Published:Updated:

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி, மணிவண்ணன்

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி, மணிவண்ணன்

Published:Updated:
கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

`இலக்கிய இரட்டையர்கள்’ என அறியப்படும் ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராஜகோபாலனும் தொடக்க கால தமிழ்ச் சிறுகதைகளுக்கு வலுவான அடித்தளத்தை உண்டாக்கியிருக்கின்றனர். கதையை எப்படி

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

நேர்த்தியாகச் சொல்வது என்ற வடிவப் பிரக்ஞை இருவருக்கும் உண்டு. இவர்களின் வடிவார்த்தம், பிறகு எழுதவந்த தலைமுறையினருக்குச் சிறுகதை இலக்கியத்தை இன்னும் வளமுள்ளதாக மாற்ற உதவியது. இருவரின் கதைகளும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. ந.பி., தனது கதைத்தளத்தை அதிகமும் புற உலகப் பிரச்னையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். கு.ப.ரா., தனது கதை உலகத்தை அதிகமும் அக உலகப் பிரச்னையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். இப்படி புறமும் அகமுமாக இவர்களின் கதை உலகங்கள் விரிகின்றன.

கு.ப.ரா-வின் அதிகம் பேசப்படாத எளிய கதைகளில்கூட வாழ்க்கை சார்ந்த அனுபவத்தை மிகச் சரியாக உண்டாக்கிவிடுகிறார். பிரச்னையின் மையப்புள்ளியை வெகு இயல்பாக இனம்கண்டு, மோதல் எப்படிக் கிளைவிட்டுச் செல்கிறது என்பதை, தோய்ந்த கலாசார அனுபவத்திலிருந்து உண்டாக்கிவிடுகிறார். அந்தப் பிரச்னையின் மையம் எளிமையானது; மென்மையானது. ந.பி., புற உலகப் பின்னணியிலிருந்து மனித மன ஊடாட்டங்களைக் கதையின் பிரச்னைகளோடு இயல்பாகப் பிணைக்கிறார். கு.ப.ரா., மானிட உள்ளத்தின் விசித்திரங்களை, மோதல்களை ஆதாரமாகக்கொண்டு மனிதர்களைப் பின்தொடர்கிறார். மனிதர்களிடம் வெளிப்படும் அக உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டு செல்லும்போது, வாசகன் தான் சார்ந்த அனுபவத்தைக் கதையில் நெருக்கமாக உணர்கிறான். பிரச்னையின் உச்சம்வரை நம்பகத்தன்மையைச் சரியாக வெளிப்படுத்திவிட்டு, முடிவு சார்ந்து திரும்பும்போது, அதற்கு நல்ல தீர்வு ஒன்று தர வேண்டும் என விரும்புகிறார் கு.ப.ரா. வாழ்க்கைமீது கொள்ளும் பற்று சார்ந்தது இந்த விருப்பம். வாழ்க்கை அதன் நேர்நிலையில் காணும் கசப்புக்கு மாறாகவும் இருக்கிறது. ஒருவகையில் கு.ப.ரா-வின் விருப்ப நிறைவேற்றம்போலவே சில கதைகள் அமைந்துவிடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

இந்த இடத்தில் இரண்டு வி‌ஷயங்களைச் சொல்ல வேண்டும். அதிகம் பேசப்படாத இந்த எளிய கதைகளின் முக்கால் பங்கு, நமது வாழ்வின் அக நெருக்கடிகளைச் சொல்லிவிட்டு, இறுதிப் பகுதியில் முடிவுக
ளை நம்பிக்கையூட்டும் வகையில் மரபான வாழ்க்கைக்குச் சாதகமாக முடிக்கிறார். இன்றைய வாழ்வின் பொய்மைகள் முன், அவை காலத்தால் பின்நகர்ந்து போய்விடுகின்றன. நேற்றைய வாழ்க்கையில் இருந்த லட்சியம், காருண்யம், இன்றைய வாழ்க்கையில் காலாவதியாகிக் கிடப்பதால், அந்த முடிவுகள் இன்று பொருளற்று எஞ்சுகின்றன. அவை காலத்தை எதிர்த்து முன்நகரும் கதைகளாக இல்லாமல் தோல்வியடைகின்றன. இவ்விடத்தில், புதுமைப்பித்தன் காவியகாலத்து மேன்மைகளைத் தனது கதைகளின் முடிவுகளாக வைக்காததால், இன்றளவும் அவரின் சாதாரண கதைகள்கூட வாசிக்கப் புதிதாக இருக்கின்றன.

மற்றொரு வகையில் பார்த்தால், இன்றுவரை எழுதப்பட்டு வரும் முற்போக்குக் கதைகளைவிட, கு.ப.ராவின் கதைகள் நல்ல முற்போக்கு அம்சத்தை வெளிப்படுத்தும் கதைகளாகவும் இருக்கின்றன. `தாயாரின் திருப்தி’, `ஸ்டுடியோ கதை’, `வாழ்க்கைக் காட்சி’, `தாய்’, `மன்னிப்பு’, `அடி மறந்தால் ஆழம்’, `முன் தலைமுறை’ போன்ற கதைகள் பொய்மைக்கு எதிராகவும் உண்மைக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பும் முற்போக்குத்தன்மையை நன்றாகவே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

மனச்சிடுக்குகளைச் சுயபரிசீலனை செய்யும் `விசாலாக்ஷி’, `காதல் நிலை’, `தவறுகளோ தன்மைகளோ’, `நடுத்தெரு நாகரிகம்’, `சந்திப்பு’, `மனம் வெளுக்க’, `சோகத்தின் முன்னிலையில்’ போன்ற கதைகளில் உள்ளத்தின் விசித்திரங்களை உயிரோட்டமாக மீட்டெடுத்துவிடுகிறார். கணவன் - மனைவி, காதலன் - காதலி, அப்பா - மகள், கடைக்காரன் - கடனாளி, மாமா - மைத்துனன், அண்ணன் - தம்பி, மாமியார் - மருமகள், மாமனார் - மருமகள்... என இவர்களுக்குள் எழும் பூசல்களைக் கதைகளுக்குள் கச்சிதமாக அகப்படுத்தி சுயபரிசீலனை செய்கிறார். பாத்திரங்கள், தவறுகளை உணர்வதாக முடிவை நோக்கித் திரும்பும்போது அவர்களை `நல்ல’ மனிதர்களாகச் செயற்கையாக மாற்றியமைக்கிறார். இதுதான் கதைகளை மேலெழவிடாமல் கீழிறக்குகிறது. காலத்தின் முன் பழையதாகிறது. வாசகனை நல்ல மனிதனாக உருமாற்றுவது என்பது வேறு; கதையில் வரும் மாந்தர்கள் நல்லவர்களாக மாறுவது என்பது வேறு. கு.ப.ரா-வின் இந்தக் கதைகளில் கதை மாந்தர்கள், நல்லவர்களாக மாறுகிறார்கள்; வாசகர்கள் அல்ல. எனினும், இந்தக் கதைகளில் அவர் அணுகியிருக்கும் பிரச்னைகள் உண்மையானவை. முடிவுகளைத் தவிர்த்துக் கதைகளை வாசிக்கும்போது, அகச்சிக்கல்களை அறிந்துகொள்ள அவை ஏதுவாகின்றன. பிரச்னைக்குரிய மையங்களை ஓர் எழுத்தாளனாக சிறுகதை வடிவத்துக்குள் நன்றாக அகப்படுத்தியிருக்கிறார் என்பது முக்கியமான விஷயம். இது படைப்பாளிக்கு இருக்க வேண்டிய அவசியமான காலக்கண்ணோட்டம். அது கு.ப.ராவுக்கு இருந்திருக்கிறது. ந.பி-யைவிட உறவுச் சிக்கல்களைப் பண்பாட்டுத் தளத்தின் ஓட்டத்திலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் கு.ப.ரா. இந்த வகையில் பிராமணர்களின் உலகை அசலாகக் கொண்டுவந்துள்ளார். சிறுகதைக்கு உரிய இந்த விதமான லட்சணங்கள் கதைகளில் கூடிவந்திருந்தாலும், இன்று ஏன் அவை பின்தங்குகின்றன எனப் பார்க்கும்போது, கு.ப.ரா-வின் கதைகளில் பேசப்படும் பிரச்னைப்பாடுகள் இன்று சாதாரணமான; கனமற்றவையாகிவிட்டன. கணவன் - மனைவி, மாமியார் - மருமகள் உரசல் என்பதெல்லாம் சிறுகதையின் சிறு பகுதிகளே. இந்த உரசல்களைத் தாண்டி கனமான விஷயங்கள் விவாதிக்கப்படவில்லை அல்லது அதைத் தொடவில்லை எனலாம். காலத்தால் பின்தங்கும் இந்தக் கதைகளிலும் நுட்பமான கண்ணிகளை இனம்காட்டியிருக்கிறார் கு.ப.ரா.

தழில் பிரசுரமான கு.ப.ரா-வின் முதல் கதை `விசாலாக்ஷி’, 1934-ம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. இளவயது நண்பர்கள் இருவர், முன்னிரவு தொடங்க காவிரி மணல்படுகைக்குச் செல்கின்றனர். ஊரில் அன்று காமதகன விழா நடக்கிறது. ஊருக்கு வெளியே அமைதியாக அமர்ந்து, காமதகனம் பற்றியும், இறந்துபோன ஒரு பெண்ணை எரியூட்டும் காட்சி பற்றியும் பேசுகின்றனர். இவர்களின் பேச்சினிடையே 40 வயதைக் கடந்த, தாடியுடன் வரும் பரதேசி போன்ற ஒருவர், “இங்கு அருகில் அமரலாமா?” என்று கேட்கிறார். இளைஞர்கள், “அமருங்கள்” என்று சொல்கின்றனர்.

வந்தவர், ஒரு குடும்பக் கதையைச் சொல்கிறார். அம்மா - மகன் - மனைவி மூவர் பற்றிய கதை அது. செய்யும் வேலையின் நிமித்தம் மாமியாருக்கும் மருமகளுக்கும் உரசல்கள் எழுந்துகொண்டே

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

இருக்கின்றன. அம்மா - மனைவி இருவரின் முறையிடல்களுக்கு எந்தப் பக்கம் சார்ந்து பேசுவது எனத் திண்டாடுகிறான் மகன். ஒருநாள் எண்ணெய்ப் பாத்திரத்தை உறியிலிருந்து எடுக்கும்போது, பால் பாத்திரம் தவறிக் கீழே விழுந்துவிடுகிறது. மாமியாரின் கோபத்துக்குப் பயந்து பூனை தட்டிவிட்டதாகச் சொல்கிறாள் மருமகள். இதை நம்ப மறுத்து மாமியார் வம்பிழுக்கிறாள். கோர்ட்டில் சரியாக வழக்காடாது தோல்வியுடன் வருகிறான் மகன். அம்மா, அவன் வந்ததும் வத்திவைக்கிறாள். அடுக்களைக்குள் நுழைந்தவன், மனைவியை அடிக்கிறான். அவள் திடுக்கென எழுந்ததால், கை தவறி எட்டு மாதக் கர்ப்பிணியின் வயிற்றில் அடிபட்டுவிடுகிறது. சண்டையைத் தூண்டிவிட்ட அம்மாவே ஓடிவந்து, “கர்ப்பிணியை அடிக்கலாமா?” என்று தடுக்கிறாள். வலி கண்டதால் அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கின்றனர். ஜன்னிகண்டு இறக்கும் தறுவாயில், `கணவன் நல்லவன்; சந்தர்ப்பம் இப்படியாக்கிவிட்டது’ எனத் தேற்றுகிறாள் மனைவி. இந்தக் கதையைச் சொல்பவன்தான் அந்தக் கணவன் (அதாவது பரதேசி) எனக் கதை முடிகிறது.

‘உறியிலிருந்த பாலை பூனை தட்டிவிட்டது’ என்பதான பொய் - பூதாகாரமாகும் பிரச்னைக்குரிய இடம், உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கனமான ஒன்றாக இல்லை. மாமியார், `கர்ப்பிணியை அடிக்கலாமா?!’ என்று அடுத்த நிமிடமே மருமகள் பக்கம் சாய்வது இயல்பு மனப்போக்குக்கு எதிரானது. அவனின்  அந்த அடியைக்கூட தாய் உள்ளூர விரும்பியிருக்கக்கூடும். தவறுதலாகப் அடிபட்டவுடன் பிரசவிக்க வேண்டிய சூழலும் பொருத்தமாக இல்லை. கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். கதையின் முடிவு சார்ந்து திரும்பும்போது, கணவன் நல்லவன் என விசாலாக்ஷி நெகிழ்வதாகக் காட்டுகிறார். அவளுக்கு `கணவன், தீர யோசிக்காமல் அம்மா பக்கம் நின்றாரே!’ என வருத்தம் இயல்பில் இருந்திருக்கும். அது கதையில் வெளிப்படவில்லை. ஒரு நல்ல கதை, இதுபோன்ற எளிய காரணங்களால் நம்பகத்தன்மையை இழக்கிறது. அதன் வீச்சைக் கீழிறக்குகிறது. ஆனால், இப்படியான கதைகளில்கூட கு.ப.ரா., வாழ்வின் விசித்திரக் கோலங்களை விவரிப்பதின் வழியே வாழ்வின் சாராம்சத்தை நுட்பமான மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றும் வாசிப்பில் ஒரு புது அனுபவத்தைத் தருகிறது.

காவிரி ஆற்றுமணலில் அமரும் இரு இளைஞர்கள், சுடுகாட்டில் இளம்பெண் எரியூட்டப்படுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டவள், என்ன காரணம் என அலசப்படவில்லை. `குடும்பப் பிரச்னையாக’ இருக்கும் என்ற வார்த்தைகள் மட்டும் பேச்சிடையே வருகின்றன. இது தொடர்பாக ஓர் இளைஞனிடம் ஒரு வரி வருகிறது.  “எனக்கென்னவோ நமது குடும்ப வாழ்க்கை என்பது, பெரிய சிறைச்சாலை எனத் தோன்றுகிறது” என்கிறான். அந்தப் பெண்ணின் மரணத்துக்கான சொல்லப்படாத குடும்ப நெருக்கடி, அந்த ஒற்றை வரியில் விளங்கிவிடுகிறது. மனைவியின் இறப்பைப் பற்றிய கதையைச் சொன்ன (விசுவநாதன்) மகானின் குடும்ப வாழ்வும், ஒரு சிறைச்சாலையின் அழுத்தத்தைத் கொண்டது என்பதைக் குறிக்கவும் செய்கிறது.

ஊருக்குள் காமதகன விழா நடக்கிறது. காமனை, சிவன் எரித்தான். எரிந்து சாம்பலான காமனை, இன்றைய வாழ்வுடன் பிணைத்து “சிவனின் சினம் உபயோகமில்லை” என்கிறார். ‘எரிக்கப்பட்டவனே உலகத்தை இந்த ஆட்டு ஆட்டுகிறான்’ என்று ஒரு பாத்திரம் சொல்கிறது. நம் உடலிலுள்ள காம, குரோத, வன்மங்களை எத்தனை முறை எதிர்த்தாலும் மீண்டும் உயிர்பெற்று நம்மை ஆட்டிப்படைப்பதைச் சூசகமாகச் சொல்கிறார். அத்துடன் விசாலாக்ஷியின் கணவன் விசுவநாதன், (சிவன் பெயர்) தான் செய்த கொடூரத்தை இவர்கள் முன் சொல்லி, அவனது பிழையை எரிக்கிறான். விசாலாக்ஷி விசாலமான மனம் படைத்தவள் எனக் கதையின் வழி அறியவும் செய்கிறோம். மகனுக்கு உகந்த மணமகளை, தாய் `வடமக் கூட்டத்தையே அலசி ஆராய்ந்து பொறுக்கி எடுத்து’தான் கட்டிவைக்கிறாள். ஆனால், அவளுக்கும் மருமகளுக்கும் ஒத்துப்போக முடிவதில்லை. வாழ்க்கை காட்டும் வேடிக்கை இது.

இந்தக் குடும்பக் கட்டு, தன் கணவனுடன் - அந்தரங்கத்துடன் தாராளமாகப் பழகவிட மறுப்பதை விசாலாக்ஷி சொல்கிறாள். அதற்கு `குடும்பக் கட்டுப்பாடுதான் அன்பைத் தீபோல வளர்க்கும்’ என்று கவிகாளிதாசனைத் துணைக்கு இழுக்கிறான் கணவன். சுதந்திரம் - சுதந்திரமின்மைக்கான மனமோதல்களைக் குடும்ப அமைப்பு எப்படிப் பார்க்கிறது என்பதை, இருவரின் பார்வைகளும் வெளிப்படுத்துகின்றன.

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

இளம் பெண்ணும் ஆணும் குடும்ப உறவுக்குள் நுழைய இருக்கிறார்கள். அது பற்றிய பருவத்தை மொழிக்குள் வசப்படுத்துகிறார் கு.ப.ரா. `அந்த யெளவனப் பருவத்து உணர்ச்சிகளை நீங்கள் நன்றாக யூகிக்கலாம். ஒருவரையொருவர் பார்க்க ஏங்குவதிலும், பார்த்து ஏங்குவதிலும், பார்க்காமல் ஏங்குவதிலும் காலம் சென்றது’ என விசுவநாதன் வாயிலாக அந்த மனநிலையைத் துல்லியப்படுத்துகிறார்.

மாமியார் - மருமகள் மோதல் என்பது, தென்னிந்தியக் குடும்ப வாழ்வில் பிரிக்க முடியாதது. இதை ஒரு `துவந்தபாவம்’, அதாவது இரட்டைத்தன்மைகொண்ட தத்துவமாக கு.ப.ரா பார்க்கிறார். அவரே ``இரவு - பகல், சுக - துக்கம் என்ற எதிரிடைகள் இருப்பதுபோல மாமியார் - மருமகள் என்பது இரண்டு எதிரிணைகள்’’ என்கிறார்.

குடும்பப் பிரச்னையின் மையத்தையே அற்புதமான படிமமாக்கி மொழிக்குள் கொண்டுவந்திருக்கிறார்; அதுவும் தனது முதல் கதையிலேயே. இந்தப் படிமத்தை ஓர் ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தாளன் எளிதில் உருவாக்கிவிட முடியாது. கு.ப.ரா-வின் கதைகளின் பலமே இந்தப் பண்பாட்டிழைகளின் பின்னல்களால்தான் அமைந்திருக்கின்றன. முதல் கதையிலேயே கு.ப.ரா-விடம் ஓர் எழுத்தாளனுக்குரிய நுட்பமான அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

`இந்த மாமியார் - மருமகள் கொத்தல்கள் தீராதா?!’ என எல்லாக் கணவன்மார்களும்தான் நினைக்கின்றனர். கு.ப.ரா எழுதுகிறார், `இருவருடைய இதயங்களையும் ஒன்றுசேர்க்கும் இரவு வருமா என ஏங்கிய காலம் போய், நரக வேதனையைப் போக்கும் பகல் போகிறதே என்ற காலம் வந்தது’ என்று. சதா சச்சரவு நடக்கும் வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் மனிதன் படும் உள்ளத் தத்தளிப்பு எத்தகையது என்று காட்டுகிறார்.
`விசாலாக்ஷி’ கதை, சில பலவீனங்களைக் கொண்டிருப்பதை முன்சுட்டினேன். ஆனால், இந்தக் கதைக்குள் வாழ்க்கை பற்றிய விசாரம் நுட்பமான தகவல்களுடன் ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே, தோல்வியுற்ற கதைகளிலும் ஓர் எழுத்தாளனின் தனித்துவப் பார்வை துலங்கவே செய்கிறது. அந்தக் கதைகளைப் படிப்பதும் முக்கியமான ஓர் அனுபவம்தான். எனவே, இந்தக் கதைகளிலும் முக்கியத்துவம் இருக்கவே செய்கிறது.

ந.பி. -கு.ப.ரா இருவரின் ஒட்டுமொத்தக் கதைகளிலும் தொடக்ககால - இடைக்கால - இறுதிக்கால எழுத்துகளில் கலைநுட்பம் சார்ந்த வளர்ச்சி படிப்படியாக மாற்றமுற்றதாகக் கொள்ள முடியவில்லை. மிகச் சிறுசிறு மாற்றங்கள் கூடிவந்திருக்கலாம். அவை, தொழில்நுட்பம் சார்ந்தவை - பார்வை சார்ந்தவை அல்ல. இருவரும் சிறுகதை எழுத வரும்போது 32 - 33 வயதுள்ளவர்களாக இருந்துள்ளனர். ந.பி தனது 25-வது வயதில் சில சிறுகதைகளும், கு.ப.ரா அதே வயதில் சில கவிதைகளும் எழுதியுள்ளார். என்றாலும், அவை அவர்களுடைய தொடக்கமல்ல. சிறுகதை ஆசிரியர்களாக இருவரும் இயங்கத் தொடங்கியது 1934-ம் ஆண்டுக்குப் பிறகுதான். அந்த வயதுக்குரிய பக்குவம் இருவர் கதைகளிலும் தொடக்கம் முதலே வெளிப்பட்டுவிட்டது.

`காதல் நிலை’ என்றொரு கதையை 1939-ம் ஆண்டு எழுதியிருக்கிறார் கு.பரா. நவமணி, திருமணமான பெண். அவள், தன் மேற்படிப்பு ஆசிரியராக வீட்டுக்கு வரும் சுந்தரம்மீது ஆசைகொள்கிறாள். இந்த அடிமன ஆசையை இருவரும் விவாதிப்பதுதான் கதை. கதையின் இறுதி உரையாடல் இப்படி முடிகிறது.

``காதலும், உண்மையைப்போலவும் அழகைப்போலவும் ஒரு கற்பனைதான்.’’

``உடல் இன்பம் இயற்கையானதுதான். அது நீடித்த சுகமளிக்காது.’’

``பிறகு என்னதான் வாழ்க்கை?’’

``சுக-துக்கம் கலந்ததுதான் வாழ்க்கை. வேறொன்றுமில்லை’’

கதை முடிகிறது. கதைகளில் எழும் உரையாடல்களில் மனித ஆழ்மனங்களைத் தொட்டிருக்கிறார் கு.ப.ரா. அதற்காகவேணும் அவரது கதைகளைப் படிக்க வேண்டும்.

காதல் என்பது வாழ்க்கைக்குள் தரைதட்டி உழலத் தொடங்கும்போது, பிக்கல் பிடுங்கல்கள் மெள்ள மெள்ள அதை வெளியே தள்ளிவிடும் என்பதை யதார்த்தத்தின் முகமாகக் காட்ட விழைகிறார். ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ எத்தனை முறை காதல் தோன்றினாலும், அது ஒரு ரொமான்டிக்கான மனநிலைதான். வாழத் தொடங்கும்போது காதலின் கற்பனைச் சித்திரம் காணாமல் போய்விடும் என்ற உண்மையைச் சொல்கிறது கதை.

சதைப்பற்றை நாடாது, உள்ளத்தின் ப்ரியத்தை மட்டுமே நாடும்போது, மனம் உன்னத நிலையை எட்டுகிறது. கு.ப.ரா `நூர் உன்னிஸா’ என்ற முதல் கதையிலேயே அந்த உணர்வின் எல்லையைத் தொட்டிருக்கிறார். களங்கமில்லாத பாலியப் பருவம் அதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

எல்லாக் கதைகளிலும் பிரச்னைக்குரிய பகுதியை வளர்த்துக்கொண்டு செல்லும்போது, அதில் மனிதர்களின் செயல்களையும் சரியாகப் பிணைத்துக்கொண்டு செல்கிறார் கு.ப.ரா. இது இவருக்குக் கைவந்த கலை. ஆனால், நெருக்கடியின் மையம் உக்கிரமானதாக இருப்பதில்லை; எளிய உரசல்களாக இருக்கின்றன. காலத்தின் முன் இந்தக் கதைகள் பின்தங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். இருப்பினும், அந்தக் கதைகளிலும்கூட கு.ப.ரா-வின் ஆளுமை புதைந்துள்ளதை  வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முந்தைய கதைகளைக் குறிப்பிட்டேன்.

கணவனை இழந்த கைம்பெண்ணின் வாழ்க்கை ஆதாரத்துக்காக, அவளுடைய தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து உரிய சொத்தைப் பெற்றுத் தர விரும்புகிறார். மகள் பிடிவாதமாக மறுக்கிறாள். அப்படி மறுத்துவந்த மகள் இடையில், ``அப்பா, அவர் இறந்த துக்கத்தை நான் மறந்துவிட்டேன். இப்போது நான் இருப்பதுதான் துக்கமாக இருக்கிறது” என்கிறாள். பெண்ணின் வலியைக் கு.ப.ரா-வால் இப்படி இரண்டு வரிகளில் கொண்டுவந்துவிட முடிகிறது.

இதேபோன்ற ஒரு கதையைப் புதுமைப்பித்தனும் எழுதியிருக்கிறார். வாழ்வை இழந்த கைம்பெண் ஒருத்தி, தம்பியின் திருமண நிகழ்வில் தனது பழைய வாழ்வின் ஞாபகங்களை, இன்றைய துயரத்தை நினைத்து வதைகிறாள். அவள் சந்தோஷமாக இருப்பதாக அவளின் தகப்பனார் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறார். கைம்பெண் என்ற நிலை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அழுத்த அழுத்த... நெஞ்சில் ஊசியால் குத்தி தற்சாவைத் தேர்கிறாள். ரத்தப் படலத்தினிடையே துடிக்கும் மகளைக் கண்டு பதறித் தூக்க வருகிறார் அப்பா. சாவதற்கு முன் மகள் சொல்கிறாள், ``இந்த ரத்தத்தை அள்ளி அந்தப் பிரமன் முகத்தில் பூசுங்கோ.” இந்தக் கதையின் தலைப்பு `வழி’. வேதனையை வெளியேற்ற இதுதான் அவளுக்கு ஒரே வழியாகத் தோன்றுகிறது. கைம்பெண் ஒருத்தியின் உள்ளக்குமுறலைப் பண்பாட்டுத் தளத்தில்வைத்து இதயம் நொறுங்கும்படி புதுமைப்பித்தன் சொல்கிறார். இதுதான் கு.ப.ரா - புதுமைப்பித்தன் இருவரின் இரு வேறு கலைப்பார்வை.

கு.ப.ரா-வின் கதை உலகை, நான்கு தளங்களில் வகுத்துவிடலாம் எனத் தோன்றுகிறது. குடும்ப உறவுகளில் ஏற்படும் முரண்களில் உரசல்களில், அவர்கள் தங்களின் ஆசாபாசங்களை வெளிப்படுத்தி
விடும் தருணங்களை, காமமும் காதலும் மனுஷிகளிடமும் மனிதர்களிடமும் உள்ளே கிடந்து அழுத்தம் பெறப்பெற அதன் உச்சத்தில் வெளிப்படும் விசித்திரத் தருணங்களை, பொய்மைக்கும் அதிகாரத்
துக்கும் எதிராக - உண்மைக்கும் நேசத்துக்கும் தடம் சமைக்கிற பார்வைகளை, மாந்தர்களின் தனித்துவமான வெளிப்பாடுகளை எட்ட நின்று கண்ட விவசாயக் குடிகளின் உழைப்பின் வாசனைகளைக் கதைகளாக்கியிருக்கிறார். இந்த நான்கு தளங்களிலும் சிறந்த கதைகளைப் படைத்திருக்கிறார். இவையெல்லாம் ஒரு வசதிக்கான பகுப்புதான். கு.ப.ரா-வின் உள்ளம் என்பது பெண்களின் வேதனையில்தான் எப்போதும் ஓங்கி ஒலிக்கிறது.

குடும்ப அமைப்பில், ஆணாதிக்க அழுத்தத்தில் அழிந்துகிடக்கும் பெண்களின் இதயக் குமுறல்களைக் கீறிவிட்டு, வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும் வேதனைமிக்க உணர்ச்சிகளைக் கவித்துவ மொழியால் வசப்படுத்தியிருக்கிறார் கு.ப.ரா. சொற்கள், நம் இதயத்தில் காண்டாமணிபோல இடித்து ஒலியெழுப்பியபடியே இருக்கின்றன. சில சமயம் படீரென சுழன்றடித்த சாட்டை ஒலியைக் கிளப்புகிறது. ஒடுக்கப்பட்ட இளம் பிராமணப் பெண்களின் கொதிப்புகளை மிச்சம் மீதி வைக்காமல் அள்ளி அள்ளிப் படைத்திருப்பதில்தான் கு.ப.ரா-வின் ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது. `சிறிது வெளிச்சம்’, `விடியுமா?’, `கனகாம்பரம்’, `ஆற்றாமை’, `குரலும் பதிலும்’, `திரை’ போன்ற கதைகளில் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார். எந்த ஒளிவுமறைவையும் போத்திக்கொள்ளாது பெண்ணின் சுதந்திரக் குரலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார். எனினும், கைம்பெண்களின் வேதனைகளுக்கு ஒரு சுதந்திரத் தேர்வுக்கான இடம் நோக்கி கு.ப.ரா-வால் கதைகளை நகர்த்த முடியவில்லை.

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

ந.பிச்சமூர்த்தியாலும் முடியவில்லை. அது புதுமைப்பித்தனால் முடிந்தது எனச் சொல்வதால், கு.ப.ரா குறைபட்டவராகிவிட மாட்டார். கு.ப.ரா., மரபை உடைக்காமல் அல்லது உடைய மறுக்கும் மரபினுள்ளே இருக்கும் வேதனையை வெளிப்படுத்தினார். அந்தக் காலம் ஜெயகாந்தன் வாழ்ந்த காலமல்ல என்பதைக் கணக்கில்கொண்டால் போதுமானது. மீறலுக்கான காலத்தைப் புதுமைப்பித்தன் தன் கதைகளின் வழியே கனியவைத்துக்கொண்டிருந்தார். ஜெயகாந்தன் தன் காலத்தில் அதை அறுவடை செய்தார். கு.ப.ரா., மீறலுக்கான கொதிப்பின் சாட்சியங்களைத் தன் கதைகளில் முன்வைத்தார். கு.ப.ரா, பெண்ணின் உச்சபட்சமான மூர்க்கத்தையும், காதலையும், பெண்ணின் வேதனையையும் `வீரம்மாளின் காளை’, `நூர் உன்னிஸா’, `சிறிது வெளிச்சம்’ முதலிய கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். சொற்களைக் கனவாக அள்ளி வீசிய `சிறிது வெளிச்சம்’ கதாநாயகியை வாசகர்கள் நேரடியாகக் கதையில் படிப்பதே உசிதமானது.

சிக்கலின் ஊற்றுக்கண் திறந்ததும் அதுவரை நசுக்கப்பட்டுவந்த வேதனையின் குரல்கள் கொதித்துவருகின்றன. அவை அறிவார்ந்த சிந்தனையின் குரல்களாக இருப்பதில்லை. வலிமிக்க இதயத்தின் குரல்களாக இருக்கின்றன. கு.ப.ரா-விடம் இருக்கும் கவிமனம், இந்தக் குரல்களை ஒளிமிக்க மொழியாக; கயமையைக் குத்திக் கிழிக்கும் வாளாக; நெஞ்சில் விழுந்து கனலும் சொல்லாகப் பிறப்பித்துவிடுகிறது. பெண்கள் பக்கம் நின்று அவர்களின் குமுறல்களை மனத்தடையில்லாமல் வெளிப்படுத்திக்கொண்ட ஊடக எதிரொலியாக நிற்கிறார் கு.ப.ரா. இந்த அம்சத்தாலேயே தன்னியல்போடு மலர்ந்த கதைகளாக அவை அமைந்துவிடுகின்றன.உறைந்திருந்த பிரச்னைகள் அக-புற மோதல்களில் சூடேறி சூடேறி, வேதனைகளாக இதயத்தில் பீறிடுகின்றன. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முதன்முதலில் சுயத்துவம்மிக்க பெண்களின் குரல்களை, சூடேறிய கதைகளில் காண முடிகிறது. மீறல்கள் இல்லாமல் இருக்கலாம். (சிறிது வெளிச்சம், விபரீதக் காதல் விதிவிலக்குகள்) அதேசமயம், ஒடுக்கப்பட்ட பெண்களின் உரத்த குரலுக்கு எல்லையேதும் வகுத்துக்கொள்ளவில்லை, அவர்கள் பேசுவதற்கான வெளியைக் கு.ப.ரா தனது கதைகளில் அகல விரித்தார்.

ளியவர்கள்மீது ப்ரியமும் அவர்களை அதிகாரம் வீழ்த்துகிறபோது கைகொடுக்கும் தார்மிகமும்கொண்ட உள்ளம் அவருடையது. இதன் அடிப்படையில்தான் கு.ப.ரா-வின் முற்போக்குக் கதைகள் அமைந்திருக்கின்றன. `பண்ணைச் செங்கான்’, `அர்ச்சனை ரூபாய்’ போன்ற கதைகளைப் படித்தால் இது புரியும்.

பழங்கால அரசப் பின்னணியில் மனிதர்களின் பிறழ்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றொருவிதத்தில், கொண்டாட்டத்துக்கு உரிய இளவரச வாழ்வைத் துறந்து, யதார்த்த உலகைக் கண்ட புத்தரின் செயலைக்கொண்டு சில கதைகள் எழுதியிருக்கிறார். ஏழைகளின் துயரம் கண்டு திகில் அடைந்த புத்தரின் மனமும், பிறகு அவர் தேர்ந்துகொண்ட பாதையும் கு.ப.ரா-வைப் பலமாகப் பாதித்திருக்கின்றன. இந்த மனப்போக்குக்கான காரணங்களை ஒரு படைப்பாளியாக மனவெழுச்சியோடு தேடிப் பயணப்பட்டிருக்கிறார். புத்தர் பற்றி இவர் எழுதிய எல்லாக் கதைகளும் நன்றாகவே உருவாகியிருக்கின்றன. `இருளிலிருந்து’, `மகாபோதம்’ இவற்றில் மிகச் சிறப்பானவை.

ஜெயகாந்தன் `ரிஷிமூலம்’ குறுநாவல் வழியாக அறுபதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். கலைநுட்பம் கூடிவராத செய்திக் கதை அது. ஆனால், தாய் - மகன் உறவில் ஏற்படும் இதே சந்தர்ப்பத்தை எடுத்து, அசாத்தியமான கதையாக பல ஆண்டுகளுக்கு முன்னரே கு.ப.ரா எழுதி சாதித்திருக்கிறார். அசோக சக்கரவர்த்தியின் கடைசி மனைவியான திஷ்யரஷைக்கொண்டு, பிறழ்வெண்ணத்தின் மூர்க்கத்தை `விபரீதக் காதல்’ எனும் கதையில் காட்டியிருக்கிறார். இஸ்லாமிய அரசச் சூழலுக்குள் ஓர் இந்துக் கவிக்கு ஏற்படும் காதல் பெருக்கைத் துணிவின் உச்சமாக `கவி வேண்டிய பரிசு’ கதையில் கொண்டுவந்திருக்கிறார். அனுமானிக்க முடியாத தருணங்களில் காமம் கண் விழிப்பதும் - அது பிரச்னைக்குள்ளாவதையும் `புரியும் கதை’, `பெண் மனம்’, `திரை’, `மோகினி மாயை’ போன்ற கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிராமண எழுத்தாளர்கள் கோலோச்சிய முப்பதுகளில், விவசாயம் குறித்த கதைகளையும் பலர் எழுதினர். எந்தவித அனுபவமும் கூடிவராத போக்கான ஜோடனைக் கதைகளாக அவை இருந்தன. அதே காலத்தில், விவசாயியாக அல்லாமல் விவசாயத்தை எட்ட நின்று பார்த்த நிலையில் குடியானவர்களின் வாசனையடிக்கின்ற `பண்ணைச் செங்கான்’, `வயது வந்துவிட்டது’ முதலிய சிறந்த கதைகளை கு.ப.ரா. எழுதியுள்ளார் இந்தக் கதைகளோடு `அடிமைப்பயல்’, `மின்னல் கலை’, `வாழ்க்கைக் காட்சி’ போன்ற கதைகளைப் படித்தால், கு.ப.ரா அருகில் நின்று அறிந்த ஒரு குடியானவ குடும்பத்தின் ஐந்து சித்திரங்கள்போல அவை தோன்றும். கு.ப.ரா-வின் எழுத்தில் கும்பகோணத்து மண் ஒட்டியிருப்பது தெரியவரும். `நட்ட வயல்களில் நாற்று வெளிறிப்போய் இருந்தன’ என்று அவர் எழுதியது உடனே என் ஞாபகத்துக்கு வருகிறது.

கொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்

இவரின் பெரும்பாலான கதைகளின் மையம், கருத்தியல் சார்ந்தது அல்ல; மூர்க்கத்தனம் சார்ந்தது அல்ல; குடும்ப உறவுகளில் ஆண் - பெண், பெண் - பெண் இவர்களிடையே ஏற்படும் உரசல் சார்ந்தவை; மோதல் சார்ந்தவை. சக மனுஷியாக மதிக்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சியும் சுயமரியாதைக்கான ஏக்கமும் இந்த மோதலில் ஒலிக்கின்றன. அவை பெண்களின் அசலான குரல்கள். ஒரு படைப்பாளியாக கு.ப.ரா இயங்கிய காலம் வெறும் பத்தே ஆண்டுகள்தான் (1934 - 1944). அதில் அவர் 95 கதைகள் வரை எழுதியிருக்கிறார். அதிலும் சாவு அவரின் வீட்டு வாசலில் வந்து காத்திருக்கத் தொடங்கிய கடைசி இரண்டு ஆண்டுகளில் கதைகளை அவசரஅவசரமாக எழுதியிருக்கிறார். இந்த அவகாசத்தில் 10 மிகச் சிறந்த கதைகளையும், 5 சிறந்த கதைகளையும், 5 தரமான கதைகளையும் எழுதியிருக்கிறார். `ராஜத்தின் காதல்’, `உயிரின் அழைப்பு’, `எதிரொலி’, `எதிரொலி (2)’, `அடிமறந்தால் ஆழம்’, `முன்தலைமுறை’, `மூன்று உள்ளங்கள்’, `ஆமிர பாலி’ போன்றவை பெரிதும் பேசப்பட்ட கதைகள்.

இந்தக் கதைகளில் கூடிவந்திருக்கும் கவித்துவப் படிமங்கள்தான் கு.ப.ரா-வின் எழுத்தாற்றலை உயர்த்துகின்றன. ஒரு படைப்பாளியாக மிளிரும் தருணங்கள் இவை என எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

`கவி வேண்டிய பரிசு’ கதையில், பாதுஷாவின் மகளின் வனப்பைக் கண்டதும் கவி தன் மனதைப் பறிகொடுக்கிறான். அவள் ஒரு கையில் சர்ப்பத்தையும் ஒரு கையில் செம்பையும் ஏந்தி வரும்போது, திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தக் கலசத்துடனும் ஒரு கையில் விஷபானத்துடனும் சௌந்தர்ய விஸ்வரூபமாகத் தோன்றும் மோகினிபோல் காட்சியளிக்கிறாள் அவள். திரும்பிச் செல்லும்போது, `இவள் யார்? தான் கொண்டுபோகும் கும்பத்தில் உலகத்தாரின் உள்ளங்கள் அனைத்தையும் பிடித்து அடைத்துக்கொண்டு போவதுபோலத் தோன்றுகிறதே’ என்று கவி எண்ணுவதாகப் படிமமாக்குகிறார்.

புத்தன், வீட்டைவிட்டுக் கிளம்ப நினைக்கிறான் (இருளிலிருந்து). அந்தக் கணத்தை `அவருடைய இன்பக் கனவின் இறுதியில் ஒரு சலிப்பும் ஓய்ச்சலும் உணர்ச்சி சாவும் ஏற்பட்டதைக் கண்டதுமே அவருக்கும் வெளியுலகத்துக்கும் நடுவே இருந்த திரையில் ஓட்டை விழுந்துவிட்டது. அவ்வளவுதான். அதன் வழியாக வாழ்க்கையின் துன்பப் புயல் புகுந்து பாய்ந்து அவரைத் தாக்கிற்று’, `அந்த ஒளி உலகத்துடன் தனக்கு இருந்த பற்று அந்த நிமிஷம் அறுபட்டு விழுவதைக் கண்டார். முன்னே கிடந்த முடிவற்ற இருள் அவரைக் கூவி அழைத்தது. பொங்கி வழியும் அலைகளைப்போல’ என, துல்லியமான மொழியில் புத்தனின் மனதைப் படம்பிடிக்கிறார்.

‘அர்ச்சனை ரூபாய்’ கதையில் மகனுக்குக் கடுமையான குளிர் ஜுரம். பிழைப்பது சந்தேகத்திற்குரியதாகிறது. விடிந்தால்தான் உறுதி சொல்ல முடியும் என்கிறார் டாக்டர். தகப்பன் இரவெல்லாம் தூங்காமல் அவ்வப்போது ஒத்தடம் தருகிறான். இரவு நீள்கிறது. அச்சம் விட்டபாடில்லை. இந்தச் சூழ்நிலையில் விடியப் போகிற நேரம் வருகிறது. ‘கடைசியாக அடுத்த வீட்டு வாசலில் சாணி தெளிக்கும் சத்தம் பாலுவின் காதில் கேட்டது. சாதாரணமான காலங்களில் அப்பேற்பட்ட சில்லறைச் சம்பவங்கள் நமது கவனத்திற்கே வருவதில்லை. மிகவும் அற்பமான சில தினசரி நிகழ்ச்சிகள், சில நெருக்கடிக் காலங்களில் மிகவும் முக்கியமாகிவிடுகின்றன. நாம் எதிர்பாராத வகையில் விநோதமாகவோ, உதவியாகவோ இருக்கின்றன. அந்த சாணித் தெளிக்கிற சத்தம் அன்று அவன் காதில் உயிரைக்கொடுக்கும் நாதமாகக் கேட்டது, பிரக்ஞையற்று படுக்கையில் கிடந்த உடம்பே உயிர்ச் சின்னத்துடன் புரண்டு கொடுத்த சத்தம்போல் இருந்தது, அவனுக்கு உயிர் வந்தது. ‘அப்பாடா!’ என்று ஆவலுடன் மூச்சுவிட்டான்.’ - விடிகாலைச் சூழல் உயிர்பெற்று எழுவதை, மரணத்தோடு போராடியவனின் உணர்விலிருந்து எழுத்தோவியம் ஆக்கியிருக்கிறார் கு.ப.ரா.

கு.ப.ரா தன்னை மறந்து கரைந்து எழுதிய கதைகளில் எல்லாம் கவிமனம் பொங்கித் ததும்புகின்றன. நான் நிறையக் குறித்து வைத்திருக்கிறேன். வாசகர்கள் படித்துக் கண்டடையட்டும். ‘காங்கரின்’ நோய் முற்றி 42 வயதில் கு.ப.ரா. இறந்தார். சாகக்கூடிய வயதா அது? இன்னும் பத்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால், தனது கலையில் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் எழுத்தாளனுக்கு சாவு என்பது சகஜம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism