ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், கடந்த வாரம் இரண்டு தர்மசங்கடங்களைச் சந்தித்தது. ஒன்று... தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல், ஆர்.கே. நகர் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன், ஜெயலலிதா மருத்துவமனையில் பானம் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டது; இரண்டு... அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, ‘‘ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி நாங்கள் பொய்தான் சொன்னோம்” என்று போட்டுடைத்தது.
தினம் தினம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், இப்போது ஒரு பிரேக் எடுத்துள்ளது. ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என அப்போலோ மருத்துவமனைக்கும், ‘சிகிச்சை தொடர்பான விவரங்களை 15 நாள்களுக்குள் அளிக்க வேண்டும்’ என சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது ஆணையம்.

விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிக்க வந்த பலரும் பரபரப்பு கிளப்பினார்கள். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகராக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் போன்றவர்களும் வந்து போனார்கள்.
இந்தச் சூழலில், ஜெயலலிதா வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது, இந்த விசாரணையின் போக்கையே மாற்றிவிடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை ஆணையத்தின் வரம்பை மீறுபவர்கள்மீது நேரடி நடவடிக்கை எடுக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, வெற்றிவேல்மீது ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். விசாரணை ஆணைய அறிவிக்கை வெளியான பிறகுதான் இதுதொடர்பான ஆவணங்களை ஆணையத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அதை மீறிவிட்டதற்காக வெற்றிவேல்மீது புகார் தரப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணைய விஷயத்தில் ஆரம்பம் முதலே கவனம் செலுத்தி வருபவர், தி.மு.க-வைச் சேர்ந்த டாக்டர் சரவணன். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தோற்ற இவர், அந்தத் தேர்தலில் போஸுக்கு கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா கைரேகையின் நம்பகத்தன்மை குறித்து வழக்குப் போட்டுள்ளார். இதுபற்றி ஆறுமுகசாமி ஆணையத்திலும் அவர் வாக்குமூலம் அளித்தார்.
விசாரணை ஆணையத்தில் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த வேளையில், ‘மருத்துவமனையில் ஜெயலலிதா சுய நினைவுடன்தான் இருந்தார்’ என்பதை நிறுவும் வகையில், தினகரன் தரப்பினரால் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தினகரனும் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய டாக்டர் சரவணனிடம் பேசினோம். ‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, வேட்பாளருக்கு வழங்கப்பட்ட படிவங்களில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என வழக்குத் தொடுத்தேன். வெற்றிபெற்ற வேட்பாளரே தற்போது அந்த வழக்குக்குத் தடை வாங்கியுள்ளார். அடுத்தகட்ட சட்டப்போராட்டத்தை நடத்துவோம். இப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்று வெளியிடப்பட்ட வீடியோ, ஒரிஜினல் இல்லை. ஜெயலலிதாவின் கைரேகை போலவே இதுவும் போலியானது. ஜெயலலிதா 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார். இந்த வீடியோ எந்தத் தேதியில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஜெயலலிதா 2-வது மாடி அறையில் சிகிச்சை பெற்றார். வீடியோவில் ஜன்னலுக்கு வெளியே பூச்செடிகள் தெரிகின்றன. இது சந்தேகத்தை உண்டாக்குகிறது.
கிருமித்தொற்று வரக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள், தலைவர்கள் வரும்போது பார்க்க விடவில்லை. ஆனால், வீடியோவில் அந்த அறை ஒரு முதலமைச்சர் சிகிச்சை பெறும் அறைபோல் இல்லை. அசுத்தமாக உள்ளது. ஜெயலலிதாவின் கை, முழங்கைக்குக் கீழேதான் அசைகிறது. இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. அது அப்போலோவில் எடுக்கப்பட்டது அல்ல. போயஸ் கார்டனில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை மார்ஃபிங் செய்தது போலுள்ளது. இதை ஏன் அப்போதே வெளியிட வில்லை? இப்போது வெளியிட்டாலும் விசாரணை ஆணையத்தில் வழங்கியிருக்கலாமே. இதைத் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் கோரிக்கை வைக்க உள்ளோம். அடுத்து, ஆணையத்தில் ஆஜராகும் சசிகலா, டாக்டர் பிரதாப் ரெட்டி சொல்லும் தகவல்கள் மூலம் இந்த வீடியோவின் உண்மைத் தன்மையும், ஜெயலலிதா சிகிச்சை பற்றிய மர்மமும் விலக வாய்ப்புள்ளது’’ என்றார்.

ஜனவரி 2-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் விசாரணை சூடுபிடிக்கும்.
- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்