ஒரு சொல்லுக்கும்
இன்னொரு சொல்லுக்கும்
இடையேயான
இடைவெளியில்
ஓர் இலை துளிர்க்கிறது

ஒரு நிழல் அசைகிறது.
மனிதர்களில்
அன்பானவர்கள்
தீயவர்கள்
கொடியவர்கள்
என்பவர் இலர்
அவை
சொற்கள்தாம்
அன்பானவை
தீயவை
அல்லது
கொடியவை.
உன் எதிரியைக் கொல்ல வேண்டுமா
முதலில்
உன் சொற்களைத் தீட்டு.
ஒரு சொல்லிலிருந்து
அதன் பொருளை எடுத்துவிடுவது
ஒரு மனிதனிலிருந்து
அவன் வாழ்வை எடுத்துவிடுவது
போலத்தான்
அதில் ஒன்றுமே இருப்பதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொல் - குருதி
வஞ்சகம்
அதன் சுவை
நமக்கென்று ஒருவருமில்லை
என்பது
நமக்கென்று ஒரு சொல்லுமில்லை
என்பதுதான்.
நாம் சொற்களைக் காதலிக்கிறோம்
சொற்களை மணக்கிறோம்
சொற்களைப் புணர்கிறோம்
சொற்களைப் பெற்றெடுக்கிறோம்.
பிராயச்சித்தமாக
பின்பொரு நாள் அவை நம்மை
ஊர்வலமாக எடுத்துச் சென்று
புதைத்துவிட்டு
பின் திரும்பிப் பார்க்காமல்
சென்று விடுகின்றன.
ஒரு சொல்லைக் கொண்டு
இன்னொரு சொல்லைத்
தாக்கும்போது
இறுதியில் நிகழ்வது
சில அவமானங்கள்
சில தோல்விகள்
சில புரட்சிகள்
சில வெடிகுண்டுத் தாக்குதல்கள்
சில துப்பாக்கிச் சூடுகள்
சில குடியேற்றங்கள்
ஒரு போர்
மற்றும்
சில மரணங்கள்.
மரணப் படுக்கையில்
வீழ்ந்து கிடக்கும் ஒருவனின்
தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்ட கடைசிச் சொல்
அவனின் துயரமல்ல
அது சொல்லின் துயரம்.