Published:Updated:

6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்
6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்

6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்

பிரீமியம் ஸ்டோரி

‘தமிழனைத் தமிழன்தான் ஆள வேண்டும்’ என்று சீமான் புஜத்தை உயர்த்திப் பேசும் அதே விஷயத்தை சர்வதேச அரங்கில் உயர்த்திப் பிடிக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ‘அமெரிக்கப் பொருள்களை வாங்குவோம், அமெரிக்கர்களைப் பணியமர்த்துவோம்’ போன்ற முழக்கங்களை நிஜமாக்க ட்ரம்ப் எடுத்திருக்கும் அடுத்த ஆயுதம், ‘க்ரீன் கார்டு’.

அமெரிக்க டெக் நிறுவனங்களில் பணிபுரிய இந்தியர்கள் ஹெச்-1பி விசாவில் செல்கிறார்கள். முதலில் மூன்று ஆண்டுகளுக்குத் தரப்படும் இந்த விசா, தேவையைப் பொறுத்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்தக் காலத்தில் அமெரிக்க நிரந்தரக் குடியுரிமைக்கான ‘க்ரீன் கார்டு’ கேட்டு விண்ணப்பிக்கலாம். அது கிடைக்கும் வரை அமெரிக்காவிலேயே தங்கிவிடலாம். இதில்தான் கறார் காட்ட இருக்கிறார் ட்ரம்ப். 

6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்

க்ரீன் கார்டு பெறுவது குதிரைக்கொம்பான விஷயம். க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து 6 முதல் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதை ட்ரம்ப் அரசு விரும்பவில்லை. அதனால், விசா நீட்டிப்பைக் குறைத்து பலரை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப முடிவெடுத்துள்ளது.  இது குறித்து இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் பணிபுரியும் ஐ.டி துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘க்ரீன் கார்டு பெறுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஹெச்-1பி விசாவில் அமெரிக்கா வருகிறவர்கள், முதல் ஐந்து வருடங்களில் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பது குறித்து முடிவெடுக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க 2 வருடங்கள் பணி அனுபவம் தேவை. இந்தக் காலகட்டத்தில், இங்கு வாங்கும் சம்பளத்தைக் கொண்டு இந்தியாவில் வாங்கிய கடனை அடைப்பது அல்லது சொத்துகளை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற விஷயங்களில் தீவிரமாக இருப்பார்கள். பின்னர்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பார்கள்.

6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்

முதல் மூன்று ஆண்டுகள் முடிந்ததும், மேலும் மூன்று ஆண்டுகள் விசா நீட்டிப்புப்பெற, பணிபுரியும் நிறுவனத்தின் ஒப்புதல் அவசியம். ‘இவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இங்கு பணிபுரியும் வேலையில் தொடர்வார்’ என அவர்கள் கொடுக்கும் ஒப்புதல் அடிப்படையில் விசா நீட்டிப்பு இருக்கும். அதன்பின் க்ரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிப்பார்கள். 2009-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கே இப்போதுதான் க்ரீன் கார்டு கிடைக்கிறது. சுமார் 10 லட்சம் பேர் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ‘காத்திருப்புப் பட்டியலில் இருந்தாலும்கூட வெளியேற வேண்டும்’ என அரசு வலியுறுத்துகிறது’’ என அவர் கவலையோடு சொன்னார்.

அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் அமெரிக்க மாணவர்களை இந்த உயர்திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமர்த்துவது குறைவாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களை எடுக்கவே நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்தியர்களுக்கு நெருக்கடி கொடுத்தால், அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதுதான் ட்ரம்பின் நுண்ணரசியல்.

ஆனால், டெக் நிறுவனங்கள் இதை விரும்பவில்லை. ‘‘அமெரிக்காதான் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். குறைவான சம்பளத்தில் வேலைபார்க்கும் ஆசிய பணியாளர்களுக்குப் பதில் அமெரிக்க பணியாளர்களை அதிகச் சம்பளத்துடன் பணியமர்த்த வேண்டும். திறமைப் பஞ்சமும் ஏற்படும்’’ என்று நிறுவனங்கள் சொல்கின்றன. ‘‘திறமைசாலிகளான இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போய் நிறுவனங்கள் ஆரம்பித்தால், பல அமெரிக்க நிறுவனங்கள் அவற்றோடு போட்டிப் போட முடியாமல் மூடப்படும் சூழல் உருவாகும்’’ என்றும் சிலர்  கணிக்கிறார்கள்.

ட்ரம்பின் அறிவிப்பு சட்டமாக்கப்படும்போது 6 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வெளியேறும் நெருக்கடி உருவாகும். இவர்களில் பலர் அமெரிக்காவில் குடியேறி, அங்கேயே சொந்த வீடு வாங்கியவர்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் நிலை குறித்தும் குழப்பம்  ஏற்படும்.

6 லட்சம் இந்தியர்களுக்கு கெட் அவுட்! - ட்ரம்பின் அடுத்த செக்

இந்திய உறவுகளைப் பலமாக வைத்திருக்க விரும்பும் ட்ரம்புக்கு, அமெரிக்காவின் டெக் உலகை இந்தியர்கள் கட்டி ஆள்வதில் விருப்பமில்லை. ‘இந்தியர்கள் பாதிக்கப்படும் அதே அளவுக்கு அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் பாதிப்பு இருக்கும்’ என்பதை உணராமல் கொக்கரிக்கிறார். அணுகுண்டு ஸ்விட்ச்சைவிட ஆபத்தான ஸ்விட்ச்சை அழுத்த நினைக்கிறார் அவர்.

- ச.ஸ்ரீராம்
ஓவியம்: நெடுமாறன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு