Published:Updated:

“89 குளங்களை மீட்க வேண்டும்!” - பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மதிக்காத அரசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“89 குளங்களை மீட்க வேண்டும்!” - பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மதிக்காத அரசு
“89 குளங்களை மீட்க வேண்டும்!” - பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மதிக்காத அரசு

“89 குளங்களை மீட்க வேண்டும்!” - பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மதிக்காத அரசு

பிரீமியம் ஸ்டோரி

காவிரிக்கும் முல்லைப் பெரியாறுக்கும் போராடுவது இருக்கட்டும்... இங்கே இருக்கும் நீர்நிலைகளைக் காப்பாற்றும் விஷயத்தில் தமிழக அரசுக்கு எந்த அளவு அக்கறை இருக்கிறது என்பதை உணர்த்தும் உதாரணமாக மயிலாடுதுறையைச் சொல்லலாம். மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள குளங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை மீட்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.   

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பெருமையைப் பெற்றது நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை நகரம். இங்கு நகராட்சி மற்றும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான 89 குளங்கள் இருந்தன. இதனால், தண்ணீர்ப் பிரச்னையே இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர் நகர மக்கள். ஆனால், கடந்த 40 ஆண்டுகாலமாக இவை படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டன. நீர்வரும் பாதையையும் ஆக்கிரமிப்பு செய்ததால் குளங்கள் வறண்டன. வறண்ட குளங்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டினர். குளங்கள் காணாமல் போயின! இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இப்போது 300 அடிக்கும் கீழிருந்து வரும் தண்ணீர் காவி நிறத்தில் இருந்தபோதிலும், வேறு வழியின்றி அதைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்.  

“89 குளங்களை மீட்க வேண்டும்!” - பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மதிக்காத அரசு

இந்தச் சூழ்நிலையில்தான் புங்கனூர் பாதுகாப்புக் குழு ஆலோசகர் வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர், தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில், ‘மயிலாடுதுறையைச் சுற்றியிருக்கும் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மீட்டெடுக்க வேண்டும்’ என்று வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. 

விஜயகுமாரைச் சந்தித்தோம். ‘‘அரசு அதிகாரிகள் இந்த வழக்கில் பல்வேறு முட்டுக் கட்டைகளைப் போட்டார்கள். ‘ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர்வாரவும் போதிய நிதியில்லை’ என்றனர். ‘மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் அல்லது தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி ஆதாரம் பெற்று குளங்களைச் சீரமைக்கலாம்’ என்று நீதிபதி கூறினார். அதற்கும் அவர்கள் முன்வரவில்லை. ‘அரசின் நிதி ஆதாரம் தடையாக இருந்தால், மக்கள் பங்களிப்புடன் தூர்வாரலாம்’ என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆதீன மடங்கள் வசமுள்ள 25 குளங்களைத் தவிர்த்து, நகராட்சிக் கட்டுப்பாட்டிலுள்ள 64 குளங்களைத் தூர்வார முடிவு செய்தனர். ஆனால், இன்னும் ஆக்கிரமிப்புகளைஅகற்றவில்லை. வேறு வழியின்றி மக்களிடம் பணம் வசூலித்து, நாங்களே களத்தில் இறங்கி தூர் வாருகிறோம்.

இந்தக் குளங்களுக்குத் தண்ணீர் வர வசதியாக, 7 கி.மீ தூரமுள்ள பழங்காவேரி கால்வாயைத் தூர்வார வேண்டும். இதற்குப் பொதுப்பணித்துறை சார்பில் 17 லட்ச ரூபாய்க்குத் திட்டம் தீட்டி அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. கால்வாயைத் தூர்வார அவ்வளவு செலவாகாது. நாங்கள் மக்கள் பங்கேற்புடன் மட்டுமே மூவலூர் முதல் சித்தர்க்காடு வரை 3 கி.மீ கால்வாயை வெறும் 25 ஆயிரம் ரூபாய் செலவில் தூர்வாரி இருக்கிறோம்’’ என்றார். 

‘தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை’ பொதுச் செயலாளர் அழகிரிசாமியிடம் பேசினோம். ‘‘நீர்நிலைகள் பாழானதற்கு முக்கியக் காரணமே நகராட்சிதான். 66,650 சதுரஅடி கொண்ட டபீர் குளத்தில் 56,000 சதுரஅடி அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஓர் அரசியல்வாதி குடும்பம் குளத்தை ஆக்கிரமித்து 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடத்தைக் கட்டியுள்ளது. அந்தக் கட்டடத்துக்கு நகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் கொடுத்திருக்கின்றனர். அதே போல அறநிலையத்துறையும், ‘நாங்கள் அனுமதி தரவில்லை’ என்று கூறியிருக்கிறது. அனுமதி பெறாத அந்தக் கட்டடத்துக்கு நகராட்சி தரப்பில் வரி வசூல் செய்திருக்கிறார்கள். மின் இணைப்பும் கொடுத்திருக்கின்றனர். யாருடைய துணையுடன் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்தன? பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும்கூட, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முன்வரவில்லை என்பது வேதனை’’ என்றார். 

“89 குளங்களை மீட்க வேண்டும்!” - பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மதிக்காத அரசு

முன்பு சப் கலெக்டராகப் பணிபுரிந்த ராஜேந்திரகுமார், அஜய் யாதவ் என்ற இரண்டு அதிகாரிகளும் நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்களைத் தூக்கியடித்தனர். இப்போது அதிகாரிகள் தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர். 

இது குறித்து, விளக்கம் கேட்க நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரைத் தொடர்பு கொண்டபோது, ‘‘தற்போது என்னால் இதுபற்றிப் பேச முடியாது’’ என்று தகவல் அனுப்பி முடித்துக்கொண்டார். அரசுத் தரப்பின் ‘ஆர்வம்’ இதிலிருந்தே புரிகிறது.

- எம்.இராகவன், படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு