Published:Updated:

அமைச்சர் ஆசியோடு மணல் கொள்ளை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சர் ஆசியோடு மணல் கொள்ளை...
அமைச்சர் ஆசியோடு மணல் கொள்ளை...

ஆதாரம் கொடுத்தும் அலட்சியப்படுத்திய கலெக்டர்!

பிரீமியம் ஸ்டோரி

‘‘சார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் இறையமங்கலம் கிராமத்தில் எட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் ஊர் முக்கியஸ்தர்கள் மூன்று பேர் கூடி, கிராமத்தையொட்டி ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு, அந்த மூன்று பேரில் ஒருவரான தேவராஜ் என்பவருக்கு 8.50 லட்சத்துக்கு ஏலம் விட்டிருக்கிறார்கள். மணல் அள்ளுவதை யாரும் வெளியில் சொல்லக்கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடும் விதித்திருக்கிறார்கள். கடந்த இருபது நாள்களாக பொக்லைன் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புடைய மணல் இப்படி சட்டவிரோதமாகக் கொள்ளை போகும் அபாயம் இருக்கிறது. தயவுசெய்து தடுத்து நிறுத்துங்கள்’’ என்று நம் அலுவலகத்துக்குப் பதற்றமாக ஒரு தகவல் வந்தது.

தகவல் கொடுத்தவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘2017 டிசம்பர் முதல் வாரத்தில் அ.தி.மு.க பிரமுகர்களான துரைசாமி, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பள்ளிக்காடு ராஜு என்கின்ற ராமசாமி, தேவராஜ் மூன்று பேரும் கூடி இந்த ஏலத்தை விட்டார்கள். அதன் பின்னர், டிசம்பர் 6-ம் தேதி முதல் தினந்தோறும் இரவு நேரத்தில் காவிரி ஆற்றில் ஒரு பொக்லைன் மூலம் மணல் அள்ளி, ஐந்தாறு டிராக்டர்களில் ஏற்றிவந்து, ஆற்றை ஒட்டியுள்ள துரைசாமி தோட்டத்துக்குள் மலை போல குவித்து வைத்திருந்தார்கள். இதுபற்றி எப்படியோ புகார் போக, டிசம்பர் 13-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, துரைசாமி தோட்டத்துக்குள் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு ஐந்து நாள்கள் மணல் அள்ளவில்லை. பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் செல்வாக்கான ஓர் அமைச்சரிடம் பேசிவிட்டு, அவர் ஆசியோடு மீண்டும் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் இரவில் மட்டும் 100 முதல் 120 டிராக்டர் லோடு மணல் அள்ளுகிறார்கள். மேல் மட்டம் வரை கமிஷன் போவதால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அநீதியை நீங்களே நேரில் வந்து பாருங்கள்’’ என்றார்.

அமைச்சர் ஆசியோடு மணல் கொள்ளை...

நாம் வீடியோ மற்றும் புகைப்படக்காரர்களோடு ஒரு குழுவாகச் சென்று, மணல் அள்ளப்படுவதாகச் சொல்லப்பட்ட இறையமங்கலம் காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள மன்னாதம்பாளையம் ஈஸ்வரன் கோயில் பரிசல் துறையில் முகாமிட்டோம்.

இனி நேரலை...

மாலை 6:00 மணி. ஆற்றில் சிலர் குளித்துக்கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் இருந்தார்கள். அக்கரையில் ஆற்றுக்குள் ஒரு பைக்கில் வந்து இறங்கிய இருவர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த பாதை தனியாருக்குச் சொந்தமானது என்பதால், மணல் அள்ளுபவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை என்பதை நம்மால் உணர முடிந்தது.

இரவு 7:00 மணி. டூ வீலரில் வந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தவர்கள் திரும்பி, வந்த வழியே சென்றார்கள்.

இரவு 7:30 மணி. ஆள் அரவமற்ற சூழலில், தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

இரவு 8:00 மணி. அக்கரையில் துரைசாமி தோட்டத்திலிருந்து ஹெட்லைட் வெளிச்சத்தோடு ஒரு பொக்லைன் கிளம்பி வந்தது. அது ஆற்றங்கரையைத் தொடுவதற்கு முன்பே ஹெட்லைட்டை ஆஃப் செய்து விட்டனர்.  அதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஆறு டிராக்டர்கள் பொக்லைன் வண்டிக்குப் பின்னால் வந்து நின்றன. டிரைவர்கள் கீழே இறங்கிக் கொண்டார்கள்.

இரவு 9:00 மணி. மீண்டும் பொக்லைன் ஹெட்லைட் வெளிச்சத்தோடு புறப்பட்டு ஆற்றுக்குள் வந்தது. டிராக்டர்கள் ஒவ்வொன்றாக வர, பொக்லைன் ஆற்று மணலை அள்ளி டிராக்டரில் கொட்டியது. நான்கு நிமிடங்களில் டிராக்டரில் மணல் நிரம்ப, அது வட்டமடித்துத் தோட்டத்துக்குக் கிளம்பியது. பிறகு இன்னொரு டிராக்டர் வந்து நிற்க, அதிலும் மணல் கொட்டப்பட்டது. இப்படி நான்கு நிமிடங்களில் மணல் நிரப்பிக்கொண்டு கிளம்பும் டிராக்டர்கள், அருகிலுள்ள துரைசாமி தோட்டத்தில் மணலைக் கொட்டிவிட்டு மீண்டும் வரிசையில் வந்து நின்றன. இரவு முழுக்க இப்படித் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட, இந்தக் காட்சிகளை 200 மீட்டர் இடைவெளியில் பாறை இடுக்குகளில் படுத்துக்கொண்டு நம் வீடியோ அண்ட் புகைப்படக் கலைஞர்கள் பதிவு செய்தனர்.

அமைச்சர் ஆசியோடு மணல் கொள்ளை...

இந்த மணல் திருட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, தோட்டத்தில் கொட்டி வைத்திருக்கும் மணலையும் மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்தைச் சந்தித்தோம்.  ‘‘இரவு முழுவதும் மணல் அள்ளப்படுகிறது. அதனை  சிரமப்பட்டு வீடியோ, புகைப்படமாக எடுத்திருக்கிறோம். நீங்கள் வந்து உரிய நடவடிக்கை எடுத்து  அவர்களைப் பிடிக்க வேண்டும்” என்று கூறினோம். ஆனால், கலெக்டர் நம்மை துரத்துவதில் குறியாக இருந்தார். ‘‘நடவடிக்கை எடுக்கிறேன். போங்க... நான் வர முடியாது. அதிகாரிகளிடம் சொல்கிறேன்’’ என மழுப்பலாக பதில் அளித்தார்.

சிவகங்கை கலெக்டர் லதா, மணல் கொள்ளையைத் தடுக்க தனி மொபைல் எண் வெளியிடுகிறார். நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம், ஆதாரத்தோடு தகவல் சொன்னால்கூட கண்டும் காணாமல் இருக்கிறார். கலெக்டர்கள் பலவிதம்.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு