Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

ரையாற்றும்போது தலைவர்கள் உளறுவது சகஜம்தானே. ஈக்வடோரியல் கினியின் முதல் அதிபரான ஃபிரான்சிஸ்கோவும் சில முறை உளறியிருக்கிறார்.அதில் சர்வதேசத் தர உளறல் ஒன்றும் உண்டு. ‘அடால்ஃப் ஹிட்லர், ஆப்பிரிக்காவின் மீட்பர்’ என்றார் ஓர் உரையில். ஏன் அப்படிச் சொன்னார் என்பதைவிட, ஹிட்லரைவிடவும் கொடூரமான சர்வாதிகாரியாக ஃபிரான்சிஸ்கோ இருந்தார் என்ற உண்மையே இங்கே முக்கியமானது.

தீவிரவாதிகள் வெளிநாட்டவர் களைக் கடத்திவைத்து அரசாங் கத்தை மிரட்டுவது வாடிக்கை. ஆனால், தேசத்தின் அதிபரான ஃபிரான்சிஸ்கோவே அதைச் செய்தார். எப்போதெல்லாம் பணத்தட்டுப்பாடு இருக்கிறதோ, அப்போதெல்லாம் வெளிநாட்டி னரைக் கடத்தி வைத்துப் பணம் கேட்டு மிரட்டினார். ஒரு ஜெர்மானியப் பெண்ணுக்கு அவர் வைத்த விலை $57,600, ஒரு ஸ்பானிய பேராசிரியருக்கு $40,000, ஒரு சோவியத் பிரஜையின் பிணத்தை ஒப்படைக்க $6,000. ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றிய 95 நைஜீரியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. அவர்கள் போராடியபோது, இரு வார்த்தைகளில் பிரச்னையை முடித்தார் ஃபிரான்சிஸ்கோ. ‘‘அவர்களைக் கொல்லுங்கள்.’’ பதறிய நைஜீரிய அரசு, கினியிலிருந்த சுமார் 25,000 நைஜீரியர்களை தன் நாட்டுக்கு அழைத்துக்கொண்டது. பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் பதறியடித்து வெளியேறினார்கள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

கொடுமைகள் தாங்காமல் சொந்த தேச மக்களே எல்லை வழியே தப்பித்துச் செல்கிறார்கள் என்ற செய்தி வந்தபோது, ஃபிரான்சிஸ்கோ அமைதியாகச் சொன்னார். “எல்லைகளை அடையுங்கள். தப்பிக்க உபயோகிக்கும் சாலைகளை உடைத்து, பெரிய பள்ளங்களைத் தோண்டுங்கள். அப்புறம், இனி தேசமெங்கும் ரயில்களே ஓடக்கூடாது.’’ ஆனால், கடல் வழியாகவும் மக்கள் தப்பித்துச் செல்கிறார்களே? விசுவாசிகள் கவலைப்பட்டனர். அதிபர் அலட்சியமாகச் சொன்னார். ‘‘படகுகளை உடையுங்கள். எரியுங்கள். தேசமெங்கும் மீன் பிடிக்கத் தடை என்று அறிவிக்கிறேன்.’’ ஆம், கொஞ்சம்கூட யோசிக்காமல், தேசத்தின் முக்கியத் தொழிலான மீன் பிடித்தலையே காலிசெய்தார். பொதுமக்கள் கடற்கரையையே உபயோகிக்கக் கூடாது என்றார். தேசத்தையே சிறையாக்கினார். ‘காற்றைச் சுவாசிக்கக் கூடாது’ என்ற தடை மட்டும்தான் போடப்படவில்லை.

தனக்கு விருப்பமில்லை என்ற ஒரே காரணத்துக்காக தேசத்தின் முதுகெலும்பாக இருந்த கோகோ மற்றும் காபி உற்பத்தியை அழித்து பொருளாதாரத்தை முடமாக்கினார். ‘பாரம்பர்ய ஆப்பிரிக்க மருத்துவம் இருக்க, நவீன மேற்குலக மருந்துகளை எல்லாம் யாரும் எடுத்துக் கொள்ளவே கூடாது’ என்ற தடையைக் கொண்டு வந்தார். மீறி பயன்படுத்து பவர்களை ‘ஆன்ட்டி-ஆப்பிரிக்கன்’ என்றார். தடையைத் தடையறச் செயல்படுத்துவதற்காக தேசத்தின் மருத்துவ மனைகளையெல்லாம் மூடினார். தலைநகரமான மலாபோவில் ஒரு மின் உற்பத்தி நிலையம் இருந்தது. அதில், ‘இயந்திரங்களுக்கு கிரீஸ் பயன்படுத்த வேண்டாம். என் மந்திர சக்தியால் நான் இயந்திரங்களைச் சீராக இயங்கப் பண்ணுவேன்’ என்றார். இயந்திரங்கள் நிலைதடுமாற, மின் உற்பத்தி ஆலையே வெடித்துச் சிதறியது. மலாபோ நகரமே இருளில் மூழ்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

பயோகோ தீவின் பெரும்பான்மை மக்களான புபி இனத்தவர்கள், தங்கள் தீவைத் தனி நாடாக அறிவிக்கும்படிதான் வலியுறுத்தினர். நடக்கவில்லை. ஃபேங் இனவெறி கொண்ட ஃபிரான்சிஸ்கோ, புபி இனத்தவர்களை நாலாந்தரமாகத்தான் நடத்தினார். இனப்படுகொலைகள் தொடர்ந்தன.

பல சர்வாதிகாரிகளைப் போல அன்பரும் சபலிஸ்ட்தான். தான் விரும்பிய பெண்களை எல்லாம் அபகரித்ததோடு நில்லாமல், அவர்களின் குடும்பத்தினரைக் கூண்டோடு கொன்றார். அவரின் மூன்றாவது ஆசைநாயகியின் முன்னாள் காதலன்கள்கூட தேடிப்பிடித்துத் தீர்த்துக்கட்டப்பட்டதெல்லாம் சரித்திரம். ஃபிரான்சிஸ்கோ வெளிநாடு செல்லும் சமயங்களில் யாருக்காவது கொம்பு முளைத்துவிடக்கூடாதல்லவா. ஆகவே, அதிபர் இல்லாத சமயங்களில் கைதிகளுக்கான மரண தண்டனை, பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் மீதான பயம் குறையவே கூடாது என்பதற்காக.

சில குறைந்தபட்ச புள்ளிவிவரங்கள் மட்டும் பதிவாகியுள்ளன. 1979 வரையிலான 11 வருட ஃபிரான்சிஸ்கோவின் பொற்கால ஆட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்: அதிபரால் நியமிக்கப்பட்ட கேபினெட் அமைச்சர் 10 பேர், உயரதிகாரிகள் 22 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர், அரசு ஊழியர்கள் 67 பேர், தவிர, போலீஸ் அதிகாரிகள், ராணுவத் தினர், மருத்துவர்கள், மாணவர்கள், பிற துறை அதிகாரிகள் கொலை களுக்கு எண்ணிக்கை தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக 80,000 கொலைகள் என்றொரு உத்தேச எண்ணிக்கை சொல்லப்படுகிறது. உயிர் தப்பித்து, அண்டை தேசங்களுக்கு அகதிகளாக ஓடியவர்களின் எண்ணிக்கையும் பல ஆயிரம் இருக்கலாம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

1974 முதல் 1979 வரையிலான காலகட்டத்தில் பல ஊர்கள் வெறிச்சோடின. மங்கோமோ, பாட்டா, மலாபோ போன்ற நகரங்களின் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களது எண்ணிக்கைக்கும் அளவே இல்லை. குறிப்பாக, பயாகோ தீவில் அமைந்த பிளாக் பீச் சிறை மாபெரும் வதைமுகாமாகச் செயல்பட்டது. அந்தச் சிறையிலிருந்து எப்படியோ விடுதலையாகி வந்த ஒரு கைதியின் வாக்குமூலம் இது. ‘‘வரிசையாக முட்டிக்கால் போட்டு நிற்க வைத்து, இரும்புக்கம்பியால் தலையில் நங்கென்று அடித்துத்தான், அங்கே மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். 1971-75 காலகட்டத்தில் என் சிறை அறைக்கு வெளியே மட்டும் இப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 157.’’

1970-களில் ‘ஆப்பிரிக்காவின் வதைமுகாம்’ என்ற பெயருடன் திகழ்ந்த பிளாக் பீச் சிறையின் கவர்னராகப் பணியாற்றவர், தியோடோரோ (Teodoro Obiang Nguema Mbasogo). அதிபர் ஃபிரான்சிஸ்கோவுக்கு மருமகன் முறை. ராணுவப் பயிற்சி பெற்றவர். அவரது வழிகாட்டுதலில்தான் அங்கே கொலைகள் அரங்கேறின. ஃபிரான்சிஸ்கோவுக்கான வழியனுப்பு விழாவும் பின்னால் தியோடோரோவால்தான் நிகழ்த்தப்பட்டது.

எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்த பிறகும், ‘அதிபர் ஃபிரான்சிஸ்கோ மாபெரும் மந்திரவாதி. பில்லி சூனியம் வைத்தே யாரை வேண்டுமானாலும் ஒழித்துவிடுவார்’ என்றே அப்பாவி மக்கள் நடுங்கினர். அதிபரோ, தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்துக்கொண்டிருந்தார். விதவிதமான போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி மனநிலை தடுமாறித் திரிந்தார். வயது ஏற ஏற பார்வை மங்கியது. கேட்கும் திறனும் குறைந்துபோனது. செத்தவர்களுடன் பேசுவதாகச் சொல்லி, தனி அறையில் மணிக்கணக்கில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சூழலில், அவர் மக்களை வதைப்பதும் அதிகமாகியது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

பல மாதங்களாக (அல்லது வருடங்களாக) அரசு ஊழியர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் சம்பளமே கொடுக்கப்படவில்லை. ஆறு ராணுவ ஊழியர்கள், அதிபரைச் சந்திக்க அவரது இருப்பிடமான மங்கோமோவுக்கே சென்றனர். அங்கே அவரது வீட்டில்தான் பெட்டி பெட்டியாக அரசாங்கப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருந்தார். அதிபரைச் சந்தித்த ஆறு பேரும் சம்பளம் கேட்டு அழுத்தம் கொடுத்தனர். ஆறு பேருக்கும் மரணம் கொடுக்கப்பட்டது. அதுவே அதிபருக்கு வினையாகிப் போனது.

கொல்லப்பட்ட ஆறு பேரில் ஒருவர், அதிபருக்கு மருமகன் முறை. அதாவது, தியோடோரோவின் சொந்தத் தம்பி. கொதித்தெழுந்த தியோடோரோ ராணுவத்தைத் தன் பக்கம் திருப்பினார். ஸ்பெயின், மொராக்கோ என்று சில நாடுகளின் ஆதரவைத் திரட்டினார். அதிபரின் ஆதரவுப் படைகளுக்கெதிராக களமிறங்கினார். 1979, ஆகஸ்ட் 3 அன்று அதிபர் ஃபிரான்சிஸ்கோவின் பதவி பிடுங்கப்பட்டது. தலைமறைவான அவர், தன் வசமிருந்த பெரும்பாலான பணத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார். தன் குழந்தைகள் மூவரை வட கொரியாவுக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தார்.

காட்டில் பதுங்கியிருந்த ஃபிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 18 அன்று கைதுசெய்யப்பட்டார். ராணுவ நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. இனப்படுகொலை, அரசுப் பணத்தை அபகரித்தல், மனித உரிமை மீறல், தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. செப்டம்பர் 29 அன்று ஃபிரான்சிஸ்கோவுக்கு ‘101 முறை மரண தண்டனை’ நிறைவேற்றும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேல்முறையீட்டுக்கெல்லாம் வாய்ப்பில்லை. மேலோகமே வழி!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

அன்று மாலையே பிளாக் பீச் சிறையில் சுட்டுக் கொல்ல முடிவெடுத்தார்கள். ஆனால், ‘அந்த ஆளு மந்திரவாதி. செத்தாலும் திரும்பி வந்து நம்மளைக் கொல்லுவான்!’ என்று உள்ளூர் ஆள்கள் ஒவ்வொருவருமே பயந்தார்கள். ஆகவே, மொராக்கோ வீரர்கள் சிலர் வரவழைக்கப் பட்டனர். மாலை ஆறு மணி அளவில் ஃபிரான்சிஸ்கோவின் உடலைத் தோட்டாக்கள் துளைத்தன.

அதற்குப் பின் ஈக்வடோரியல் கினி பிழைத்தது என்றெல்லாம் பிழையாக எண்ண வேண்டாம். அடுத்த இரண்டே வாரங்களில், தியோடோரோ இரண்டாவது அதிபராகப் பொறுப்பேற்றார். சர்வாதிகாரம்தான் அவரது வழியாகவும் இருந்தது / இருக்கிறது. ஆம், 1979 தொடங்கி 2017 வரை அவரே அந்தத் தேசத்தின் அதிபர்; சமகால சர்வாதிகாரி. ஏழாண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் வைத்து, அதில் தான் மட்டுமே வேட்பாளராக நின்று, வெற்றியை அறிவித்துக் கொள்ளும் உத்தமர்.

அன்னாரைப் பற்றி விளக்க ஒரு சம்பவம் போதும். செவெரோ மோடோ, தியோடோரோவின் அரசியல் எதிரி. அங்கிருந்து தப்பித்து வந்து 2004-ல் ஸ்பெயின் ரேடியோ ஒன்றில் அளித்த பேட்டியில் சொன்ன தகவல் இது. ‘‘அதிபர் ஒரு போலீஸ் கமிஷனரைக் கொன்றுவிட்டார்; தின்றும் விட்டார். ஆம், அந்தக் கமிஷனரது உடலைப் புதைக்கும்போது அவருக்கு மூளையோ, விரைகளோ இல்லை.’’ தியோடோரோ குறித்து, ‘தான் பலம் பெறுவதற்காகவும், பலகாலம் உயிருடன் வாழ்வதற்காகவும் தன் எதிரிகளைக் கொன்று தின்னும் நரவெறி பிடித்தவர்’ என்று தீராத சர்ச்சை உண்டு.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 40 - வாழும் சர்வாதிகாரி!

1996-ல் ஈக்வடோரியல் கினியில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது. தியோடோரோ கொழிக்க அது உதவியது. ஆகவே, அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேசத்தின் துணை அதிபர்களில் ஒருவர், அவரின் மகனான தியோடோரின். சொகுசுப் பேர்வழி. ஆடம்பரப் பிசாசு. பல தேசங்களில் உல்லாச மாளிகைகள், சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்கள், ஜெட் விமானங்கள், பளபளா ஷாம்பெயின் பார்ட்டிகள் என்று தேசத்தின் எண்ணெய் வள லாபத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஏகாந்த இளவரசர். இவரே தியோடோரோக்குப் பிறகு அதிபர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் எண்ணெய் வளம் மிகுந்த நாடான ஈக்வடோரியல் கினியின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் வறுமையின் கோரப் பிடியிலிருந்தே மீளவில்லை. அசுபம்.

எழுத எழுதத் தீராதவர்கள் இந்தக் கிறுக்கு ராஜாக்கள். கி.மு-வோ, கி.பி-யோ... ஏதாவது ஒரு தேசத்தில், ஏதோ ஒரு பெயரில் கிறுக்கு ராஜாக்கள் முளைத்துக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள். ஆண்டு அராஜகம் செய்து, மூர்க்க முத்திரை பதித்து மாண்டும் போகிறார்கள். அந்த வகையறாவுக்கு என்றும் End Card கிடையாது. ஆனால், இந்தத் தொடர் நிறைவடைகிறது.

(மீண்டும் சந்திப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism