Published:Updated:

எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!
எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!

எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!

பிரீமியம் ஸ்டோரி

போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக காவல்துறையையே கலைத்துவிடும் அபத்தமான முடிவை யாராவது எடுப்பார்களா? ஆனால், மத்திய அரசு இப்படித்தான் செய்கிறது. இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, தன் நேரடி நிர்வாகத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க முயற்சி செய்கிறது மத்திய அரசு. இதற்கான மசோதாவை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மருத்துவர்களும் வீதியில் இறங்கி எதிர்த்ததால், இப்போது இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.‘எச்சூழலிலும் இதை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் 1934-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 120 மருத்துவர்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படும் இந்தக் கவுன்சில், மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிப்பது, மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பது, மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிர்ணயிப்பது, மருத்துவர்களுக்கான பதிவு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் படிப்புகளுக்கும் அனுமதி வழங்குவது போன்ற பணிகளைக் கவனிக்கிறது.

2010-ல்இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய், பஞ்சாபில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தருவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 1,800 கோடி ரூபாய் பணமும் 1,500 கிலோ தங்கமும் சிக்கியதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க, டாக்டர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு.

எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!

‘இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டது. அது மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணித்து, மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறிவிட்டது’ என்று குற்றம் சாட்டியிருக்கிறது மத்திய அரசு. ஆனால், ‘புதிதாக ஓர் அமைப்பை உருவாக்குவதன் நோக்கம், மாநிலங்களின் உரிமையைப் பறித்து, மையத்தில் குவிப்பது. அதன் மூலம், தங்கள் கொள்கைகளை மருத்துவக் கல்வியில் திணிப்பது, மருத்துவத்தைத் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கையில் தருவதுதான்’ என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

‘‘பி.ஜே.பி அரசு, வெளிப்படையாக இந்து மதக் கொள்கையைக் கல்வியில் கலந்து வருகிறது. யோகாவை அப்படித்தான் மெல்ல மெல்ல கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வந்தார்கள். பிசியோதெரபியில் யோகாவை ஓர்  அங்கமாகச் சேர்த்தார்கள். கடும் எதிர்ப்பால் மருத்துவச் சமூகம் அதைத் தடுத்து நிறுத்தியது. ஐ.ஐ.டி-க்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்கி கோமியம் பற்றி ஆராய்ச்சி செய்ய வைக்கிறார்கள். சில மாதங்களுக்குமுன் ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். ‘கர்ப்பிணிகள் முட்டை மற்றும் அசைவ உணவுகளைச் சாப்பிடப் பரிந்துரைக்கக்கூடாது’ என்கிறது அது. கிராமப்புறப் பெண்களுக்குக் கோழிமுட்டைதான் அதிகபட்ச ஊட்டச்சத்து. அதையும் காலி செய்யப் பார்க்கிறார்கள். அசாம் சுகாதாரத்துறை அமைச்சர், ‘பாவம் செய்தவர்களுக்குத்தான் கேன்சர் வரும்’ என்று கண்டுபிடித்திருக்கிறார்.

இப்படி மருத்துவத்தில் தங்கள் கொள்கைகளைக் கலக்கும் முயற்சியைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள். மருத்துவர்களுக்காகச் செயல்படும் ஓர் அமைப்பில் மருத்துவர்களை அகற்றிவிட்டு, ஆடிட்டர்களையும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்க்க இருக்கிறார்கள். இது மருத்துவத்தின் தரத்தை மேலும் கீழே கொண்டு செல்லும்” என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களில் ஐந்து பேர் மட்டுமே மருத்துவர் பிரதிநிதிகள்; மற்ற 20 பேரும் அரசால் நியமிக்கப்படுபவர்கள். ஆணையத்தை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கும். மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிக்கவுமே ஆணையம் உருவாக்கப்படுவதாகச் சொல்லும் மத்திய அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சலுகைகளைத் தாராளமாக வழங்குகிறது. மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க, இனி மருத்துவக் கல்லூரிகள் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. தேவையான உள்கட்டமைப்புகள் இருந்தால் அவர்களாகவே அதிகரித்துக்கொள்ளலாம். இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவிகித இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்குத் தரப்படுகின்றன. இதிலும் கைவைக்கிறது, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம். இந்தச் சட்டப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் இனி 40 சதவிகித இடங்களை அரசுக்குத் தந்தால் போதும். 60 சதவிகிதம் அவர்களுக்கு.

எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!

இவற்றையெல்லாம் தாண்டி, டாக்டர்கள் இந்த ஆணையத்தை எதிர்க்க இரண்டு காரணங்கள் உண்டு. வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வரும் மாணவர்களுக்கு நடத்தப்படுவதைப் போலவே, இந்தியாவில் மருத்துவம் படித்துத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இனி தேசிய உரிமத்தேர்வு நடத்தப்படும் என்கிறது இந்த ஆணைய மசோதா. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுகலைப் படிப்பில் சேரமுடியும். ‘‘எம்.பி.பி.எஸ் என்பதே மருத்துவப் படிப்புதான். அதை முடித்தபிறகு மீண்டும் ஏன் ஒரு தேர்வு?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் மருத்துவர்கள். ‘சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மற்றும் யோகா போன்ற மருத்துவப் படிப்புகளைப் படித்தவர்களும், பல் மருத்துவம் படித்தவர்களும், 6 மாத கால ப்ரிட்ஜ் கோர்ஸை முடித்தால் நவீன மருத்துவம் செய்யலாம். மேலும் அலோபதி சார்ந்த முதுகலைப் படிப்புகளிலும் சேரலாம். கிராமப்புறப் பகுதிகளில் போதிய அளவுக்கு மருத்துவர்கள் இல்லாததால் மாற்று மருத்துவம் படித்தவர்களைத் தகுதிப்படுத்தி பயன்படுத்தவே இந்தத் திட்டம்’ என்கிறது மத்திய அரசு. ‘‘இது மருத்துவத்தின் தரத்தைக் குலைத்து விடும்’’ என்கிறார்கள் டாக்டர்கள். 

‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கிராமப்புறங்களில் மருத்துவச் சேவை ஓரளவுக்கு நிறைவாக இருக்கிறது. ஆனால், பிற மாநிலங்களில் இந்த நிலைமை இல்லை. அதனால் மாற்று மருத்துவம் படித்தவர்களையே மருத்துவ அதிகாரிகளாக அந்த மாநில அரசுகள் நியமிக்கின்றன. ‘மாற்று மருத்துவம் படித்தவர்களுக்கு நவீன மருத்துவப் பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்களின் சேவையை மேம்படுத்த முடியும்’ என்று மத்திய அரசு நினைக்கிறது. பொதுவாக, இப்போது உலகெங்கும் ஒருங்கிணைந்த மருத்துவத்துக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது. சீனாவில், மருத்துவப் படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகள் பொதுவான மருத்துவம்தான். அதன்பிறகு அலோபதியோ, சீன மருத்துவமோ எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கலாம். இங்கு நவீன மருத்துவர்கள், மாற்று மருத்துவர்களைப் பார்க்கும் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. இதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது’’ என்கிறார் சித்த மருத்துவ நிபுணர் கு.சிவராமன். 

அரசு மருத்துவர்கள், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள். அனைத்திந்திய அரசு மருத்துவர் கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் நம்மிடம் பேசினார். ‘‘இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகிகள் ஊழல் செய்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. குற்றம் சாட்டப்பட்ட கேதன் தேசாய் வெளியில் வந்து இப்போது உலக மருத்துவச் சங்கத்துக்கே தலைவராகி விட்டார். அரசு என்ன செய்தது? மருத்துவக் கவுன்சிலின் மொத்த நிர்வாகத்தையும் மாற்றி, மருத்துவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பிடுங்கி மொத்தமாக மத்திய அரசே கையகப்படுத்துவது நல்ல விஷயமில்லை.

எம்.பி.பி.எஸ் முடித்தாலும் டாக்டர் இல்லை! - ஆபத்தான மருத்துவ ஆணைய சட்டம்!

பல் மருத்துவம், மாற்று மருத்துவம் படித்தவர்கள் 6 மாதம் பயிற்சி எடுத்தபிறகு, நவீன மருத்துவம் செய்யலாம் என்பதும் திகைப்பூட்டுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேதத்தின் தன்மையும் நவீன மருத்துவத்தின் தன்மையும் அடிப்படையில் வேறு. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துச் சிகிச்சையளிக்கும் முறை அவை. ஆனால், நவீன மருத்துவம் நாளுக்கு நாள் நவீனமாகிக்கொண்டிருக்கிறது. 6 மாத காலப் பயிற்சியில் அவர்கள் நவீன மருத்துவத்தைக் கற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையே தவறானது. இந்தியாவில் மருத்துவத் துறை ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் இதைச் சீர்குலைத்து விடும்” என்கிறார் பாலகிருஷ்ணன்.

ஏற்கெனவே நீட் தேர்வு இந்திய மருத்துவச் சூழலை பெரிதும் பாதித்திருக்கிறது. இப்போது தேசிய மருத்துவ ஆணையம்... இன்னும் என்னவெல்லாம் வருமோ?

- வெ.நீலகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு