கொண்டுபோகிறார்கள். தினமும் 500 லாரிகளுக்குக் குறையாமல் மணல் அள்ளுகிறார்கள். மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ., தாசில்தார் என எல்லா அதிகாரிகளிடமும் புகார் செய்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. மணல் அள்ளும் இடத்துக்கு கலெக்டர் வந்தார். ஆனால், சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்லும் லாரிகள்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அரசு உயர் அதிகாரிகள், செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் மணல் கொள்ளை நடக்கிறது. அதனால், இந்த இடத்தில் சவடு மண் எடுப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் லிங்கத்துரை இடைக்காலத் தடை வாங்கினார்’’ என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிய நிலையில், லிங்கத்துரையைத் திடீரென போலீஸார் கைதுசெய்தனர். லிங்கத்துரை சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், அவருடைய மகன் திலீப்பிடம் பேசினோம். ‘‘டிராக்டர் டைனமோ பழுதானதைச் சரிசெய்துவிட்டு வந்துகொண்டிருந்த அப்பாவை இடைமறித்து, பழையனூர் காவல் நிலையத்துக்கு போலீஸார் கூட்டிச் சென்றனர். கண்மாய் கரையை உடைத்து, மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக அப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டு மென்று போராடியவர்மீது இப்படியொரு பிரிவில் வழக்குப் போட்டுக் கைது செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீதிமன்றத்தில் தடைஉத்தரவு வாங்கிய நாளிலிருந்தே அப்பாவுக்கு மிரட்டல் வந்துகொண்டிருந்தது. எங்களுக்கு பரத்தவயல் கண்மாய் பாசனத்தில் எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மணல் கொள்ளையால் விவசாயம் பாழாவதைப் பொறுக்கமுடியாமல்தான், கலெக்டரிடம் அப்பா, தன் ஆதங்கத்தைக் கொட்டினார். அதற்கு, ‘என்னையே எதிர்த்துப் பேசுறீங்களா...’ என்று கலெக்டர் கோபப்பட்டுள்ளார். அதுதான், அப்பாவின் கைதுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. நீதிமன்றத்தில் உண்மை ஜெயிக்கும். என் அப்பாவின் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும்தான் பொறுப்பு’’ என்றார்.
“லிங்கத்துரையைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதலில் திட்டமிட்டார்கள். அவர்மீது எந்த வழக்குகளும் இல்லாததால், குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் லதா, எஸ்.பி ஜெயச்சந்திரன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே லிங்கத்துரையை போலீஸார் கைதுசெய்தனர்” என்று பரத்தவயல் கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் லதாவிடம் கேட்டபோது, “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை” என்று மறுத்தார்.
எஸ்.பி ஜெயச்சந்திரனைத் தொடர்புகொண்டபோது, “நீங்கள் சொல்லித்தான், இப்படியொரு விவகாரமே எனக்குத் தெரியும்” என்றார்.
மணல் மாஃபியாக்களுக்கு ஆட்சியாளர்கள் துணைபோவது தவறு.
- தெ.பாலமுருகன்
படங்கள்: சாய் தர்மராஜ்