Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்
கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

‘‘நாங்கள் செய்யும் வேலைக்கு நீங்கள் கொடுக்கும் கூலி போதாது. அதிகப்படுத்துங்கள்’’ என்று தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஸ்பானிய அதிகாரியை அவன் தந்தை எதிர்த்து நின்றபோது, ஃபிரான்சிஸ்கோ (Francisco Macias Nguema) பெருமையாக உணர்ந்தான். தந்தை பெரிய மந்திரவாதி. மாந்திரீகத்தாலும் பில்லி சூனியத்தாலும் ஊரிலிருப்பவர்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பவர். சொந்த சகோதரரையே அடித்துக் கொன்ற பலசாலியும் கூட. ஆகவே, தன் தந்தையின் குரலுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பார்கள் என்று பலமாக நம்பினான். ஒரே அடி! அதிகாரி அடித்ததில் தந்தை சுருண்டுவிழுந்தார். அடுத்தடுத்த அடி தாங்காமல் செத்தே போனார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்த பத்தே நாளில் அவன் தாயும் தற்கொலை செய்துகொண்டாள். நொறுங்கி நின்றான் ஃபிரான்சிஸ்கோ.

1924-ல், ஈக்வடோரியல் கினி (Equatorial Guinea) என்ற மிகச்சிறிய ஆப்பிரிக்க தேசத்தில் பிறந்தவன் அவன். அந்தத் தேசத்தின் ரியோ மூனி என்ற பெரிய நிலப்பரப்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்தது. தவிர, அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்த பயாகோ தீவு, அன்னபோன் தீவு உள்ளிட்ட சில தீவுகளையும் ஒன்று சேர்த்ததே மொத்த தேசம். கி.பி 1778 முதல் ஸ்பெயினின் காலனியாக இருந்துவந்ததால் அதன் அப்போதைய பெயர் ஸ்பானிஷ் கினி.

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரியோ மூனியின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவிகிதம் பேர் ஃபேங் (Fang) என்ற இனக் குழுவினரே. அந்த இனத்தைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ, கிறிஸ்துவ மிஷனரிகள் உதவியுடன் கல்வி கற்றார். ஏதாவது ஓர் அரசு வேலையில் அமர்ந்துவிட்டால் போதுமென அரசுப் பணித் தேர்வை எழுதினார். மூன்று முறை தொடர்ந்து தோல்வி. ‘அதெற்கெல்லாம் அறிவு வேண்டும்’ என்ற மற்றவர்களது பரிகாசம் மிகவும் வலித்தது. எப்படியோ நான்காவது முறை தேர்வானார். ‘இல்லவே இல்லை, ஸ்பானியர்களின் காலைப் பிடித்து குமாஸ்தா வேலை ஒன்றை வாங்கினார்’ என்றும் சொல்லப்படுவதுண்டு. பின் வனத்துறையில் சிறு பணி. நான்காண்டுகள் கழித்து ஒரு நீதிமன்றத்தில் வேலை.

ஸ்பானிஷ் கினியை சுயாட்சிகொண்ட தேசமாக அறிவிக்கலாமென ஸ்பெயின் முடிவெடுத்தது. 1964-ல் போனிஃபேசியோ என்பவர் பிரதமராக, அவரது தலைமையில் ஓர் அரசு அமைக்கப்பட்டது. கொல்லைப்புறமாக அரசியலுக்குள்ளும் நுழைந்திருந்த ஃபிரான்சிஸ்கோ, உரியவர்களைக் காக்கா பிடித்தும், காய்களை நகர்த்தியும் மொங்கோமோ என்ற நகரத்தின் மேயர் பதவியில் அமர்ந்தார். நாம் எதிர்பார்க்காத ஒருவர் சட்டென முதல்வர் பதவிக்கு வருவதுபோல, போனிஃபேசி யோவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாகச் செயல்பட்டு, துணைப் பிரதமராக உயர்ந்தார் ஃபிரான்சிஸ்கோ. 1967 வரை ஸ்பெயின் சுதந்திரத்தை அறிவிக்காமல் இழுத்தடிக்க, அதற்காக வலுவாகக் குரலெழுப்பி, தன்னை ‘விடுதலைப் போராளி’யாக நிலைநிறுத்திக் கொண்டார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

1968 மார்ச்சில், ஸ்பானிஷ் கினியின் விடுதலையை ஸ்பெயின் உறுதிசெய்தது. ஸ்பானிஷ் கினி, ஈக்வடோரியல் கினி ஆனது. அந்த செப்டம்பரில் அங்கே ஐ.நா-வின் மேற்பார்வையில், முதல் அதிபர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தது. நான்காண்டு காலம் நல்லாட்சி புரிந்த உத்தமரான போனிஃபேசியோ போட்டியிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர், ஃபிரான்சிஸ்கோதான். போனிஃபேசியோவுக்கு இருக்கும் நல்ல பெயரைத் தாண்டியும் தனக்கு ஓட்டு விழ அவர் கையில் எடுத்த ஆயுதம், வேறென்ன... இன அரசியல்தான். ‘ஃபேங் இனத்தின் காவலனாக நம் பெருமையை மீட்டெடுப்பேன்’ என்று சூளுரைத்து அந்த மக்களைச் சூடேற்றினார். போனிஃபேசியோவைத் தோற்கடித்து அதிபர் ஆனார். இன்றைய தேதி வரையில் அந்தத் தேசத்தில் ஜனநாயக முறைப்படி நடந்த ஒரே அதிபர் தேர்தல் அது மட்டுமே.

தோல்விக்குப் பின் கபானுக்கு ஓடிப்போன போனிஃபேசியோ, ‘அங்கே தற்கொலை செய்து கொண்டார்’ என்றும், ‘இல்லை... புதிய அதிபரால் சிறைப்பிடிக்கப்பட்டு, கண்கள் குருடாக்கப்பட்டு கொல்லப்பட்டார்’ என்றும் செய்திகள் உண்டு. ஆம், அதிபர் ஃபிரான்சிஸ்கோவின் கெட்ட ஆட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பமாகியிருந்தது.

ஸ்பானியர்கள் ஆட்சி இருந்த வரைக்கும் தேசத்தின் பொருளாதாரம் நிமிர்ந்தே இருந்தது. கோகோ, காபி விவசாயத்தால் வணிகம் செழிப்பாக நடந்தது. நிர்வாக எந்திரம் பழுதின்றி இயங்கியது. பள்ளிகள், மருத்துவமனைகள், அரசுக் கட்டடங்கள் எனக் கட்டமைப்பும் நன்றாகவே இருந்தது. சுதந்திரம் வழங்கினாலும் சுமார் 7,000 ஐரோப்பியர்கள் வரை (பெரும்பாலும் ஸ்பானியர்கள்) அங்கேயே இருந்து தங்கள் வணிகத்தையும், பிற பணிகளையும் தொடர்ந்தனர். ஃபிரான்சிஸ்கோ அதிபரான 154-வது நாளில் நகர்வலம் சென்றபோது, அவரது கண்களில் ஸ்பெயினின் கொடிகள் தென்பட்டன. ஸ்பெயின் தூதரக அதிகாரியை அழைத்தார். ‘‘உங்கள் கொடிகள் எல்லாம் இறக்கப்பட வேண்டும்’’ என்றார்.இரண்டு நூற்றாண்டுகள் ஆண்ட திமிர் எளிதில் இறங்காதல்லவா. ஸ்பெயின் அதிகாரி ‘‘முடியாது’’ என்றார். ஃபிரான்சிஸ்கோ, இளைஞர்களைக் கொண்டு படை ஒன்றை அமைத்திருந்தார். அந்தப் படையினர் ஸ்பெயினின் கொடிகளை மட்டுமல்ல, கண்ணில் பட்ட ஸ்பானியர்கள் ஒவ்வொருவரையுமே கிழித்துத் தொங்கவிட்டனர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

சர்வாதிகார குணம் கொண்ட ஒருவர் அதிபராகும்போது என்னவெல்லாம் செய்வாரோ, அவை அனைத்தையும் அச்சுப் பிசகாமல் ஃபிரான்சிஸ்கோவும் செய்தார். தன் இன மக்களைக் கொண்டு தனக்கு விசுவாசமான ஒரு படையை உருவாக்கினார். அவர்களை ஏவிவிட்டு, அரசியல் எதிரிகள் பலரைச் சிறையில் தள்ளினார்; வதைத்தார்; வதம் செய்தார். எதிர்க்கட்சிகளுக்கு கல்லறை எழுப்பிவிட்டு, தனது கட்சியைத் (United National Workers Party) தேசத்தின் ஒரே கட்சியென பிரகடப்படுத்தினார். தன் குடும்பத்தினரை, உறவினர்களை, Esangui என்ற தன் குலத்தினரை, விசுவாசிகளை மட்டும் கொண்டு அதிகார மையத்தைக் கட்டமைத்தார். பத்திரிகைகளுக்குத் தடைவிதித்தார். ‘தானே வாழ்நாள் அதிபர்’ என்று அறிவித்துக்கொண்டார் (1972). இறுதியாக, தானே கடவுள் என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார். பயத்தைத் தோற்றுவித்து அப்பாவி மக்கள் தன்னை வழிபடுமாறு செய்தார்.

இவையெல்லாம் சகல சர்வாதிகாரி களும் அரங்கேற்றும் அராஜகங்களே. ஃபிரான்சிஸ்கோ, ‘இன்னும் மேலே’ செய்தார். அப்போது இருந்த அரசியலமைப்பின் பெரும் பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். சென்ட்ரல் வங்கியின் இயக்குநர் படுகொலை செய்யப்பட்டார். வங்கியில் இருந்த பணமெல்லாம் அதிபரின் சொந்தச் செலவுகளுக்காக உரிமையுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. பதவியேற்ற முதலாண்டு முடிவதற்குள் கஜானா காலி. ‘யாராவது அதிபரை விமர்சித்தாலோ, அல்லது தரக்குறைவாகப் பேசினாலோ, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்ற 100 சதவிகித சர்வாதிகாரம் சொட்டும் சட்டம் ஒன்றை நிறைவேற்றி, அதன் வழியாகப் பலருக்கும் உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார் பிரான்சிஸ்கோ.

‘நான் Intellectual அல்ல. எனவே, அரசுப் பணித் தேர்வில் மூன்று முறை தோற்றேன். ச்சே... அவமானம்!’ – இந்த விஷயம் பிரான்சிஸ்கோவின் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆகவே, தேசம் முழுவதும் நூலகங்களை இழுத்து மூடினார். பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு அதிபரைப் புகழ்ந்து பாடும் வாசகங்கள் மட்டும் கற்றுக்கொடுக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘Intellectual’ என்ற வார்த்தையை யாரும் எதிலும் பயன்படுத்தக்கூடாது என்று தடை கொண்டு வந்தார். Intellectual என்று தான் கருதியவர்களுக்கு கருமாதி செய்தார். கல்வெட்டு வாசகம் ஒன்றையும் உதிர்த்தார். ‘ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும் பிரச்னையே படித்தவர்கள்தாம். அவர்களே அயல்நாட்டுக் கலாசாரத்தைப் புகுத்தி சூழலைக் கெடுக்கிறார்கள்!’    

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

முன்னாளில், அன்றைய முதல்வரது புகைப்படத்தை எங்கும் மாட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் ஒரு கூட்டம் திரிந்ததல்லவா. அதேபோல அந்நாளில் அங்கு அனைத்து தேவாலயங்களிலும் ஃபிரான்சிஸ்கோவின் திருவுருவப் படம் மாட்டப்பட்டது. மதகுருக்கள் பிரார்த்தனைக்குப் பதிலாக, அதிபர் புகழ் பாட மிரட்டப்பட்டனர். மீறினால், சென்று சேர வேண்டியதுதான். ‘எங்கே அனைவரும் சொல்லுங்கள்... நம் அதிபரே உலகின் ஒரே அற்புதம்! கடவுள் நம் தேசத்தைப் படைத்தார். ஃபிரான்சிஸ்கோவுக்கு நன்றி. ஆம், அவரின்றி நம் தேசமே கிடையாது! ஃபிரான்சிஸ்கோவைத் தவிர வேறு கடவுள் நமக்குக் கிடையாது!’ – இப்படி ஃபிரான்சிஸ்கோ புகழ் வாசகங்கள் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டன. அதே சமயத்தில் பிரசங்கம், விழாக்கள், மதக்கூட்டங்கள், சாவு ஊர்வலங்களுக்குக்கூடத் தடை விதிக்கப்பட்டது.

தேச மக்கள் அனைவரும் தங்களது ஸ்பானிஷ் கலந்த கிறிஸ்தவப் பெயர்களை, அசல் ஆப்பிரிக்கப் பெயர்களாக மாற்றிக்கொள்ளக் கட்டளையிடப் பட்டது. அதிபர், பிரான்சிஸ்கோ மாஸியஸ் நுவேமா என்ற தனது தன் பெயரை Masie Nguema Biyogo Negue Ndong என்று மாற்றிக் கொண்டார். நகரத்தின் பெயர்களும் மாற்றப்பட்டன. பயாகோ தீவிலமைந்த தலைநகரமான Santa Isabel, மலாபோ ஆனது. பல தேவாலயங்கள் மூடப்பட்டன. சில தேவாலயங்களை குடோன்களாகவும், ஆயுதங்களைப் பதுக்கி வைக்கும் கிடங்காக வும் மாற்றிக்கொண்டார் பிரான்சிஸ்கோ.

கிறுக்கு ராஜாக்களின் கதை! -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்

மனிதத் தன்மையற்ற பிரான்சிஸ்கோவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட நிறைய கொடூரங்கள் வெளியே வரவில்லை. பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் இரண்டு மட்டும் இங்கே. 1969, கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய மாலை. மலாபோவின் ஒரு மைதானத்தில் ஒலிபெருக்கிகள் கட்டப் பட்டன. அதில் மேரி ஹாப்கினின் புகழ்பெற்ற பாடல் ஒன்று ஒலிக்க விடப்பட்டது. ‘Those were the days my friend’. 150 அரசியல் கைதிகள் மைதானத்துக்குள் அழைத்து வரப்பட்டனர். ‘We thought they’d never end’. அனைவரும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். ‘We’d sing and dance forever and a day’. சாண்டா கிளாஸ் உடையணிந்த படைவீரர்கள் உற்சாகமாக மைதானத்துக்குள் வந்தனர். ‘We’d live the life we choose’. 150 பேரை நோக்கியும் வீரர்களது துப்பாக்கிகள் நீண்டன. ‘We’d fight and never lose’. துப்பாக்கிகள் வரிசையாக வெடிக்க ஆரம்பித்தன. ‘For we were young and sure to have our way’. 150 பேரும் செத்து விழுந்தனர். ‘La la la la...’

இன்னொரு சம்பவம்... 36 கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான குழியை அவர்களே வெட்ட வேண்டியிருந்தது. கழுத்து மட்டும் வெளியே தெரியும்படி அவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர். அந்தக் கைதிகளின் முகங்கள்மீது சிவப்புக் கட்டெறும்புகள் தூவப்பட்டன.

(ஃபிரான்சிஸ்கோ வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism