Published:Updated:

“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!

“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!
பிரீமியம் ஸ்டோரி
“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!

புயலைக் கிளப்பிய புகார்

“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!

புயலைக் கிளப்பிய புகார்

Published:Updated:
“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!
பிரீமியம் ஸ்டோரி
“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குளித்ததால் புகழ்பெற்றது, காவிரி மகாபுஷ்கரம். ஆனால், ‘இந்த விழாவே ஓர் ஆன்மிக மோசடி’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் புலவர் மகாதேவன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரம்  மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு வந்துள்ளது.

மயிலாடுதுறையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி மகாபுஷ்கரம் விழாவில், முதல்வர் உள்பட பல அமைச்சர்களும், காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட ஆன்மிகவாதிகளும் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு எதிராகத்தான், புலவர் மகாதேவன் வழக்குத் தொடர்ந்தார். இவர், ஆடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்; வேத சாஸ்திரங்களில் புலமை உள்ளவர்; காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரரின் மைத்துனர்.

“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!
“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன சொல்கிறார் மகாதேவன்?  ‘‘12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புஷ்கரத்தை, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாபுஷ்கரம் என்று அறிவித்தது தவறு. காவிரி புஷ்கரம் என்னும் தீர்த்தவாரி, குரு பகவான் துலா ராசியில் நுழையும் நாளிலிருந்து 12 நாள்கள் நடத்தப்படுவது. இதை, ஆதிபுஷ்கரம் என்பார்கள். குரு பகவான் துலா ராசியை விட்டு விருச்சிக ராசியில் பிரவேசிப்பதற்கு முன், 12 நாள்கள் நடைபெறுவதை புஷ்கரம் என்பார்கள். அதன்படிதான், கடந்த செப்டம்பர் மாதம் காவிரி புஷ்கரம் நடத்தப்பட்டது. ஆனால், காவிரி மகாபுஷ்கரக் கமிட்டித் தலைவர் ராமானந்தா, ‘144 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்துகிற மகாபுஷ்கரம்’ என அறிவித்துள்ளார். அவர் கூற்றுபடி, 1873-ம் ஆண்டு மகாபுஷ்கரம் நடந்திருக்க வேண்டும். ஆனால், தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள ஆவணங்களின்படி, 1850-ம் வருடம் குரு சிம்ம ராசியில் இருக்கும்போது, கும்பகோணம் மகாமகம் நடந்திருப்பதாகக் குறிப்பு உள்ளது. அதில் தஞ்சை மகாராஜாவும் கலந்துகொண்டார் என்றும், சங்கராச்சாரியாருக்கு கனகாபிஷேகம் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘காஞ்சிப் பெரியவர் உள்ளிட்ட துறவிகளைக் கலந்தாலோ சித்து, அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்தான் மகாபுஷ்கரம் நடத்தப்பட்டது’ என்று ராமானந்தா கூறியுள்ளார். ‘அவர் எங்களை ஆலோசிக்கவில்லை’ என திருப்பனந்தாள் காசி மட அதிபர் மறுத்துள்ளார். எனவே, மகாபுஷ்கரம் என்ற தகவலை மோசடியாகத் தந்து, அதற்குத் துறவியர்களின் பெயர்களையும் பயன்படுத்தி, அரசையும் பக்தர்களையும் ஏமாற்றிய காரணங்களுக்காக ராமானந்தாமீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழக்குத் தொடுத்துள்ளேன்’’ என்றார். 

புஷ்கரக் கமிட்டித் தலைவர் சுவாமி ராமானந்தாவிடம் பேசினோம். ‘‘12 ராசிகளுக்குரிய 12 நதிகள் இருப்பதாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. 2015-ல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கோதாவரி நதிக்குரிய சிம்ம ராசிக்கு குரு இடம்பெயர்ந்தபோது, அதனை அரசு விழாவாக நடத்தினார். அதில், பிரதமர் மோடி பங்கேற்றார். பிறகு, சிம்ம ராசியிலிருந்து கிருஷ்ணா நதிக்குரிய கன்னி ராசிக்கு குரு பகவான் இடம்பெயர்ந்தபோது, புஷ்கர விழாவைச் சிறப்பாக நடத்தினார். அதில், வெங்கையா நாயுடு பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக, காவிரியின் துலா ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததைக் காவிரி மகாபுஷ்கரமாக நடத்தினோம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது புஷ்கரம் என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகாபுஷ்கரம் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. குரு பெயர்ச்சி அடைவதைப் பார்த்தவர் யார்? இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களுமே நம்பிக்கையை வைத்துதான் செயல்படுகின்றன. ஒரு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்கிறோம். ஏழு கலசங்களில் நீர்நிரப்பி மந்திரம் கூறிவிட்டால், ஏழு நதிகளின் புனித நீர் அந்த ஏழு கலசங்களில் வந்துவிட்டதாக ஐதீகம். அப்படி நீர் வந்ததா என்பது நமக்கும் தெரியாது; மந்திரம் சொன்ன சாஸ்திரிக்கும் தெரியாது. ‘ஏழு நதிகளின் நீர் வந்தது என்பதை நிரூபித்துக்காட்டு... இல்லை, ஜெயிலுக்குப் போவாய்’ என்று கூறினால், எந்த சாஸ்திரியாவது இந்த வேலைக்கு வருவாரா?

“மகாபுஷ்கரம் ஓர் ஆன்மிக மோசடி!

‘நதிகளைப் பாதுகாக்க வேண்டும்’ என்பதற்காக நம் முன்னோர்கள் செய்த ஓர் ஏற்பாடுதான் புஷ்கரம். காவிரி மகாபுஷ்கர திருவிழாவில், 12 நாள்கள் காஞ்சி சங்கராச்சாரியார்கள், தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள், நூற்றுக்கணக்கான துறவியர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அவர்கள் எல்லாம் குற்றவாளிகளா? என்மீது வழக்குத் தொடர்ந்தால், அதனைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயார்’’ என்றார். 

மயிலாடுதுறை நகரக் காவல் ஆய்வாளர் அழகேசன், ‘‘புலவர் மகாதேவன் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்துமாறும், இல்லையெனில் வழக்கை முடித்து வைக்குமாறும் உயர் நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. புலவர் மகாதேவன், சுவாமி ராமானந்தா இருவரையும் தகுந்த ஆதாரங்களுடன் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். விசாரணைக்குப்பின், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

- மு.இராகவன்
படங்கள்: செ.ராபர்ட்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism