Published:Updated:

“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”

“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”

கதறும் மீனவர் குடும்பம்

“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”

கதறும் மீனவர் குடும்பம்

Published:Updated:
“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”

“இதுக்கு முன்னாடி இப்படி ஒரு புயலை நாங்க பாத்ததே இல்ல. புயல் வருதுன்னு முன்னாடியே சொல்லியிருந்தா, ஆம்பளை இல்லாத வீடா எங்க வீடு மாறி இருக்காதே. ஒரே வீட்டுல நாங்க மூணு பேர் விதவைகளா ஆயிட்டோம். எங்க பிள்ளைங்க எல்லாம் அப்பா இல்லாத அநாதைகளா ஆயிட்டாங்க...” என்று கதறுகிறார் குமரி மாவட்டம் தூத்தூர் கிராம மீனவர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த சர்மளம் என்ற இளம்பெண்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் அழுகுரல் இன்னும் அடங்கவில்லை. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 176 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் தரப்பிலோ, 188 மீனவர்களைக் காணவில்லை என்று சொல்கிறார்கள். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர்களைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடும் பணி நடந்தது. ஆனால், காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.மீனவர்களின் 89 விசைப்படகுகளைக் கொண்டு தேடும் பணியும் முடிவடைந்துள்ளது. தேடுதல் பணியில் இருந்த படகுகள் அனைத்தும், கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக கரைக்குத் திரும்பிவிட்டன.

“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”

ஆனால், ஒகி புயல் ஏற்படுத்திய ரணம் இன்னும் ஆறவில்லை. சோகத்திலிருந்து கடற்கரைக் கிராமங்கள் மீளவில்லை. துயரின் உச்சத்தில் இருக்கும் தூத்தூர் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், ஆண்களே இல்லாத துயரம் நேர்ந்துள்ளது. “கடல்ல மீன்பிடிக்கப்போன என்னோட அப்பா கிறிஸ்டோபர், கணவர் மில்டன், அண்ணன் அந்தோனிராஜ் இவங்க மூணு பேருமே காணாமப் போயிட்டாங்க. நான் ஊனமுற்றவள். எனக்கு எல்லாமே என் கணவர்தான். நவம்பர் 22-ம் தேதி தேங்காபட்டினத்துல இருந்து என் கணவரோட மச்சான், அண்ணன் என இவங்களோட 11 பேர் கடலுக்குப் போனாங்க.

எனக்குக் கல்யாணமாகி 10 வருஷமாகுது. என்னை விரும்பி கல்யாணம் பண்ணுனாரு மில்டன். அது, அவங்க குடும்பத்துக்குப் பிடிக்கல. அதுனால, யாரும் எங்ககூட பேசமாட்டாங்க. எனக்கு நாலு பிள்ளைங்க. உதவி செய்ய ஆள் இல்ல. நானும் செத்துப் போய்டலாமானு நினைக்கிறேன். என் கணவர்தான், பிள்ளைங்களுக்கு கடல்ல உள்ள கதைகளைச் சொல்லி ஆசையா சோறு ஊட்டுவாரு. கடலுக்குப்போனா 15 நாள் கழிச்சிதான் வருவார். அவர் கொண்டு வர்றதை வெச்சிதான் சாப்பிடுவோம். அப்பாவ பாக்கணும்னு பிள்ளைங்க அழுதுங்க. என்னால அவங்ககிட்ட என்ன சொல்ல முடியும்?

கடல்ல 60 கடல் மைல் வரைதான் சிக்னல் கிடைக்கும். ஆனா, மீன்பிடிக்க 300 கடல் மைல் வரை போவாங்க. என் கணவர் போன போட், கடல்ல மூழ்கிட்டதா அதைப் பார்த்தவங்க வந்து சொன்னாங்க. ஒகி புயலால் நான், என் அம்மா, என் அண்ணி என ஒரே வீட்டில் மூணு பேர் விதவைகளா ஆயிட்டோம். எங்க குழந்தைகள் அப்பா இல்லாத அநாதைகளாக ஆயிட்டாங்க. பிரதமர் மோடியைச் சந்திச்சோம். எல்லோரும் சொல்றதைத்தான் அவரும் சொன்னார். பல மீனவர்களைக் காப்பாற்ற அரசு தவறிடுச்சு. என் கணவரின் எலும்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கூட எங்களுக்குப் போயிடுச்சு” என்று கதறினார் சர்மளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஒரே வீட்ல மூணுபேர் விதவைகளாயிட்டோம்!”

அந்தோனிராஜின் மனைவி ஜோமி, “வள்ளவிளையில 10 படகுகளும், தூத்தூர்ல 10 படகுகளும் சேர்ந்து காணாமல்போன மீனவர்களைத் தேடப்போனாங்க. அரசாங்கம்தான் தேடுதல்ல சரியா செயல்படல. அரசு தேட முடியாதுனு சொல்லியிருந்தா எங்க மக்களை மீனவர்களே தேடியிருப்பாங்க. திருமணமாகி ஆறு வருஷமாகுது. இரண்டு பிள்ளைங்க. அவர் கொண்டு வந்தால் மட்டும்தான் சாப்பாடு. 15 வயசுல இருந்து கடலுக்குப் போறாரு. இனி அவர் வருவாருனு நம்பிக்கை இழந்துட்டோம். கும்பலா போன படகுகள் புயல்ல சிதறிப்போயிருச்சி. இல்லனா அவங்களே எல்லாரையும் காப்பாற்றியிருப்பாங்க” என்று அழுதார்.

‘‘எனக்கு மூணு பொண்ணுங்க. ஒரு பையன். சின்ன வயசு முதல் என் கணவர் கிறிஸ்டோபர் கடல் தொழிலுக்குப் போய்ட்டு இருந்தாரு. என் மகனும் மருமகனும், என் கணவரும் ஒண்ணாவே தொழிலுக்குப் போவாங்க. இப்பவும் ஒண்ணாவே போய்ட்டாங்க. ஆம்பளைங்க இல்லாத வீடா மாறிட்டுது. பிள்ளைங்க தாத்தாவையும் அப்பாவையும் பாக்க வாசல்லயே காத்திருக்கு. மூணு பேரும் புருஷனை இழந்து நிக்கோமே” என்று அழுதார் ஜெர்மிளம்.

‘கடல்ல போட்டது கரைக்கு வந்து சேரும்’ என்று சொல்வார்கள்.காணாமல் போன மீனவர்களும் அது போல கரை வந்து சேரட்டும்.

- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism