Published:Updated:

காலம்தோறும் - சிறுகதை

காலம்தோறும் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
காலம்தோறும் - சிறுகதை

சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

காலம்தோறும் - சிறுகதை

சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
காலம்தோறும் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
காலம்தோறும் - சிறுகதை

ன்னும் இருள் பிரியவே இல்லை. ஆனால், அருகில் இருந்த பூங்காவிலிருந்து கூட்டுக்குரலாகச் சிரிப்பலை வெடித்தது. அவளுக்கு வழக்கம்போல எரிச்சல் ஏற்பட்டது. அவர்கள் சரியான பித்துகள் அல்லது அசாதாரணமானவர்கள். சந்தேகமில்லை. அவர்களது சிரிப்பை வைத்து அவளால் நேரத்தைக் கணிக்க முடியும். 6:30 மணி. கோடைக்காலம் என்றால் யாரும் குறைகாணத் தேவையில்லை.  நடுங்கும் குளிர்காலமாக இருந்தாலும் அது நேரம் தப்புவதில்லை என்பதில்தான் இருக்கிறது விஷயம்.

டெல்லி குளிர். இருள் விலகாதபோது, `இன்னும் கொஞ்ச நேரம்’ என, கண்களைத் திறக்க மனமில்லாமல் ரஜாய்க்குள் சுருண்டிருக்கும் வேளையில் அந்தச் சிரிப்பு. பூங்காவில் நடக்கும் யோகா வகுப்புக்கு வருபவர்கள், அரை மணி  நேர யோகாவுக்குப் பிறகு வரும் விடை கூறும் பயிற்சி அது. அட்டகாசச் சிரிப்பு மனதில் குவிந்திருக்கும் அழுத்தங்களையெல்லாம் வெளியேற்றுமாம்.

அக்கம்பக்கத்து அடுக்குமாடிக் கட்டடங்களில் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் தொந்தரவாக இருக்கும் என அவர்களுக்கு ஏன் தோன்றுவதில்லை? இப்போதெல்லாம் `மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்கிற கூச்சம், கரிசனம் யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. பூங்காவில் மூலைக்கு மூலை ஒரு திரிசூலமோ  அனுமார் படமோ முளைக்கிறது. மஞ்சளும் குங்குமமும் அப்பிவைக்கப்படுகின்றன. பஜனைகூட ஒலிக்கும், சத்தமாக. பக்தர்களின் கைங்கர்யம், அவர்களது இஷ்டம். அவர்களுக்கு அதில் சமாதானம் கிடைக்கவில்லையா... மன அழுத்தம் போகவில்லையா... அதனால்தான் இந்தச் சிரிப்பா?  அவர்கள் வெளியேற்றும் மன அழுத்தம், அவளுள் புகுந்துவிட்டதுபோல் இருந்தது.

 ``ஏன், நீகூட அப்படிச் செஞ்சுபாரேன், சிரியேன்.’’

காலம்தோறும் - சிறுகதை

அவள் குனிந்து பார்த்தாள். தொப்புளிலிருந்து குரல் வந்ததுபோல் இருந்தது. அவளுக்குச் சிரிப்பு வந்தது.

 `அவர்களுடன் சேர்ந்தால் என்ன?’ என்று சில சமயம் அவளுக்குத் தோன்றும். ஒரு கூட்டத்தில் நின்று ஒரு பயிற்சியைப்போலச் சிரிப்பதில் எந்த மனக்கூச்சமும் இருக்காது. ஆனால், தனியாக நின்று வீட்டுக்குள் சிரித்தால் `பிச்சி’ என்று பணிப்பெண் கமலாகூட நினைப்பாள். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் புரளி கிளம்பும். ஏற்கெனவே...

அவள் எழுந்து, ஜன்னலுக்கு அருகில் நின்று ஏழாவது மாடியிலிருந்து தெரியும் பூங்காவைப் பார்த்தாள். பசுமை நிறைந்த தண்ணென்ற பரப்பு. திட்டுத்திட்டாக இருந்த இடைவெளிகளில் பாயை வரிசையாக விரித்து அவர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆண்கள், பெண்கள், பிராணாயாமம். அமைதியாக நாசியைப் பிடித்து வலது இடது என மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி… உள்ளிழுத்து…

அவள், சற்று நேரம் அவர்களைப் பார்த்தபடி நின்றாள். சற்று இளம்வயது அல்லது நடுவயதுப் பெண்கள் பாயை மளமளவெனச் சுருட்டி, கையில் தம்பூராவைச் சுமக்கும் பாடகிகளைப்போல தூக்கிப் பிடித்துக்கொண்டு விரைந்தார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைத் தயார்ப்படுத்தவோ நாஷ்டா சமைக்கவோ விரையும் அவசரம் நடையில் தெரிந்தது. அந்தக் கும்பலில்  சற்று வயதானவர்கள் ஒன்றிரண்டு பேர் தரையில் மெள்ள ஒரு கையை ஊன்றி எழுந்து, உடையை சரிசெய்தபடி முதுகை நெட்டி முறித்தார்கள். சகோதரிகளாக இருக்கலாம் அல்லது தோழிகள். சற்று தூரம் சேர்ந்து நடந்து வெவ்வேறு பாதைகளில் நடக்க ஆரம்பித்தார்கள்.

பார்க்கின் அடுத்த திறந்தவெளித் திட்டில் யோகப் பயிற்சியில் இருந்த ஆண்கள் ஒருசேர எழுந்து நின்று சிரிக்க ஆரம்பித்தார்கள். ``ஓ கடவுளே... ஹஹ்ஹஹ்ஹா…’’ பெண்கள் சிரித்ததைவிட அதிக நீளத்துக்கு, அதிக ஆக்ரோஷத்துடன். அவள் எப்போதோ பார்த்த புராணக் கதை சினிமாவில் கேட்ட எமதர்மராஜனின் சிரிப்புபோல. இப்போதெல்லாம் சினிமா வில்லன்கூட அப்படிச் சிரிப்பதில்லை. எமன் சிரிப்பானா? யாரும் இறந்தால் அவனுக்கு சந்தோஷமா? 

களுக் மொளுக்கெனச் சிரிப்பொலி கேட்டது... சன்னமாக, கொலுசுச் சத்தம்போல.

``உஷ்! பேசாம இரு’’ என்றாள் அவள் செல்லமாக.

குளியலறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியே வரும்போது புன்னகை அதரங்களில் இருந்தது.

``என்ன... சீக்கிரம் எழுந்துண்டுட்டே’’ என்றாள் அம்மா.

``உப்புமாவா... மூக்கைத் துளைக்கிறது வாசனை’’ என்றபடி அவள் சமையலறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.  அம்மா சிரித்தாள்.

``அதனால்தான் சீக்கிரம் எழுந்துண்டியா?’’

``இல்லை, அந்த பார்க்ல இருந்து வர்ற சிரிப்புல எப்படித் தூங்க முடியும்?’’

``அது ஒரு தெரபி’’ என்று அம்மா விளக்கினாள்.

``என்ன தெரபியோ, அந்தச் சிரிப்புல சந்தோஷமே இல்லை. ஆக்ரோஷமா இருக்கு. கோபம் இருக்கு.’’

``ஆ... அதுக்குத்தான் அது. அதைக் குறைக்கத்தானே சிரிக்கச் சொல்றார் அந்த யோகா மாஸ்டர். உண்மைதான், அப்படிச் சிரிக்க ஆரம்பிக்கும் போது நம்மை அறியாம உற்சாகம் ஏற்படும். சிரிக்கத் தோணும். குறைந்தபட்சம் டென்ஷன் குறையும்.’’

``நீ சிரிச்சிருக்கியா அப்படி?’’

அம்மா பதில் சொல்ல வில்லை. அடுப்பில் இருந்த ஏதோ ஒன்று அவளது கவனத்தைக் கலைத்தது.

``நீகூட அப்படிச் செஞ்சு பார்னு அது கேட்டுது’’ என்று அவள் முணுமுணுத்தாள்.

அம்மாவுக்கு அது காதில் விழுந்திருக்காது. 

``ஒரு நாள் நானும் அதுல சேர்ந்துக்கலாமான்னு தோன்றது.”

``இந்தக் குளிர்லயா? வேண்டவே வேண்டாம்.  இருக்கிற கோளாறு போதாதுன்னா?’’

அவள் பதில் பேசாமல் எழுந்து காபி குடித்த கோப்பையைக் கழுவி வைத்தாள். ``வீட்டுக்குள்ளேயே கொஞ்சம் நிதானமா நட’’ என்றாள் அம்மா வழக்கம்போல.

`சரியான வீட்டுச் சிறை எனக்கு’ என்ற அலுப்புடன் அவள் நகர்ந்தாள். வரவேற்பறையின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நடை. பத்து முறை, இருபது முறைகூட நடக்கலாம். அவளுக்குத்தான் பத்து முடிவதற்குள் சோர்ந்துபோகிறது;  மூச்சு வாங்குகிறது.  அம்மா அதற்குள் பயந்து `போதும்... போதும்’ எனும்போது அலுப்பேற்படுகிறது.

சுவரில் இருந்த சித்திரங்கள் எல்லாம் அவளைக் கண்டு நகைப்பதுபோல இருக்கின்றன.  அவள் அதைச் சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தாள். அவள் எதன்மீதும் மோதிக்கொள்ளக் கூடாது என்று அம்மா கவனமாக சோபாக்களை நடுவில் நடக்க சௌகர்யமாக இடம்விட்டு நகர்த்தியிருந்தாள். எல்லோரது கவனத்தின் மையப்புள்ளியாக அவள் ஆகியிருந்தாள். இடையில் ரமேஷின் வாட்ஸ்அப் செய்திகள் வேறு, `தினமும் நடக்கிறியா?’

ஒன்று… நாலு… எட்டு… பத்து… அவள் ஆசுவாசப் பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தாள். நாற்காலி சுருங்கிப்போன மாதிரி இருந்தது.

காலம்தோறும் - சிறுகதை

``சரியான தொல்லையாயிட்டேன் இல்லே?’’

அவள் திடுக்கிட்டாள். `அம்மாவுக்குக் கேட்டிருக்குமா?’

``ஏன் அப்படிச் சொல்றே?’’

``எனக்கும் அலுத்துப்போச்சு.’’

``ஏன் அப்படிச் சொல்றே?’’

``என்ன சுமதி, ஏதாவது சொன்னியா என்ன?’’

``இல்லைம்மா.’’

``குளிச்சுட்டு வர்றியா டிபன் சாப்பிட, இல்லே... அப்புறமா குளிக்கிறியா?’’

``குளிக்கிறேன்.’’

அவள் குளியலறைக்குள் நுழைவதற்குள் அம்மா வாளியில் வெந்நீர் நிரப்பியிருந்தாள். அதன் எதிரில் அவள் உட்கார்ந்து குளிக்க சௌகர்யமாக  பிளாஸ்டிக் நாற்காலி ஒன்று.

இவ்வளவு கையாலாகாத்தனம் எப்படி வந்தது? அதெப்படி ஒரு சர்வசாதாரண விஷயம், மனுஷன் ஜனித்த நாளிலிருந்து பார்க்கப்படும் விஷயம் என் வரையில் உலகமகா அதிசயம்போல ஆகிப்போனது?

``மன்னிச்சுக்கோ.’’

 வாளி நீரில் ஏதையோ கண்டதுபோல அவளுக்குச் சிலிர்த்தது. ``எதுக்கு?’’

``எனக்கே இஷ்டமில்லை.’’

``என்ன  இஷ்டமில்லை?’’

பதில் இல்லை. காரணம் புரியாமல் அவளுக்குக் கண்களில் நீர் துளித்தது.

சோப்பு கண்களில் நுழைந்துவிட்டது என்று அவள் கண்களில் நீரை இறைத்துக்கொண்டாள். சில சமயம் குமுறி அழவேண்டும்போல இருந்தது. ஏன் என்றே புரியவில்லை. ஒருநாள் அந்த யோகா வகுப்புக்குப் போயே ஆகவேண்டும்.

``சிரிக்க ஆரம்பிச்சோம்னா நிஜமாவே சிரிப்பு வரும். மனசு தளர்ந்துபோகும்.’’

``சுமதி... குளிச்சாச்சா?’’

அவளுக்காக அம்மா சாப்பாட்டு மேஜையில் காத்திருந்தாள்.

அவள் மௌனமாக உடை அணிந்துகொண்டாள்.

``எனக்கு வெளியில வரவே இஷ்டமில்லை.’’

அவள் திடுக்கிட்டாள்.  ``அடச்சீ! ஏன் அப்படிச் சொல்றே?’’

``இங்கேயே எனக்குப் பாதுகாப்பா இருக்கு.’’

``நான் இருக்கும்போது வெளியிலே உனக்குப் பாதுகாப்பு இல்லாம இருக்குமா?’’

``இங்கேயே இருக்கேனே?’’

``அது சாத்தியமில்லை. உனக்கும் கஷ்டம்... எனக்கும் கஷ்டம்!’’

``எனக்கு வெளியே வரவே இஷ்டமில்லை.’’

``உள்ளே இருட்டுன்னா..? வெளியிலே பாரு. நீல ஆகாசம். மரங்கள். பறவைகள். கலர் கலரா பூக்கள்…’’

``எத்தனை தடவை உப்புமாவைச் சுடவைக்கட்டும் சுமதி? மைக்ரோவேவுக்கும் அலுத்துப்போகும்.’’

``அலுப்பு என்பது  ஜடத்துக்கும் உண்டா?’’ 

 உப்புமாவுக்குத் தொட்டுக்கொள்ள ஆவக்காய் ஊறுகாய். நாக்கு சப்புக்கொட்டிற்று.

``வேண்டாண்டி, அத்தனை காரம் கூடாது.’’

மறுபடியும் சிரிப்பு. களுக் மளுக்.

``இப்ப அப்படித்தான் நாக்குக்கு வேண்டியிருக்கும். ஆனா…’’

``ஓகே... ஓகே. அதை தூர வெச்சுடு!’’

இரவும் பகலும் சக்கரம்போலச் சுழன்று வந்தன.  இன்னும் எத்தனை நாள்?  தலையணையில் தலையைச் சாய்த்ததும் வரும் தூக்கம் எங்கேயோ பரலோகம் போயிருந்தது. தூக்கம் வராமல் அடிக்கடி கழிவறைக்குச் செல்லவேண்டியிருந்தது. குளிருக்கு இதமாக ஹீட்டரும் ரஜாயும் இருந்தும் குளிரிற்று.

கண்ணை மூடினால் என்னென்னவோ சித்திரங்கள். ஓலங்கள். கோஷங்கள். அழும் பெண்கள். பரிதவிக்கும் அம்மாக்கள். சிரிக்கும் எமன்கள். பூக்கள் காணோம். நீலவானைக் காணோம். பறவைகள்…

``நா வெளியே வர மாட்டேன்.’’

``வரணும். நீ வந்தே ஆகணும்.’’

``மாட்டேன். என்னைத் தொந்தரவு செய்யாதே.’’

``ஏன்... ஏன் மாட்டே?’’

``அது பயமுறுத்தும் வெளி. அன்பில்லாத இடம்.’’

``இல்லை, பயப்படாதே. நான் உன்னைப் பொத்தி வைப்பேன்; இறுக அணைச்சுப்பேன்.’’

``உனக்குப் புரியாது என் பயம்.’’

நேற்று  அவள் பார்த்த வீடியோ நினைவுக்கு வந்தது. எதைத் திறந்தாலும் அந்தக் காட்சி. வாட்ஸ்அப்பில், கம்ப்யூட்டரில், முகநூலில். அந்த ஆள் அட்டகாசமாகச் சிரிக்கிறான்.

காலம்தோறும் - சிறுகதை

``யார் நீ?’’ 

``நான் தேசாபிமானி.  என் தேசத்தை நேசிக்கிறேன்.’’

``பொய், நீ கொலைகாரன். கொலை செஞ்சு வேஷம் போடுறியா... என்ன நியாயம்?’’

``இருக்கு நியாயம். இந்த மண்ணில் மாசாக இருப்பவர்களை ஒழிப்பேன். இதோ இந்த ஆள் எனது மதத்துக்கு விரோதி. கலாசாரத்துக்கு விரோதி.’’

``யார் அவன்?’’

``யாரோ. யாராக இருந்தால் என்ன? நான் சாப்பிடாததை அவன் சாப்பிடுகிறான். நான் வெறுக்கும் கடவுளை பூஜிப்பவன். அந்தக் கடவுள் அருவம். ஒரு திசை. அது ஒரு வழிபாடா?’’

``சே பாவம்! அவன் ஒரு தினக்கூலிக்காரன். குடும்பம், அவனை நம்பியிருக்கிறது.’’

``இருக்கட்டுமே. அவன் என் வெறுப்பின் அடையாளம். இது நான் எனது மண்ணுக்குச் செய்யும் கைங்கர்யம்.’’

அவள் கண்ணை மூடிக்கொண்டாள். மூடுவதற்கு முன் தெரிந்த காட்சி குடலைக் குமட்டிற்று. அந்தத் தினக்கூலிக்காரன்  அலற அலற,  கெக்கலிக்கும் தேசபக்தன் கோடரியால் அவனை வெட்டுகிறான். சரமாரியாக, வலது இடது நெஞ்சில், அடிவயிற்றில். கீழே கிடந்தவன் அடங்கிப்போனான்.   தீ அவனைச் சுற்றிக் கொழுந்துவிட்டு எரிகிறது. ``எடுங்கடா இந்தப் படத்தை, முகநூலில் வெளியிடணும். எல்லோரும் பார்க்கட்டும்’’  அட்டகாசச் சிரிப்பு. வெறிகொண்ட முகங்கள். கெக்கலிக்கும் கூட்டம். கோஷம்போடும்  வெறிபிடித்த கூட்டம்.

அவளுடைய நாபி வெடித்துவிடும்போல் இருக்கிறது. குரல் வெடித்தது.

``நான் எதுக்கு அங்கே வரணும்?’’

அவளுக்குக் குமுறிக்கொண்டு துக்கமும் அழுகையும் வந்தன.

``நான் செஞ்ச தப்பு இல்லை அது.’’

``உன் தப்பு… உன் தப்பு… உன் தப்புதான்.’’

தினமும் குரல் சொன்னது. `காலை, மாலை, இரவு , எப்போதும். உன் தப்பு.’

``என்ன அநியாயம் பார்த்தியோ?’’ என்றாள் அம்மா. அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில என்ன நடந்தது தெரியுமோ?’’

``என்ன?’’

``ஒரு பொண்ணுக்குப் பிரசவம் ஆகிருக்கு. `பிறந்த குழந்தை இறந்துபோச்சு’னு டாக்டர் சொல்லி எழுதியும் கொடுத்தாச்சு. செத்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில போட்டுக் கொடுத்தாங்களாம்.  குழந்தையைப் புதைக்க அந்தப் பொண்ணோட அப்பா மயானத்துக்குப் போற வேளையிலே பையிலே அசைவு தெரிஞ்சுதாம். திறந்து பார்த்தா  குழந்தை மூச்சு  விடறதாம். காலை கையை அசைக்கிறதாம்.’’

பக்கென்ற ஒரு பீதி அவளுள் பரவிற்று. ``அந்த ஆஸ்பத்திரிக்கு நாம போகவேண்டாம்.’’

``எந்த ஆஸ்பத்திரியானாலும் நான் வெளியே வர மாட்டேன்.’’

அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

``உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. எதுவுமே உன் கையில இல்லை.’’

அவள் விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

``சுமதி, நீ ஏன் அழறே? நானும் ஒரு முட்டாள். இதையெல்லாம் உங்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது.’’

``நீ சொல்ல வேண்டாம். காத்து சொல்லும்.  தொலைக்காட்சி சொல்லுது. கம்ப்யூட்டர் சொல்லும். செல்லிடப்பேசி சொல்லும்.”

அவளுக்கு மண்டை வெடித்துவிடும்போல இருந்தது.

உள்ளுக்குள் என்னவோ உடைந்தது. அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கீழ் நீர் பரவிற்று.

``அம்மா, அம்மா… என் கையில ஒண்ணும் இல்லை.’’

``சுமதி என்ன சொல்றே நீ? என்னது இது?  ஓ பனிக்குடம் உடைஞ்சுபோச்சு.”

``அப்படின்னா?’’

``உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.”

அம்மா அவசரமாக டாக்ஸியை அழைக்கிறாள். வழியெல்லாம் கந்தசஷ்டிக் கவசம் சொல்கிறாள். `காக்க… காக்க…’ அது ஒன்றுதான் காதில் விழுகிறது.

அவள் கண்களை மூடிக் கொண்டாள். கெக்கலிக்கும் குரல்கள். எரியும் உடல்கள். சிரிக்கிறார்கள். அதைக் கண்டு `ஏன்... யார் இவர்கள்?’ எம தூதர்கள்.

அவள் தலையை இடமும் வலமும் அசைக்கிறாள். ``எதுவுமே என் கையில இல்லை. உண்மைதான்.’’

 ``பனிக்குடம். எத்தனை அழகான சொல்! ஏம்மா உடைஞ்சுபோச்சு?’’

``சில பேருக்கு அப்படி ஆகும். பரவாயில்லை. டாக்டர் பார்த்துப்பார்.’’

``டாக்டர் கடவுளா? பிளாஸ்டிக் பை நினைவிருக்கோ?’’

``சீச்சீ, அசட்டுத்தனமா பேசாதே. அது அபூர்வ கேஸ்.’’

``எல்லாமே அபூர்வம்தான். கெக்கலிச்சானே அதுவும்தான். ஏன் நடக்கிறது அப்படி?’’

அவள் கண் விழித்தபோது சுற்றிலும் வெளேர் என்ற சுவர்கள்.  அவள் அலங்கமலங்க விழித்தாள். கழுத்து வரை கம்பளிப் போர்வை. ஏதோ கழன்றுபோயிருந்தது. உடலில் வெறுமை இருந்தது.

``என்ன ஆச்சு?’’

அம்மா, அவளது கையை வருடியவண்ணம் இருந்தாள். முகம் சோர்ந்திருந்தது.

``என்னம்மா?’’

அம்மா மெள்ளச் சொன்னாள். ``குழந்தை செத்துப் பிறந்தது.  பெண் குழந்தை.’’

அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஆணோ பெண்ணோ, எல்லாத்துக்கும் ஆபத்து.

அம்மாவின் கை மறுபடி வருடிற்று. ``வருத்தப்படாதே. அடுத்தது  நல்லபடியா பிறக்கும்.”  

``அவளுக்குப் பிறக்க இஷ்டமில்லை.”

``யாருக்கு? என்ன சொல்றே சுமதி?”

``நான் `பயப்படாதே’னு அதிகம் சொன்னேன். வெளியிலே வரவே மாட்டேம்பா.’’ 

``சுமதி, பேசாமே கண்ணை மூடித் தூங்கு. இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது. அடுத்தபடியா…”

``வேண்டாம் வேண்டாம். நம்மால பாதுகாப்பு குடுக்க முடியாதும்மா. `வந்துடு’ன்னேன். `உன்னைப் பொத்திவெச்சு வளர்க்கிறேன்’னேன். அவ நம்பலை.’’

குமுறிக் குமுறி துக்கம் ஏற்பட்டது.

``சுமதி, அழப்படாது. பச்சை உடம்பு.  இதான் உங்கிட்ட. நீ ஏன்டி நமக்கு சம்பந்தமில்லா விஷயத்துக்கெல்லாம் அலண்டுபோயிடுறே?”
 
 ``நமக்கு சம்பந்தம் இருக்கு.’’

அம்மாதான் இப்போது அழுதாள்.

பார்க்கில் பத்துப் பெண்கள்.  அவர்களுடன் அவள். பிராணாயாமம் முடிந்தது. எல்லோரும் எழுந்து நின்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.  பகபகவென்று. வெகு நேரம். `சிரி. மனசிலிருக்கும் பாரமெல்லாம் இறங்கும். இது தெரபி!’ அம்மா பக்கத்தில் நின்று சொல்கிறாள்.

``சிரி!’’