Published:Updated:

“புத்தகம் வாசிப்போம்... புது தலைமுறையை யோசிப்போம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“புத்தகம் வாசிப்போம்... புது தலைமுறையை யோசிப்போம்!”
“புத்தகம் வாசிப்போம்... புது தலைமுறையை யோசிப்போம்!”

சென்னைப் புத்தகக்காட்சியின் முழக்கம்

பிரீமியம் ஸ்டோரி

னவரி முதல் வாரத்திலேயே தொடங்கி விடும் சென்னைப் புத்தகக்காட்சி, இந்த ஆண்டு இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. காட்சி மைதானமான பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகம், புத்தகக்காட்சிக்கான ஏற்பாடுகளால் களைகட்டத் தொடங்கிவிட்டது.

‘பபாசி’ எனப்படும் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், 41-வது சென்னைப் புத்தகக்காட்சிக்கான பணிகளில் மும்முரமாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், 10 வரிசைகளாக 700 கடைகள் மட்டுமே இந்த முறை அமைக்கப்படுகின்றன. ஒன்பது சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டவையாக அமைக்கப்படும் கடைகளில், நெரிசலின்றி புத்தக ஆர்வலர்கள் தாராளமாகப் புத்தகங்களைப் பார்க்கும்வகையில் அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“புத்தகம் வாசிப்போம்... புது தலைமுறையை யோசிப்போம்!”

புத்தக விற்பனையோடு, மாலை நேர நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. புத்தகக்காட்சி முதன்மை அரங்கில் மாலையில் நடைபெறும் கூட்டத்தில், வாசிப்பில் ஆர்வம்கொண்ட பலதுறை விற்பன்னர்களும் உரையாற்றுவார்கள். சுகிசிவம், பாரதி பாஸ்கர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஆண்டாள் பிரியதர்ஷினி, சு.வெங்கடேசன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இறையன்பு, தரேஷ் அகமது, மருத்துவர் த.சுப்பையன், திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். ஆகியோர் தமிழ் மழை பொழிய இருக்கிறார்கள்.

சங்கத்தின் தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர், ‘‘குழந்தைகள் படித்தால்தான், வருங்காலத் தலைமுறை படிக்கும். பலரும் செல்போன், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எலெக்ட்ரானிக் யுகத்துக்கு மாறிவிட்டார்கள்.

45 - 50 வயதினர்தான் புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்ற கருத்துப் பரவலாக உள்ளது. வளரும் இளம் தலைமுறையினரைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஒரு கடிதம் எழுதச் சொன்னால் தடுமாறுகிறார்கள். அந்த அளவுக்குப் புத்தக வாசிப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் இப்போது மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருக்கிற தலைமுறையைப் படிக்கவைக்க வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறோம்” என்றனர் உற்சாகத்தோடு.

“புத்தகம் வாசிப்போம்... புது தலைமுறையை யோசிப்போம்!”

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற காரணங்களால் புத்தகம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பிரபல பதிப்பகம் ஒன்றில், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைத் தவணை முறையில் வாங்கும்படி ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளனர். ‘‘அதைப் போன்ற ஒரு வழியைப் புத்தகக்காட்சியிலும் கொண்டுவரமுடியுமா என யோசித்துவருகிறோம்’’ என்று கூறினார், பபாசியின் பொருளாளர் சீனிவாசன்.

புத்தகக்காட்சி அரங்கில் ஏ.டி.எம் இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. பெரும்பாலான அரங்குகளில், கார்டுகள் மூலம் பணம் செலுத்த வசதியாக பி.ஓ.எஸ் இயந்திரம் வைத்திருப்பார்கள். ‘‘குறும்பட, ஆவணப்பட விரும்பிகளுக்குத் தீனிபோடும் திரையிடல் இந்த ஆண்டு மீண்டும் இடம்பெறுகிறது; முக்கியக் குறும்படங்கள், ஆவணப்படங்களைத் திரையிடுவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறோம்” என்கிறார் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சிராஜுதீன்.

‘‘சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், புத்தகக்காட்சி பற்றி தெரியப்படுத்தி, குழந்தைகளை அதிக அளவில் வரவைக்கும் முயற்சியையும் செய்கிறோம்’’  என்றார், பபாசியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரங்கராஜன்.

“புத்தகம் வாசிப்போம்... புது தலைமுறையை யோசிப்போம்!”

எட்டு லட்சம் நுழைவுச்சீட்டுகளில் பாதிக்குப் பாதி, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த முறையோடு ஒப்பிட்டால், இது முக்கால் பங்கு அதிகமாகும். வழக்கம்போல, 13 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இலவசமாகவே புத்தகக்காட்சியைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

13 நாள்கள் நடக்கவுள்ள புத்தகக்காட்சியில், முதல் முறையாக மூன்று நாள்கள் மாலையில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. வளரும் பிள்ளைகளை ‘படி... படி...’ என்று கட்டாயப்படுத்துவதற்கு மாற்றாக, மாணவர்களை வாசிக்கவைப்பதற்கான முயற்சிகளை பபாசி செய்கிறது!

வாசிக்க மட்டுமல்ல, யோசிக்கவும் வைக்கும் புத்தகங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்ப்போம், வாருங்கள்!

- இரா.தமிழ்க்கனல்
படங்கள்: ப.பிரியங்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு